Monday, November 14, 2005

நாளா கோளா வேலா

நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசன் இரு
தாளும் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே


இந்த உலகத்தில் நாம் எதற்கெல்லாமோ அஞ்சுகிறோம். எதைச் செய்யவும் அஞ்சிக் கொண்டு ஜோதிடர்களையும், வாஸ்து நிபுணர்களையும், பெயரியலாளர்களையும், மந்திரவாதிகளையும் நம்பிக் கொண்டு திரிகின்றோம். "அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது எவ்வளவு உண்மை.

நவகோள்களும் நம்மைப் கோவிக்கின்றன என்று எண்ணிப் பயந்து பரிகாரங்களில் காசையும் மனசையும் கொட்டுகின்றோம். சாதகமாய்ச் சொன்னால் ஜாதகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் பாதகமாய்ச் சொன்னால் பந்தாடுவதும் இன்று பலரிடம் கண்கூடு. இவைகளை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று சாடுகின்றார் அருணகிரி.

தவறு நேர்ந்து விட்டதா? வாழ்க்கையில் பிழை செய்து விட்டோமா? கலங்கிப் போய் அங்கும் இங்கும் ஓடுவதை விட இறைவனை நாடுவது நல்லது என்கின்றார் அருணகிரி.

கச்சியப்பர் சொல்கின்றார். "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்".

தவறு செய்திருந்தாலும் முருகனை வணங்கினால், அந்தத் தவறை உணர்ந்து திருந்தி நல்ல வழியை அடைவார்கள். அதற்காகத் தவறு செய்து விட்டு முருகனை நினைத்தால் போதுமா? தண்டனையிலிருந்து தப்பித்து விடலாமா? இல்லவேயில்லை.

தவறு செய்தவன் முதலில் திருந்த வேண்டும். திருந்தி விட்டானானால் அந்தக் குற்றத்துக்குரிய தண்டனையை அவன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வான். பிறகு செய்த தவற்றிற்குப் பரிகாரம் தேடுவான். இதுதான் இறைவனருள் என்கிறார் கச்சியப்பர்.

அருணகிரி இன்னும் ஒரு படி மேலே போகின்றார். ஒரு செயலைச் செய்ய நல்ல நாளையும் கெட்ட நாளையும் பார்க்க வேண்டாம். அந்தக் கோள் வருத்துமோ இந்தக் கோள் உறுத்துமோ என்று கலங்க வேண்டும். நல்வினையும் தீவினையும் செய்வினையும் கொடுமைப் படுத்துமோ என்று விக்கித்து நிற்க வேண்டாம். இவைகள் எல்லாம் இறைவனுக்கு முன்னால் செயலற்றவை.

திருஞானசம்பந்தரை அனைவருக்கும் தெரியும். ஞானக்குழந்தை அவர். காஞ்சியிலிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார். மதுரையரசி மங்கையர்க்கரசி அழைப்பு வந்திருக்கிறது. புறப்படுகையில் நேரம் சரியில்லாத நேரத்தில் கிளம்புகிறார். அடியார்கள் எல்லாம் மூடர்களாக பொழுது சரியில்லை என்று எச்சரித்தார்கள். சரித்துக்கொண்டே ஒரு பதிகம் பாடினார் அந்தக் குழந்தையம் பெருமான்.

"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்தவன் அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
"

ஈசன் திருவடியை வழிபடும் அடியவர்களுக்கு ஒன்பது கோள்களினாலும் ஒரு துன்பமும் இல்லை என்கிறார் சம்பந்தர். மேலும் இறைவன் மேல் உண்மையான நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ளவர்கள் இந்த கோள்கள் எது செய்தாலும் நன்மையாகவே இருக்கும் என்பதே பொருள்.

சோதிட, எண்கணிதங்களை எண்ணி உள்ளம் துன்பப்படுகையில் இந்தப் பாடலைச் சொல்லுங்கள். உள்ளம் தெளியும். நன்மை விளையும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

இராகவன், இந்தப் பாடலில் உள்ளப் பொதுப்பொருளைக் கூறிவிட்டீர்கள். குமரேசனின் அழகு வர்ணிக்கப்பட்டுள்ளதே; அதனை இன்னொரு பதிவில் விளக்கப்போகிறீர்களா? :-)

said...

குமரேசன் அழகை இந்தப் பாடலில் வருணிக்கப் போவதில்லை குமரன். இந்தப் பாடலுக்கு இப்பொழுதைக்கு இந்த விளக்கம் போதுமென்று தோன்றுகின்றது. இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன. அவைகளையும் விளக்க வேண்டும். உங்கள் சுறுசுறுப்பு என்னிடம் ஏது!

said...

அப்ப சரி. யாருக்காவது அந்த விளக்கம் வேணும்ன்னா சொல்லுங்க. இலவசமாய் விளக்கம் தரப்படும். :-)

said...

குமரன், எனக்கே வேண்டும். விளக்குங்களேன். :-)

said...

// "அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

Anne,its a song of Bharathiar.You have mentioned it as a Bharathidasans...

Or is it me going wrong ?!?
:confused:

said...

சமுத்ரா எனக்குத் தெரிந்து அது பாரதிதாசன் பாடலே.

"அஞ்சி அஞ்சிச் சாவார் அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
துஞ்சுது முகட்டிலென்பார்" என்று போகும்.

இது குறித்து தகவல் தெரிந்த மற்றவர்கள் விளக்கலாமே!

said...

இராகவன். சமுத்ரா சொன்னது சரிதான். அந்த வரிகள் 'நெஞ்சு பொறுக்குதிலையே' என்று தொடங்கும் பாரதியார் பாடல் வரிகள் தான்.

said...

இராகவன், இந்தப் பாடலின் விளக்கத்தை இங்கேயே பின்னூட்டம் இட்டுவிடவா இல்லை 'கூடலில்' தனிப் பதிவாய் போட்டுவிடலாமா? சொல்லுங்கள்.

said...

நன்றி குமரன். அது பாரதியார்தான....பூனைக்கும் அடி சறுக்கும். ஆனா எழுந்து விடும். நான் பூனை. :-)

// இராகவன், இந்தப் பாடலின் விளக்கத்தை இங்கேயே பின்னூட்டம் இட்டுவிடவா இல்லை 'கூடலில்' தனிப் பதிவாய் போட்டுவிடலாமா? சொல்லுங்கள். //

கூடலில் விளக்கம் போடுங்கள். நிறைய பேர் பார்ப்பார்கள். இங்கே பின்னூட்டம் இடுவதை தனிப்பதிவாக இட்டால் நிறைய பேரைச் சென்றடையும்.

said...

அப்படியே. பூனையின் ஆனை. I mean ஆணை. :-)

said...

அன்பின் ராகவன்,
நல்ல பதிவு. மரபிலக்கியப் பாடலில் பதிவுகள் காணவே மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. சொற்பொருத்தம், பொருட்பொருத்தம் பார்த்து இட்டிருக்கிறீர்கள். கோளறு பதிகம் முனைப்பாக இனி படிப்பேன். மேலும் எழுதுங்கள்.
அன்புடன்
க.சுதாகர்

said...

மிக்க நன்றி சுதாகர். உங்கள் வாழ்த்துகளும் கருத்துகளும் மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது. ஊக்கங்களுக்கும் நன்றி.