Monday, January 30, 2006

2. பிள்ளையாரும் பிள்ளை ஆறும்

ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே


முருகா! தேடி வந்து போர் புரிந்த கஜமுகாசுரனை வீழ்த்திய விநாயகப் பெருமானின் சகோதரனே! ஆடும் மயிலும், வேலும், மற்றும் அழகு சேவலுஞ் சேரத் தோன்றும் இறைவனே என்று உன்னைப் பாடுகின்ற பணி ஒன்றையே எனக்குப் பணியாகத் தருவாய்!

ஆடும் பரி என்றால் என்ன? பரி என்றால் குதிரை. குதிரை ஆடுமா? திருவிழாக்களில் மேளத்திற்கு ஏற்ப குதிரை காலைத் தூக்கித் தூக்கி வைப்பதைப் பார்த்திருக்கலாம். அதையும் ஆட்டம் என்றே எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு?

இங்கே பரி என்று அருணகிரியார் குறிப்பிடுவது மயிலை. பொதுவாக அந்தக் காலங்களில் குதிரைகளைத்தான் வாகனமாக பயன்படுத்தினார்கள். அதனால் வாகனம் என்ற சொல்லுக்கு மாற்றாக பரி என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கணத்தில் இதை வினையாகுபெயர் என்பார்கள்.

கந்தரலங்காரத்தில் "கலாபத் திருமயிலேறும் ராவுத்தனே" என்கின்றார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வளர்ப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். ஆகையால் மயிலைக் குதிரை என்று அழைத்த பிறகு முருகனை ராவுத்தன் என்று அழைக்கின்றார்.

முருகக் கடவுளோ மயிலை வாகனமாகக் கொண்டவர். ஆகையால் ஆடும் பரி என்கிறார். ஆடும் மயிலும் வேலும் அணி செய்யும் சேவலும் என்றெல்லாம் உனைப் பாடிப் புகழ்ந்து மகிழும் வேலை தருவாய் வேலைப் பிடித்தவனே.
"உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
"
என்ற புகழ் பெற்ற பக்திப் பாடலையும் நினைவிற் கொள்க.

இந்த அடிகளில் மற்றொரு சிறப்பும் உள்ளது. ஆம். மயிலை ஆடும் பரி என்றார். சேவலை அணி சேவல் என்றார். ஆனால் வேலுக்கு எந்த அடைமொழியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் தேவையில்லை. வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி.

தேடும் கஜமாமுகன். எதைத் தேடினான்? எங்கே தேடினான்? தவம் பல செய்து வரம் பல பெற்ற வல்லரக்கன் கஜமுகாசுரன். ஆனை முகம் கொண்டவன். அந்த வல்லரக்கனோ நல்லரக்கனாக இல்லாமல், அடுத்தவரை கொல்லரக்கனாக இருந்தான். தன்னை வெல்லரக்கர் யாருமில்லை என்ற உண்மையை உணர்ந்து, தன்னோடு போரிட இணையானவர் யாரென்று தேடித் தேடி அலைந்தான்.

ஆனை முகம் கொண்டதால், விநாயகரே தனக்குத் தக்கவர் என்று பிழையாக நினைத்து போர் புரிந்தான். அவனது தலையெழுத்தை அறிந்த கனநாதனோ கஜமுகனின் தலையையும் அரிந்தான். மக்களைக் காத்து கருணையைச் சொரிந்தான். அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!

முருகனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இந்த சகோதர உணர்வு பல பிற்காலத்தைய தமிழ்ப் பாடல்களில் பாடப் படுகிறது. விநாயகரின் பதினாறு திருநாமங்களில் ஸ்கந்த பூர்வஜன் என்ற திருநாமமும் வழங்கப் படுகிறது. கந்தனுக்கு முந்தியர் இந்த உந்தியர். உந்தி என்றால் தொந்தி.

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே
, என்று திருப்புகழும் பிள்ளையாருக்கும் பிள்ளை ஆறுக்கும் உள்ள தொடர்பைச் சொல்கிறது. பிள்ளை ஆறு என்றால்? ஆறு பிள்ளைகள் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, அகிலாண்ட நாயகியின் அணைப்பில் அறுவர் ஒருவரானதால், அப்படியும் கூறலாம்தானே!

இறுதியடியில் தனியானை சகோதரனே என்று வந்துள்ளது. அதென்ன தனியானை? யாருக்கும் நிகரில்லாத என்று பொருள். அரசவையில் அமைச்சர்கள் எல்லாம் வரிசையாக கொலுவீற்றிருக்க அரசன் எல்லோருக்கும் முன்னால் மேடையில் தனியாக இருப்பான். அங்கே தனியாக இருப்பது இழுக்கா? இல்லை. அது பதவி. பெருமை. அரசனுக்கு இணையாக அரசி அமர்வாள். அப்போது அவன் தனிமை போகிறது அங்கு. ஆனால் அப்படி யாரும் இல்லாததால் தனியாக இருப்பவன் விநாயகன். அவனை வணங்கி அருள் பெறலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 23, 2006

1. சொல்லச் சொல்ல இனிக்குதடா

அன்புடைய நண்பர்களே! உழக்கைக்கொண்டு உததியை(கடலை) அளந்தாற் போல, ஒரு மாபெரும் பொருள் மேல் ஒரு மீச்சிறு முயற்சி. ஆம். நாம் பக்தியோடு பாடி மகிழும் பைந்தமிழ் பாக்களுக்கு, இறைவனை பூசிக்கும் பூக்களுக்கு விளக்கம் கூறும் முயற்சி. மும்மலமும் நீங்கி தன்னலமும் நீக்கி நானிலம் வாழ் நம் நலன் காக்கப் புலவர்கள் பாடிய பாச்சரங்களுக்குப் பூச்சரம் சூட்டும் முயற்சி. பாற்கடலை நக்கிக் குடித்த பூசை(பூனை) என்று கம்பனே தன்னைப் பற்றி கூறிக்கொள்கையில் என்னை என்னவென்றும் கூறலாகாது. ஆவலால் தொடங்கும் இந்த முயற்சி வெற்றி பெற, அதாவது உங்கள் விருப்பத்தைப் பெற, தமிழ்க்கடவுளை வேண்டுகிறேன்.

முதலும் முடிவுமில்லாத முதல்வன், அவன் தன் புதல்வன் முருகனைப் போற்றி அருணகிரி எழுதிய கந்தர் அநுபூதியைத் தொடுகிறேன். எனக்குத் தெரிந்தவைகளை வார்த்தைகளில் விடுகிறேன். முருகன் அருள் சேர்ப்போம். நமது துயர்களைத் தீர்ப்போம். பகையை நீர்ப்போம். இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம்.

அநுபூதி என்றால் ஒன்றுதல் என்று பொருள். கந்தனோடு நம்மை ஒன்றச் செய்யும் செய்யுள்களின் தொகுப்பே கந்தர் அநுபூதி. கந்தரநுபூதியை இயற்றியவர் அருணகிரிநாதர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அருணையில் பிறந்து முருகன் அருளை உணர்ந்த இந்த மாமேதை வாய்ச் சொல் ஒவ்வொன்றும் தீந்தேன் துளிகள். அள்ளிப் பருக அலுக்காதவை. சொல்லி மகிழத் திகட்டாதவை.

கடவுள் வாழ்த்து

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்

தஞ்சம் என்று கெஞ்சும் போதிலே அடைக்கலம் தந்து, கல் போன்ற நெஞ்சத்தை கனிய வைத்து உருக்கும் சண்முகக் கடவுளைப் புகழ்ந்து, செழுந்தமிழால் பாடல்களைச் சிறந்த முறையில் புனைந்து பாட, ஐந்து கரத்தானைப் பணிவோம். இதுதான் பாடலின் பொருள். அதற்கு விளக்கம் தொடர்கிறது.

போர் என்று வந்து விட்டது. வெற்றி வேண்டும். போராடிப் பார்ப்பதுதானே முறை! இங்கே ஒரு புனிதப் போரின் தொடக்கத்திலேயே அருணகிரிநாதர் சரணடைகிறார். வெற்றியும் கொள்கிறார்.

"திமிர உததி அனைய நரக ஜனனம்" என்று திருப்புகழ் கூறுகிறது. உததி என்றால் கடல். என்றுமே நிலைக்குந் தன்மையில்லாத கடலைப் போன்ற நரகமே இந்த பிறப்பு. நமது பிறப்பு சுகமாக இருக்கிறதா? தாய்க்குப் பெருந்துன்பம் கொடுத்துப் பிறக்கின்றோம். அதுவும் குறுகிய வழியில் நெருக்கிக் கொண்டு பிறக்கின்றோம். அப்படிப்பட்ட பிறப்பில், நம்மேல் தீயவைகள் தொடுக்கும் போரில் வெற்றி பெற என்ன வழி? முருகப் பெருமானைச் சரணடைவதே! ஆகக்கூடி போராடாமலே வெற்றி.

அத்தைகய மாபெரும் வெற்றி நம்மிடத்தில் என்ன செய்கிறது? கல் போன்ற நெஞ்சத்தைக் கனிய வைத்து உருகச் செய்கிறது. இரும்பு இளகும். செம்பு இளகும். தங்கம், வெள்ளி முதலான உலோகங்கள் இளகும். ஈரம் பட வைத்தால் வெல்லமும் கருப்பட்டியும் கூட இளகும். கல் இளகுமா?

என்ன இது? நடக்காத ஒன்றை அருணகிரி நாதர் கூறுகின்றாரே என்று நினைக்க வேண்டாம். அவர் அறிவிற் சிறந்தவர். ஒன்றை கூறும் முன்னம் பலமுறை சிந்தித்துப் பொருந்தும் விதமாக கூறும் அறிவையும் ஆற்றலையும் முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்திருந்தார்.

அப்படியானால் கல் இளகுவது! கல் உடைந்துதானே போகும்! அதிலும் நெஞ்சமாகிய கல் துயர் வரும் வேளைகளில் உடைந்து கண் வழியே கண்ணீராக அல்லவா பெருக்கெடுக்கிறது. அந்தக் கல் இளகுமா? உருகுமா?

இயல்பால் கல் உருகாது. அதுபோல துயரங்களும் தாமாக அகலாது. கல் உருகுவது என்பது நடவாத காரியம். நடவாத காரியத்தையும் நடத்திக் காட்டுவான் கந்தன் என்பதே இதன் உட்பொருள். உருகாத கல்லையும் பெரும் வெப்பத்திலும் அழுத்தத்திலும் உருகவைப்பது போல அகலாத அல்லல்களையும் அகற்றுவான் ஆறுமுகன். இப்பொழுது முதல் இரண்டு வரிகளையும் படியுங்கள் பொருள் நன்றாக விளங்கும்.

இப்படியெல்லாம் நமக்கு இன்பம் தந்த கடவுளைப் பாட தந்தக் கடவுளை வேண்டுகிறார் அருணகிரி. முருகனைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம். அதுவும் தமிழால் பாடுவது பேரின்பம். அந்த பேரின்பத்தை பெற ஆனையை வேண்டுகிறார். அதுவும் ஐந்து கரங்கள் கொண்ட ஆனையாம்!

ஆனை முகமும் மனித உடலும் கொண்ட ஆனை முகத்தானுக்கு வலக்கை இடக்கை மற்றும் துதிக்கை என்று மூன்று கைகள் தானே! ஐந்து எங்கிருந்து வந்தது? நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை. இவையிரண்டும் சேர்ந்தால் ஐந்து கைகள்தானே! துதிக்கையானை துதித்து பைந்தமிழில் முருகனுக்கு பாமாலை சூட்டுகிறார் அருணகிரிநாதர்.

அன்புடன்,
கோ.இராகவன்நண்பர்களே இந்தப் படம் தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்தில் எடுத்தது. பழைய நாயக்கர் கால ஓவியங்கள் என்கிறார்கள். நம்முடைய மக்களே நிறைய பாழடித்து விட்டார்கள். தப்பிப் பிழைத்தவைகளில் இதுவும் ஒன்று.

Friday, January 13, 2006

வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!


இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - முப்பது

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!

(வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே - என்கிறார் இளங்கோவடிகள். மேருமை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடையும் பொழுது கடலில் ஆழ்ந்தது மலை. அப்பொழுது ஆமையாய் வந்து தாங்கினாராம் வைகுந்தவாசன்.
)

இறையருட் பறை கொண்ட வகையான அழகுமிகும் திருவில்லிபுத்தூரின் பெரியாழ்வாரின் செல்வப் புதவியான கோதை நாச்சியார் உண்மையான உளத்தோடு இறைவனை நாடிப் பாடியது இந்தத் திருப்பாவை. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களைக் கோர்த்துக் கட்டியது போன்ற அற்புதமானவை இந்தச் சங்கத் தமிழ் மாலையிலுள்ள முப்பது பாக்கள்.

(பை என்றால் எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்று பொருள். பைங்கமலம் என்றால் விளங்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைந்தமிழ் என்றதுமே பை என்ற சொல்லின் பொருள் விளங்கி விடுகின்றது அல்லவா.)

ஆண்டாளின் திருப்பாவையின் முப்பது பாக்களையும் உளமும் உருகிப் பாடுவார்களுக்கு கண்ணன் அருள் உறுதியாக உண்டு. மலையளவு உயர்ந்த இரண்டு தோள்களை உடையவரும் செம்மை பொருந்திய திருவிழிகள் திகழும் முகத்தை உடையவரும் அலைமகளை அணைமகளாகக் கொண்டவருமாகிய திருமாலின் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று இன்புறுவாய் எம்பாவாய்!

(திருப்பாவையின் முப்பது பாடல்களும் முடிந்தன. இந்தப் பாடல்களை உணர்வு கூடிப் பாடிப் பரவசமடைகின்றவர்களுக்கு மாலின் அருள் நிச்சயம் உண்டு என்று உறுதி செய்து, எல்லாரையும் பாவை நோன்பு என்னும் புனித வேள்வியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார் ஆண்டாள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - இருபத்தொன்பது

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பு மிகச் சிறப்பாக நடக்கின்றது. தோழியருடன் கூடிக் கிளம்பிக் கண்ணன் கோயிலுக்குச் சென்று அவனைத் துயிலெழுப்பியாகி விட்டது. கண்ணனும் தன்னோடும் நப்பின்னையோடும் பலதேவனோடும் பெற்றோருடனும் துயிலெழுந்து அருள் புரிகின்றான். ஆண்டாளும் கூட்டாளிகளும் கார்முகில் வண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். வேண்டுவன கேட்கின்றார்கள்.)

முகில்வண்ணா! விடியற்காலையில் வெள்ளியோடு எழுந்து குளிரக் குளிரக் குளித்து விட்டு கூட்டத்தாரோடு கூடி வந்து உன்னைச் சேவித்து உனது பொற்றாமரை அடிகளைப் போற்றிப் பாடுகின்றோமே! அப்படிப் போற்றி நாங்கள் கேட்பது என்னவென்று செவி மடுப்பாய்.

ஆடு மாடுகளாகிய கால்நடைகளை மேய்த்து அந்த வருவாயில் உண்டு சிறக்கும் ஆயர் குலத்தில் எங்களை உய்விப்பதற்காகவே பிறந்தவன் நீ! அப்படியிருக்க எங்கள் வேண்டுகோள்களைக் கவனியாமல் செல்லலாகாது.

கோவிந்தா! ஏதோ இன்றைக்கு ஒருநாள் மட்டும் உன்னைத் தேடி வந்து உன்னருளை விரும்புகிறோம் என்று கொள்ளாதே! இந்த மார்கழி மாதத்தில் நோன்பு நூற்பதால் மார்கழியோடு போவதா நம் உறவு? என்றும் தொடர வேண்டியதே! என்றுமென்றால் இப்பிறவி மட்டுமல்ல. ஏழு பிறப்புகளிலும் உன்னோடு ஒன்றி அமைதி பெறவே விரும்புகிறோம். உனக்கே நாங்கள் ஆளாவோம். அதை விட எங்களுக்கு என்ன வேண்டும். அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் எம்பாவாய்!

(இறையருள் என்றும் வேண்டும். இதே கருத்தைத்தான் காரைக்கால் அம்மையார் அதியற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். எல்லோரும் இறைவனையும் இறைவியையும் அப்பனே அம்மையே என்றால், இவரைத்தான் இறைவனே அம்மை என்றார். அப்படிப் பெருமை கொண்ட அம்மை வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கவனியுங்கள்.
பிறவாமை வேண்டும் - மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் (உம்மை என்று கூட இல்லை. உன்னை என்கிறார். அம்மா அல்லவா! அப்படி அழைக்க உரிமை உண்டுதானே.)இந்தக் கருத்துதான் நமது பாண்டி நாட்டாளது திருவுளத்திலிருந்தும் எழுகின்றது.
)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 12, 2006

பாவை - இருபத்தெட்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


(இறைவனே உலகைக் கட்டி மேய்க்கின்றவன். நாமெல்லாம் பசுக்கள். அதனால்தான் அவனை ஆயன் என்கிறார்கள். தம்மையும் ஆயர் கூட்டத்தாராகக் கருதிக் கண்ணனை வேண்டும் பாடல் இது.)

எங்கள் தலைவனே! நாங்கள் ஆய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு என்ன தெரியும்? ஆடு மாடுகளை மேய்க்கத் தெரியும். அவைகளைப் புல்வெளிகளிலும் கானகங்களிலும் திரிய விட்டு வளர்க்கத் தெரியும். அப்படி மேய்க்கையில் அவைகளுக்கு வேண்டிய கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு அவைகள் பின்னாலேயே செல்வோம். அப்படிப் போகையில் எங்களுக்குப் பசிக்கையில் கூட வந்த ஆயர்களோடு கூடி உண்போம். (அவனுக்கு என்ன தெரியும்? திங்கத்தான தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா. அது போலத்தான் இதுவும்.)

இதைத் தவிர வேறு என்ன அறிவு எங்களுக்கு இருக்கின்றது? அப்படிப் பட்ட இடையர் குலத்தைக் கடையர் குலமாக்காமல் உடையர் எனக்கருதிப் பிறந்தாயே! வாசுதேவா! என்ன புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டுமோ!

குறை என்ற ஒன்று இல்லாததே உன்னுடைய குறை! அப்படி அப்பழுக்கற்ற கோவிந்தா! உன்னுடைய உறவில்லாமல் நாங்கள் பிழைப்பது எப்படி? எப்பொழுதும் எங்களோடு இருந்து கலந்து நலம் தருவாய்!

அறியாத பிள்ளைகள் நாங்கள். எங்களோடு நீ கூடிக் குலவுகையில் பாடிப் பரவுகையில் மிதமிஞ்சிய அன்பினால் மாதவா, கேசவா, பரந்தாமா, வைகுந்தா, தேவதேவா என்று உன்னைப் பேர் சொல்லி அழைத்து விடுகின்றோம். ஆண்டவன் நீ! உன்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்று சீற்றம் கொள்ளாதே!

இறைவா! இத்தனை நெருங்கியவனாக நீ எங்களுக்கு உன்னுடைய திருவருளைத் தருவாய் எம்பாவாய்!

(இறைவனுடைய கருணை நம்மேல் விழ நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த வியப்பில்தான் ஆண்டாள் இப்படிப் பாடுகின்றார். இந்த நிலை சைவத்திலும் உண்டு. அருணகிரிக்கும் இதே வியப்பு. அதைத்தான் "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" என்கிறார். வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, January 11, 2006

பாவை - இருபத்தேழு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!


கோவிந்தா! உன்னைக் கூடாரின் அன்பினையும் வெல்லும் முகுந்தா! நாங்கள் பெற விரும்பும் பரிசு எதென்று கேட்டால் என்ன சொல்வோம் தெரியுமா? ஊராரும் உலகோரும் அறிய உன்னுடைய பெயர்களைப் புகழ்ந்து பாடிப் பறை தட்டுவதே!

(கூடாரை வெல்லும் என்ற சொற்றொடருக்குச் சிலர் எதிரிகளைக் கொல்லும் என்றும் பொருள் கொள்வார்கள். அது சரியன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. இறைவனோடு கூடாரை, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடாரை, இறைவன் திருவடிகளை நாடாரை வேண்டிய பொழுதில் அன்பினால் வெல்லும் திறம் ஆண்டவனுக்கு உண்டு. அதைத்தான் இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.)

மாதவா! உன்னருளாலே செல்வம் பல பெற்று அதனால் நல்ல அணிமணிகளான கைவளை (சூடகம்), தோள்வளை, தோடு, செவிப்பூ (காது மாட்டல்), கால் கொலுசு (பாடகம்) மற்றும் பல அரிய நகை வகைகளை அணிந்து கொள்வோம்! நல்ல ஆடைகளை உடுப்போம்!

(சைவத்தில் இகம்பரம் என்பார்கள். திகம்பரம் என்பது தவத்தார்க்கே. மற்றவர்களுக்கெல்லாம் இகம்பரமே! இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் இகசுகம். அந்த உலகத்தில் கிடைப்பது பரசுகம். இகத்தை மறுத்து பரத்தை மட்டுமே (பரத்தையரை அல்ல) நினைப்பது துறந்தோர் உள்ளம். இறையருள் பரசுகம் மட்டுமல்ல இகசுகமும் வழங்கும். அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்றார். அந்த கருத்தை ஒட்டியே ஆண்டாளும் இறையருளால் இகசுகமும் பெறுவோம் என்கின்றார். நல்ல அணிமணிகளும் அணிந்து இன்புறுவதைக் குறிப்பிடுகின்றவர் அடுத்த வரியில் உணவையும் குறிப்பிடுகின்றார்.)

நன்றாக உடுத்திக் கொண்டு நகைகளை மேலில் அடுக்கிக் கொண்டு பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து பாயாசமாக்கி கைவழி வழியும் வகைக்குக் குழந்தை போலச் சுவைத்து உண்போம். அதுவும் நாங்கள் தனியாக உண்ணாமல் கூடியிருந்து உண்டு வயிறு குளிரக் காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 10, 2006

பாவை - இருபத்தாறு

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


மாலே! மணிவண்ணா! நீ கருணை கொண்டு எங்களுக்கு வேண்டிவன யாவையென்று கேட்பாயானால் அரிய பெரியர்களுக்குத் தக்க இந்த மார்கழித் திங்களின் பாவை நோன்பைச் சிறப்பாகச் செய்ய அருள்வாய் என்றே கேட்போம்!

(பிறவாமை வேண்டுமென்று கேட்டுவிட்டு மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டுமெனக் கேட்கும் சைவத்தைப் போலதான் இதுவும். இறைவன் வரம் தரப் போகின்றான் என்றால் காடு வேண்டும் மாடு வேண்டும் தங்க ஒரு கூடு வேண்டும் என்று கேளாமல் இறைவனை நினைத்துப் பாடும் நோன்பு சிறக்க வேண்டும் என்று ஆண்டாள் கேட்பது அன்பின் உச்சமே!)

அத்தோடு தூய வெண்ணிறத்துப் பாஞ்ச சன்னியம் இருக்கின்றதே! உரத்த ஒலியெழுப்பினால் உலகம் முழுவதும் அதிர்ந்து நடுங்கும் தன்மையுடைய அந்தப் பாஞ்ச சன்னியம் போன்ற அருமையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஊதிக் கொண்டு உன்னைப் பாட முடியும்.

(ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்ற வரியைப் பொருள் கொள்ளும் பொழுது சங்கொலி கேட்டு உலகம் நடுங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாதென்று தோன்றுகின்றது. ஒலியின் அதிர்வுகள் கூடினால் எந்தப் பொருளும் நடுங்குமல்லவா! உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)

அத்தோடு வட்ட வடிவமான பெரிய பறைகளைத் தட்டிக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பாடியும் மகிழ வேண்டும்!

(திருப்பாவை, சிலப்பதிகாரம், இன்னும் பிற நூல்களைப் படிக்கும் பொழுது திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். பறை என்பதை இன்றைய மிருதங்கம் என்று கொள்ளவும் முடியாது. காரணம் பறைகளின் வகைகளும் அமைப்பும் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. இந்த இசைக்கருவிகளை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால் கோதை மனம் குளிர்வார் என்பதில் ஐயமில்லை.)

கோல விளக்கே! உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே! நெடிய கோபுரமே! ஆலின் இலை மேலே துயில் கொண்ட சிறுவனே! எங்களுக்கும் அருள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 09, 2006

பாவை - இருபத்தைந்து

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

நெடுமாலே! நீ ஒருத்தி மகனாய்ச் சிறையில் பிறந்தாய். தேவகியானவள் சிறையில் உன்னை ஈன்றாள். ஆனால் அவளது அண்ணன் கஞ்சன் உன்னைக் கொல்ல எண்ணியிருந்தான். நீ தப்பிச் செல்ல தங்கள் மனம் ஒப்பி இன்னொருத்தி மகனாக வளர யசோதையின் மடியில் இட்டார்கள்.

கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்தாய். அதே நேரத்தில் ஒளிர்ந்தும் வளர்ந்தாய். தறிகெட்டுப் போய் உனக்குத் தீங்கு நினைத்த கஞ்சன் கருத்தில் பிழையென்று நிரூபிக்க அவன் வயிற்றில் நெருப்பாகப் பற்றி அவனை மாய்த்த பரந்தாமா!

(தனது பிள்ளையை இழப்பது பெருங்கொடுமை. அப்படி முழுவதும் இழப்பதைக் காட்டிலும் தாற்காலிகமாகவது இழக்கத் துணிந்தனர் தேவகியும் வசுதேவரும். இறையருளால் இரவொடு இரவாக நந்தகோபன் வீட்டில் விட்டு வந்தனர். தனது பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் காண முடியாது ஒவ்வொரு நொடியும் வருந்தினர். அதே நேரத்தில் கண்ணனைக் கண்ணாக வளர்த்தாள் யசோதை. அப்படி வளர்ந்த கண்ணைக் கொல்ல நினைத்தான் மாமனாம் கஞ்சன். வஞ்சம் நிறைந்தவனாய்க் கண்ணனை அழைத்தான். ஆனால் அந்த அழைப்பே அவனை முடித்து விட்டது.)

முகுந்தா! உன்னுடைய பெயர்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்து வந்தோம். எங்களுக்கு உன்னருள் கிட்டுமாயின் எங்கள் வருத்தமெல்லாம் நீர்ந்து தீர்ந்து போகும். துன்பம் நீங்கிய இன்பம் பெருகி உன்னுடைய திருமகளுக்குக்குச் சரியான பொருத்தத்தையும், எங்களுக்கு நீ செய்யும் அன்புச் சேவகத்தையும் பாடிப் பாடி மகிழக் காண்பாய் எம்பாவாய்!

(திருத்தக்க செல்வமும் சேவகமும் என்ற அடியைப் பொருள் கொள்ளும் பொழுது தடுமாறிப் போனேன் என்றால் மிகையாகாது. பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் அருமையான விளக்கங்களையும் எடுத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை. சரி. நாமே பொருள் காண்போம் என நினைத்து கண்ட பொருள்தான் மேலே உள்ளது.

திருத்தக்க என்பதைத் திரு என்றும் தக்க என்றும் பிரித்தேன். திரு என்றாள் திருமகள். அலைமகள். செல்வத்திற்கு நிலைமகள். அவளுக்குத் தக்க செல்வம் பரந்தாமனிடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அது என்ன அந்தச் செல்வம் என மனம் குடைந்தது. பிறகு தெளிந்தது. வைரத்தைத் தங்கத்தில் வைத்தால் ஜொலிக்கும். தகரத்தில் வைத்தால் இளிக்கும். திருவாக அமைந்தவளுக்குத் தக்க பொருத்தம் எல்லா வகையிலும் சிறந்தவன் என்று வைகுந்தனைச் சொல்வதாகத் தெளிந்தேன் நான். இது சரியாக இருக்குமென்றே மனம் எண்ணுகின்றது.
)

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 08, 2006

பாவை - இருபத்து நான்கு

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


வாமனா! அன்று குள்ளனாக இருந்தும் இந்த உலகத்தை ஈரடியால் அளந்தாய்! ஈரடியிலேயே மூவுலகமும் அடங்கி விட மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு மாபலியிடம் நின்றாய்! அப்படி மாபலி தனது தலையில் தாங்கிக் கொண்டு பெருமை கொண்ட உனது திருவடி போற்றி!

(மூன்றாவது அடி தனது தலையில் தாங்கப்பெற்ற மாபலி பாதாள லோகம் சென்றான். அங்கிருந்து ஆட்சி புரிகின்றான். அவன் ஆண்டொரு நாள் வெளி வந்து நாடு செழித்திருக்கின்றதா என்று காண வரும் நாளாக கேரளத்தில் ஓணம் கொண்டாடப் படுகின்றது.)

தேவா! தென்னிலங்கைக்கே சென்று வென்று அதன் புகழைக் குறைத்த உனது திறமை போற்றி! பொற்சக்கரமாக வந்த சகடாசுரனை எட்டி உதைத்து உடைத்துப் புடைத்த உனது புகழ் போற்றி!

நீ நந்தகோபன் வீட்டில் வளர்கையில் கன்று வடிவில் வந்தான் ஒரு அசுரன். அவனை ஒரு கம்பை எத்துவது போல எத்தி மரமாக நின்ற மற்றொரு அசுரன் மீது மோதச் செய்த திருவடிகள் போற்றி!

(கன்று - பசுவின் கன்று. குணில் என்றால் மரக்கொம்பு. ஆ என்றால் ஆச்சாமரம். தன்னை எதிர்க்க வந்த கன்றை ஒரு குச்சியை எத்துவது போல மரத்தில் எறிந்து கொன்றான் கண்ணன்.

ஆண்டாளுக்குக் கண்டிப்பாகச் சிலப்பதிகாரப் பழக்கம் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதே வரிகளை இளங்கோவும் பயன்படுத்தியிருக்கின்றார்.
"கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்" என்று ஆய்ச்சியர் குறவையில் வருகின்றது.

குழந்தைகள் மரத்தில் இருந்து கனிகளை உதிர்க்க கொப்பை எறிந்து வீழ்த்துவார்கள். அப்படிக் கண்ணனும் கனியுதிர்த்தானாம். மரமாக நின்ற அசுரனின் மீது கன்றாக வந்த அசுரனை எத்திக் கனியுதிர்த்தானாம். என்ன அழகான சொல்நயம்!
)

பெருமழை பொழிந்தான் இந்திரன். பாவம்! மாயத் தந்திரன் உன்னை அறியாதவன். அப்பொழுது கோவர்த்தனகிரியைத் தூக்கி கோகுலத்தைக் காத்த உனது திருக்குணம் போற்றி!

எந்தப் பகையும் வென்றெடுக்கும் உனது கைவேல் போற்றி! எப்பொழுதும் உனது சேவகமே போற்றிக் கொண்டு இன்று உன்னை நாடி நாங்களெல்லாம் வந்துள்ளோம்! இரங்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, January 06, 2006

பாவை - இருபத்து மூன்று

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

மாதவா! உன்னை நாடி உன்னைத் தேடி உன்னைப் பாடி வந்துள்ளோம். இது மார்கழி மாதம். பாவை நோன்பு செய்கின்றோம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் உன் அருள். அதைத் தருவாயா! இத்தனை பொழுது நீ உறங்கிக் கொண்டிருந்தாய். அல்லது உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தாய். இப்பொழுது விழித்து எழுத்துள்ளாய்! வெளியே வந்து அருள் காட்டுவாய்!

நீர் தெளித்துக் குளிர்விக்கும் மழைக்காலங்களில் மலைகளின் குகைகளில் துஞ்சியிருக்கும் ஆண் சிங்கமானது கடமையை உணர்ந்து வெளியே வரும். அப்பொழுது அதன் கண்கள் தனலெனச் சொலிக்கும். பொன்னிறத்துப் பிடரி மயிர்கள் பொங்கிப் பெருகும் வகையில் கழுத்தை உதறிக் கொள்ளும். இத்தனைகாலம் உடனிருந்த சோம்பலைச் சாம்பலாக்க பலபக்கமும் நெளித்து வளைத்து சோம்பல் முரித்துக் கொண்டு புறப்பட்டு வெளியே வரும்.

(தமிழில் சிங்கத்தை ஏறு என்பார்கள். அடலேறு என்றால் ஆண்சிங்கம். மனிதஏறு என்றால் நரசிங்கம். அதற்கு ஏன் ஏறு என்று பெயரென்றால் அதன் ஆணை காட்டில் எங்கும் ஏறும் என்பதால். பொதுவாகவே பெண்சிங்கங்கள் வேட்டையாடும். ஆனால் மழைக்காலங்களில் அனைத்தும் சோம்பிக் கிடக்கும் பொழுது பெண்சிங்கத்திற்கு இரை கிடைப்பது அரிதாகும். அந்த பொழுதுகளில் ஆண்சிங்கம் வெளியே வந்து காடே அதிரும்படி உறுமும். அந்த உறுமலுக்குப் பயந்து விலங்குகள் ஓடும். அந்த சமயத்தைப் பயன்படுத்திப் பெண்சிங்கங்கள் வேட்டையாடும்.)

நரசிங்கமே! நீயும் வீறு கொண்டு எழுந்து வருக! கருநாவல் பூக்களின் நிறத்தை உடையவனே மைவண்ணா! உன்னுடைய திருக்கோயிலில் நாங்கள் நிற்கின்றோம். அந்தத் திருக்கோயிலில் உனக்காகவே பொன்னாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகச் சீரிய சிங்காதனம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து கொள்! உலகிற்கெல்லாம் அரசன் என்று உணர்த்தும் வகையில் இருக்கை கொள்! அந்த அரசுரிமையில் உனது திருவடி தேடி வந்த எங்கள் காரியங்கள் எல்லாம் ஆராய்ந்து அருள் செய்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - இருபத்திரண்டு

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாயோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


கண்ணா! மணிவண்ணா! நீயாளும் இந்த உலகம் மிகவும் பெரியது. மிகவும் அழகானது. இந்த உலகத்து அரசர்கள் எல்லாம் தங்கள் பெருமைகள் குறைந்து விடும் வகையில் உனது பள்ளியறைக் கட்டிலருகே வந்து கூடிச் சங்கம் போல் பணிந்து நிற்பர். அப்படித்தான் இன்று ஆய்ப்பாடிச் சிறுமியர்களாகிய நாங்களும் வந்து நிற்கின்றோம்.

(ஒரு நுட்பமான கருத்து இங்கே இருக்கிறது. ஊன்றிக் கவனிக்க வேண்டும். இறைவனடியைச் சேர்ந்தால் பெருமை என்றுதான் எல்லா நூல்களும் கூறுகின்றன. ஆனால் இங்கே ஆண்டாள் "அபிமான பங்கமாய்" அரசர்கள் வந்து நிற்பர் என்று சொல்லியிருக்கின்றாரே! அதாவது பெருமை குன்ற என்று! அது எப்படி?

முத்தும் பவழமும் பளபளப்பானவைதான். ஆனால் ஒரு வைரக்கல்லின் அருகில் ஜொலிக்க முடியுமா? வைரவொளியானது முத்தையும் பவழத்தையும் அமுக்கி விடுகின்றது அல்லவா. அது போல அரசர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றவர்கள் அரசர்க்கு அரசர் முன் நிற்கும் பொழுது தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உணர்வதைத்தான் அபிமான பங்கம் என்கிறார் ஆண்டாள்.
)

முகுந்தா! உனது திருவாய் மொழியே இனிய இசை. அப்படி இசையொலிக்கும் வகைக்கு உனது தாமரைப் பூவாயைத் திறந்து நல்மொழி கூறாய்!

கேசவா! செவ்வரியோடிய உனது அழகு விழிகள் துயிலெழும் பொழுது சிறுகச் சிறுக விழிக்கும் பொழுது எங்களை நோக்குவாய்!

புவிக்கு ஒளி கொடுக்கும் நிலவும் கதிரும் உன்னிரு விழிகளைப் போல. எப்படித் தெரியுமா? தீயவைகளைச் சுடும் நெருப்பாகவும் இருந்து, எங்களைக் காக்கும் கருணைக்குளிர் ஒளியாகவும் இருப்பதால் அப்படி. அப்பேர்ப்பட்ட விழிகளால் நீ எங்களை நோக்கும் பொழுது எங்கள் குறைகள் அனைத்தும் இழிந்து நிறைகள் அனைத்தும் பெருகக் காண்பாய் எம்பாவாய்!

(ஒளியைக் கொடுக்கின்ற பகலவன் குளிரைக் கொடுப்பதில்லை. குளிரும் மதியோ பேரொளியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வேலை. ஆனால் கண்ணன் மலர்விழிகளோ சுடும் பொழுது சூரியனாகவும் குளிரும் பொழுது மதியமாகவும் இருந்து சிறப்பிக்கிறது என்பதே இங்கு உட்பொருள். இறைவனால் அனைத்தும் ஆகும் என்பதைச் சொல்லப் புகுவதே இது.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 05, 2006

பாவை - இருபத்தொன்று

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


கறக்கக் கறக்க ஏமாற்றாது பால் தந்து பெரிய கலங்களும் நிறைந்து வழிந்து தத்தளிக்கும் வகையில் சுரந்து கருணை காட்டுகின்ற வள்ளல் தன்மை மிகுந்த பெரும் பசுக்களின் மந்தையினை எக்கச்சக்கமாக கொண்ட நந்தகோபனுடைய கோபாலா! கொஞ்சம் சிந்திந்துப் பார்த்து தெளிவுறுவாய்!

அளப்பரிய ஆற்றலும் சக்தியும் உடையவனே! அனைத்திற்கும் பெரியவனே! உலகினில் பேரொளியாகக் கண்ணில் தோன்றும் பெருஞ் சுடரே துயில் எழுவாய்!

(இறைவனைக் கண்களால் காண முடியுமா என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது. நம்பினால்தான் இறைவனே என்றாகும் பொழுது காண முடியும் என்று நம்பினால்தானே காணமுடியும். இப்பொழுது மருந்தையே நம்பியுண்டால்தான் முழுப்பலன் கிடைக்கும் என்று மருத்துவர் சொல்லக் கேட்கின்றோம்.

வாடிய பயிரினைக் கண்ட பொழுதெல்லாம் வாடினார் வள்ளலார். அது கருணை. அந்தக் கருணை கண்களில் இருந்ததால்தான் வாடிய பயிர்கள் மீதும் பாசம் வந்தது. அதுபோல கண்களில் அன்பிருந்தால்தான் ஏழையின் சிரிப்பில் கூட இறைவனைக் காண முடியும். இந்த இடத்தில் ஏழை என்பது பணத்தால் மட்டும் என்று குறிப்பதல்ல. மனத்தாலும் வேறுபல வகைகளாலும் ஏழையானாலும், நீண்ட நாள் தேடியது கிடைத்து மகிழ்ந்து சிரிக்கையில் தெரிக்கும் இன்பத்தில் கடவுள் இருக்கின்றார் அல்லவா.
"கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

சரி. இந்தப் பாடலுக்கு வருவோம்.
"உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்" என்ற வரிகளுக்கு வருவோம். இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றானா? மின்சாரம் விசிறியில் இருந்தால்தான் விசிறி சுற்றுகின்றது. மின்சாரம் இல்லையென்றால் விசிறி ஓடுவதில்லை. அப்படி விசிறியைக் கட்டுப் படுத்தும் மின்சாரம் விசிறியோடு இருப்பது போல உலகினையே கட்டுப் படுத்தும் இறைவன் உலகோடே இருக்கின்றார். அப்படி உலகோடு இருப்பவர் உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருக்கின்றார். அதை உணர்ந்தவர் ஆண்டாள். ஆகையால்தான் காலை விடியும் சூரியனின் பெருஞ்சுடரில் இறைவனைக் காண்கின்றார். ஒரு ஆற்றல் அளியாக இருந்து உலகு காப்பது பகலவனே! ஆகையால்தான் இளங்கோவும் ஞாயிறு போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தைத் துவக்குகின்றார்.)

உன்னை எதிர்க்கின்றவர்கள் எல்லாம் தங்கள் வலிமையை இழந்ததோடு மட்டுமில்லாமல் உன்னுடைய திருவடியையே சரணடைந்து பணிவது போல உன்னைப் போற்றியே புகழ்ந்தே வரக்காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, January 04, 2006

பாவை - இருபது

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்பொழுதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவன் அரங்கன். அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவன் அரங்கன். அரங்கா! அச்சுதா! துயில் எழுவாய்!

எங்கள் இறைவனே! உன்னை ஆண்மகன் என்ற வடிவில் நாங்கள் கண்டால், நீ ஆண்களில் செப்பம் உடையவன். அதாவது சிறந்தவன். ஆண்மைக்குறிய அத்தனை இலக்கணங்களும் சீரிய முறையில் அமையப் பெற்ற அருமையன்.

(இறைவனைப் பலரும் பலவிதமாகக் கண்டுணர்ந்து மகிழ்ந்துள்ளனர். அப்பருக்குத் தலைவன். சம்பந்தருக்குப் பெற்றோர். சுந்தரருக்குத் தோழன். மாணிக்கவாசகருக்கு ஆசான். பாரதியாரும் அப்படித்தான். கண்ணனை ஒவ்வொரு வடிவிலும் கண்டார். காதலனாகவும் காதலியாகவும் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் வேலைக்காரனாகவும் பலரிடமும் கண்டார். அந்த மாயன் ஒவ்வொரு பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கின்றவன். அதனால்தான் பாரதியால் அத்தனை பாடல்களைக் கண்ணன் மேல் பாட முடிந்தது. அப்படி ஆண் வடிவில் கண்ட ஆண்டாளுக்குக் கண்ணனே சிறந்த ஆண்மகனாகத் தெரிந்ததில் வியப்பென்ன! நல்ல நடிகர் ஒருவர் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திலேயே ஒன்றிச் சிறப்பிப்பது போலத்தான் இதுவும்.)

அனைத்துத் திறமைகளும் உடையவனே! துன்பம் தருகின்றவர்களைத் தீய்க்கும் வெப்பமே! விமலனே! துயில் எழுவாய்!

(அனைத்துத் திறமைகளும் உடையவன் என்ற சொற்றொடர் இங்கு மிகவும் சிறப்பானது. இறைவன் அனைத்தையும் நடத்த வல்லான். முத்தொழிலும் எத்தொழிலும் செய்தொழிலாகக் கொள்ளும் திறமை பெற்றவன். எதையும் செய்யத் தக்கானை வேறு எப்படிப் புகழ்வது. அப்படி அனைத்தையும் நடத்த வல்லான் எப்படி இருக்க வேண்டும்? தூய்மையான உளத்தவனாக இருக்க வேண்டுமல்லவா? திறமையுள்ளவன் தீயவனாக இருந்து விட்டால் தீமைகளே விளையும். ஆனால் இறைவன் தூயவன் என்பதைச் சொல்லவே திறமையைச் சொல்லிய உடனேயே விமலா என்று சொல்லித் தூய்மையைப் பெருமைப் படுத்துகிறார்.)

சிறப்பான வடிவான மென்முலைகளை உடையவள் நப்பின்னை. அவளது செப்பிதழ்கள் பவழம் போன்ற செவ்விதழ்கள். சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால்தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 03, 2006

பாவை - பத்தொன்பது

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்


(நப்பின்னையிடமும் சொல்லியாகி விட்டது. அவளும் கண்ணனைக் கைப்பிடிக் கைதிலிருந்து விடுவிக்கும் வழியைக் காணோம். இனிக் கண்ணனையே கேட்க வெண்டியதுதான்.)

கண்ணனே! உலக உயிர்களுக்கெல்லாம் திண்ணனே! எங்கள் புலம்பலையும் கொஞ்சம் கேட்பாய். உனது பள்ளியறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பாக ஒளிர்கின்றன. காடுகளில் வாழும் பெரிய ஆண்யானைகளின் பெரிய மிளிரும் தந்தத்தைக் கால்களாகக் கட்டிச் செய்யப்பட்ட கட்டில் மேல் ஏறி மெத்தென்ற இலவம் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருக்கின்றாய்.

கொத்துக் கொத்தாக வாசநறுமலர்களைச் சூடிக் கொண்டுள்ள நீண்ட கருங்கூந்தலை உடையவள் நப்பின்னை. உனது மனையாளாகிய அவளது மார்பில் நீ தலையை வைத்துச் சாய்ந்து கொண்டு இளந்தூக்கத்தில் சுகிக்கின்றாய். மலர்களை ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கட்டி முனையில் முடிச்சிடாத தார்மாலை அணிந்து கொண்ட மலர் மார்பனே! கொஞ்சமாவது வாய் திறந்து எங்களுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாயா?

(கண்களுக்கு மை செய்வதில் பழந்தமிழகத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பசுநெய்யை விளக்கில் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு எரித்து அந்தப் புகையை மெல்லிய வட்டிலில் பிடித்துப் பயன்படுத்துவார்கள். இன்னொன்று அரிசியைக் கருக்கி அரைப்பது. அப்படிக் கிடைத்த கருமையை கண்களில் தீட்டிக் கொள்ளும் வழக்கம் அன்றே இருந்திருக்கின்றது. எகிப்தியர்களுக்கும் இந்தப் பழக்கம் உண்டென்று நாம் அறிவோம். )

கரிய அரிய மையைக் கண்களின் தடமாக இழுத்துக் கொண்ட அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய மணவாளனை எப்பொழுதும் துயிலெழ விடாமல் உன்னுடனே வைத்துக் கொள்ள நினைக்கின்றாய்.

(இன்னும் நப்பின்னை கண்ணனை வெளியே விடவில்லை. ஆகையால் சற்றுக் கடுமையாகவே சொற்களை அடுக்குகின்றார் ஆண்டாள். கடவுள் அனைவருக்கும் உரிமையானவர். நப்பின்னை ஒருத்தி மட்டும் அவரை அடைத்து வைக்க நினைக்கலாமா என்று பொருமுகின்றார்.)

இதோ பார் நப்பின்னை. நீ சற்றும் அவனைப் பிரிந்திருக்க விரும்பாமல் உனது கட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றாய். இந்த எண்ணம் எந்த வகையிலும் சிறந்தது அன்று என அறிவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 02, 2006

பாவை - பதினெட்டு

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


(இத்தனை பேரிடம் சொல்லியும் யாரும் கண்ணனை எழுப்பவில்லையே. சரி. நப்பின்னையிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று முனைகிறார் கோதையார். நப்பின்னை கண்ணனின் மனைவி. காளையை அடங்கிக் கைப்பிடித்த கன்னிகை. நப்பின்னையைப் பற்றித் தமிழ் நூல்கள் நிறையவே சொல்கின்றன. ஆனால் இன்றைய வைணவத்தில் நப்பின்னையைக் காணவில்லை என்பது வியப்பே. விவரம் தெரிந்த வைணவர்கள் விளக்கலாம்.)

கண்ணன் காதலியே நப்பின்னை! நீ யார் தெரியுமா? உனது புகுந்த வீட்டுப் புகழ் தெரியுமா? மதங் கொண்டு நிலை மறந்து ஓடிவரும் ஆனையைக் கண்ட விடத்தும் ஓடாது நின்று வென்றே திரும்பும் தோள்வலியை உடைய நந்தகோபன் உனது மாமன். அப்பேர்ப்பட்ட பேராயனின் மருமகளே! நறுமணம் கமழும் அழகுமிகும் நீண்ட கருங்கூந்தலைக் கொண்டவளே! உன் மாமியிடம் சொன்னோம். உன் மைத்துனரிடம் சொன்னோம். அவர்கள் வந்து உனது படுக்கையறையைத் தட்டித் திறந்து தொந்தரவு செய்யத் தயங்குகின்றார்கள். ஆகையால் உன்னைக் கேட்கின்றோம். நீயாவது வந்து கதவைத் திறப்பாயா!

பள்ளியறையை விட்டு வெளியே வந்து பார்! கோழியினங்கள் கூவிப் பொழுது விடிந்து பலகாலமாயிற்று. அந்தக் கோழிக் கூட்டங்கள் தத்தமது குஞ்சுகளோடு கூடிக் கொத்தித் தின்ன இரை மேய்கின்றன. மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடிகளில் அமர்ந்து குயிலினங்கள் இன்னிசை கூவுகின்றன. அதையும் வந்து பார்!

இப்படியெல்லாம் உலகம் மகிழ்வுற்று தனது இயக்கத்தைத் துவங்கிய வேளையில் நீ மட்டும் கண்ணைப் பள்ளியறையிலேயே தள்ளி வைக்கலாமா? கைவிரல்களில் பந்தினைப் பற்றிக் கொண்டு விளையாடும் சிறுமியர்தான் நாங்கள். மறுக்கவில்லை. நாங்கள் கூட கோபாலன் மீது அன்பு கொண்டு பாட்டுப் பாடி மகிழ்ந்திட விரும்புகிறோம். நீ விரைந்து வந்து உனது செந்தாமரைக் கையில் அணிந்துள்ள வளையல்கள் அசைந்து இசைந்து ஒலியெழுப்பும் வண்ணம் கதவினைத் திறவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 01, 2006

பாவை - பதினேழு

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்


(மார்கழி மாதத்து நோன்பு சிறப்பாகவே துவங்கி விட்டது. பேசி வைத்தபடி தோழியர் எல்லாரும் எழுந்து நோன்பில் கலந்தனர். அப்படியே மன்னாரின் திருக்கோயிலுக்கு வந்தால் கதவு மூடியிருக்கிறது. வாயிற்காப்பானிடம் கெஞ்சிக் கூத்தாடி அதையும் திறந்தாகி விட்டது. உள்ளே கண்ணன் உறங்குகின்றான். அவனுக்குத்தான் இப்பொழுது திருப்பள்ளியெழுச்சி பாட வேண்டும்.)

உணவு (சோறே), உடை (அம்பரமே), தண்ணீர் ஆகியனவும் அவைகளுக்கு மேலானவும் தந்து அறம் செய்து இவ்வுலக மக்களை எப்பொழுதும் காக்கும் எம்பெருமானே! நந்தகோபாலே! உறங்கியது போதும். எழுந்திடுவாய்!

(இந்த உலகத்தில் எல்லாம் ஆண்டவன் தந்தது. அந்த நன்றி மறவாமை வேண்டும். உணவு, உடை, உறைவிடம், உயிர் என்று எத்தனை பெரிய பட்டியல் இட்டாலும் அது இறையவன் செய்த அறமே. இது போன்ற உயிர்த்தேவைகள் மட்டுமல்ல, அறிவும் கூட ஆண்டவன் தந்ததென்று அநுபூதியில் அருணகிரியும் சொல்லியிருக்கின்றார். "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".)

நந்தகோபாலனைப் பெற்றவளே! ஆயர் குலப் பெண்களுக்கெல்லாம் தலைவியாகிய அறிவுக் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே! யசோதையே! நீயாவது கொஞ்சம் அறிவுற்று எழுந்திருக்க மாட்டாயா! அப்படி எழுந்து உனது மைந்தன் கோவிந்தனையும் எழுப்புவாயாக!

வானத்தைக் கிழித்துக் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து உலகை அளந்த தேவர் தலைவனே! உறங்கிக் கிடக்காமல் எழுந்திராய்!

(நாரணன் உலகளந்த பெருமையைப் பாடத கவிஞர் இல்லையென்றே தோன்றுகின்றது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இப்படிச் சொல்லியிருக்கின்றார் இளங்கோ.
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி!

அதாவது மூன்று உலகங்களும் இரண்டு அடிகளுக்கே பத்தாத வகைக்குத் தாவிய சேவடியாம். )

செம்பொன்னாலான கழல்களைக் காலில் அணிந்த பலராமா, நீ உனது தம்பியோடு உறங்குவாயோ எம்பாவாய்!

(அன்னைக்கு அடுத்த பொறுப்பு அண்ணனுக்குத்தானே. ஆகையால்தான் யசோதையை முதலில் கேட்டவர்கள் அது நடக்காமல் அடுத்து பலராமனைக் கேட்கின்றார்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்