Tuesday, August 29, 2006

31.செவ்வானமே செந்தாமரையே

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. "இல்லே எனும் மாயையில் இட்டனை நீ" என்று சென்ற பாடலில் வருந்திய அருணகிரிநாதர், இந்தப் பாடலில் எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதைச் சொல்கிறார்.

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


தொடக்கமே முருகனின் பண்பை விளக்குகிறது. செவ்வேள் முருகன் செம்மைப் பண்புடையவன். அவனது மனம் மட்டுமல்ல உடலும் உடைகளும் கூட செம்மையானவை. எட்டுத்தொகை நூல்களில் தலையாயது குறுந்தொகை. இதில்தான் தருமிக்காக இறைவன் பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற செய்யுளும் தொகுக்கப் பட்டுள்ளது. இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று தொடங்கியவர், "பவழத்தன்ன மேனி" என்கிறார். அதாவது பவழம் போன்ற செக்கச் செவேலென்று இருக்கும் தெய்வம் என்கிறார்.

பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. அநுபூதியிலும் அருணகிரி அதைத்தான் சொல்கிறார். "செவ்வான் உருவில் திகழ் வேலவன்!" விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார்.

"முருகா! பேரிறைவா! துன்பத்தில் உழன்று கொண்டிருந்தேன் நான்! உண்மையை உணராமல், நன்மையைப் புரியாமல், தன்மையை விளங்காமல் திரிந்தேன் நான்! அந்த மாயைகள் எல்லாம் விலக, அவைகள் எல்லாம் ஒவ்வாதவை என்று நீயே உணர்வித்தாய்! அப்படி உன் கருணையால் ஒவ்வாதவைகளை ஒருவர் உணர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. எம்மால் ஆவதொன்றுமில்லை." என்கிறார் அருணகிரி. சென்ற பாடலில் "மாயையில் இட்டதற்கு" முருகனைக் காரணம் கேட்ட அருணகிரி, இந்தப் பாடலில் முருகன் காப்பாற்றியதைச் சொல்கிறார். இறைவனாகப் பார்த்துக் காப்பாற்றா விட்டால் உய்ய வழி ஏது? இப்பொழுது நான்கு வரிகளையும் படியுங்கள்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன்
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
நாமாக ஒன்றைச் செய்ய முடியுமா? இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும் என்கிறார் அருணகிரி. பட்டினத்தடிகளும் அப்படித்தானே! "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என்று இறைவன் உணர்வித்த பிறகே உய்த்தார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 22, 2006

30. மலத்தை மலத்தால் நீக்கி...

தத்துவச் சுவையும் கவிச்சுவையும் ஒருங்கே சேர்ந்த அழகான பாடல் இது. பக்தியையும் கவித்துவமாகச் சொல்வதில் அருணகிரிநாதர் வல்லவர். மதுரைத் திருப்புகழை எடுத்துக் கொள்ளுங்கள். "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம்" என்று முருகன் திருவடிகளைச் சொல்கிறார். வரை என்றால் மலை. வரையாடு என்று இன்னமும் ஊர்ப்புறங்களில் மலையாட்டைச் சொல்வார்கள். இருக்கின்ற மலைகளில் எல்லாம் உலவி நிறைந்து நமக்கு நல்லருட் சீர்களை வரிசைகளாகத் தரும் திருவடிகள் என்று முருகன் திருவடிகளைக் குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்ற சொற்றொடரை எவ்வளவு அழகாக "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது" என்று குறிப்பிடுகிறார்.

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே


மல்லுக்கட்டுகிறவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? பலர் கூடிப் பார்க்க, மல்லர்கள் இருவர் தோளோடு தோள் பொருதிப் போரிடுவார்கள். இரண்டு வலுவான தோள்கள் கொண்டவர்களே மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், பன்னிரண்டு தோள்களைக் கொண்ட முருகப் பெருமான் என்ன செய்வார்? "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" என்கிறார். வாகு என்றால் தோள். வீரவாகு என்றால் வீரமிக்க தோள்களை உடையவன் என்று பொருள். பண்டொரு முறை நாரதர் நடத்திய வேள்வியில் மந்திரத்தை தவறாக உச்சரித்ததால் வேள்வித்தீயிலிருந்து முரட்டு ஆடு ஒன்று வந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. முருகன் அருளால் வீரவாகு அந்த ஆட்டை அடக்கி முருகனுக்கே வாகனமாக்கினார். அது வீரவாகுவின் தோள்வலியைக் காட்டுகிறது.

சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய பன்னிரண்டு தோள்களை வைத்துக் கொண்டு முருகன் என்ன செய்கிறார்? "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று அருணகிரி புகழ்கிறார். தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மாலைகள் சூட்டி வழிபடுகிறார் அவர். "முருகா சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய உன்னுடைய பன்னிரண்டு தோள்களிலும் தீந்தமிழில் சொற்களால் நான் தொடுத்த பாமாலைகளை அணிந்து கொண்டு சுடர் மிகுந்த வேலோடு அருள்கின்றவனே!"

"இல்லே எனும் மாயை". இல் என்றால் இல்வாழ்க்கை. "இல்வாழ்க்கை என்ற மாயையில் என்னை விழச்செய்தாய் முருகா! நானும் இல்லறத்தை நல்லறமாகப் பேணாமல் பொல்லாதவனாகி உழன்றேனே! அப்பொழுதெல்லாம் என்னுடைய அறியாமையை நீக்கவில்லையே! ஏன்?" என்று முருகனைக் கேட்கிறார் அருணகிரி. ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.

ஏற்கனவே இவ்வுலகவாழ்க்கை என்னும் மாயையில் இருந்தார் அருணகிரி. அந்த மாயா மலத்தோடு பொல்லாத்தனம் என்னும் ஆணவ மலத்தையும் கொடுத்தார் முருகன். பிறவிப் பாவங்கள் என்னும் கர்ம மலம் வேறு. மூன்று மலங்களும் சேர்ந்து பல தவறுகள் செய்தார் அருணகிரி. ஆனால் இறுதி விளைவு முருகனின் கருணையாக விளைந்தது. மனமும் குணமும் வெளுத்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 15, 2006

29. அலுப்புத் தட்டாத அமுதம்

அருணகிரி தமிழ்க் கடல். அதிலும் அவரை ஓசைமுனி என்பார் பாம்பன் சுவாமிகள். தமிழிலுள்ள ஓசைகளெல்லாம் அத்துப்படியானவர். அவர் சொல்லித் தத்துவம் கேட்பது நமக்கெல்லாம் இனிமை. இந்தப் பாடலும் ஒரு தத்துவப் பாடலே! இந்தப் பாடலில் இரண்டு உண்மைகளைக் கூறியுள்ளார் அருணகிரி. உணர வேண்டிய உண்மைகள்.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே


இந்த உலகாய பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு இரண்டு பண்புகள் உண்டு. நன்மை ஒன்று. தீமை மற்றொன்று. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லமும் எடுக்கலாம். சாராயமும் காய்ச்சலாம். அது பயன்படுத்துகின்றவர்களின் தன்மையைப் பொருத்தது. மிகவும் நல்லது என்ற பொருளிலும் கூட ஏதேனும் தீமை இருக்கும். மிகவும் இனிமையானதாக கருதப்படும் அமுதம் சாவாமருந்து. அதை அருந்துதல் இன்பம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இளமையாக சாகாமல் இருப்பது. கண்டிப்பாக அலுப்புத் தட்டிவிடும். அப்படியெல்லாம் எந்தத் தீமையையும் தராத ஒரு அமுதம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்படிப் பட்ட அமுதமும் உண்டு. அயில்வேல் அரசனே அந்த அமுதம். அயில் என்றால் கூர்மை. கூர்மையான வேலையுடைய முருகனே இன்பத்தை மட்டுமே தரக்கூடிய அமுதம். அதுவும் எப்படி? சற்று விளக்கமாகப் பார்ப்போம். கூரில்லாதவன் என்று யாரைச் சொல்வோம்? அறிவில் சற்று மந்தமாக இருப்பவர்களை கூரில்லாதவன் என்பது வழக்கம். கூர்மை என்பது அறிவின் பண்பு. வேல் ஞானத்தின் வடிவம் என்பது நாம் அறிந்ததே! ஞானம் கூர்மையாக இருக்க வேண்டும். அறிவு பெருகப் பெருக ஆராய்ந்து தெளியும் பண்பு பெருகும். நாம் அவசரப்பட்டு முடிவெடுப்பதெல்லாம் அறிவீனத்தினால்தானே! ஆக முற்றும் உணர்ந்தவர் தீயவராக இருக்க முடியாது. அப்படி அனைத்தையும் அறியும் அறிவு முருகனிடத்தில் அடங்கும். ஆகையால் ஞானாகரனே என்று அடுத்த சொல்லைப் போடுகிறார்.

இப்பொழுது படியுங்கள். "ஆனா அமுதே! அயில் வேல் அரசே! ஞானாகரனே!" புரிந்திருக்கும் என நினைக்கிறேன். "இறைவனே! நீ தீதில்லா அமுது. எப்படித் தெரியுமா? அனைவரையும் அடக்கும் ஞானம் உன்னிடத்தில் அடங்கும். அதனை உருவகமாக கையில் வேலாகத் தாங்கிய இறைவனே!"

இப்படியெல்லாம் அழைத்து விட்டு, நவிலத் தகுமோ என்கிறார். அதாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறார். எதைச் சொல்ல முடியுமா என்று அருணகிரி தயங்குகிறார்! இறைவனிடத்தில் நேரடி உபதேசம் பெற்ற அவருக்கே சொல்லி விட முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதா? என்ன அது? அடுத்த இரண்டு வரிகளைப் பாருங்கள். "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!" இதைத்தான் அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அறிவு அடக்கத்தைக் கொடுக்கும் என்று முன்பே அறிந்தோம். அந்த அடக்கம் இறைவனின் கருணையால் வருவது. அதன் விளைவு என்ன? அந்த விளைவைத்தான் அருணகிரியால் சொல்ல முடியவில்லை.

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். அதாவது இறைவனை உணர்ந்தவர்கள் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னதில்லையாம். அப்படிச் சொன்னவர்கள் உணர்ந்ததில்லையாம். அருணகிரி உணர்ந்தவர். ஆயினும் நமக்காக, நாம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இங்கே வந்து தடுக்கி விட்டார். இறைவன் கருணையின் விளைவு என்ன தெரியுமா? நான் என்ற அகந்தையை விழுங்கி விட்டு, அனைத்துப் பரிமாணங்களிலும் அன்பு என்ற அமைதி ஒழுக இருக்கும் தன்மை. அதை எப்படி விளக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. மேலே சொன்னது புரிந்தது போல இருக்கும். ஆனால் முழுவதும் புரியாது. ஏனென்றால் சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சொல்லொணா நிலையது. பரவசம் என்று சொல்லலாம். ஆனால் பரவசம் எப்படி இருக்குமென்று யாரேனும் சொல்ல முடியுமா? வெல்லம் இனிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். எப்படி இனிப்பாக இருக்குமென்று யாரால் சொல்ல முடியும்? சுவைத்துப் பார்த்து உணர்ந்தவர்களிடம் வெல்லம் இனிக்குமென்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். முருகப் பெருமானின் அருட்பெருங் கருணையின் விளைவு இனிக்கும் என்று இதுவரை சொல்லி வந்த அருணகிரிநாதர் எப்படி இனிக்குமென்று சொல்ல முடியாத நிலை இதுதான். ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, August 07, 2006

28. யாரிடம் கடன் கேட்க வேண்டும்?

வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால் அருணகிரிக்கு அது எளிதில் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. ஆம். இந்தப் பாடலில் இரண்டு வரிகளில் வாழ்க்கைத் தத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் சொல்லாத பலவற்றைச் சொல்வது.

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கு எதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே

நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. ஆனாலும் யாரும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. நாம் மகிழ்கின்ற விடயங்களெல்லாம் மின்னலைப் போன்றி தோன்றி மறையக் கூடியவை. ஒருவேளை அவை நிலைத்தாலும் மகிழ்ச்சி நிலைக்காது. சுவை மிகுந்த உணவுகளை உண்கிறோம். அந்தச் சுவை எவ்வளவு நேரம் இன்பம் தருகிறது. நாவில் உணவு இருக்கும் வரை சுவை தெரியும். அவ்வளவுதான். சரி. நாவில் தொடர்ந்து இருக்கட்டும் என்று உணவை வாயிலேயே வைத்திருந்தால் சுவை தொடருமா? சுவை சுமையாகிப் போகாதா? உலக இயக்கமாகிய கலவி இன்பமும் சிறு பொழுதே. மின்னலைப் போல. தோன்றும். நிற்பது போல நின்று உடனே மறையும்.

வாழ்க்கையே அப்படித்தானே. நேற்று பிறந்து, இன்று வாழ்ந்து, நாளை மடிவதுதானே வாழ்க்கை. மின்னலைப் போலத்தான். நினைக்காத பொழுது தோன்றி நினைக்காத பொழுது மறைவது. எப்பொழுது நடக்குமென்று கூற முடியாது. "மின்னே நிகர் வாழ்வு" என்கிறார் அருணகிரி நாதர். அந்த வாழ்வையும் நாம் விரும்புகிறோம். ஏன் விரும்புகிறோம் என்று யாருக்கும் தெரியாது. தெரியாமலே நடக்கிறது நமது வாழ்க்கை. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் பிறக்கிறோம். தொடக்கமே கோணல். முதல் கோணல் முற்றும் கோணல். அப்படிப்பட்ட வாழ்வை நாம் தெரியாமலே விரும்புகிறோம்.

ஏன் விரும்புகிறோம்? எல்லாம் விதியின் பயன். விதி என்பது ஊழ். ஊழிற் பெருவலி யாவுள என்று கூறுகிறார் வள்ளுவர். பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான் அவர்கள் அடக்கமாக வாழ்கின்றார்கள். அமரருள் உய்க்கின்றார்கள். நமக்கும் எடுத்துச் சொல்கின்றார்கள். வள்ளுவரைப் போல. அருணகிரி நாதரைப் போல. "என்ன இது! மானிடப் பிறப்பெடுத்து விட்டோம். எல்லாம் மின்னலைப் போல நடக்கிறது. இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! இதைத்தான் விதியின் பயன் என்பதோ!" என்று வருந்துகிறார் அருணகிரி.

கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க நிலைப்பவரிடம்தானே கேட்க வேண்டும். என்றும் நிலைக்கும் கந்தனைக் கேட்கிறார் அருணகிரி. பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே என்று அடுக்குகிறார் புகழாரங்களை. பொன் ஒளிரும். முருகன் ஒளி பொருந்தியவர். மணி குளிரும். ஆறுமுகர் குளிர்ச்சி மிகுந்த பார்வை கொண்டவர். பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்.

இதையெல்லாம் கூறிவிட்டு மன்னே என்கிறார். அதாவது மன்னன். மன்னன் என்பவன் ஆள்கின்றவன். பழநி ஆண்டவன் என்றைக்கும் ஆள்கின்றவன் என்று சொல்கிறார். மயிலேறிய முருகனைப் புகழ்வதில் அருணகிரிக்கு அவ்வளவு ஆர்வம். முதலில் மயிலேறிய சேவகனே என்றார். இந்தப் பாடலில் மயிலேறிய வானவனே என்கிறார். பூவோடு சேர்ந்தவை அனைத்தும் மணக்கும் என்பது போல, முருகனோடு தொடர்புடைய அனைத்திற்கும் புகழ் கிடைக்கும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, August 01, 2006

27. ஆதாரத்தின் ஆதாரம்

ஆதாரம் என்ற சொல் தமிழில் மிகவும் முக்கியமானது. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒன்று ஆதாரமாக இருக்கிறது. உடலுக்கு உயிர் ஆதாரம். உயிருக்கு ஆன்மா ஆதாரம். ஆதாரமில்லாதது ஒன்றுமில்லை. பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் இருக்கும். நெய்யிற்கு கிண்ணம் ஆதாரம். கிண்ணத்திற்கு நெய் ஆதாரம். நெய் இல்லையென்றால் அதை வைக்கக் கிண்ணம் தேவையில்லை. கிண்ணம் இல்லையென்றால் நெய்யை சேமிக்க முடியாது. அதே போலத்தான் உடலும் உயிரும். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றிற்குப் பயனில்லை.

இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும். இப்பொழுது புரிகிறதா ஆதாரத்தின் ஆதாரம்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனோ
தீதா சுரலோக சிகாமணியே!

அருணகிரி படாத பாடெல்லாம் பட்டவர். பிறகு ஆண்டவனின் அருட்பார்வை அவர் மீது பட்டது. அருணகிரியாக இருந்தவர் அருணகிரி நாதரானார். முதலில் அவர் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த பொழுது இறைவன் அருள் என்னும் ஆதாரம் இல்லை. அதைத்தான் "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே" என்கிறார். "முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? சிற்றின்பச் சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை உன்னுடைய அருளைக் கொடுத்து கை தூக்கி விட்டாய். எனக்கு என்ன தகுதி என்று நீ கொஞ்சமும் நினைகக்வில்லையே! உன் கருணையே கருணை!"

"ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்ற வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறுவார்கள். "முருகா! உன்னுடைய அருளைப் பெறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தேனே! நீ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லயே!" என்று. ஆனால் முருகன் நினைக்காமலா அருணகிரிக்கு வாழ்வு வந்தது? ஆகையால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம். இருந்தும் மற்றொருவர் உதவுகிறார். அவரிடம் என்ன சொல்வோம்? "ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.

அந்தக் கருணை உள்ளம் கொண்டவனை எப்படிப் பாராட்டுவது? அவனது நலன்கள் என்ன? வேதாகம ஞான விநோதன். வேதங்களை அறிந்தவனே! அவைகளைக் கடந்தவனே! சரி. வேதம் என்றால் என்ன? எழுதாக் கிளவி நான்கு வேதங்களா? அப்படியும் கொள்ளலாம். உண்மையில் வேதம் என்பது மெய்ப்பொருள் தத்துவம். அந்த மெய்ப்பொருளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது? "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்கிறது தேவாரப் பதிகம். வேதம் நான்கிலும் அல்ல. மாறாக வேதம் நான்கினும். அதாவது நான்கு வேதங்களைக் காட்டிலும் நமச்சிவாயம் என்ற மந்திரம் மெய்ப்பொருளாகும். ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம். தொண்டர்களுக்கு உள்ளுமிருந்து அவர்களைக் கடந்தும் இருக்கும் கருணைக் கடவுள். இப்பொழுது படியுங்கள். "வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!

இறைவனுடைய புகழை சொல்லால் அளக்க முடியாது. செயலால் விளக்க முடியாது. மனதால் அளக்க முடியுமா? வானம் விரிந்தது என்று சொல்வோம். எவ்வளவு விரிந்தது என்று இன்று வரைக்கும் எந்த அறிவியல் அறிஞரும் சொல்லியிருக்கின்றாரா? அதுபோலத்தான் இறைவனின் புகழும். அதைத்தான் "மன அதீதா" என்ற சொற்றொடரில் அழகாக விளக்குகிறார் அருணகிரி நாதர்.

"முருகா! எத்தனையோ குற்றங்கள் செய்தேன். உன்னுடைய அருளை அடைய எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அடித்தளமும் இல்லை. இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல், ஓடி வந்து என்னை ஆட்கொண்ட பரமகுரு! நீ தொண்டருக்கும் தொண்டன்! வேத நாயகன்! வாக்கால் மனத்தால் அளக்கவொன்னா தனிப் பெருந் தெய்வம்! தேவலோகத்தின் மணிமுடி! உன் புகழ் வாழ்க!"

பக்தியுடன்,
கோ.இராகவன்