Tuesday, August 22, 2006

30. மலத்தை மலத்தால் நீக்கி...

தத்துவச் சுவையும் கவிச்சுவையும் ஒருங்கே சேர்ந்த அழகான பாடல் இது. பக்தியையும் கவித்துவமாகச் சொல்வதில் அருணகிரிநாதர் வல்லவர். மதுரைத் திருப்புகழை எடுத்துக் கொள்ளுங்கள். "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம்" என்று முருகன் திருவடிகளைச் சொல்கிறார். வரை என்றால் மலை. வரையாடு என்று இன்னமும் ஊர்ப்புறங்களில் மலையாட்டைச் சொல்வார்கள். இருக்கின்ற மலைகளில் எல்லாம் உலவி நிறைந்து நமக்கு நல்லருட் சீர்களை வரிசைகளாகத் தரும் திருவடிகள் என்று முருகன் திருவடிகளைக் குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்ற சொற்றொடரை எவ்வளவு அழகாக "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது" என்று குறிப்பிடுகிறார்.

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே


மல்லுக்கட்டுகிறவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? பலர் கூடிப் பார்க்க, மல்லர்கள் இருவர் தோளோடு தோள் பொருதிப் போரிடுவார்கள். இரண்டு வலுவான தோள்கள் கொண்டவர்களே மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், பன்னிரண்டு தோள்களைக் கொண்ட முருகப் பெருமான் என்ன செய்வார்? "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" என்கிறார். வாகு என்றால் தோள். வீரவாகு என்றால் வீரமிக்க தோள்களை உடையவன் என்று பொருள். பண்டொரு முறை நாரதர் நடத்திய வேள்வியில் மந்திரத்தை தவறாக உச்சரித்ததால் வேள்வித்தீயிலிருந்து முரட்டு ஆடு ஒன்று வந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. முருகன் அருளால் வீரவாகு அந்த ஆட்டை அடக்கி முருகனுக்கே வாகனமாக்கினார். அது வீரவாகுவின் தோள்வலியைக் காட்டுகிறது.

சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய பன்னிரண்டு தோள்களை வைத்துக் கொண்டு முருகன் என்ன செய்கிறார்? "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று அருணகிரி புகழ்கிறார். தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மாலைகள் சூட்டி வழிபடுகிறார் அவர். "முருகா சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய உன்னுடைய பன்னிரண்டு தோள்களிலும் தீந்தமிழில் சொற்களால் நான் தொடுத்த பாமாலைகளை அணிந்து கொண்டு சுடர் மிகுந்த வேலோடு அருள்கின்றவனே!"

"இல்லே எனும் மாயை". இல் என்றால் இல்வாழ்க்கை. "இல்வாழ்க்கை என்ற மாயையில் என்னை விழச்செய்தாய் முருகா! நானும் இல்லறத்தை நல்லறமாகப் பேணாமல் பொல்லாதவனாகி உழன்றேனே! அப்பொழுதெல்லாம் என்னுடைய அறியாமையை நீக்கவில்லையே! ஏன்?" என்று முருகனைக் கேட்கிறார் அருணகிரி. ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.

ஏற்கனவே இவ்வுலகவாழ்க்கை என்னும் மாயையில் இருந்தார் அருணகிரி. அந்த மாயா மலத்தோடு பொல்லாத்தனம் என்னும் ஆணவ மலத்தையும் கொடுத்தார் முருகன். பிறவிப் பாவங்கள் என்னும் கர்ம மலம் வேறு. மூன்று மலங்களும் சேர்ந்து பல தவறுகள் செய்தார் அருணகிரி. ஆனால் இறுதி விளைவு முருகனின் கருணையாக விளைந்தது. மனமும் குணமும் வெளுத்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். //

அடடடடா.. அருமையா சொல்லியிருக்கீங்க ராகவன்.

said...

இராகவன். ஒரு முறைக்கு இருமுறை படித்தால் தெளிவாகப் புரியக் கூடிய பாடல் இது. நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

'மல்லே புரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே' என்ற அடிகளில் 'மல்லே' 'சொல்லே' என்று இரண்டு இடங்களில் அழுத்தம் கொடுக்கிறார். மற்போரே புரிந்து கொண்டிருந்த பன்னிரு தோள்களிலும் இப்போது வேறு எதனையும் அணிவதில்லை. வள்ளியம்மையின் திருக்கரங்களும் விரும்பி அணிவதில்லை. :-). என் சொல்லே அணியாகப் புனைகிறாய் என்கிறார். :-)

'இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே' என்ற அடிகளில் மாயாமலத்தை மட்டுமே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். மற்ற இரு மலங்களான ஆணவ மலத்தையும் கர்ம மலத்தையும் மற்றச் சொற்களால் குறிப்பாக உணர்த்துகிறார். உங்களின் விளக்கம் படிக்காமல் இருந்திருந்தால் அந்தக் குறிப்புகளை உணர்ந்திருக்க மாட்டேன். 'உண்மையாக இல்லை (உண்மை போல் தோன்றும்; ஆனால் உண்மையில் நிலைத்ததில்லை) எனும் படியான மாயையில் என்னை இட்டனை நீ. பொல்லேன் (பொல்லா வினையேன் - கர்ம மலமெனும் குறிப்பு) அறியாமை (கருவத்தால் எழுந்த அறியாமை - ஆணவ மலம்) பொறுத்துக் கொள்ளாமல் எனக்கு உன் அருளை வழங்கி மும்மலத்தையும் அகற்றினையே - என்னே உன் கருணை' என்கிறார்.

மாயையை 'இல்லே எனும் மாயை' என்று குறித்திருப்பதைப் பார்த்தால் 'இல்லை எனும் மாயை' என்ற பொருள் இன்னும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இல்லே என்பதற்கு இல்லறம் என்ற பொருள் கொண்டாலும் அட்டியில்லை.

said...

ராகவா!
சோப்பு உதாரணம் அருமை! தமிழ்க் கடவுள் அருள் உமக்கு நிறைய உண்டு.என்னைப் போன்றோருக்கு இப்படியான உதாரணம் தான் புரியும்.
யோகன் பாரிஸ்

said...

ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.

"யாரென்று இராகவனை எண்ணினீர் அம்மா
அதை அறிந்து சொல்ல போமோ."

என்ற அருணாசல கவிராயரின் பாடல் நினைவுக்கு வந்தது.

said...

// tbr.joseph said...
வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். //

அடடடடா.. அருமையா சொல்லியிருக்கீங்க ராகவன். //

மிக்க நன்றி ஜோசப் சார். நீங்கள் இந்தப் பதிவைப் படிப்பது மனநிறைவைத் தருகிறது.

said...

// மாயையை 'இல்லே எனும் மாயை' என்று குறித்திருப்பதைப் பார்த்தால் 'இல்லை எனும் மாயை' என்ற பொருள் இன்னும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இல்லே என்பதற்கு இல்லறம் என்ற பொருள் கொண்டாலும் அட்டியில்லை. //

குமரன், இந்த இடத்தில் இல்லறம் என்றுதான் கொள்ள வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். இல் எனும் மாயை என்று சொல்லவில்லை. இல்லறம் தவறு அருணகிரி எங்கும் சொல்லவில்லை. இல்லறமே என்று நினைப்பதுதான் தவறு என்று அழுத்தி அழுத்திச் சொல்லியிருக்கிறார். இல்லே என்ற சொல்லுக்கு மாற்றாக குடும்பம் என்று போட்டுப் பாருங்க. குடும்பமே எனும் மாயையில் இட்டனை நீ. நான் சொல்ல வருவது புரிகிறதா?

said...

// Johan-Paris said...
ராகவா!
சோப்பு உதாரணம் அருமை! தமிழ்க் கடவுள் அருள் உமக்கு நிறைய உண்டு.என்னைப் போன்றோருக்கு இப்படியான உதாரணம் தான் புரியும்.
யோகன் பாரிஸ் //

ஐயா...முருகனின்றி நானேது. அவன் அருளின்றி உலகேது.

என்ன உங்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியுமா! ஆனாலும் தன்னடக்கமையா!

said...

// "யாரென்று இராகவனை எண்ணினீர் அம்மா
அதை அறிந்து சொல்ல போமோ."

என்ற அருணாசல கவிராயரின் பாடல் நினைவுக்கு வந்தது. //

நன்றி தி.ரா.ச. உங்கள் குறும்புப் பின்னூட்டம் சிறப்பு. அருணாச்சலக் கவிராயர் பாடல்கள் படித்ததில்லை. படிக்கத் தூண்டுகிறீர்கள்.

said...

ragavan avargale..
unmaiyaa sollanumnna ivalavu azhagaana thamizhai ivalavu azhagaa sollakoodi thiran ungakitta irukradha pathaa manasu pulagaangitham adaiyardhu..

raghavan avargale..onnu ketkalaamaa??
neenga indha paadalin artham idhu dhaan endru eppadi uruthiyaaga ungalal sollamudikiradhu.. ungal pulamaiyinaan udane pulapadukiradhaa?? illai ungalukku sandhegam vandhaal enna seiveenga??
enaku ungalai pondra makkalidam irundhu free timeil marabu kavithai purindhu kolla tamizh kathuka aasai.. neenga edhavadhu onlinela start pannuveengalaa??? or guide pannuveengalaaa??

said...

ragavam avargale
ungal vilakatha paathu manasu pulagaangitham adaiyudhu..
onnu sollunga!!
ungalukku sandhekam vandhaa enna seiveenga?? ungaluke ella porulum eppavum puriyumaa.. naan indha paadal galukku ungal porul padikaamal attempt panna pathi kooda correcta varala//
but i wish to learn to interpret marabu kavithai from great people like u. can u start up somethin on web to teach people??