Tuesday, September 26, 2006

35. மங்குவதெல்லாம் எவை?

மங்குவது எது? தங்கம் மங்கும். வெள்ளி மங்கும். பட்டை தீட்டாத வைரமும் மங்கும். புழங்காமல் ஓரத்திலே வைத்திருந்தால் வெங்கலப் பாத்திரமும் மங்கும். அவற்றைத் துலக்கினால் ஒளி வீசிப் பிரகாசிக்கும். ஒவ்வொன்றைத் துலக்கவும் ஒவ்வொரு பொருள். வெங்கலப் பாத்திரத்திற்குப் புளியும் சாம்பலும். வைரத்திற்கு இரும்பு அல்லது வைர அரம். வெள்ளிக்கு தூயவெண் திருநீறு. தங்கத்திற்கு பன்னீரில் நனைத்த பட்டு அல்லது பருத்தித் துணி. இவைகள் எல்லாம் உயிரற்ற பொருட்கள். உயிருள்ள மனிதர்களுக்கு எவையெல்லாம் மங்கும். எவையெல்லாம் மனிதனிடத்தில் தங்குமோ, அவையெல்லாம் மங்கும். அறிவு மங்கலாம். புகழ் மங்கலாம். செல்வம் மங்கலாம். நற்பண்புகள் மங்கலாம். குலப் பெருமை மங்கலாம்.

இவையெல்லாம் மங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அருணகிரிக்கு இருந்தது ஒரே காரணம்தான். அதைக் கந்தரலங்காரத்தில் இப்படிச் சொல்கிறார்.
"கண்டுண்ண சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும்!
".
"கற்கண்டுச் சுவையொடு சொல்லி அழைக்கும் மெல்லிய பூவையரின் காமக் கலவிக் கள்ளினை மொண்டு உண்டு அயர்ந்தேன்," என்று நயமாக இயம்புகிறார். கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.

அப்படி மங்கிய அனைத்தும் முன்னிலும் பிரகாசமாக சுடர் விட்டது எங்ஙனம்? முருகப் பெருமானின் திருவருளால். அந்த நன்றியை இங்கே மறக்காமல் சொல்கிறார் அருணகிரி. "முருகா, சிங்காரம் செய்து கொண்ட பெண்களோடு இன்பம் துய்க்கும் தீய வழக்கங்களால் புகழும் அருளும் மங்காமல் காத்தருள்வாய்!" ஏற்கனவே சொன்னதுதான். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போக வேண்டும் என்றுதான் அருணகிரி கேட்கிறார்.

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே

சங்க்ராம என்றால் போர்திறம் மிகுந்த என்று பொருள். "செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!" என்று விளையாட்டாக சொல்லியிருக்கின்றார் காளமேகம். செரு என்றால் போர்க்களம். செருவில் புகும் வீரர்களை வெல்லும் வேலன் என்பது பொருள். சிகாவல என்றால் மயிலேறி வலம் வருகின்ற என்று பொருள். சங்க்ராம சிகாவல சண்முகனே! பொருள் புரிகின்றதல்லவா. கங்காநதி பால கிருபாகரனே என்பது இறுதியடி. கங்கை இங்கே ஏன் வந்தது? மங்கியதெல்லாம் துலக்க நீர் வேண்டுமல்லவா! கங்கை இந்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்படும் நதி. வற்றாத ஜீவநதி. அதனால்தான் கங்கா நதி பால கிருபாகரனே என்று செய்யுளை முடிக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 19, 2006

34. நீர் நிலைகளில் செய்யத் தகாதன

இந்த மண்ணுலகில் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஐந்து பூதங்களில் ஒன்று. உணவாகப் பயன்படுகிறது. உணவாக்கப் பயன்படுகிறது. தூய்மை செய்யப் பயன்படுகின்றது. மருந்தாக உதவுகிறது. மருந்தாக்க உதவுகிறது. இன்னும் பல பயன்கள். அதனால்தான் வள்ளுவரும் "நீரின்றி அமையாது உலகு" என்று புகழோங்கச் சொல்கிறார். நாமும் நீரின் முதன்மையையும் தேவையையும் உணர்ந்தவர்கள்தான். ஆகையால்தான் நமது பண்பாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. நீர்நிலைகளில் ஓராடையுடன் கூட குளியாமை. நீரில் உமிழாமை. நீரில் கழிவிடாமை. குளம் குட்டைகளை குழப்பாமை. இப்படி பல கட்டுப்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டில் இருந்தாலும் நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம்? இனிமேலாவது நாம் நீரினை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதையும் தூய்மைப் படுத்தும் பண்பு நீருக்குண்டு. கிருத்துவர்கள் கூட நீரினை ஞானஸ்தானத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாமியர்களும் கூட தொழுகைக்கு முன் நீரால் தூய்மை செய்து கொள்கிறார்கள். ஆகையால்தான் தமிழர்கள் இறைவனை நீரோடு தொடர்புடையவனாக வைத்தார்கள். தென்னாடுடைய சிவனின் தலையில் கங்கையை வைத்தவர்கள், தமிழ்க்கடவுள் முருகனை கங்கையில் உதித்த காங்கேயன் என்றார்கள். மந்தாகினி என்பது கங்கையின் மறுபெயர். அருணகிரி "மந்தாகினி தந்த வரோதயனே" என்று புகழ்வதில் வியப்பேது. வேண்டிய வரங்களைத் தருகின்ற வள்ளல் பெருமானல்லவா அவர்.

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே

கந்தன் என்ற பெயரையும் ஸ்கந்தன் என்ற பெயரையும் பலர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் ஒரே தெய்வத்தைக் குறிக்கும் பெயரானாலும் இரண்டுக்கும் பொருள் வேறு. பொருளில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. "ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலி கல்மிஷ நாசினீம்". அதாவது கலியுகத்தின் துன்பங்களைத் தீர்க்க வல்லவன் என்று வடமொழி கூறுகிறது. தமிழ் என்ன சொல்கிறது? ஆனையைக் கட்டும் கட்டைக்குக் கந்து என்று பெயர். ஆனையை ஓரிடத்திலிருந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய கட்டையைச் சங்கிலியோடு பிணைத்து அதன் காலில் கட்டி விடுவார்கள். நடுவில் எங்கேயேனும் தங்கினால் ஒரு குழி தோண்டி அதில் அந்தக் கட்டையைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவே. அந்தக் கட்டைக்குக் கந்து என்று பெயர். அதிலிருந்து பிறந்ததுதான் கந்தன் என்ற பெயர். ஆனையோடே இருந்து, அதன் நடவடிக்கைகளைத் தடுக்காது, அதே நேரத்தில் தேவையான பொழுது கட்டுப்படுத்துகின்ற கந்தினைப் போல கந்தனும் நம்முடனே இருந்து வாழ்வித்து, வேண்டிய பொழுது கட்டுப்படுத்தும் தன்மையுடைவன். பாருங்கள். தமிழில் பெயர் வைக்கும் பொழுது கூட எத்தனை நுட்பமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றார்கள்.

ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் துன்பம் தரக்கூடிய சிந்தை. அனைவருக்கும் இல்வாழ்க்கை சிறந்து விளங்குவதில்லை. அப்படி சிறப்பில்லாத இல்வாழ்க்கை உடையவர்கள், அதை எண்ணி எண்ணி துன்பத்திற்கு உள்ளாவார்கள். இதைத்தான் "சிந்தாகுல இல்" என்கிறார் அருணகிரி. செல்வம் பல இருந்தும் துயரம் சேரும் சிலருக்கு. அனைவருக்கும் செல்வம் இன்பத்தை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட செல்வமும், சிந்தாகுல இல்வாழ்க்கையும் இருந்தால், வாழ்க்கை நரகமாகும். எப்படிப் பட்ட நரகம் தெரியுமா? விந்திய மலைக் காடுகளைப் போல, செல்லும் வழி மறக்கச் செய்யும் நரகமாம். உண்மைதானே! சிந்தாகுல இல்லும் செல்வமும் இருந்தால் நமக்கு எல்லாம் மறந்து போகும். செய்ய வேண்டியதை மறந்து கண்டதைச் செய்து மென்மேலும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படிப் பட்ட துன்பங்களுக்கு வாழ்வழித்து நமக்கு வாழ்வளிப்பார் முருகப் பெருமான்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 12, 2006

33. சமயச்சண்டை வேண்டேன்

மத நல்லிணக்கத்தைப் பற்றி இன்றைக்கு யார் யாரோ பேசுகின்றார்கள். ஆனால் அன்றைக்கே சொல்லிலும் செயலிலும் காட்டியிருக்கின்றார் அருணகிரி. அருணகிரியின் காலகட்டம் சைவ வைணவச் சண்டைகள் நிறைந்த காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவங்களை வைத்துக் கொண்டு அதே சிறந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பற்றாக்குறைக்கு கன்னட தெலுங்கு நாடுகளிலிருந்து வேறு புதிய கருத்துகள் இறக்குமதி. அவர்களோடு சண்டை. அதற்கு முந்தய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பேசாமல் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை. வந்த சண்டையை விடாமல் அவரும் இறைவன் அருளால் கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கடலில் மிதந்தார். சுண்ணாம்புக் காளவாயில் வைத்துப் பூட்டினாலும் பொய்கையில் குளித்த தாமரையாக வெளியே வந்தார். "மூசு வண்டறை பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தேவாரமும் பாடினார். இன்றைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மதத்தில் குற்றம் காண்பதே பலருக்கு மதத்தொழிலாகப் போய் விட்டது. ஊரெங்கும் உலகெங்கும் இந்தக் கொடுமைதானே நடக்கிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் மற்ற மதத் தெய்வங்களைக் குற்றஞ் சொல்கிறார்களே!

இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது. அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. ஒருவருடைய கருத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணாத்துரை. ஆகையால் வீண்சண்டை கூடாது. இப்படி மதங்களை வைத்துக் கொண்டு ஆன்மீகத் தலைவர்கள் எல்லாம் சண்டையிடுவதை அருணகிரி வெறுத்தார். தானும் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாதேயென்று வருந்தினார். ஆகையால் இறைவனை வேண்டி, "அப்பனே முருகா! அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!" என்று வரம் கேட்கிறார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் உளதோ
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே


அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். இப்பேர்ப்பட்ட வரத்தை இறைவனிடம் கேட்கும் பொழுது இறைவனைப் புகழ்ந்தே கேட்கிறார். எப்படிப் புகழ்கிறார்?

"கொலையே புரி வேடர்!" வேடுவர்கள் கொலைத்தொழில் புரிகின்றவர்கள். மக்களை அல்ல. மாக்களை. அதுவும் உண்பதற்கு. நாடு பிடிக்கும் ஆசையில் மக்களைக் கொல்கின்றவர்கள் அல்லர் வேடுவர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொல்லும் வழக்கமுடையவர். ஆகையால்தால் "கொலையே புரி" என்று அந்தக் கொலையைக் கூட உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார் அருணகிரி. அந்தக் குலத்தில் ஒரு பிடி இருந்ததாம். அந்தப் பிடியைக் கொண்டவனே என்று முருகனைப் புகழ்கிறார். பிடி என்றால்? பிடி என்றால் பெண் யானை. பெண் யானையின் நடையும் அழகுதான். அப்படி அழகாக நடக்கும் வள்ளியைக் கொண்டவன் முருகன்தானே!

"மலையே மலைகூறிடு வாகையனே!" உயர்ந்து நிற்பது மலை. ஆகையால்தான் மலை போல் உயர்ந்தவர்கள் என்று தமிழில் புகழ்கிறோம். உயர்ந்த பண்புகளை உடைய முருகனையும் மலையே என்று உயர்த்திச் சொல்கிறார். முருகன் எந்த மலையைக் கூறிட்டார்? தாரகாசுரனின் கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தார் முருகன். "அப்படி மலையைக் கூறிட்ட திறமுடையவனே! வேடுவர் குலமகள் வள்ளியைக் கொண்டவனே! கசடறக் கற்காதவர்கள் போல நானும் மூளை குழம்பித் தவித்து, சமயக் கூச்சலிட்டு வீழ்வேனோ! அப்படியெல்லாம் நேராமல் காத்தருள்வாய் முருகா!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, September 05, 2006

32. மூன்று சகோதரர்களின் கதை

ஒரு ஊரில் அண்ணன் தம்பிகள் மூவர் இருந்தனர். நல்ல குடும்பம். மூத்தவன் திருமணம் செய்து கொண்டான். வாய்த்தவள் நல்ல மனையாள். இல்லறம் நல்லறமாக இருந்தது. இறைவன் அருளால் மழலைச் செல்வங்கள் பெருகின. அண்ணன் வாழும் வாழ்வை நினைத்து அடுத்தவனும் திருமணம் செய்து கொண்டான். அந்தோ பரிதாபம்! அவனுக்கு பெண்ணெனும் உருவில் வாய்த்தவள் அன்பே துளிர்க்காத உலக்கைக் கட்டை போன்றவள். மனைவியை திருத்த வழி தெரியாமல் அவளோடு சண்டையிட்டு அவனும் அமைதியிழந்தான். நிம்மதி போனது. பிள்ளைகளும் ஆன பின் பிரச்சனைகள் பெரிதாயின. இளைய அண்ணன் படும் வேதனையைப் பார்த்து கடைசித் தம்பி இல்லறத்தையே வெறுத்து துறவறம் பூண்டான்.

இவர்கள் மூவரில் மூத்தவனும் கடைக்குட்டியும் நிம்மதியாக இருந்தார்கள். வாழ்க்கை இனிதாகச் சென்றது. நினைத்தது நினைத்தபடி நடந்தது. அவரவர்கள் வழியில் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் இரண்டாமவன் நொந்து நூலாகித் துவண்டு வாழ்க்கையையே வெறுத்து விட்டான். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் எல்லாம் விரும்பிய வகையில் நடந்தால் வாழ்க்கை இன்பமயமானது. ஏறுக்கு மாறாயின் எல்லாம் பாழ். அப்படி வாழ்க்கை பாழாவது நமது கையிலும் இருக்கிறது. நம்மைச் சேர்ந்தவர்கள் கையிலும் இருக்கிறது. இதைத்தான் பர்த்தாவிற்கு ஏற்ற பதிவிரதை கிடைக்கா விட்டால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அன்றே விவாகரத்து பற்றி பாடியிருக்கிறார் ஔவையார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ஒருவன் வாழ்வதும் மற்றொருவன் வீழ்வதும் எதனால்? ஊழ், விதி, முன்வினை என்றெல்லாம் சொல்கின்றார்களே! அவைகளினாலா? வள்ளுவர் என்ன சொல்கின்றார்?
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
." அதாவது, ஊழ்வினையைக் காட்டிலும் வலிமை மிக்கது எது? எப்படிச் சென்றாலும் அது தன்னுடைய தன்மையைக் காட்டி விடும். விதியின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்கின்றார். சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எழுதிய இளங்கோவடிகள் சமணர் என்று கருதப் படுகிறவர் (சைவர் என்று தமிழாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்). அவரும் முற்பிறப்பில் கோவலன் செய்த பிழையால் மறுபிறப்பில் அவன் துன்புற்றதைக் கூறுகிறார். பொதுவாகவே எல்லாரும் ஒப்புக் கொள்வது என்னவென்றால் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன் உண்டு என்று.

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


இதைத்தான் அருணகிரியாரும் முருகனிடம் கேட்கிறார். "அப்பா முருகா! பாழான இந்த வாழ்வு எனப்படும் மாயையில் என்னை வீழ்ச்சியுறும் வகையில் இட்டாயே! ஏன்? தாழ்வானவை என்று அறிஞர் பெருமக்களால் அறியப்படும் தீமைகளை நான் புரிந்தேனா? என்னைக் காப்பாற்றிய தெய்வமே! நீ நன்றாக இருப்பாய்! காரணத்தைக் கூறிவிடு!" என்று இறைஞ்சுகிறார் அருணகிரி.

பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ஒருவரிடம் கேட்கும் பொழுது, "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று கேட்போம். அதையே கவிதை நடையிலும் பயன்படுத்தி செய்யுளை முடிக்கும் பொழுது "வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!" என்று கூறுகிறார். எந்த வினைகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவன் இறைவன் என்பதால் அவனிடமே காரணத்தைக் கேட்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்