Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து வீரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்


முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயக்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. முழுவேகத்தில் சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் அன்று. இறை என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 04, 2007

06. இஇ - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்


முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்