Wednesday, July 04, 2007

06. இஇ - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்


முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

14 comments:

said...

இராகவன். அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். நிமித்திகர் சொன்னதைக் கேட்டு வெகுண்டு இளங்கோ துறவு கொள்ளச் சென்ற இடம் சமணத் துறவிகளின் மடம்; அதனால் அவர் துறவு மேற்கொண்டது சமண சமயத்தில் என்று உய்த்துணரலாம்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது என்று சொல்லியிருந்தார் ஆசிரியர்.

சேர இளவலாக இருந்து கொண்டு காவிரி நாடனை - சோழனைப் புகழ்ந்து காவியத்தைத் தொடங்கியிருக்கிறார் இளங்கோவடிகள். வியப்பு தான். முதல் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் அரசன் எந்த அரசனாகவும் இருக்கலாம். சேர சோழ பாண்டியர்களில் ஒருவரையோ சிற்றரசர்களில் ஒருவரையோ குறிப்பாகச் சுட்டவில்லை. ஆனால் இரண்டாவதில் காவிரி நாடன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்; அடுத்து 'அவன்' என்பதும் காவிரி நாடனைத் தான் என்பது முன்னால் சொன்னதை வைத்துச் சொல்லலாம். (முதலில் அவன் அளி என்றதும் இறைவனைச் சொல்கிறார் என்று நினைத்தேன்).

எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் உவமைகளைப் பயன்படுத்துகிறார். திங்களைப் போன்ற வெண்கொற்றக் குடை என்பார்கள். இவர் வெண்கொற்றக்குடை போன்ற திங்கள் என்கிறார். :-) ஞாயிற்றைத் திகிரி என்பது வழக்கம் தான். பொன் சிகரம் கொண்ட மேரு மலை எங்கே இருக்கிறதோ? உங்களுக்குத் தெரியுமா? மழை போன்ற அருள் என்பார்கள்; இவர் அவன் அருள் போன்ற மழை என்கிறார். :-) (அளி என்றால் அருள், கருணை என்றொரு பொருளும் உண்டு).

said...

//சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது//

ஜிரா
சமய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டும் அப்பாற்பட்டவரா இளங்கோ?

சேர நாட்டரான இவர், காவிரி நாடன் திகிரி போல் என்று காப்பியத்தைத் தொடங்குகிறார் என்றால் எவ்வளவு பரந்த மனத்தினர், பாருங்கள்!

இளங்கோவடிகள் திருமலை எம்பெருமானின் அலங்காரங்களையும் தினப்படி சேவைகளையும் வர்ணிக்கும் அழகே அழகு!
ஆழ்வார்கள் கூட இப்படி வர்ணித்திருப்பார்களா தெரியாது! அப்படி ஒரு வர்ணனை!

திங்களும், ஞாயிறும், மாமழையும்
- நாம் அனைவரும் போற்றுதும் போற்றுதும்!

ஜிரா
பூம்புகார் போற்றுதும், காவிரி போற்றுதும் விட்டுவிட்டீர்களே! ஏனோ?

said...

இனிமையான பதிவு.

இளங்கோவடிகளார் சமணரா சைவரா
என்ற விளக்கங்கள் அடிக்கடி வரும்.

இதன் பொருட்டு எனக்கும் ஆர்வம் உண்டு. சமயம் வாய்க்கும்போது
இந்த ஆய்வைச் செய்ய ஆவலுடன்
உள்ளேன்.

இளங்கோவடிகளாரின் அன்னையாரும்,
அண்ணன் குட்டுவனும் சைவர்களே.
அவன் கண்ணகி சிலைக்குக் கல் எடுக்கச்
வடக்கே செல்வதற்கு முன்னரே,
தன் அன்னை காசியில் கங்கைநதியில்
புண்ணிய நீராட வேண்டும் என்பதற்காகவே படைகளோடு வடக்கே
சென்று வந்தான்.

எனவே இளங்கோவடிகளாரும் சைவ நெறியினராகவே இருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.

அதோடு, சைவ நெறி அடிப்படைகள்
மிகப் பரந்த மனம் கொண்டவை. பிற நெறிகளில் இருக்கும் இயல்பு/இயற்கைக்கு மாறான கட்டுப் பெட்டித் தனங்கள் சிவநெறியில் கிடையாது.


இளங்கோவடிகளாரின் பரந்த உள்ளத்தைப் பார்க்கும் போது அவர்
சைவராகத்தான் இருந்திருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.

வைதிகத்தின் மேல் கொண்ட சினத்தில்
தமிழுலகம் சிவத்தையும் அந்தக் கணக்கில் சேர்த்துவிட்டு, சில தமிழாய்வாளர்கள் அல்லது அறிஞர்கள்
சமணம் சிறந்தது என்ற வாதத்தையும்
திருவள்ளுவர், இளங்கோவடிகள் போன்றோரையும் சமணர் என்று முடிவு
கட்டத் துணிவதையும் உணர முடிந்திருக்கிறது. இப்படியான ஒரு பரப்புரையும் இதில் உண்டு.

எனினும் இவை அவர் சைவர் என்று
முடிவு கட்டப் போதுமானவை அல்ல
என்பதனை அறிவேன். ஆயினும் இந்தக்
கோணத்திலும் பார்வைகளை செலுத்துவது பயனளிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சமயம் வாய்க்கும்போது
இதனை விரிவாகப் பார்க்க வேண்டும்
என்ற ஆவல் எனக்கு நெடுநாள்களாக
உண்டு.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். நிமித்திகர் சொன்னதைக் கேட்டு வெகுண்டு இளங்கோ துறவு கொள்ளச் சென்ற இடம் சமணத் துறவிகளின் மடம்; அதனால் அவர் துறவு மேற்கொண்டது சமண சமயத்தில் என்று உய்த்துணரலாம்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது என்று சொல்லியிருந்தார் ஆசிரியர். //

குமரன், அவர் சென்றது சமண மடம் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஒரே ஒரு தொடுப்பு என்னவென்றால் குணவாயிற் கோட்டம். அங்கே இவர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் குணவாயிற்கோட்டம் என்பது சமணப்பள்ளியா என்று தெரியவில்லை. கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை எந்தச் சமயத்தையும் தூக்கி வைக்காமலும்...எந்தச் சமயத்தைத் தாழ்த்தி வையாமலும்...அப்பப்பா...சிலப்பதிகாரம் என்பது படிக்கப் படிக்க ஆச்சர்யம்.

// எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் உவமைகளைப் பயன்படுத்துகிறார். திங்களைப் போன்ற வெண்கொற்றக் குடை என்பார்கள். இவர் வெண்கொற்றக்குடை போன்ற திங்கள் என்கிறார். :-) ஞாயிற்றைத் திகிரி என்பது வழக்கம் தான். //

சற்று வேறுபடுகிறேன் குமரன். எல்லோரையும் போல் அல்ல இளங்கோவடிகள். இளங்கோவடிகளைப் போல எல்லாரும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றே சொல்வேன். :)

// பொன் சிகரம் கொண்ட மேரு மலை எங்கே இருக்கிறதோ? உங்களுக்குத் தெரியுமா? //

இளங்கோவடிகளைத்தான் கேட்க வேண்டும். :)

// மழை போன்ற அருள் என்பார்கள்; இவர் அவன் அருள் போன்ற மழை என்கிறார். :-) (அளி என்றால் அருள், கருணை என்றொரு பொருளும் உண்டு). //

அளி என்றால் கொடை...நான் சொன்ன பொருள். அருள் கருணை என்று சொல்கின்றீர்கள். இறைவனின் கொடைதானே அருள். :)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா
சமய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டும் அப்பாற்பட்டவரா இளங்கோ?

சேர நாட்டரான இவர், காவிரி நாடன் திகிரி போல் என்று காப்பியத்தைத் தொடங்குகிறார் என்றால் எவ்வளவு பரந்த மனத்தினர், பாருங்கள்! //

உண்மைதான். அதனால்தான் காப்பிய நாயகியை சோழச்சியாகவே உருவாக்கியிருக்கிறார். கடைசியில் எல்லாரும் சேரனைப் போற்றுகையில் கண்ணகியின் அருள்வாக்கு வழியாகப் பாண்டியனைப் போற்றுகிறார். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

// இளங்கோவடிகள் திருமலை எம்பெருமானின் அலங்காரங்களையும் தினப்படி சேவைகளையும் வர்ணிக்கும் அழகே அழகு!
ஆழ்வார்கள் கூட இப்படி வர்ணித்திருப்பார்களா தெரியாது! அப்படி ஒரு வர்ணனை! //

இப்படிச் சொன்னால் எப்படி? விளக்கமாகச் சொல்ல வேண்டுமே ;)

// திங்களும், ஞாயிறும், மாமழையும்
- நாம் அனைவரும் போற்றுதும் போற்றுதும்!

ஜிரா
பூம்புகார் போற்றுதும், காவிரி போற்றுதும் விட்டுவிட்டீர்களே! ஏனோ? //

நான் எங்க விட்டேன். பூம்புகாரும் இப்ப இல்ல...காவிரியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதுனாலதான் விட்டுட்டேன்னு வெச்சுக்கோங்களேன்.

said...

// நாக.இளங்கோவன் said...
இனிமையான பதிவு. //

நன்றி நாக.இளங்கோவன். இளங்கோவடிகள் பற்றிய பதிவில் இளங்கோவனின் பின்னூட்டன்.

// இளங்கோவடிகளார் சமணரா சைவரா
என்ற விளக்கங்கள் அடிக்கடி வரும்.

இதன் பொருட்டு எனக்கும் ஆர்வம் உண்டு. சமயம் வாய்க்கும்போது
இந்த ஆய்வைச் செய்ய ஆவலுடன்
உள்ளேன்.//

கண்டிபாகச் செய்யுங்கள். காத்திருக்கிறேன். அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும் படித்திருக்கின்றீர்களா?

// இளங்கோவடிகளாரின் அன்னையாரும்,
அண்ணன் குட்டுவனும் சைவர்களே.
அவன் கண்ணகி சிலைக்குக் கல் எடுக்கச்
வடக்கே செல்வதற்கு முன்னரே,
தன் அன்னை காசியில் கங்கைநதியில்
புண்ணிய நீராட வேண்டும் என்பதற்காகவே படைகளோடு வடக்கே
சென்று வந்தான்.//

அதுவுமில்லாமல் செங்குட்டுவன் சிவமாலையைத் தலையில் சூட்டிப் பெருமை கொண்டதையும்...சேடகமாடத்து வைணவ மாலையை ஒற்றைத் தோளில் போட்டுக் கொண்டு (நம்பிக்கை இல்லாததால்..அதே நேரத்தில் கொடுத்தவர் மனதை நோகடிக்க விரும்பாமையால்) சென்றதையும் ஒளிக்காமல் மறைக்காமல் சொல்கிறார்.

// எனவே இளங்கோவடிகளாரும் சைவ நெறியினராகவே இருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.

அதோடு, சைவ நெறி அடிப்படைகள்
மிகப் பரந்த மனம் கொண்டவை. பிற நெறிகளில் இருக்கும் இயல்பு/இயற்கைக்கு மாறான கட்டுப் பெட்டித் தனங்கள் சிவநெறியில் கிடையாது. //

உண்மை. மறுக்க முடியாது. பழைய மேன்மையை (மேன்மைகொள் சைவநீதியை) சைவம் உய்யும் நாள் எந்நாளோ!

// இளங்கோவடிகளாரின் பரந்த உள்ளத்தைப் பார்க்கும் போது அவர்
சைவராகத்தான் இருந்திருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.

வைதிகத்தின் மேல் கொண்ட சினத்தில்
தமிழுலகம் சிவத்தையும் அந்தக் கணக்கில் சேர்த்துவிட்டு, சில தமிழாய்வாளர்கள் அல்லது அறிஞர்கள்
சமணம் சிறந்தது என்ற வாதத்தையும்
திருவள்ளுவர், இளங்கோவடிகள் போன்றோரையும் சமணர் என்று முடிவு
கட்டத் துணிவதையும் உணர முடிந்திருக்கிறது. இப்படியான ஒரு பரப்புரையும் இதில் உண்டு. //

நானும் அதையே நினைக்கிறேன்.

// எனினும் இவை அவர் சைவர் என்று
முடிவு கட்டப் போதுமானவை அல்ல
என்பதனை அறிவேன். ஆயினும் இந்தக்
கோணத்திலும் பார்வைகளை செலுத்துவது பயனளிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சமயம் வாய்க்கும்போது
இதனை விரிவாகப் பார்க்க வேண்டும்
என்ற ஆவல் எனக்கு நெடுநாள்களாக
உண்டு.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன் //

எனக்கும்தான் நண்பரே. இது உண்மையிலேயே ஆராய்ச்சிக்குரியது. உங்கள் ஆராய்ச்சியின் வளர்ச்சியை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

said...

//அதுவுமில்லாமல் செங்குட்டுவன் சிவமாலையைத் தலையில் சூட்டிப் பெருமை கொண்டதையும்...சேடகமாடத்து வைணவ மாலையை ஒற்றைத் தோளில் போட்டுக் கொண்டு (நம்பிக்கை இல்லாததால்..அதே நேரத்தில் கொடுத்தவர் மனதை நோகடிக்க விரும்பாமையால்) சென்றதையும் ஒளிக்காமல் மறைக்காமல் சொல்கிறார்.
//

இராகவன், இதனைப் பலமுறை சொல்லிவிட்டீர்கள். இதனை நேரே படிப்பதற்காகவே சிலப்பதிகாரத்தைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன், நேற்று முதல். விரைவில் இந்த நிகழ்ச்சி வரும் பகுதிக்கு வந்துவிடுவேன். அப்போது ஒற்றைத் தோளில் அணிந்தானா; கழுத்தைச் சுற்றி இரண்டு தோள்களிலும் அணிந்தானா என்று அடிகள் சொன்னதை நேரடியாகப் படிப்பேன். :-)

said...

இதோ இராகவன் நீங்கள் செல்லும் நிகழ்ச்சியினைக் கூறும் பகுதி.

ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் 65
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித்

http://www.tamilnation.org/literature/cilapathikaram/vanjci.htm

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் (சேஷம் - பிரசாதம், மாலை) கொண்டு சிலர் நின்றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக்கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்
ஆங்கு அது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினனாகித்

இங்கே எங்கே ஒரு தோளில் அணிந்து கொண்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது? புயத்துத் தாங்கினான் என்று கழுத்தைச் சுற்றித் தோளில் எல்லோரும் அணிவது போல் அணிந்து கொண்டான் என்று தானே சொல்கிறார் எந்த சமயத்தையும் தூக்கி வைக்காமலும் எந்த சமயத்தையும் தாழ்த்தி வையாமலும் காப்பியம் பாடிய சேர இளவல்? புயத்து என்று ஒற்றையில் கூறியதால் அப்படி விளக்கம் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்புறம் நான் எங்கே எல்லாம் இரட்டையை (திருவடி, காலடி, கால், தோள்) ஒற்றையாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தேட வேண்டியிருக்கும். :-)

வண்ணச் சேவடி மணி முடி வைத்தலும் சேடம் புயத்துத் தாங்குதலும் இரண்டும் பெருமைப் படுத்தும் செயலே. நீங்கள் சொல்லும் பொறையுடைமை சேரனிடம் இருந்திருக்கிறது. ஆனால் அது அவனது இயற்கையான உணர்வே தவிர மற்றவர்கள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகச் செய்தது இல்லை. அப்படிப்பட்ட உள்ளக்கிடக்கை அவனுக்கு இருந்ததாக அவன் இளவல் சொல்லவில்லை.

said...

குமரன், உங்கள் விளக்கங்களுக்கு என்னால் இப்பொழுது விடை சொல்ல முடியவில்லை. நான் வழக்கமாகப் படிக்கும் நச்சினார்க்கினியருரையும், அரும்பதவுரையும், உவேசா அவர்களின் உரையும், வேங்கடசாமி நாட்டாரின் உரையும் இந்தியாவில் இருக்கின்றன. அவைகளைப் பாராமல் எதையும் சொல்லும் நிலையில் நானில்லை. உங்கள் கேள்விக்கு விடை கூறாமைக்கு மன்னிக்கவும்.

said...

உங்கள் பதில் இதுவாகத் தான் என்று அறிவேன் இராகவன். பெரியவர் ஒருவரின் உரையையோ கட்டுரையோ படித்தே ஆடகமாடச் செய்தியை நீங்கள் சொல்லி வந்திருப்பீர்கள். அதனை மீண்டும் காணாமல் கருத்து சொல்ல இயலாது. அதனால் நீங்கள் எப்போது முடிகிறதோ அப்போது பார்த்துச் சொன்னால் போதும்.

said...

////ஆழ்வார்கள் கூட இப்படி வர்ணித்திருப்பார்களா தெரியாது! அப்படி ஒரு வர்ணனை! //

இப்படிச் சொன்னால் எப்படி? விளக்கமாகச் சொல்ல வேண்டுமே ;)//

குமரன் சேடகமாட மாலைக்கு நன்றி!

ஜிரா
விளக்கமாக, பின்னாளில் ஒரு தனிப்பதிவு இடுகிறேன்! "சிலம்பில் வைணவம்" என்று இடுவதற்கு, உங்கள் உதவியைக் கேட்டுப் பெறுவேன்!

சுருக்கமா ஒண்ணே ஒண்ணு சொல்லனும்னா, திருமலையில் இன்றும் காணப்படும் பூலங்கி சேவை என்னும் அலங்காரம்! பூக்களால் மட்டுமான அங்கியை நெய்து அணிவிப்பது ஒவ்வொரு வியாழன் தோறும்! இது இங்கு மட்டும் உள்ள ஒரு தனிச் சிறப்பு!

இது காலம் காலமாக இருந்து வருவதை இளங்கோ படம் பிடித்துக் காட்டுகிறார்!
ஆழ்வார்கள் கூட இந்த அல~க்காரம் பற்றிப் பாசுரத்தில் தனியாகக் குறிக்கவில்லை! ஆனால் எதிலும் நுண்பொருளைக் காணும் இளங்கோ குறித்து வைக்கிறார்!

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயுர் மாமலை உச்சி மீமிசை
........
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்!.....

என்று பூவாடைப் பிரானாரைப் பற்றிப் பாடுகிறார்! இது பற்றி என் முதல் இரு பதிவில் சொல்லி இருந்தேன்!
அப்போது நான் வந்த புதிது! ஆனா இப்பவும் புச்சு தான்-னு வைச்சுக்குங்களேன்! :-)

said...

//"சிலம்பில் வைணவம்"//

அடடா. நமக்குள்ளே நிறைய போட்டி வரும் போல இருக்கே. இலக்கியத்தில் இறை என்ற தலைப்பில் எழுத எண்ணியிருந்தேன். இராகவனார் எடுத்துக்கொண்டார். சிலம்பில் இறை என்றாவது எழுதலாம் என்றால் நீங்கள் போட்டிக்கு வருகிறீர்களே?! :-) சிலம்பை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன் இரவிசங்கர். இது சும்மா தகவலுக்காக. :-)

said...

சிலம்பின் சிறப்பாக வார்த்தைகள் மட்டுமன்றி,அனைத்து மக்களின் வாழ்க்கையும் அழகாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.பூம்புகார் காணாமல் போய்விட்டது என்று சொல்லியுள்ளீர்கள்.இந்த சுனாமி வந்தபின்னர்தான் தெரிந்தது அந்த வணிகர்கள் ஏன் நாற்புரமும் கடலே இல்லாத செட்டிநாட்டிலே தங்கள் மாடமாளிகைகளைக் கட்டியுள்ளனர் என்பது.

said...

நெதர்லாந்தில் அமர்ந்து கொண்டு புறநானூறையும், பாரதியையும் இவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பதும், விளக்கம் அளிப்பதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கடவுள் வாழ்த்துக்கு நீங்கள் அளித்த விளக்கம் பொருளுணர்ந்து அனைவருக்கும் புரியும் வன்னம் இருந்தது. உங்கள் பதிப்புகள் பண்டைய படைப்புகளை கடல் கடந்து வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு ஊடகமாகும். உங்கள் பணி சிற்கக வாழ்த்துகள்.