Tuesday, June 26, 2007

05. இஇ - நல்வழி

நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை. ஆகையால் பிள்ளையாரை வணங்கி இந்த நூலைத் தொடங்கியிருக்கின்றார்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா


முத்தமிழிலும் சிறப்புற்று இருந்தால்தான் அருந்தமிழ் நூல்களைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட நூல்களே காலத்தை வென்று நிலைக்கும். அப்படிப்பட்ட நூலாக நல்வழி இருக்க விரும்பிய ஔவை விநாயகப் பெருமானிடம் தமிழ் மொழியில் திறமை பெருக வேண்டும் பாடலே கடவுள் வாழ்த்து.

வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.

இங்கேயும் ஒரு பண்டமாற்று. நான்கைக் கொடுத்து விட்டு மூன்றைக் கேட்கிறார் ஔவை. பார்த்தால் ஔவைக்கு நட்டம் போலவும் பிள்ளையாருக்கு லாபம் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் லாபம் ஔவைக்குதான்.

பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.

பாலும் இனிமை. அதோடு கலந்த தேனும் இனிமை. உடன் சேர்ந்த பாகும் பருப்பும் இனிமை. இந்த இனிமைகளையெல்லாம் தருகின்றேன் இறைவா! இவைகள் அனைத்தையும் விட இனிமையான இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழை நீ எனக்கு அருள்வாயாக!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 19, 2007

04. இஇ - திருவிளையாடல்

திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால் நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் வணங்கித் துவக்குகிறார். நாம் இப்பொழுது பார்ப்பது பராசக்தி துதி.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்


இறைவன் பண்பு நலன்களை எப்படிச் சொல்லிக் கொண்டு போனாலும் சொற்கள் பத்தாது. ஆகையால் ஒரு பண்பை மட்டும் இங்கே சொல்கிறார். அண்டங்கள் எல்லாம் அணுவாக பெரிதாயினான். அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விரிசடைக்கடவுள். அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏனிப்படிச் சொல்ல வேண்டும்? அந்த விடையை அடுத்த வரியில் சொல்கிறார் பரஞ்சோதிமுனிகள். அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினான். அதாவது அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார். அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும். இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்கிறார் அருணகிரி. உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 07, 2007

03. இஇ - தண்டியும் கிழவியும்

தண்டியலங்காரத்தை இயற்றியவர் தண்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறார். இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரம் இருப்பது போலத் தெரியவில்லை.

தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல். இது செய்யுட்களின் இலக்கணத்தைப் பற்றி விளக்குகிறது. ஒரு காப்பியம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய இலக்கணம் என்ன? அந்தக் காப்பியத்தில் பயன்படுத்த வேண்டிய செய்யுட்களின் வகைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விளக்கும் நூல் தண்டியலங்காரம்.

இப்படிப்பட்ட நூலை யாரை வணங்கித் துவக்கியிருப்பார் தண்டியாசிரியர்?

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே


சொல்லின் கிழத்தியைப் புகழ்ந்து தனது இலக்கண நூலைத் துவக்குகிறார். சொல்லின் கிழத்தி என்றால்? கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி. இல்லக் கிழத்தி என்று இல்லத்தலைவியைச் சொல்கின்றோம் அல்லவா. திருமுருகாற்றுப்படையில் முருகனைக் "குறிஞ்சி மலைக் கிழவோனே" என்று நக்கீரரும் பாடியிருக்கிறார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். சொல்லின் கிழத்தி யார்? சொற்களுக்கெல்லாம் தலைவிதான் சொல்லின் கிழத்தி. கலைமகளைத் தொழுது தனது இலக்கண நூலைத் துவக்குகிறார்.

சொற்களின் நயத்தைப் பாருங்கள். சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடியாம். சொற்களின் தலைவியாகிய கலைமகளின் மெல்லிய திருவடிகள் என்று பொருள். அந்தத் திருவடியில் சிந்தை வைத்து இயம்புகிறார் தண்டி. எதை இயம்புகிறார்? செய்யுட் கணியை!

செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். அதாவது இலக்கணம். ஒரு நூலைப் படைக்க வேண்டிய செய்யுட்களைச் செய்யும் இலக்கணங்களை சொல்லின் கிழத்தியின் மெல்லியல் இணையடியில் சிந்தை வைத்துத் துவக்குகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்