Tuesday, June 26, 2007

05. இஇ - நல்வழி

நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை. ஆகையால் பிள்ளையாரை வணங்கி இந்த நூலைத் தொடங்கியிருக்கின்றார்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா


முத்தமிழிலும் சிறப்புற்று இருந்தால்தான் அருந்தமிழ் நூல்களைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட நூல்களே காலத்தை வென்று நிலைக்கும். அப்படிப்பட்ட நூலாக நல்வழி இருக்க விரும்பிய ஔவை விநாயகப் பெருமானிடம் தமிழ் மொழியில் திறமை பெருக வேண்டும் பாடலே கடவுள் வாழ்த்து.

வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.

இங்கேயும் ஒரு பண்டமாற்று. நான்கைக் கொடுத்து விட்டு மூன்றைக் கேட்கிறார் ஔவை. பார்த்தால் ஔவைக்கு நட்டம் போலவும் பிள்ளையாருக்கு லாபம் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் லாபம் ஔவைக்குதான்.

பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.

பாலும் இனிமை. அதோடு கலந்த தேனும் இனிமை. உடன் சேர்ந்த பாகும் பருப்பும் இனிமை. இந்த இனிமைகளையெல்லாம் தருகின்றேன் இறைவா! இவைகள் அனைத்தையும் விட இனிமையான இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழை நீ எனக்கு அருள்வாயாக!

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

//துங்கக் கரிமுகத்துத் தூமணியே//
இது பிள்ளையாரைத்தான் சொல்லுறார் என்று தெரிக்கின்றது.ஆனால் துங்கக் கரிமுகத்துத் தூமணியே அப்படியென்றால் என்ன அண்ணா :D

said...

/வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.//

கடவுள் கிட்டகூட பண்டமாற்றா?கடவுள் கிட்ட நம்ப ஏதாவது கொடுத்தால் தான் அவரும் நமக்கும் கொடுப்பாரா?

நான் அப்போவே சொல்லிட்டேன்,நான் கேள்வி கேட்பேன்னு :D

said...

//பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.
//

பாட்டியும் நம்பளை போலதான்ன்னு நினைக்கிறேன் :D

said...

மிக எளிய ஆனால் இனிய செய்யுள்;
குட்டீஸ்-க்கு வீட்டில் முதலில் கற்றுக் கொடுக்கும் செய்யுளும் கூட!
நான் தருவேன், நீ எனக்கு என்று அபிநயம் பிடித்துச் சொல்லும் வாண்டுகள்!

அதுவும் தமிழ் மூன்று என்று மட்டும் கேட்காமல், சங்கத் தமிழ் மூன்றும் கேட்கிறாள். உடனே வ.வா.சங்கத்தில் இருக்கும் தமிழைத் தான் கேட்கிறாள்-னு யாராச்சும் கெளம்பி வந்துடப் போறாங்க ஜிரா! பார்த்து!

//பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை//

ஜிரா...வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஒளவை பற்றி ஒரு பதிவு போடுங்களேன், நேரம் கிடைக்கும் போது!

//பாட்டியும் நம்பளை போலதான்ன்னு நினைக்கிறேன்//

துர்க்கா - நீங்க எப்ப பாட்டி ஆனீங்க? :-) CVR அக்கான்னு தானே கூப்புடறார்! :-)))

said...

// துர்கா|†hµrgåh said...
//துங்கக் கரிமுகத்துத் தூமணியே//
இது பிள்ளையாரைத்தான் சொல்லுறார் என்று தெரிக்கின்றது.ஆனால் துங்கக் கரிமுகத்துத் தூமணியே அப்படியென்றால் என்ன அண்ணா :D //

ஆமா பிள்ளையாரத்தான் சொல்றாங்க. :) கரிமுகம்னா கரி பூசுன முகம் இல்லை. கரின்னா தமிழ்ல ஆனைன்னு பொருள். ஆண்யானையைக் களிறுன்னும் பெண்யானையைப் பிடின்னும் சொல்றதுண்டு. கரின்னா என்ன? ஆனை. கரிமுகம்னா என்ன? ஆனைமுகம். புரிஞ்சதா? :)

// கடவுள் கிட்டகூட பண்டமாற்றா?கடவுள் கிட்ட நம்ப ஏதாவது கொடுத்தால் தான் அவரும் நமக்கும் கொடுப்பாரா?

நான் அப்போவே சொல்லிட்டேன்,நான் கேள்வி கேட்பேன்னு :D //

கேளு கேளு கேள்வி கேளு. அப்பத்தான் தெளிவு பிறக்கும். கடவுளுக்கு நாம குடுத்தாதான் வேலை நடக்கும்னு இல்லை. அம்மாப்பா பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா பிள்ளைக முத்தம் கொடுக்குறாங்களே...அதென்ன பண்டமாற்றா? அன்பின் வெளிப்பாடுதானே. நாம குழந்தைக. கடவுள் அம்மாப்பா. :) சரியா?

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மிக எளிய ஆனால் இனிய செய்யுள்;
குட்டீஸ்-க்கு வீட்டில் முதலில் கற்றுக் கொடுக்கும் செய்யுளும் கூட!
நான் தருவேன், நீ எனக்கு என்று அபிநயம் பிடித்துச் சொல்லும் வாண்டுகள்! //

ஆமா. ரொம்பவும் எளிய சொல்லாடல். பிள்ளைகளுக்கும் எளிதில் நினைவாகும்.

// அதுவும் தமிழ் மூன்று என்று மட்டும் கேட்காமல், சங்கத் தமிழ் மூன்றும் கேட்கிறாள். உடனே வ.வா.சங்கத்தில் இருக்கும் தமிழைத் தான் கேட்கிறாள்-னு யாராச்சும் கெளம்பி வந்துடப் போறாங்க ஜிரா! பார்த்து! //

ஆகா வவாசங்கத்துல இருந்தா! வந்தாலும் வருவாங்க. இளாவைக் கேட்டாத் தெரியும்...ஆனாலும் சமாதானம் செஞ்சுக்கிறலாம். சொன்னாக் கேட்டுக்கிருவாங்க. இல்லைன்னா அவங்களுக்கும் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தயாராவே இருக்கு :)))))))) வவாசங்கத்துக் குழந்தைகள் தயாரா? ;)

// ஜிரா...வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஒளவை பற்றி ஒரு பதிவு போடுங்களேன், நேரம் கிடைக்கும் போது! //

எடை பாக்குற கருவீல ஆனையை ஏத்துறீங்களே...ஸ்பிரிங் தெரிச்சிருங்க :)) இதெல்லாம் ரொம்பப் பெரிய வேலை. தமிழ் கற்ற அறிஞர்கள் செய்ய வேண்டியது. கற்றுக்குட்டிகள் அல்ல. அட..நீங்க செய்யலாமே!