Monday, May 29, 2006

19. அப்பன் சேர்த்தது வட்டியோடு மகனுக்கு

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. முருகனைப் பாடி மகிழ வேண்டும் என்று கூறிய அருணகிரி முருகப் பெருமானின் சில பண்புகளை, அதாவது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றவைகளை நமக்குக் கூறுகிறார்.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங் கரனே


ஒருவர் இன்னாருடைய மகன் என்று சொல்லும் பொழுதே பெருமையும் சிறுமையும் அதோடு வந்து விடுகிறது. உத்தமனுடைய பிள்ளைக்கு நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்த புண்ணியம் மகனுக்கோ மகளுக்கோ செல்லும் இடமெல்லாம் வாழ்வளிக்கும். தீயவனுடைய பிள்ளை நல்லவனாக இருந்தாலும் போகின்ற இடத்தில்லெல்லாம் பிரச்சனைகள் வந்து நிற்கும். பெற்றவர்கள் நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளுக்குச் சேர்க்கும் மிகப் பெரிய சொத்து அது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று சொல்கிறார் ஔவையார்.

பாடி மகிழப்பட வேண்டிய முருகப் பெருமானின் தந்தையும் பெருமை மிக்கவர்தான். அந்த பரமசிவனின் பெருமைகள் யாவை? உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் அந்த ஈசன். உதியா - பிறப்பில்லாத. மரியா - இறப்பில்லாத. உணரா - நினைப்பில்லாத. மறவா - மறதியில்லாத. பிறப்பும் இறப்பும் இல்லா ஆதி நாயகன் சிவபெருமான். நினைப்பு இல்லாதவர். இது பெருமையா என்றால் ஆம் என்பதே விடை. விடையேறு நாயகன் மறவாதவன். ஆகையால் மறந்ததை நினைக்க வேண்டிய வகையில்லாதவன். தொலைத்தால்தானே தேட வேண்டும். மறந்தால்தானே நினைக்க வேண்டும்.

விதிமால் அறியாத விமலன் என்றால்? விதியை எழுதுகிறவன் நான்முகன். ஆகையால் அவன் விதி. மால் என்றால் திருமால். அயனும் (பிரம்மன்) அரியும் கூடித் தேடியும் அடி முடி காணக்கிடைக்காத பெருமான் எம்பெருமான். கந்த குரு கவசத்தில் "அடி முடி அறிய ஒண்ணா அண்ணாமலையோனோ" என்று புகழப்படுகிறது. முருகக் கடவுள் யார்? "பாதிமதி நதி போதும் மணிச்சடை நாதர் அருளிய குமரேசா" என்கிறது திருப்புகழ். பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.

அந்த விமலனின் புதல்வனை அதிகா அநகா அபயா என்று இறைஞ்சுகிறார் அருணகிரி. அதிகா என்றால் எல்லாருக்கும் தலைவர். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் தலைவர் எம்பெருமான். அவருக்கும் தேவர் முருகன். தேவாதி தேவன் சிவன். தேவ தேவாதி தேவன் முருகன். ஆகையால் அப்பனுக்கே பாடஞ் சொல்ல முடிந்தது சுப்பனால். அஞ்செழுத்து அப்பனுக்கு. ஆறெழுத்து மகனுக்கு. பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொல்கிறது இப்படி. "அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்!" அயன் என்றால் பிரமன். அரி என்றால் திருமால். அரன் என்றால் சிவன். இவர்கள் மூவரும் ஆகி, அவர்களுக்கும் மேலானவனே என்று திருப்புகழ் செப்புகிறது. அதனால்தான் கந்தரலங்காரத்தில் "பின்னை ஒருவரை யான் பின் செல்கேன்" என்கிறார்.

அநகா என்றால் குற்றமற்றவன் என்று பொருள். அபயா என்றால் அச்சமற்றவன் என்று பொருள். அதைத்தான் அடுக்கடுக்காக அதிகா அநகா அபயா என்று கூறுகிறார்.

அமராவதி காவலனே! சூர பயங்கரனே! போர்க்களத்திலே சூரனை அச்சப்படுத்திய முருகன் அவனை அழிக்கவில்லை. ஆகையால்தான் அவனுக்குச் சூர பயங்கரன் என்றும் ஒரு பெயர். அப்படி சூரனிடமிருந்து அமராவதியைக் காத்து இந்திரனிடம் ஒப்படைத்ததால் அமராவதி காவலனாகவும் ஆயினான் முருகன்.

முருகா! உன்னுடைய தந்தையின் சிறப்புப் பண்புகள் யாவும் பெற்று அவைகளுக்கு மேலேயும் பெற்று மும்மூர்த்திகளுக்கும் மேலாய் விளங்கும் வேலவனே! நீ தேவதேவாதி தேவன். குற்றமற்றவன். அச்சமற்றவன். சூரனுக்கு அச்சமூட்டியவன். அதனால் அமராவதியைக் காத்தவன். உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 22, 2006

18. படித்தால் மட்டும் போதுமா

கடல் நிறைய நீர் இருக்கிறது. அந்த நீரை மேகங்களுக்குத் தருகிறது கடல். அப்படிக் கடலிலிருந்து பெற்ற நீரை மழையாகப் பொழிந்து விடுகிறது மேகம். பூமியிலிருந்து வானத்திற்குப் போன நீர் மீண்டும் பூமிக்கே வந்து விடுகிறது. அந்த நீரும் ஆறாகி மீண்டும் கடலிலேயே கலக்கிறது. பிறகு ஏன் கடல் நீரை மேகத்திற்குத் தரவேண்டும்? பிறகு அதையே பெறவேண்டும்? அப்படிக் கொடுத்துப் பெறும் வழியில் மண்ணுயிர்கள் எல்லாம் பயன்பெறுகிறது அல்லவா. அதனால்தான். கடலின் கருணை.

அதுபோலத்தான் அடியவர்களுக்குச் சிறந்த கல்வி ஞானம் வாய்க்கிறது. அவர்கள் இறைவன் மீதும் அவனது நற்பண்புகளைப் பற்றியும் பாடல்கள் புனைகிறார்கள். இப்படி அவர்களுக்கு அறிவும் கல்வியும் தருவது யார்? எல்லாம் முருகன் கொடுத்தது. அப்படிக் கொடுத்து, பிறகு அவர்களிடமிருந்தே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். "யாம் ஓதிய கல்வியும் என் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே


ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இரண்டு காரணங்கள் உண்டு. பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கிள்ளை மொழியைக் கேட்பதில் பிரியம். ஆகையால் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை திரும்பக் கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களுக்கெல்லாம் தாயல்லவா முருகப் பெருமான்!

இரண்டாவது காரணம் பொதுநலம். ஆம். அப்படி அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்கு நல்ல கருத்துகள் பல கூறுவர். அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்தக் கொடுத்துப் பெறும் விளையாட்டு. எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. நல்லதைச் சொல்வார் என்று உள்ளவருக்கே கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களது படைப்பு தீதானால் நாளடைவில் தடுக்கப் படுகிறது. எத்தனை பேர் எழுதினார்கள். இன்னும் எழுதுகிறார்கள். எல்லாம் நிலைக்கிறதா?

ஓதிய கல்வியும் அறிவும் என்கிறார். படித்தால் அறிவு வராது. உணர்ந்து ஓதினால்தான் அறிவு வரும். அப்படி நல்ல அறிவை முருகன் கொடுத்த பின்னும் மண்ணுலக மையல் நீங்காமல் இருந்தால் எப்படி? மையல் என்பது தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை. எதன் மீதும் வரலாம். ஒன்றின் மீது மையல் வந்து விட்டால் அது வளர்ந்து வெறியாகும். அது நன்றன்று. அப்படிப்பட்ட மையலை மறந்து அறவழியில் நடக்க வேண்டும். நன்றாகக் கவனியுங்கள் அருணகிரியின் வாக்கை. இல்லறவாசிகள் துறவறம் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. வீணான ஆசைகளை நீக்கி அறவழியில் நடக்கும்படிச் சொல்கிறார்.

அது போதுமா? நல்வழியில் நடப்பது நன்று. அத்தோடு செய்ய வேண்டியது இன்னொன்று. ஆம். வேலவரின் புகழினைப் பாடுதல். "சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை வெல்லுமிடத்து" என்கிறார் வள்ளுவர். நான் ஒன்றைச் சொன்னால் அதைத் தோற்கடிக்கும் விதத்தில் யாரும் எதையும் கூறாதிருக்கும்படி சொல்லவேண்டும். ஆகையால் வேலவரின் புகழினைப் பாடி மகிழ வேண்டும். ஆகவேதான் முருகனை அழைத்து "நாமேல் நடவீர் நடவீர்" என்று வேண்டுகிறார். முருகனைத் தவிர வேறெதைப் பற்றியும் பாடவில்லை அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 15, 2006

17. பேராசை என்னும் நோய்

பேராசையெனும் பிணியில் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேலெறியும்
சூரா சுர லோக துரந்தரனே


ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். இயல்பாக வரும் இத்தகைய ஆசைகளிலிருந்து அறிவைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம். பேராசை மீளாத் துன்பத்திற்குக் காரணம். அறிவு வேலை செய்யாத பொழுதே பேராசை வருகிறது. ஆகையால் அறிவைக் கொண்டு தப்பிக்க முடியாது. அங்கே நாம் யாராலாவது காப்பாற்றப்பட வேண்டும்.

உலகம் முழுதும் எடுத்துச் சொன்னது. ஹிட்லர் கேட்கவில்லை. பேராசை அவன் கண்களை மறைத்தது, அறிவை மழுக்கியது. அவனைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. அவனும் அவனது கொள்கைகளும் அழிந்து போயின. ஆக பேராசையெனும் பிணியானது நல்ல விளைவுகளைத் தருவதைப் போலத் தோன்றினாலும் இறுதியில் தீமையையே தரும். பேராசையோடு பலமுறை பாரதத்தின் மீது படையெடுத்தான் கஜினி முகமது. பெருஞ் செல்வத்தைக் கைப்பற்றினான். அவனை இன்று வரலாறு திருடன் என்கிறது. இப்படியெல்லாம் கொடுமை செய்யும் பேராசை என்னும் நோயில் உழலத் தகுமோ!

அப்படிப்பட்ட பேரழிவிலிருந்து யார் நம்மைக் காக்க வல்லார்? மருத்துவரிடமே நோயைக் கூற வேண்டும். கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் விஞ்ஞானியும் அறிவிற் சிறந்தவர்தான். ஆனால் அவரிடம் நோயைப் பற்றிச் சொன்னால் என்ன பயன்? பேராசைப் பிணியைப் போக்க வல்ல வல்லாளன் யார்? சுரலோக துரந்தரனாம். சுரர் என்றால் அமரர். இந்திரனா? இல்லை. அமர உலகத்திற்கு அதிபதி இந்திரன். உண்மைதான். ஆனால் துரப்பது (காப்பது) யார்?

சூரன் என்றால் சூரத்தனம் மிகுந்தவன். அப்படிப் பட்டவனே அமரர் உலகத்தைக் காக்க முடியும். ஒருவனுக்கு அடைமொழி கொடுத்தால் அதற்குச் சிறப்புக் காரணம் இருக்க வேண்டும். அப்படி அமரர் உலகைக் காக்கும் சூரனுக்கு என்ன சூரத்தனம் இருக்கிறது? "முதுசூர் பட வேல் எறியும் சூரா" என்கிறார் அருணகிரி. சூரன் மேல் வேலெறிந்து வென்று அமரர்தம் உலகத்தைக் காப்பது கந்தவேளே. இங்கே முதுசூர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். முது என்றால் பழைய என்று பொருள். வேலை முருகன் எறிந்ததும் சூரன் இறந்தகாலம். ஆகையால் முதுசூர். என்ன சொல்லாற்றல் அருணகிரிக்கு!

சூரனை வேலெறிந்து அழித்து அவனையும் அவன் புகழையும் இறந்தகாலத்திற்குத் தள்ளி அமரர்களுடைய உலகமாகிய அமராவதியைக் காக்கும் கந்தவேளே! பேரழிவைத் தந்து அழிக்கும் பேராசை என்னும் நோயில் விழாத வகைக்கு எல்லாரையும் காத்தருள வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 08, 2006

16. எட்டும் எட்டு

எட்டு என்றாலே எட்டி ஓடும் அளவிற்கு மூடத்தனமான எண்கணிதப் பைத்தியம் மக்களை ஆட்டிவைக்கிறது இன்று. ஆனால் அனைத்திற்கும் எட்டாப் பரம்பொருள் எட்டில் அடங்குமென்று ஆன்றோர் கூறுகிறார்கள். அதாவது நமக்கு எட்டும் எட்டு. நமக்கு புரியக்கூடிய எட்டு பண்புகளால் இறைவனைப் புகழ்கிறார்கள். அதென்ன! எடுத்துச் சொன்னால் மற்ற பண்புகளும் புரியாதா என்று வாதிடலாம். ஆனால் அதனால் பயனில்லை. பிரசவம் என்பது வேதனை மிக்க மறுபிறப்பு என்று ஆண்கள் அறியத்தான் முடியுமே தவிர உணர முடியாது. இப்படி மனித உணர்வுகளே உணர்ந்து கொள்ள முடியாத பொழுது, அனைத்தையும் கடந்தும் அவற்றின் உள்ளும் இருக்கும் கடவுளின் அத்தனை பண்புகளையும் நாம் உணர முடியுமா? சொல்ல முடியுமா? சொல்லில் முடியுமா? வள்ளுவரும் எண்குணத்தைப் பற்றிச் சொல்கிறார்.
"கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
"

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

சரி. அந்த எட்டு பண்புகளையும் பார்ப்போம். 1)தன்னடக்கம் 2)துப்புரவு 3)இயற்கை ஆர்வலன் 4)அனைத்துமறியும் ஆர்வம் 5)உணர்ச்சிவசப்படாமை 6)பேரருள் 7)பேராற்றல் 8)கட்டுப்பாடு. இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். எண்குண பஞ்சரனே என்று முருகனைச் சொல்கிறார். பஞ்சரம் என்றால் கூடு. எட்டு குணங்களும் கூடியவனே என்று பொருள். இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. பட்டிக்காட்டிலும் பைந்தமிழ்ப் பழக்கம்.

அப்படி எட்டு பண்புகள் கூடிய முருகன் எப்படிப்பட்டவராம்! பொரு என்றால் போர். புங்கவர் என்றால் தேவர். பொருபுங்கவர் என்றால் போரிடும் தேவர். குருபுங்கவர் என்றால் குருதேவர். அசுரர்களோடு போரிடும் தேவர்களும் புவியிலுள்ள உயிரினங்களும் வணங்கும் குருதேவர் முருகன். அதைத்தான் "பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவர்" என்கிறார் அருணகிரிநாதர்.

அப்படி நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, May 01, 2006

15. கையில் வாய் இருக்கிறதா.....

அருணகிரியை ஓசைமுனி என்று சொல்லுவார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளே முத்தமிழ் வித்தகர். அவர் சொன்னால் பொய்யாகுமா. அருணகிரியார் தமிழில் விளையாடியிருக்கிறார் என்றால் பொய்யாகாது. இந்தப் பாடலிலும் அப்படியே. அதை விளக்கத்தோடு பார்ப்போம்.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே

உய்வது என்றால் என்ன? ஒரு குழப்பமான அல்லது துன்பமான நிலையிலிருந்து பிழைக்கும் வழி தேடுவது. அப்படி வாழ்வில் உய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். கழல் பெற வேண்டும். திருவடியைச் சேர வேண்டுமாம். யாருடைய திருவடிகளை? முருகனுடைய திருவடிகளைச் சேராவிட்டால் உய்வில்லை. ஆகையால் கந்தன் காலடியை வணங்கச் சொல்கிறார்.

கந்தரலங்காரத்தில் இன்னமும் விளக்கமாகச் சொல்கிறார் அருணகிரி. குமரேசர் இருதாளும் தோன்றும் பொழுது நாளும் கோளும் வினையும் என்ன செய்ய முடியும் என்கிறார். அதாவது முருகனை நம்பியவர், காப்பாற்றப் பட வேறெதையும் நம்பவில்லை. வேறெதைப் பார்த்தும் அஞ்சவும் இல்லை. காரணம்? சரண் புகுந்த இடம் அப்படி. அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா!

எப்படிப்பட்ட முருகனாம்? கதிர்வேல் முருகன். ஒளி பொருந்திய அறிவுமயமான வேலைத் தாங்கிய முருகனாம். அதிலும் கைவாய் கதிர்வேல் என்கிறார். கைவாயா? அப்படியென்றால்? கையில் வாயிருக்கிறது. ஆம். அந்த வாய்தான் கதிர்வேல். கைபேசும் என்கிறார்கள் அல்லவா? அப்படிப் பேசும் முருகனுடைய கதிர்வேல். அடியார்களை நெறுக்கும் துன்பங்களை முருகனுடைய வேல் பேசிக் தீர்க்கும். அதனால்தான் கைவாய் கதிர்வேல். என்ன சொல்நயம். அடடா!

ஒருவர் உலக அனுபவங்களைப் பெறுவது அவரது ஐந்து புலன்கள். பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது, நுகர்வது என்ற ஐந்து செயல்களின் மூலமாகவே நமது உடம்பு நமக்கு செய்திகளைக் கொடுக்கிறது. இவற்றில் ஒரு புலன் குறைந்தாலும் பெரும் இழப்புதான். "கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். அப்படிக் அரிதாகக் கிடைத்த ஐம்புலன்களையும் நெறியோடு பயன்படுத்த வேண்டும். நடக்கும் தீயவைகளைக் பார்க்கக்கூடாது என்று நினைக்கக்கூடாது. மாறாக நமது பார்வை தீய விளைவுகளை உண்டாக்கக் கூடாது. நாம் கேட்பதாலும் நுகர்வதாலும் உணர்வதாலும் சொல்வதாலும் எந்தத் தீயவைகளும் நேரக்கூடாது.

அப்படி ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்பது வள்ளுவர் வாக்கு. இந்த ஒரு பிறவியில் ஐம்புலன்களும் நெறிப்பட வாழ்ந்தால் அது ஏழு பிறப்புகளிலும் பயனளிக்குமாம். தீய ஆசையே துன்பத்திற்குக் காரணம். அந்த ஆசைகள் நம்மைச் சேர்வதும் ஐம்புலன்களின் வழியாகத்தான். அப்படி ஐம்புலன்களின் வழியாகவும் வந்து தீவினைகள் செய்யும் ஆசைகளை ஒழிப்பாய் என்கிறார் அருணகிரி. அதிலும் இரண்டு முறை ஒழிவாய் என்று சொல்லி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

இப்படி ஐம்புலன்களினாலும் நன்மையே சிந்தித்து கதிர்வேல் முருகனின் திருவடிகளைப் பணிந்து நாமனைவரும் கடைத்தேற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்