Monday, May 22, 2006

18. படித்தால் மட்டும் போதுமா

கடல் நிறைய நீர் இருக்கிறது. அந்த நீரை மேகங்களுக்குத் தருகிறது கடல். அப்படிக் கடலிலிருந்து பெற்ற நீரை மழையாகப் பொழிந்து விடுகிறது மேகம். பூமியிலிருந்து வானத்திற்குப் போன நீர் மீண்டும் பூமிக்கே வந்து விடுகிறது. அந்த நீரும் ஆறாகி மீண்டும் கடலிலேயே கலக்கிறது. பிறகு ஏன் கடல் நீரை மேகத்திற்குத் தரவேண்டும்? பிறகு அதையே பெறவேண்டும்? அப்படிக் கொடுத்துப் பெறும் வழியில் மண்ணுயிர்கள் எல்லாம் பயன்பெறுகிறது அல்லவா. அதனால்தான். கடலின் கருணை.

அதுபோலத்தான் அடியவர்களுக்குச் சிறந்த கல்வி ஞானம் வாய்க்கிறது. அவர்கள் இறைவன் மீதும் அவனது நற்பண்புகளைப் பற்றியும் பாடல்கள் புனைகிறார்கள். இப்படி அவர்களுக்கு அறிவும் கல்வியும் தருவது யார்? எல்லாம் முருகன் கொடுத்தது. அப்படிக் கொடுத்து, பிறகு அவர்களிடமிருந்தே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். "யாம் ஓதிய கல்வியும் என் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே


ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இரண்டு காரணங்கள் உண்டு. பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கிள்ளை மொழியைக் கேட்பதில் பிரியம். ஆகையால் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை திரும்பக் கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களுக்கெல்லாம் தாயல்லவா முருகப் பெருமான்!

இரண்டாவது காரணம் பொதுநலம். ஆம். அப்படி அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்கு நல்ல கருத்துகள் பல கூறுவர். அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்தக் கொடுத்துப் பெறும் விளையாட்டு. எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. நல்லதைச் சொல்வார் என்று உள்ளவருக்கே கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களது படைப்பு தீதானால் நாளடைவில் தடுக்கப் படுகிறது. எத்தனை பேர் எழுதினார்கள். இன்னும் எழுதுகிறார்கள். எல்லாம் நிலைக்கிறதா?

ஓதிய கல்வியும் அறிவும் என்கிறார். படித்தால் அறிவு வராது. உணர்ந்து ஓதினால்தான் அறிவு வரும். அப்படி நல்ல அறிவை முருகன் கொடுத்த பின்னும் மண்ணுலக மையல் நீங்காமல் இருந்தால் எப்படி? மையல் என்பது தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை. எதன் மீதும் வரலாம். ஒன்றின் மீது மையல் வந்து விட்டால் அது வளர்ந்து வெறியாகும். அது நன்றன்று. அப்படிப்பட்ட மையலை மறந்து அறவழியில் நடக்க வேண்டும். நன்றாகக் கவனியுங்கள் அருணகிரியின் வாக்கை. இல்லறவாசிகள் துறவறம் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. வீணான ஆசைகளை நீக்கி அறவழியில் நடக்கும்படிச் சொல்கிறார்.

அது போதுமா? நல்வழியில் நடப்பது நன்று. அத்தோடு செய்ய வேண்டியது இன்னொன்று. ஆம். வேலவரின் புகழினைப் பாடுதல். "சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை வெல்லுமிடத்து" என்கிறார் வள்ளுவர். நான் ஒன்றைச் சொன்னால் அதைத் தோற்கடிக்கும் விதத்தில் யாரும் எதையும் கூறாதிருக்கும்படி சொல்லவேண்டும். ஆகையால் வேலவரின் புகழினைப் பாடி மகிழ வேண்டும். ஆகவேதான் முருகனை அழைத்து "நாமேல் நடவீர் நடவீர்" என்று வேண்டுகிறார். முருகனைத் தவிர வேறெதைப் பற்றியும் பாடவில்லை அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

தலைப்பைப் பார்த்து இன்றைய தமிழ்மண அரசியல் பத்தி தான் எழுதி இருக்கீங்களோன்னு கொஞ்சம் குழம்பிப் போய்ட்டேன்.. அது சரி.. ராகவன் பதிவில்ல இது... ம்ம்ம் :)

said...

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே//

முதலிரண்டு வரிகள் நீங்கள் சொல்லிச் சொல்லியே நன்றாய் பரிச்சயமாகி விட்டது. அடுத்த இரண்டு வரிகளுக்கும் இன்னும் கொஞ்சம் எளிமையாய் ஒரு விளக்கம் சொல்லுங்களேன். எனக்குப் பிடிபடவில்லை.

said...

ராகவன்! கடலின் கருணையைச் சொல்லி முருகனின் கருணையை ஒப்பிட்டது அருமை. புரிந்து கொள்ள எளிதாக இருந்தது.

//குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்// ஆமாம் :-))

//தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை// இதில் பையல்கள் தான் பயல்களோ :-))

//பூமேல் மயல் போய் // இங்கே பூ மேல் என்பதில் பூ என்றால் என்னவோ?.தையலை பூ என்கிறாரோ?

said...

வழக்கம் போல் அருமையான பதிவு அண்ணா.

வார்த்தைகளை போட்டு விளையாடி இருக்கீங்க. வாழ்த்துகள்.

said...

'பூ மேல் மயல் போய்'==
அதுதான் ராகவன் மிக நுணுக்கமாக விளக்கம் அளித்துள்ளாரே!

இந்த பூவுலகில் உள்ள பொருள்களின் மேலுள்ள மையல், மயக்கம் போய்,

'அற மெய்ப் புணர்வீர்'==

இங்கே சில சொற்களில் ஒரு விளையாட்டே நடத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்!

'புணர்தல்' என்னும் சொல்லுக்குப் பரவுதல், அடைதல், கொள்ளல் எனும் பொருட்கள் வரும்.
'மெய்' எனில், உண்மை, உடம்பு என்று இரு பொருள் வரும்!
'அறம்' தருமம், நல்வழி, தூய்மை எனச் சொல்லலாம்.

இப்போது இவ்வரிகளைப் பார்ப்போம்.


'பூ மேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' ==

பொருள் 1. இப்பூவுலக ஆசைகளை விட்டுவிட்டு, அறவழியில் நடந்து நற்செயல்களைக் கொள்வீர்.

பொருள் 2. காலையில் தோன்றி மாலையில் வாடிவிடும் மலர்கள் போன்ற மற்ற பெண்டிரின் மேல் உள்ள மையலை விட்டொழித்து, தருமவழியில் கைப்பிடித்த மனையாளோடு மட்டுமே சேர்ந்து இன்புறுவீர்!

அதுபோன்றே,
'நாமேல் நடவீர் நடவீர் இனியே' என்பதனையும் இரு பொருளில் காணலாம்!

'என்னுடைய நாக்கின் மேல் எப்போதும் நடனம் புரிய வேண்டும்' என முருகனை வேண்டுவதாகக் கொள்ளலாம்.
கூடவே,

'எல்லாச் செல்வங்களையும் என்பிரானே எனக்குத் தந்தருளி இருப்பதால்,

'நாம் ஏல் நடவீர்?' == நாம் எங்கு செல்லவேண்டும்?
'நடவீர் இனியே!' == எங்கும் செல்ல வேண்டாம்.

ஆதியில் முருகன் அருணைக் கோபுரத்தில் அருளிய,

'சொல்லற; சும்மாயிரு'

எனப் போதித்த வாசகத்தை மீண்டும் நினைவு கூர்ந்து [யோசித்து! 'குமரன் கவனிக்க!!],

"நடவீர் நடவீர் இனியே" எனவும் சொல்லுகிறாரோ என நினைக்கிறேன்.

said...

காலையிலிருந்தே மனம் சரியில்லாமல் இருந்தது. மாலை குடும்ப்த்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பினோம். வந்தவுடன் உங்களது யாமோதிய கல்வியும் படித்தேன். மனம் நிறைவுற்றது.கடைசி இரண்டு வரிகள் சரியகப்புரியவில்லை. ஆனால் ஸ்.கே அவர்களின் விளாக்கத்தைப் படித்தவுடன் நன்றாக புரிந்து கொள்ளமுடிந்தது. நன்றி ஸ்.கே அவர்களுக்கும் உங்களுக்கும். தி. ரா.ச

said...

கடலின் கருணையும், பையல் தையல் விளையாட்டும் நன்றாய் இருக்கின்றன இராகவன். சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் எந்தக் கருத்து எந்த அடியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியவில்லை. அதனைத் தான் கொத்ஸும் கேட்கிறார்.

எஸ்.கே. ரொம்ப நல்லா பொருள் சொல்றீங்களே? உங்க ஆத்திகம் வலைப்பதிவில் நீங்களும் பொருள் சொல்லத் தொடங்கலாமே? திருப்புகழில் இருந்து சில பாடல்களுக்குச் சொல்லுங்களேன். ஒரு அம்மணி சொல்றேன் சொல்றேன்னு ஏமாத்திக்கிட்டே இருக்காங்க. நீங்களாவது சொல்லுங்க.

said...

ராகவன்,

நல்ல பதிவு!!

நன்றி!!

said...

எஸ்.கே.

விளக்கத்திற்கு நன்றி. இப்போழுது நன்றாக புரிகிறது.

ஜிரா, நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்லிவிட்டு பின் விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக புரியும். இது ஒரு யோசனை மட்டுமே.

said...

// பொன்ஸ் said...
தலைப்பைப் பார்த்து இன்றைய தமிழ்மண அரசியல் பத்தி தான் எழுதி இருக்கீங்களோன்னு கொஞ்சம் குழம்பிப் போய்ட்டேன்.. அது சரி.. ராகவன் பதிவில்ல இது... ம்ம்ம் :) //

அதே அதே பொன்ஸ். செவ்வாய்க்கிழம பதிவு இது. ஆனாலும் உங்க வரவால இன்னைக்குப் பொன்மழை இந்தப் பதிவுல.

said...

// இலவசக்கொத்தனார் said...
யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே//

முதலிரண்டு வரிகள் நீங்கள் சொல்லிச் சொல்லியே நன்றாய் பரிச்சயமாகி விட்டது. அடுத்த இரண்டு வரிகளுக்கும் இன்னும் கொஞ்சம் எளிமையாய் ஒரு விளக்கம் சொல்லுங்களேன். எனக்குப் பிடிபடவில்லை. //

கொத்ஸ், எஸ்.கே மிகவும் அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறார். அது போதும் அல்லவா.

// ஜிரா, நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்லிவிட்டு பின் விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக புரியும். இது ஒரு யோசனை மட்டுமே. //

நல்ல யோசனை. ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். சரி. முடிந்த வரையில் முயற்சிக்கிறேன்.

said...

// சிவா said...
ராகவன்! கடலின் கருணையைச் சொல்லி முருகனின் கருணையை ஒப்பிட்டது அருமை. புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. //

ஆமாம் சிவா. அது போல இது என்றால் இது எளிதாக விளங்கும். அதற்காக அதுதான் இது இல்லை. இதுதான் அது இல்லை. ஆனால் அது அங்க எப்படியோ இது இங்க இப்பிடி.

// //குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்// ஆமாம் :-)) //

கேட்கிறீர்கள் அல்லவா. இனிக்கத்தான் செய்யும்.

////தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை// இதில் பையல்கள் தான் பயல்களோ :-))//

அதே. அதே.

// //பூமேல் மயல் போய் // இங்கே பூ மேல் என்பதில் பூ என்றால் என்னவோ?.தையலை பூ என்கிறாரோ? //

பூவுலகம் என்று சொல்கிறார்கள் அல்லவா. அந்தப் பூதான் இந்தப் பூ. புரிந்ததா?

said...

// பரஞ்சோதி said...
வழக்கம் போல் அருமையான பதிவு அண்ணா.

வார்த்தைகளை போட்டு விளையாடி இருக்கீங்க. வாழ்த்துகள். //

நன்றி தம்பி.

said...

// குமரன் (Kumaran) said...
கடலின் கருணையும், பையல் தையல் விளையாட்டும் நன்றாய் இருக்கின்றன இராகவன். சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் எந்தக் கருத்து எந்த அடியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியவில்லை. அதனைத் தான் கொத்ஸும் கேட்கிறார். //

புரிகிறது குமரன். இனிமேல் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

// எஸ்.கே. ரொம்ப நல்லா பொருள் சொல்றீங்களே? உங்க ஆத்திகம் வலைப்பதிவில் நீங்களும் பொருள் சொல்லத் தொடங்கலாமே? திருப்புகழில் இருந்து சில பாடல்களுக்குச் சொல்லுங்களேன். ஒரு அம்மணி சொல்றேன் சொல்றேன்னு ஏமாத்திக்கிட்டே இருக்காங்க. நீங்களாவது சொல்லுங்க. //

அதச் சொல்லுங்க குமரன்...நானும் காத்துக்கிட்டிருக்கேன்....எஸ்.கே நீங்களாவது சொல்லுங்க

said...

"நான்" ஓதிய கல்வி,
"என்" அறிவு-ன்னு
நாம அடிக்கடி நினைச்சிக்கிட்டாலும்..

அதெல்லாம் சொந்த அறிவு அல்ல!
தந்த அறிவு! = "தந்ததினால்"
கந்த அறிவு! = "வேலவர்"

"தாமே" பெற=எப்போ ஒரு விஷயம் தானே நடக்குது-ன்னு சொல்லுறோம்? நாம அதுக்கு எதுவும் மெனக்கெடறது இல்ல! சூரியன் தானே உதிக்குது! மழை தானே பெய்யுது! அது போல் எம் அறிவும் "தானே" வந்தது! எப்படி? வேலவன் தந்ததினால் "தாமே" வந்த கந்த அறிவு!

(A U B)' = A' n B'
-ன்னு எல்லாம் மெனக் கெட்டு படிப்பதால் வரும்!
ஆனால் முருகன் மீது காதலும் பக்தியும்? எந்த புக்கைப் படிச்சி, மெனக்கெட்டதால், என் சாமர்த்தியத்தால் வந்தது? ஒன்னுமில்லை! "தாமே" வந்தது, அவன் தர வந்தது! அதான் "தாமே" பெற வேலவன் தந்ததினால்...