Monday, December 25, 2006

48. ஆறாறா முப்பத்தாறு

சைவ சித்தாந்தத்தின் மூலப் பொருளை உரைக்கும் பாடல் இது. மிகவும் தத்துவச் செறிவு மிக்கது. முடிந்த அளவிற்கு எளிமையாக விளக்கிச் சொல்கிறேன்.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சூரா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே


ஆறாறையும் நீத்து - ஆறு X ஆறு = முப்பத்தாறு. முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி அதற்கும் மேலான நிலையை அடைவது என்பது சிவாகமத்தில் மிகவும் உயர்ந்த நிலை. அந்த நிலையை அந்த உயர்ந்த நிலையை அருணகிரிக்கு முருகப் பெருமான் அளித்தார். சரி. அதென்ன முப்பத்தாறு தத்துவங்கள்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த முப்பத்தாறையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஆன்ம தத்துவங்கள், வித்யா தத்துவங்கள் மற்றும் சிவதத்துவங்கள்.

ஆன்ம தத்துவங்கள்: (24)

பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு - 5
சூட்சும பூதங்கள் - ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
ஐம்பொறிகள் - கண், வாய், செவி, மூக்கு, மெய் - 5
செயலுறுப்புகள் - கை, கால், நாக்கு, குதம், குறி - 5 (இவை உடலியக்கத்திற்கு ஆனவை )
உட்கரணங்கள் - மனம், குணம், அறிவு, அகங்காரம் - 4 (மனம் வேறு. குணம் வேறு. அறிவு வேறு. அறிவு நல்லதையும் அறியும். தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானால் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதைச் செய்கிறார்கள் அல்லவா. அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது போக வேண்டும்.)

ஆக ஆன்ம தத்துவங்கள் மொத்தம் இருபத்தி நான்கு. பஞ்சபூதங்கள் ஸ்தூல பூதங்கள் எனப்படும். அதவது ஒரு உருவமுள்ளவை. சூட்சும பூதங்கள் உருவமற்றவை. ஆனால் உணர முடியும். எடுத்துக்காட்டாக நெருப்பு என்ற ஸ்தூல பூதத்திற்குள் ஒளிந்திருப்பது ஒளி என்ற சூட்சும பூதம். இந்த சூட்சும பூதங்கள் ஐம்பொறிகளால் உணரப் படுகின்றன. அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தத்துவங்கள். ஐம்பொறிகளுக்கு உணரும் வேலை. செயலுறுப்புகளுக்குச் செய்யும் வேலை. கை செய்கிறது. கால் நடக்கிறது. நாக்கு பேசுகிறது. குதம் மலத்தை வெளியேற்றுகிறது. குறி இன்பம் துய்க்கிறது.

வித்யா தத்துவங்கள்: (7)
காலம், நியதி, காலை, விதை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி

சிவ தத்துவங்கள்: (5)
மொத்தம் ஐந்து சிவ தத்துவங்கள். இவை சிவபக்தித் தத்துவங்கள். சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள் இந்த ஐந்தும்.
சுத்த வித்தை : அறிவு குறைவாக இருந்து செயல் நிறைய இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.
ஈசுவரம் : அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருவது உண்மைதானே.
சாதாக்கியம் : சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
விந்து : இது சக்தியின் வடிவம்.
நாதம் : இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

இப்பொழுது புரிந்திருக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அவற்றின் பண்புகளும். ஆனால் முருகப் பெருமானின் தனிக்கருணை இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது. "ஆறாறையும் நீத்து" - முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கும் மேலான நிலையே கந்தரநுபூதி. அதாவது சிவாநுபூதிக்கும் ஒரு படி மேலே.

இதனால் சிவாநுபூதி குறைந்தது என்று பொருள் அல்ல. சிவாநுபூதி என்பது அளவை. அதனால் அளந்த உயர்ந்த பொருள் கந்தரநுபூதி.

சீறி வந்த சூரனை வெற்றி கொண்டு அதனால் கூறாகக் கிடந்த இந்திரலோகத்தில் அருள்மழை பொழிந்து குளிர வைத்தவனே! முப்பத்தாறு தத்துவங்களையும் தாண்டி அவைகளுக்கும் மேலான கந்தரநுபூதியைப் பேறாக பெறவேண்டியதும் உன் கருணையே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

47. ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்தது

பொதுவாக அனைவருக்கும் தெரியாத ஒரு பெயர்க்காரணத்தை இப்பொழுது சொல்லப் போகிறேன். கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். ஓங்காரம் என்பது அகர உகர மகாரங்களின் சேர்க்கை.
அ + உ + ம = ஓம்
இந்த மூன்று எழுத்துகளில் அகரம் எந்த மொழியிலும் முதலெழுத்தாக வரும். ஆகையால் முத்தொழில்களிலும் முதற்தொழிலாகிய படைப்பைக் குறிக்கிறது. உகரமானது காத்தல் தொழிலைக் குறிக்கிறது. பெரும்பாலும் தமிழிலக்கிய நூல்கள் உகரத்தில்தான் தொடங்கும்.
"உலகம் உவப்ப வலன் ஏர்பு" - திருமுருகாற்றுப்படை
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு" - பெரிய புராணம்
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" - கம்பராமாயணம்
"உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்" - வளையாபதி
மெய்யெழுத்துகளில் இறுதியில் வருவது மகரம். ஆகையால் அது முடிக்கும் அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

ஆகக் கூடி ஓங்காரமென்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்கள் கூடியது. சுருங்கச் சொல்லி விளக்கினால், ஓங்காரமென்பது உலக இயக்கம். Big Bang Theory என்று சொல்கின்றார்களே. ஒன்றுமில்லாமலிருந்து எல்லாம் வந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் ஓங்காரம்.

ஓங்காரம் என்பது இரைச்சலும் அமைதியும் கலந்தது. சங்கை காதில் வைத்தால் ஓங்காரம் கேட்கிறதல்லவா. சங்குக்குள்ளே அமைதி. வெளியே இரைச்சல் இரண்டும் கலந்தது ஓங்காரம். திருச்செந்தூர் கோயில் மதிற்சுவற்றில் ஒரு பொந்து உண்டு. அதில் காதை வைத்தால் ஓங்காரம் கேட்கும். கோயிலுக்குளிருக்கும் தெய்வீக அமைதியும் வெளியே இருக்கும் அலைகடலில் ஓசையும் கூடி ஓங்காரம் அங்கு பிறக்கிறது.

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். நல்ல அருள் கிடைக்கும். எப்படி என்று கேட்கின்றவர்களுக்கு ஒரு அறிவியல் விளக்கம். எதிரெதிர் வெப்பநிலை கூடினால் மின்சாரம் உண்டாகிறது. ஒரு தாமிரக் கம்பியின் ஒரு முனையை பனிக்கட்டியிலும் மறுமுனையை கொதிநீரிலும் வைத்தால் அந்தக் கம்பியில் மின்னோட்டம் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. அந்த மின்சாரத்தால் நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம். அது போலத்தான் இரைச்சலும் அமைதியும் கூடிய ஓங்காரமும் சக்தி உடையது.

இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
அன்னைக்கு அல்லவா பெயர் வைக்கப்படுகிறது. தாயுள்ளம் கருணையுள்ளம். எதையும் காக்கும் கருணை. அதனால் காத்தலுக்கு உரிய உகரம் முதலில் நிற்கிறது. எப்படிக் காப்பது? துன்பத்தை அழித்துதானே! அதற்காக முடித்தலுக்குரிய மகரம் அடுத்து நிற்கிறது. அடுத்தது? அகரம். அது படைப்பு. நல்ல வாழ்க்கையை நமக்குப் படைக்கின்றவள் அல்லவா.

இத்தனை பெருமை உமை என்ற அந்தப் பெயருக்கு. அந்த உமையின் மகனே என்று முருகனைப் புகழ்கிறார். உமையை விட முருகு என்ற பெயர் இன்னமும் சிறந்தது. எப்படி தெரியுமா? முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.

ஆகையால் அந்த முருகன் நமக்குத் தாயும் தந்தையும் போன்றவன். அதுதான் இந்தப் பாடலின் முதலடி. "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ". முதலில் தாய். பிறகு தந்தை. தாய் சொல்லித்தானே தந்தையே தெரியும்.
"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
" - புறநாநூறு
இங்கே புறந்தருதல் என்பது பெற்றுப் போடுதல் அல்ல. ஒரு நல்ல குழந்தையை உலகிற்கு கொடுப்பது. அது அன்னையால்தான் முடியும். அதனால்தான் முருகனை "உமையாள் மைந்தா" என்று இந்தப் பாடலில் அருணகிரியார் கூறுகிறார்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே


நிராகுலம் என்ற பதத்தை விளக்கும் பொழுது முன்பே சொன்னதுதான். இப்பொழுதும் சொல்கிறேன். ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள். நமக்கெல்லாம் இரண்டு வகையான துன்பங்கள் வரும். உள்ளத்தை வருத்தும் அகத்துன்பம். உடலை வருத்தும் புறத்துன்பம். இவை இரண்டு தவிர்த்து வேறு ஏதாவது துன்பம் இருக்கிறதா? எத்தனையெத்தனை துன்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.

இப்படி நமது சிந்தையை வருத்துகின்ற துன்பங்களையெல்லாம் துடைத்து தாயும் தந்தையுமாக காக்க வேண்டுமென்று நமக்காக அருணகிரியார் இந்தப் பாடலில் வேண்டுகிறார்.

"கந்தா! கதிர்வேலவனே! உமையம்மை பாலா! குமரா! மறைகளுக்கு எல்லாம் தலைவனே! சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள் அனைத்தையும் துடைத்து காப்பாற்றும் நீயே தாயும் தந்தையுமானவன்!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 11, 2006

46. கற்கை நன்றே கற்கை நன்றே

நாம் ஒன்றைக் கற்க வேண்டுமென்றால் நல்ல ஆசிரியரைத் தேட வேண்டும். பொல்லாத ஆசிரியரிடம் கற்றாலும் கற்ற கல்வி பயன் தராது.

மாவீரன் கர்ணன். பரசுராமரிடம் போய் கல்வி கற்றான். பிறப்பறியாதவன் அவன். எந்தக் குலத்தைச் சொல்வான்? பரசுராமரும் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லாக் கலைகளையும் கற்பித்தார். கர்ணனும் நல்ல மாணவன். அனைத்தையும் நெறியோடு கற்றான். விதி யாரை விட்டது?

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வண்டு கர்ணனின் தொடைக் கடித்துத் துளைத்தது. ஆசானின் தூக்கம் கலைந்து விடுமே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ஆனால் தொடையிலிருந்து பெருகிய குருதி பரசுராமரை எழுப்பி விட்டது.

இவ்வளவு வலியைத் தாங்க வல்லவன் குலத்தால் சத்திரியனாக இருப்பான் என்று சொல்லி சபித்து விட்டார். எப்படி? கற்ற கல்வி உற்ற நேரத்தில் அற்றுப் போகச் சபித்தார். அதனால் போர்க்களத்தில் சரியான நேரத்தில் வித்தையை மறந்தான் கர்ணன். அதனால் வீழ்ந்தான்.

கற்பதும் நல்லவர்களிடமே கற்க வேண்டும். அப்பொழுதுதான் முழுப் பயன் கிடைக்கும். எதையும் நல்வழியில் செய்ய வேண்டும். ஏகலைவனைப் பாருங்கள். துரோணரை மனதளவில் குருவாக வைத்து வில் வித்தை பயின்றான். விளைவு? கைக்கட்டை விரலை இழந்தான். நல்ல ஆசான் கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும்.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்.

எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அரவணைத்துச் சொல்லிக் கொடுப்பார்களா? சிலர் முரடர். சிலர் முசுடர். சிலர் அசடர். இருந்தும் என்ன? நமக்கு வேலை ஆகிறதே.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
- புறனானூறு
அதாவது, கொடு என்று கேட்பது இழிந்ததாம். அப்படிக் கொடு என்று கேட்ட பின்னும் ஒருவர் கொடேன் என்று சொன்னால் அது இன்னமும் இழிந்ததாம். அப்படி நாம் கேட்டு ஒருவர் இல்லையென்று சொன்னால் நமக்கு எவ்வளவு அவமானம். அருணகிரி மானத்திற்கு அஞ்சியர். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்கிறது குறள். நாமும் மானத்திற்கு பயப்பட வேண்டும்.

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே


கரவாகிய கல்வியுளார் - நான்கு பேருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாத கற்றவர்கள். அவர்களிடம் சென்று இரவா வகை வேண்டும். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டா என்கிறார் ஔவை. அப்படி மதிக்காதவரிடம் கையேந்தி நிற்க வைக்காமல் தானாக வந்து அருளினான் முருகன். இப்பொழுது முதலிரண்டு வரிகளைப் படியுங்கள். நன்றாகப் புரியும்.
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ

அடுத்த இரண்டு வரிகளைப் பார்க்கலாம்.
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கந்தரநுபூதியில் கடவுள் வாழ்த்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்திரண்டு பாடல்கள். இந்தப் பாடல்களில் ஆங்காங்கே வள்ளிநாச்சியாரைப் பற்றி வரும்.

பணியா என வள்ளி பதம் பணியும்....
வேடர் குலப்பிடி தோய்........
தூசா மணியும் துகிலும் புணைவாள் நேசா...

ஆனால் தெய்வயானை அம்மையாரைப் பற்றி இந்த ஒரு பாடலில்தான் வருகிறது. அதுகூட மறைபொருளாக. குஞ்சரவா என்று முருகனை அழைப்பதனால் தெய்வயானையைப் பற்றிச் சொல்கிறார்.

குஞ்சரம் என்றால் ஆனை. மாபாரதக் கதையில் தருமன் "அஸ்வத்தாமா ஹதகா குஞ்சரகா" என்று பொய்யுரைத்தான். "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன்" என்று சொல்லி சிறிய இடைவெளிக்குப் பிறகு "என்ற ஆனை" என்றார். முழுவதும் கேட்டால் "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன் என்ற ஆனை" என்று வரும். அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன். தன்னுடைய மகன் இறந்து விட்டான் என்று எண்ணி மருகி துரோரணர் போர்க்களத்திலேயே தவத்தில் அமர்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து திரௌபதியின் அண்ணன் திட்டத்தும்மன் துரோணரின் கழுத்தை அறுத்து விட்டான்.

குஞ்சரவா என்றால் தெய்வயானையை மணந்தவன் என்று பொருள். குரவா-என்றால் அறிவு மிகுந்தவன் என்று பொருள். குறவா என்றால் மலைக்குறவர். குலிசாயுதம் என்றால் எவரையும் வெல்லும் ஆயுதம். எது அது? ஞானம்தான் எதையும் வெல்லும் ஆயுதம். சிவயோகத்தை கொடுக்க வல்லவர் சிவன். ஆனால் சிவயோக தயாபரனே என்று முருகனைச் சொல்கிறார். எப்படி? தகப்பனார் சொத்து மகனுக்கு வருவது போலத்தான் இதுவும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, December 04, 2006

45. தலை மேல் வைத்துக் கொண்டாடி

ஒருவர் மிகவும் துன்பத்திலிருந்தார். பெரும் பசி. வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. வீட்டிலும் அனைவருக்கும் துன்பம். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் புரியவில்லை.

தெய்வாதீனமாக ஒருவர் உதவினார். முதலில் எல்லாரும் சாப்பாடு போட்டு....துணிமணி கொடுத்து.....பிறகு ஒரு வேலையும் கொடுத்தார். தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் ஒரு நிலைக்கு வந்தது. உதவி பெற்றவர் நல்லவர். செய்நன்றி மறவாத உத்தமர். என்ன செய்வார்? உதவி செய்தவரைப் புகழ்ந்து பேசுவார். அவரால்தான் வாழ்வு வந்தது என்பதைத் தயங்காமல் சொல்லுவார்.

இப்படி அவர் பேசுவதையும் சொல்வதையுங் கண்டு மற்றவர்கள் கேலி பேசினார்கள். "பாரிவனை. முதலாளியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறான்!" என்று முதுகுக்குப் பின் கிண்டலடித்தார்கள். அவன் கண்டுகொள்ளவேயில்லை. நேர்மையாக உழைத்து வந்தான்.

நன்றி மறக்கக் கூடாது. உதவி செய்தவரைக் கொண்டாட வேண்டும். அதுவும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட வேண்டும். அதைத்தான் அருணகிரியும் செய்தார்.

எதைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்? சாடும் தனிவேல் முருகன் சரணம். அப்படியென்றால்? நமக்கு எந்தத் திக்கிலிருந்து துன்பம் வருமென்று தெரியாது. ஆனாலும் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் துன்பம் வந்து விடுகிறது. அந்தத் துன்பங்களைச் சாடுகின்ற தனிவேல் முருகனுடைய சரணங்களை, அதாவது திருவடிகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனலும் கமழும் கழலே


"தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ!" முருகனுடைய திருவடிகளை நாம் நினைப்பதற்கான கருணையும் முருகன் தந்ததே. நாம் மிகவும் மதிக்கும் ஒருவரின் கையெழுத்து வேண்டும். அதை நாமாக அடைய முடியுமா? அவருடைய அனுமதியின்றி சம்மதமின்றி கையெழுத்தைப் பெற முடியுமா? அது போலத்தான் இறைவனை வழிபடுவதற்கும் அவனது கருணை வேண்டும்.

அப்படித்தான் தலைமேல் திருவடிகளை வைத்துக் கொண்டாட கருணை செய்த முருகனுடைய அன்பைச் சொற்களில் அடக்க முடியாமல் திண்டாடுகிறார் அருணகிரி. "சூடும்படி தந்தது சொல்லுமதோ!" எப்படிச் சொல்வது? ஆனாலும் சொல்ல வேண்டும் என்பதால் இப்படிச் சொல்கிறார்.

ஒரு பட்டிக்காட்டுத் தாயார். காட்டிலும் மேட்டிலும் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றினார். பிள்ளைகள் பெரிதாயின. படுத்திருக்கும் தாயாரின் கால்களைப் படித்து விடுகிறான் மூத்த மகன். காய்ந்து கிடக்கும் தாயாரின் கால்களைப் பார்த்து கண்ணீர் வருகிறது. "ஐயோ! அம்மா! காட்டிலும் மேட்டிலும் நடந்தாயே! முள்ளும் கல்லும் உன் கால்களை எப்படிப் படுத்தியிருக்கின்றன. எங்களுக்காகச் செய்தாய். அப்படி எங்களுக்காக உழைத்த இந்தக் கால்களை பிடிப்பதற்க்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இந்தக் கருணையை நான் என்ன சொல்வேன்."

இங்கே அருணகிரி மகன். முருகன் தாயார். "வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனலும் கமழும் கழலே!" வீடு என்றால் வீடுபேறு. வீடுபேறு தரவல்லவது முருகன் திருவடி. சுரர் மாமுடி - தேவர்களுடைய மணிமுடிகள். சூரனைக் காப்பாற்றி அவனிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக தேவர்களின் மணிமுடியை முருகன் பாதத்தில் இட்டார்கள். அல்லது மணிமுடி இறைவன் திருவடிகளில் படுமாறு விழுந்து வணங்கினார்கள். வள்ளி நாச்சியாருக்கு அருள் செய்து அதன் வழியாக நமக்கு அருள் செய்ய காட்டிலும் மேட்டிலும் அருவிககரையும் நடந்தார் முருகன். "அருவித் துறையோடு இதனோடு திரிந்தவனே" என்று ஒரு பாடல் முன்னம் பார்த்தோம்.

இப்படி காட்டிலும் மேட்டிலும் நடந்து வள்ளி நாச்சியாருக்கு அருள்செய்ததும், நன்றியாக எப்பொழுதும் தேவர்கள் விழுந்து தொழுவதும், வீடுபேற்றைத் தரவல்லதுமான உனது திருவடிகள் எல்லாத் துயர்களையும் தீர்க்க வல்லவை. அந்தத் திருவடிகளை என் தலை மேல் வைத்துக் கொண்டாட கருணை செய்தாயே! அந்தக் கருணையை எப்படிச் சொல்வது?

அன்புடன்,
கோ.இராகவன்