Monday, December 18, 2006

47. ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்தது

பொதுவாக அனைவருக்கும் தெரியாத ஒரு பெயர்க்காரணத்தை இப்பொழுது சொல்லப் போகிறேன். கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். ஓங்காரம் என்பது அகர உகர மகாரங்களின் சேர்க்கை.
அ + உ + ம = ஓம்
இந்த மூன்று எழுத்துகளில் அகரம் எந்த மொழியிலும் முதலெழுத்தாக வரும். ஆகையால் முத்தொழில்களிலும் முதற்தொழிலாகிய படைப்பைக் குறிக்கிறது. உகரமானது காத்தல் தொழிலைக் குறிக்கிறது. பெரும்பாலும் தமிழிலக்கிய நூல்கள் உகரத்தில்தான் தொடங்கும்.
"உலகம் உவப்ப வலன் ஏர்பு" - திருமுருகாற்றுப்படை
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு" - பெரிய புராணம்
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" - கம்பராமாயணம்
"உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்" - வளையாபதி
மெய்யெழுத்துகளில் இறுதியில் வருவது மகரம். ஆகையால் அது முடிக்கும் அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

ஆகக் கூடி ஓங்காரமென்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்கள் கூடியது. சுருங்கச் சொல்லி விளக்கினால், ஓங்காரமென்பது உலக இயக்கம். Big Bang Theory என்று சொல்கின்றார்களே. ஒன்றுமில்லாமலிருந்து எல்லாம் வந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் ஓங்காரம்.

ஓங்காரம் என்பது இரைச்சலும் அமைதியும் கலந்தது. சங்கை காதில் வைத்தால் ஓங்காரம் கேட்கிறதல்லவா. சங்குக்குள்ளே அமைதி. வெளியே இரைச்சல் இரண்டும் கலந்தது ஓங்காரம். திருச்செந்தூர் கோயில் மதிற்சுவற்றில் ஒரு பொந்து உண்டு. அதில் காதை வைத்தால் ஓங்காரம் கேட்கும். கோயிலுக்குளிருக்கும் தெய்வீக அமைதியும் வெளியே இருக்கும் அலைகடலில் ஓசையும் கூடி ஓங்காரம் அங்கு பிறக்கிறது.

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். நல்ல அருள் கிடைக்கும். எப்படி என்று கேட்கின்றவர்களுக்கு ஒரு அறிவியல் விளக்கம். எதிரெதிர் வெப்பநிலை கூடினால் மின்சாரம் உண்டாகிறது. ஒரு தாமிரக் கம்பியின் ஒரு முனையை பனிக்கட்டியிலும் மறுமுனையை கொதிநீரிலும் வைத்தால் அந்தக் கம்பியில் மின்னோட்டம் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. அந்த மின்சாரத்தால் நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம். அது போலத்தான் இரைச்சலும் அமைதியும் கூடிய ஓங்காரமும் சக்தி உடையது.

இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
அன்னைக்கு அல்லவா பெயர் வைக்கப்படுகிறது. தாயுள்ளம் கருணையுள்ளம். எதையும் காக்கும் கருணை. அதனால் காத்தலுக்கு உரிய உகரம் முதலில் நிற்கிறது. எப்படிக் காப்பது? துன்பத்தை அழித்துதானே! அதற்காக முடித்தலுக்குரிய மகரம் அடுத்து நிற்கிறது. அடுத்தது? அகரம். அது படைப்பு. நல்ல வாழ்க்கையை நமக்குப் படைக்கின்றவள் அல்லவா.

இத்தனை பெருமை உமை என்ற அந்தப் பெயருக்கு. அந்த உமையின் மகனே என்று முருகனைப் புகழ்கிறார். உமையை விட முருகு என்ற பெயர் இன்னமும் சிறந்தது. எப்படி தெரியுமா? முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.

ஆகையால் அந்த முருகன் நமக்குத் தாயும் தந்தையும் போன்றவன். அதுதான் இந்தப் பாடலின் முதலடி. "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ". முதலில் தாய். பிறகு தந்தை. தாய் சொல்லித்தானே தந்தையே தெரியும்.
"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
" - புறநாநூறு
இங்கே புறந்தருதல் என்பது பெற்றுப் போடுதல் அல்ல. ஒரு நல்ல குழந்தையை உலகிற்கு கொடுப்பது. அது அன்னையால்தான் முடியும். அதனால்தான் முருகனை "உமையாள் மைந்தா" என்று இந்தப் பாடலில் அருணகிரியார் கூறுகிறார்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே


நிராகுலம் என்ற பதத்தை விளக்கும் பொழுது முன்பே சொன்னதுதான். இப்பொழுதும் சொல்கிறேன். ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள். நமக்கெல்லாம் இரண்டு வகையான துன்பங்கள் வரும். உள்ளத்தை வருத்தும் அகத்துன்பம். உடலை வருத்தும் புறத்துன்பம். இவை இரண்டு தவிர்த்து வேறு ஏதாவது துன்பம் இருக்கிறதா? எத்தனையெத்தனை துன்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.

இப்படி நமது சிந்தையை வருத்துகின்ற துன்பங்களையெல்லாம் துடைத்து தாயும் தந்தையுமாக காக்க வேண்டுமென்று நமக்காக அருணகிரியார் இந்தப் பாடலில் வேண்டுகிறார்.

"கந்தா! கதிர்வேலவனே! உமையம்மை பாலா! குமரா! மறைகளுக்கு எல்லாம் தலைவனே! சிந்தையை வருத்துகின்ற துன்பங்கள் அனைத்தையும் துடைத்து காப்பாற்றும் நீயே தாயும் தந்தையுமானவன்!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

அருமையான விளக்கம்

முருகு வில் ம மெல்லினம், ர இடையினம், க வல்லினம். இம்மூன்றின் மீதும் உகரம் வந்தே முருகு வானது முருகனின் பெயர் சிறப்பு.

நன்றி,
சாத்வீகன்

said...

நல்ல தமிழ்க் கட்டுரை.
ஓர் ஐயம்: முருகு என்ற பெயர் வைக்கப்பட்ட போதே நீங்கள் சொல்லும் காரணத்தால் வைக்கப்பட்டதா; இல்லை, அது உங்களது விளக்க உரையா?
அதேபோல் உமை என்ற பெயரும்..?

said...

//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.//

மிக அருமையான விளக்கம். முருகன் என்றால் அழகனென்று ஒரு விளக்கம் படித்திருந்தேன். தமிழ் கடவுளுக்கு, அவர் பெயருக்கு ஒரு புதிய விளக்கம் தெரிந்து கொண்டேன்.

said...

// Dharumi said...
நல்ல தமிழ்க் கட்டுரை.
ஓர் ஐயம்: முருகு என்ற பெயர் வைக்கப்பட்ட போதே நீங்கள் சொல்லும் காரணத்தால் வைக்கப்பட்டதா; இல்லை, அது உங்களது விளக்க உரையா?
அதேபோல் உமை என்ற பெயரும்..? //

எனக்குத் தெரியாது தருமி. நான் பெயர் வைக்கவில்லையே. ஆனால் பொருத்தமான விளக்கங்கள் என்ற வகையில் வழிவழியாகச் சொல்லப்படுகிறவை. அது மட்டுமே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

said...

// சாத்வீகன் said...
அருமையான விளக்கம்

முருகு வில் ம மெல்லினம், ர இடையினம், க வல்லினம். இம்மூன்றின் மீதும் உகரம் வந்தே முருகு வானது முருகனின் பெயர் சிறப்பு.//

உண்மை சாத்வீகன். இந்தக் கருத்தைச் சொல்லாமல் விட்டு விட்டேன். சரியாக எடுத்துக் கொடுத்தீர்கள்.

// சிவமுருகன் said...

மிக அருமையான விளக்கம். முருகன் என்றால் அழகனென்று ஒரு விளக்கம் படித்திருந்தேன். தமிழ் கடவுளுக்கு, அவர் பெயருக்கு ஒரு புதிய விளக்கம் தெரிந்து கொண்டேன். //

நீங்கள் குறிப்பிடும் விளக்கத்தை சாத்வீகன் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கமும் சேர்ந்து நான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுவிட்டேன்.

said...

//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.//

இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா...

said...

எழுதி இருக்கும் கருப்பொருள் குறித்து என்னிடம் கருத்து இல்லை.

ஆனால் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். அந்த மின்சார உதாரணம் அருமை. :-))).

said...

மிக நல்ல விளக்கங்கள் ஜிரா, சாத்வீகன்!
முருகுவில் அழகு மட்டுமில்லை, பிரணவ தத்துவங்களும் உள்ளடக்கி உள்ளது என்று அறியத் தந்தமைக்கு நன்றி!

இன்னொரு செய்தி உங்களுக்காக: திருவரங்க விமானம் பார்ப்பதற்கு ஓங்கார வடிவாகவே தெரியும்; பிரணவாகர விமானம் என்றே பெயர். அதில் இந்த அகார,உகார,மகார விளக்கங்களும் அதன் குறியீடுகளும் உள்ளன.

ஜிரா, பின்னொரு நாள் "சரவண பவ" என்பதற்கும் விளக்கம் தாருங்கள்!

said...

ஜிரா அவர்களே!

நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இந்த மாதிரி இன்னும் சில கடவுள்களின் பெயர் விளக்கங்கள் படித்திருக்கின்றேன்.

ஒரு கேள்வி உறுத்தியது - அதனால் இங்கு கேட்க விழைகின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

'ஓ' என்ற எழுத்து உயிரெழெத்துதான் (எல்லா மொழிகளிலும்). அதை எப்படி இரண்டாக பகுக்க (அ+உ) முடியும்? அது 'ஔ' ஆக மாறிவிடாதா...?

'ஓம்' மற்றும் 'உமா' anagram மிக நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி!!!

said...

அருமையான விளக்கம் ஜிரா.

//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்//

அற்புதம்.

said...

மிக நல்ல விளக்கங்கள் இராகவன். படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது. மிக்க நன்றி.

said...

Sridhar Venkat,

ஓம்காரம் 'ஓ' என்ற உயிரெழுத்தின் அடிப்படையிலான 'சொல்' இல்லை. அது ஓரெழுத்து. அது அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளாகவும் பிரியாது. வடமொழி நூல்களிலும் தமிழ் நூல்களிலும் அது ஏகாக்ஷரம், ஓரெழுத்து என்றே குறிக்கப்படுகிறது. ஆனால் அதனை பலுக்கும் (உச்சரிக்கும்) முறையைப் பற்றிச் சொல்லும் போது இரண்டு மொழிகளிலும் அதனை 'அ','உ','ம' இவற்றின் ஒலிகளோடு பலுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓம்காரம் ஒரே மாத்திரையில் தான் ஒலிக்கும். அ,உ,ம என்ற மூன்று மாத்திரையில் ஒலிக்காது. ஆனால் ஓம்காரத்தை ஒலிக்கும் போது இந்த மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரே மாத்திரையில் ஒலிக்கும். இதனைக் குறிக்க ஆங்கிலத்தில் சில இடங்களில் ஓம்காரத்தை AUM என்று எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். உங்கள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

said...

// வெட்டிப்பயல் said...

இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா... //

நன்றி பாலாஜி. (இனி வெட்டி என்று கூப்பிடத் தயக்கமாக இருக்கிறது.)

// செந்தில் குமரன் said...
எழுதி இருக்கும் கருப்பொருள் குறித்து என்னிடம் கருத்து இல்லை.

ஆனால் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். அந்த மின்சார உதாரணம் அருமை. :-))). //

நன்றி செந்தில்

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இன்னொரு செய்தி உங்களுக்காக: திருவரங்க விமானம் பார்ப்பதற்கு ஓங்கார வடிவாகவே தெரியும்; பிரணவாகர விமானம் என்றே பெயர். அதில் இந்த அகார,உகார,மகார விளக்கங்களும் அதன் குறியீடுகளும் உள்ளன.//

இந்தச் செய்தி எனக்குப் புதியது. அந்த கோபுரத்தைத் தரிசிப்பது எளிதாகும் பொழுது எனக்குக் காணக் கிட்டும் என்று நம்புகிறேன்.

// ஜிரா, பின்னொரு நாள் "சரவண பவ" என்பதற்கும் விளக்கம் தாருங்கள்! //

ஆறெழுத்து மந்திரத்தின் பெருமையை ஆரெடுத்துச் சொன்னாலும் சிறப்பாகவே இருக்கும். அதை நான் எஸ்.கே அவர்கள் எடுத்துச் சொல்ல கேட்க விரும்புகிறேன்.

said...

// Sridhar Venkat said...
ஜிரா அவர்களே!
ஒரு கேள்வி உறுத்தியது - அதனால் இங்கு கேட்க விழைகின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

'ஓ' என்ற எழுத்து உயிரெழெத்துதான் (எல்லா மொழிகளிலும்). அதை எப்படி இரண்டாக பகுக்க (அ+உ) முடியும்? அது 'ஔ' ஆக மாறிவிடாதா...? //

தவறாக எண்ணவில்லை. ஒன்றை நாம் சொல்லும் பொழுது அதை நாம் ஒப்பிச் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விகள் அந்த ஒப்புதலை மேம்படுத்தும் என்றே நம்புகிறேன்.

குமரன் உங்கள் கேள்விக்கு விடை சொல்லி விட்டார். நானும் அதையே சொல்கிறேன். ஓங்காரத்தைத் தமிழில் குடிலை என்பார்கள். ஓரெழுத்துதான். மூன்று உயிரெழுத்துகள் சேர்ந்தாலும் கிடைப்பது ஓரெழுத்துதான்.

இந்த ஓங்காரத்திற்கு ஒலி வடிவும் உண்டு. ஒளி வடிவும் உண்டு. ஒலி வடிவம் சேவல். ஓங்காரமாகக் கூவுகிறது. ஒளி வடிவம் மயில். தோகை விரித்த மயில் ஓங்காரம். அதைத்தான் நாத விந்து தத்துவம் என்கிறார்கள். நாதம் சேவல். விந்து மயிற்றோகை. மயிற்றோகை விந்தின் வடிவில் இருக்கிறது அல்லது. இப்படி ஒலியும் ஒளியும் காட்டி உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கலையைத்தான் அருணகிரியார் "நாதவிந்து கலாதி நமோ நம" என்று புகழ்கிறார்.

said...

// இராமநாதன் said...
அருமையான விளக்கம் ஜிரா.
//

நன்றி இராமநாதன். பொதுப்பாட்டு எந்த நிலையில் இருக்கிறது?


// குமரன் (Kumaran) said...
மிக நல்ல விளக்கங்கள் இராகவன். படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது. மிக்க நன்றி. //

குமரன் உள்ளத்தில் உவகை பொங்கத்தானே...அப்படி பொங்கிய உள்ளத்தில் தங்கத்தானே...இப்படியெல்லாம் எழுதுகிறேன். :-)

said...

சிறப்பான பதிவு

பதிவுக்கு நன்றி
எழில்

said...

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும்.

ஆமாம் ஜி.ரா சரியாகச் சொன்னீர்கள். இப்பொழுதும் இலங்கை வாழ் தமிழரிடத்தில் ஆமாம் என்பதற்கு "ஓம்'ஐயா என்று கூறுவார்கள்.ஆமாம் என்ற வார்த்தையே ஓம்லிருந்து வந்ததுதான் போல இருக்கு
இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
ஓ இப்படி ஒரு விளக்கம் உள்ளதா உமாவிற்கு.
.

said...

இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும்.

ஆமாம் ஜி.ரா சரியாகச் சொன்னீர்கள். இப்பொழுதும் இலங்கை வாழ் தமிழரிடத்தில் ஆமாம் என்பதற்கு "ஓம்'ஐயா என்று கூறுவார்கள்.ஆமாம் என்ற வார்த்தையே ஓம்லிருந்து வந்ததுதான் போல இருக்கு
இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.
உ + ம + அ = உமா
ஓ இப்படி ஒரு விளக்கம் உள்ளதா உமாவிற்கு.
.

said...

இராகவன்,
மிகவும் அருமையான பதிவு. அருமை நண்பர் குமரன் சொன்னது போல், "படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது". இதைத் தருமி ஐயா சொன்னது போல் தமிழ்ப்பதிவு என்பதா அல்லது ஆன்மீகப் பதிவு என்பதா? இதனால் தான் நான் அடிக்கடி சொல்வேன், "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" எனும் திருமந்திரம் போல் தமிழும் சைவமும் இரண்டென்பர் அறிவிலார் என்று சொல்லத் தோன்றுகிறது.

/* இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். */

இராகவன், ஒரு சுவாரசியமான தகவல். தமிழகத்தில் ஆம் என்ற சொல்லைப் புழங்குவார்கள். ஆனால் ஈழத்தில் ஆம் என்ற சொல்லைப் புழங்குவதில்லை. ஆம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஓம் என்ற சொல்லைத் தான் புழங்குவோம்.

ஆம்,ஆமா(ம்) [தமிழகத் தமிழ்]
ஓம், ஓமோம் [ஈழத் தமிழ்]
ஆமாங்க [தமிழகத் தமிழ்]
ஓமுங்கோ [ஈழத் தமிழ்]

said...

குமரன் மற்றும் ஜிரா அவர்களுக்கு,

//'அ','உ','ம' இவற்றின் ஒலிகளோடு பலுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓம்காரம் ஒரே மாத்திரையில் தான் ஒலிக்கும். அ,உ,ம என்ற மூன்று மாத்திரையில் ஒலிக்காது. ஆனால் ஓம்காரத்தை ஒலிக்கும் போது இந்த மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரே மாத்திரையில் ஒலிக்கும்.//

புரிந்தது. மூன்று ஒலிகளும் சேர்ந்து (in parallel) ஒரு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும். அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

'முருகு' என்ற பெயருக்கு ஜிரா அளித்த விளக்கமும் அருமை. இதைப் போன்று ஒரு விளக்கம் 'ராம' என்ற பெயருக்கு கேள்விப் பட்டிருக்கிறேன்.

'நாராயன' என்ற நாமத்தில் முக்கியமான் எழுத்து 'ரா' ஆகும். அதை எடுத்து விட்டால்.. அது 'ந அயனன்' அதாவது 'அசைவில்லாதவன்' ஆகிவிடும்.

'நமசிவாய' என்ற நாமத்தில் 'ம' முக்கியமானது. 'ம' இல்லாவிட்டால் அது 'ந சிவாய' அதாவது 'சிவம் இல்லாததாக' ஆகி விடுகிறது.

இந்த இரு நாமங்களிலும் உள்ள ஜீவ எழுத்துக்கள் இனைந்தது 'ராம' நாமம் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

எவ்வளவு creative-ஆன சிந்தனை!

said...

//G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...

இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா... //

நன்றி பாலாஜி. (இனி வெட்டி என்று கூப்பிடத் தயக்கமாக இருக்கிறது.)//

என்ன இது?
நீங்க பாசமா வெட்டினு கூப்பிடறதுதான் எனக்கு பிடிச்சியிருக்கு...