Tuesday, May 29, 2007

02. இஇ - புகழேந்தி யாருடைய புகழை ஏந்தி

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர் பாண்டி நாட்டுப் புலவர். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அவளோடு அறிவுருத்தும் ஆசானாய்ச் சோழநாடு புகுந்தவர். நளவெண்பா என்னும் பெயரிலிருந்தே இந்நூல் முழுக்க முழுக்க வெண்பாக்களால் ஆனது என்று விளங்கும். மேலும் நளவெண்பா உவமை அழகும் மிகுந்த நூல். அந்த நூலை எழுதுகையில் சைவராகிய புகழேந்தி யாருடைய புகழினை ஏந்தித் தொடங்குகிறார்?

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட்கு இறை

மகாபாரதத்தின் கிளைக்கதையாக வரும் நளதமயந்திக் கதையை நூலில் வடிக்கும் பொழுது திருமாலைத் தொழுது துவக்குகிறார் புகழேந்தி. திருமாலைத் தொழுகின்றவர்கள் அவரே ஆதியென்று தொழுவார்கள். ஆகையினாலே நூலின் ஆதியிலேயே ஆதித் தனிக்கோலம் ஆனான் என்று திருமாலைப் புகழ்கிறார். தனிக் கோலம் என்பது தனியாக அமர்ந்திருப்பது அல்ல. தனக்கு இணையாக எவரும் இல்லாதிருப்பது. "தனியானை சகோதரனே" என்று கந்தரநுபூதியில் அருணகிரி சொல்வதும் இதே தனிமைதான்.

அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் என்று ஒரு கதையைச் சொல்கிறார் புகழேந்தி. இறைவன் அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளே இருப்பவன் என்பதை அறியாதவன் இரண்யன். அவனுக்குப் பாடம் சொன்னன் ஒருவன். அதுவும் அவன் பெற்ற மகன். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற தனது மகனின் கூற்றை ஏற்க முடியாமல் திணறினான். தூணிலும் இருப்பானவன் துரும்பிலும் இருப்பான் என்று மகன் கூறவும் ஆணவம் கொண்டு தூணைத் தகர்த்தான் இரண்யன். அந்தத் தூணிலிருந்து மனித ஏறாக வந்தார் இறைவன். அந்த நிகழ்ச்சியைத்தான் தூணில் தோன்றினான் என்று நினைவு கூறுகிறார்.

அனைத்து வேதத்திற்கும் முன்னின்ற அவனை ஒரு வேழம் அழைத்தது. இறையறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் செடிகொடிகளுக்கும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அப்படி இறையறிவுள்ள ஆனை ஒன்று தாமரை மலரைக் கொய்ய ஆற்றில் இறங்கியது. அங்கிருந்த முதலையானது பசி கொண்டு ஆனையின் காலைக் கவ்வியது. அப்பொழுது ஆதிமூலமே என்று ஆனை நம்பி அழைத்ததால் என்னென்று கேட்டு ஓடி வந்து காத்தார் திருமால்.

ஆதித்தனிக்கோலம் ஆனானவனும், அடியவன் சிறுவனுக்காகத் தூணில் மனித ஏறாகத் தோன்றியவனும், வேதத்திற்கெல்லாம் முன்னிற்பவனும், ஆதிமூலமே என்று அழைத்த மாத்திரத்தில் என்னவென்று கேட்டவனுமாகிய திருமாலே எங்களுக்கு இறைவன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 24, 2007

01. இலக்கியத்தில் இறை - குறுந்தொகை

பைந்தமிழ் இலக்கியங்கள் படிக்கத் திகட்டாதவை. அந்தத் தீஞ்சுவைத் தமிழ் மாலைகளில் தேன் துளியாக இறைவணக்கப் பாடல்கள் நிறைந்து சிறந்துள்ளன. இறைவனைத் தமிழால் அழகு மிகும் சொற்களால் அன்பால் புனைந்த அந்த இறைவணக்கப் பாக்களைப் பூக்களைத் தேடும் வண்டாய்த் தேடித் தேடி செந்தமிழ்த்தேன் துளிகளைச் சேகரித்துப் படைப்பதில் உவப்படைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு இறைவன் அருளால் அப்பாக்களுக்குத் தப்பாத வகையில் பொருளுரைக்கிறேன். இலக்கியத்தில் இறை நம் தமிழ்ப் பசிக்கு இரை.

குறுந்தொகை

குறுந்தொகை என்னும் நூல் அகப்பாடல்களின் தொகுப்பு. பல புலவர்கள் படைத்த தனிப்பாடல்களின் தொகுப்பு. இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏமவைகல் எய்தின்றால் உலகே

தமிழ்க் கடவுள் முருகனைப் பாடிய இறைவணக்கப் பாடல் இது. மூத்தகுடியாம் தமிழ்க் குடியில் மூத்த தெய்வம் முருகனைப் பாடாதார் யார்? தன் பங்கிற்குப் பெருந்தேவனார் இந்தப் பாடலில் முருகன் அருளால் உலகின் காக்கப்படுவதைச் சொல்கின்றார்.

தொடக்கத்திலேயே திருவடியைப் பற்றிச் சொல்கின்றார். "பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்பது வள்ளுவன் வாக்கு. இறைவனடியைச் சேர வேண்டும். ஆகையால் முருகப் பெருமானின் திருவடியைப் புகழ்ந்து செய்யுளைத் துவக்குகிறார் பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று கந்தனடிகளைச் சொல்கின்றார். தாமரை மலர்களை ஒத்த அழகனுடைய திருவடிகள் என்று பொருள். திருப்புகழில் அருணகிரிநாதரும் "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே" என்று முருகன் திருவடிகளைப் புகழ்கிறார்.

பவழத்தன்ன மேனி. பவழம் செக்கச் சிவந்தது. முருகப் பெருமானி திருமேனியும் சிவந்தது. இங்கே சிவப்பு என்பது செம்மை என்னும் பண்பைக் குறிக்கும். முருகனுடைய மேனி மட்டுமா செம்மை. உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை! அது சிவனுக்கு உரியதாயிற்றே என்று எண்ணாதீர்கள். உடுக்கை என்பது உடுத்தும் துணியைக் குறிக்கும். "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற குறளையும் நினைவிற் கொள்க.

குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் என்று முருகனுடைய திருக்கை வேலின் சிறப்பைச் சொல்கிறார். மாயை என்பது இருள். ஞானம் என்பது ஒளி. இருள் அனைத்தையும் மறைக்கும். ஆனால் ஒளி வந்ததுமே இருள் விலகும். மாயையின் வடிவாக எழுந்து அனைத்தையும் மறைத்தது கிரவுஞ்ச மலை. வேல் ஞானத்தின் வடிவம். வேலெறிந்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் முருகன். ஞானம் அல்லது அறிவு சுடர் விட்டு ஒளிர வேண்டும். ஆகையால்தான் "அஞ்சுடர் நெடுவேல்" என்று பெருமதிப்போடு கூறுகின்றார். "கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே" என்று இதே கருத்தை கந்தரநுபூதியும் பகர்கிறது.

ஏமவைகல் என்றால் பாதுகாப்பான நிலை என்று பொருள். இது பழந்தமிழ்ச் சொல். பாதுகாப்பான நிலையை உலகம் எய்தியதாம். எதனால்? சேவலங் கொடியன் காப்ப. தாமரைத் திருவருடிகளையுடைய அழகனும், செம்மைப் பண்புடைய செவ்வேளும், மாயையைச் சாடும் சுடர்வேலைப் படித்தவனும், சேவற்கொடியைக் கொண்டவனுமாகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது பெருந்தேவனார் கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்