Monday, January 29, 2007

52. கடைக்குட்டி

கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தான் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!

அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.

கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் துறவியாக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.

வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனாரோ முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு வந்த சமயக்குரவர்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னால் மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.

அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.

மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.

அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் திருப்புகழில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.

முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்

இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"

பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"

தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.

புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".

தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது. முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 22, 2007

51. அரவாடினாலும் அறவாடினாலும்

அநுபூதி என்றால் என்னவென்று சொல்லியாகி விட்டது. அநுபூதியின் அருமை பெருமைகளைச் சொல்லியாகி விட்டது. அநுபூதியின் தன்மைகளையும் திண்மைகளையும் முடிந்த வரை சொல்லியாகி விட்டது. அநுபூதியை அடையும் வழிமுறைகளையும் சொல்லியாகி விட்டது. கந்தரநுபூதி பற்றிய நூலை முடிக்க வேண்டும். முடிக்கும் பொழுது முருகனைப் பாடித்தான் முடிக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னால் ஒரு வேலை இருக்கிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பது பாடல்களைப் பாடி விட்டார் அருணகிரி. இந்தக் கந்தரநுபூதியைப் படித்தால் என்ன பயன் கிடைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டுமல்லவா. ஒரு பொருளை விற்கும் பொழுது என்ன பயன்கள் என்று சொல்லித்தானே விற்பார்கள். அதுதானே விற்பனை முறை.

ஆனால் அருணகிரி முருகனருளை விற்க விரும்பவில்லை. மக்கள் கற்க விரும்புகிறார். ஆகையால் நமக்காக வேண்டிக் கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதுதான் இந்தப் பாடல். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. தலைவர்கள் விடுதலை கேட்டார்கள். அவர்கள் கேட்டது அவர்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்தானே! அந்த பொதுவுள்ளம் வாய்ந்தவர் அருணகிரி. நமக்காகத் தன் மீதும் குற்றத்தை ஏற்றிக் கொண்டு பாடுகிறார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே


மதி கெட்டால் அறவாடும். அறவு என்றால் ஆற்றல். ஆற்றல் வாடுதலே அறவாடல். அரவு என்றால் பாம்பு. அரவு ஆடும். நம்முன்னே அரவாடினாலும் அறவாடினாலும் முடிவு துன்பந்தான். எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது. ஆற்றல் போனால் தூற்றல் வரும். ஆம். ஆற்றல் இழந்தவனை உலகம் தூற்றும்.

ஆற்றலோடு இருந்தவரையில் இராவணனை எல்லா உலகமும் தொழுதது. பதவியில் இருப்பவர் காலில் விழும் வழக்கம் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவன் ஆற்றல் இழந்து போர்க்களத்தில் வெறுங்கையோடு நின்ற பொழுது "இன்று போய் நாளை வா" என்று ராமன் சொன்னது கருணையென்றாலும் ஒரு வகையில் தூற்றலே. அதனால்தான் அப்படிச் சொன்னதற்கு ராமனுக்குப் பெருமை சூழ்ந்தாலும் இராவணனுக்கு அவமானம் சூழ்ந்தது. தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

அதனால்தான் அருணகிரி வேண்டுகிறார். மதிகெட்டு ஆற்றல் இழந்து மயங்கி அறக்கதி கெட்டு ஒழிவதோ! முருகா நீதான் காப்பாற்ற வேண்டும்.

அறம் என்பது மிகப் பெரிய சொல். "அறம் செய விரும்பு" என்கிறாள் ஔவை. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்கிறார் வள்ளுவர். அடுத்தர் சொல்லிக் காட்டும் நிலைக்கு ஆளாகக் கூடாது. நல்லது செய்கிறோம். அது அடுத்தவர் குற்றம் சாட்டும் நிலையில் இருக்கக் கூடாது. அறம் கெட்டால் எல்லாம் கெட்டு விடும். அதனால் தவறு செய்யக் கூடாது.

இதை இளங்கோவடிகள் கண்ணகி வாயால் சொல்கின்றார். தவறு செய்து விட்டோமெனத் தெரிந்ததும் பாண்டியன் உயிர் விட்டான். உடனே மாண்டாள் கோப்பெருந்தேவி. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாம்!" மற்றொரு இடத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்" என்கிறார் இளங்கோவடிகள். அறத்திலிருந்து தவறினால் அறமே கொன்று விடும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் மனதாற்கூடச் செய்யாதவன். ஒரு சின்ன தவறு செய்தான். விளைவு? மதுரையே அழிந்தது. அதை இன்றைக்கும் நாம் சொல்லுகிறோம். ஒரு சின்ன தவறு எத்தனை நூற்றாண்டுகளாக நிற்கிறது பாருங்கள். அவன் எத்தனையெத்தனையோ நல்லவைகளைச் செய்திருக்கிறான். அவற்றை யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவன் குற்றம் நின்கின்றது.

இந்த நிலைக்கெல்லாம் ஆளாக்காமல் காக்க வேண்டியது முருகனே! கங்கையின் மைந்தனே! ஞானத்தினால் உண்டாகும் சுகத்தின் அதிபனே! திதியின் வழியினரான அரக்கர்களின் செருக்கை அழிந்த சேவகனே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 15, 2007

50.தனிமையிலே இனிமை காண முடியுமா?

கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்வதும் எளிதன்று. முறையான கேள்விகளைக் கேட்பதும் கடினம் . அவற்றிற்குத் தெளிவாக விடை பகர்வதும் கடினம். இரண்டிற்குமே அறிவு தேவை. தமிழ்க் கடவுள் முருகன் கேட்கிறார். அதற்குத் தமிழ் மூதாட்டி ஔவை விடை சொல்கிறார்.

கேள்வி: இனியது எது?
விடை: இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!நம்மிடம் இனியது கேட்டால், என்ன சொல்வோம்? இனிது இனிது மாம்பழம் இனிது. அதனினும் இனிது தேனிலூறிய மாங்கனி. அதனினும் இனிது அதோடு பாலைச் சேர்த்தல். அதனினும் இனிது அப்படிக் கலந்ததைத் திகட்டாமல் மூவேளையும் உண்பதுதானே!

ஆனால் ஔவை அறிவு நிறைந்த கிழவி. உண்மையிலேயே இனியவைகளை அடுக்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஏகாந்தம் இனிது என்கிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும் என்பதே ஆன்றோர் முடிவு.

தனிமை என்றால் யாருமில்லாத இடம் என்று மட்டும் பொருளல்ல. உடல் தனியாக இருப்பது தனிமையல்ல. மனம் தனியாக இருக்க வேண்டும். ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது. இன்பம், துன்பம், இருள், ஒளி, அமைதி, இரைச்சல்....எதுவுமே இல்லாதது. மனத்தை அந்த அளவிற்கு உயர்த்தினால் இன்பம் கிடைக்கும்.

அது எப்படி? எளிமையாகச் சொல்கிறேன். கவனியுங்கள். புகை வண்டியில் பகல் வேளைகளில் பயணம் போனவர்களுக்குத் தெரியும். எல்லாரும் விழித்துக் கொண்டிருப்பார்கள். சும்மாயிருக்க முடியாது. அதனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரே இரைச்சலாக இருக்கும். நடுநடுவே பழம் விற்கின்றவர்கள். பாட்டுப்பாடி யாசிப்பவர்கள். பலகாரங்கள், காப்பி , தேநீர் விற்பவர்கள். புத்தகங்களும் செய்தித்தாள்களும் விற்பவர்கள். எதற்கோ சண்டையிடுகின்றவர்கள். எத்தனை இரைச்சல். அத்தோடு இரயில் வண்டி வேறு. தடதடவென ஓடிக் கொண்டும் கூவெனக் கூவிக் கொண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு காது வலிக்கும்.

ஆனால் அத்தனை ஓசைகளிலும் ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவருடைய எண்ணம் முழுவதும் புத்தகத்திலேயே இருக்கும். எல்லாம் சுற்றி இருக்கிறது. ஆனால் அவர் தனிமையில் இருக்கிறார். இது தனிமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

ஆக உலக இயக்கத்தில் இருக்கும் எல்லாத் துன்பங்களையும் தாண்டி மனதை அமைதியாக தனியாக வைத்துக் கொண்டிருக்க முடியுமானால் அது எவ்வளவு பெரிய இன்பம். அதைத்தான் ஔவை ஏகாந்தம் இனிது என்கிறார். முருகன் அருள் முழுதும் பெற்ற கிழவி.

திருவாசகத்தில் கூட ஈசனைப் பற்றிச் சொல்லும் பொழுது "ஏகன் அனேகன்" என்றே சொல்கிறார் மாணிக்கவாசகர். ஏகன் - தனியாக இருப்பவன். அனேகன் - அனைத்திலும் இருப்பவன். என்ன விளக்கம் பாருங்கள்.

தன்னந் தனி நின்றது தான் அறிய
இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் கிளையும் கிருபை சூழ் சுடரே


அருணகிரிக்கு ஒரு பிரச்சனை. ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கும் வழிமுறையை அவருக்கு முருகன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இவரும் அனுபவித்திருக்கிறார். தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் சொல்லித் தர வேண்டுமென்பது அவரது விருப்பம். ஆனால் அதைச் சொல்லில் அடக்க முடியவில்லை. புலம்புகிறார். "தன்னந்தனி நின்றது தானறிய இன்னுமொருவர்க்கு இசைவிப்பதுவோ!" சொல்ல முடியுமா?

முருகனை "மின்னும் கதிர்வேல் விகிர்தா" என்று அழைக்கிறார். விகிர்தம் என்றால் வேறுபடுதல். விகிர்தா என்றால் வெவ்வேறு விதமாக இருப்பவன். ஒன்றும் பலவுமாய் இருப்பவனல்லவா அவன். அந்த கதிர்வேல் விகிர்தனின் பண்பு என்ன தெரியுமா? அதை நான்காவது அடியில் சொல்கிறார். "நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே!"

நினைக்கின்றவர்களின் துன்பத்தைத் துடைப்பவன் கந்தன். கின்னம் என்றால் துன்பம். கிண்ணம் என்றால் பாத்திரம். நமது வாழ்க்கை கின்னம் நிறைந்த கிண்ணமாகி விடக்கூடாது. முருகனை அன்போடு நினைத்தால் போதும். குழம்பு வைக்கின்றவர்களுக்குத் தெரியும். புளியை ஊற வைத்துக் கரைக்க வேண்டும். ஆனால் உப்பைச் சேர்த்தால் போதும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, January 08, 2007

49. அறிவு எத்தனை வகை

கந்தரநுபூதி எந்த அளவிற்கு உயர்ந்தது என்று சென்ற பாட்டில் (ஆறாறையும் நீத்து) பார்த்தோம். இந்தப் பாடலில் கந்தரநுபுதியின் தன்மையைச் சொல்கிறார் அருணகிரி. தன்மை முழுமையும் சொல்ல முடியாது. அதன் தொடக்கத்தைச் சொல்கிறார்.

கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம். நான்கு பக்கங்களிலும் கடலைப் பார்க்கலாம். கடலைப் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் உண்மையில் முழுக்கடலையும் பார்க்க முடியுமா?

இரண்டு கண்கள் அதற்குப் பத்தாது. அது போலத்தான் கந்தரநுபூதியும். கந்தரநுபூதியின் முழுப் பெருமையையும் நம்மால் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. உணர்ந்து புரிந்து கொள்ளலாம்.

கடலின் ஒரு பகுதியை நம் கண்களுக்குக் காட்டுவது போல அநுபூதியின் அறிமுகத்தைக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே


"செறிவொன்று அற வந்து இருளே சிதைய" - செறிவு என்றால் நம்மைச் சுற்றியிருந்து நம்மைச் செறிவூட்டுகின்றவை. சுருங்கச் சொன்னால் "என்னுடையது" என்று நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அவையெல்லாம்.

இந்தச் செறிவை அற்றுப் போகச் செய்வது அநுபூதி. இதென்ன கூத்து? எதற்காக இவையெல்லாம் போக வேண்டும்? வள்ளுவரைக் கேட்கலாம்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
"
எவற்றையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அவைகளால் துன்பம் உண்டாகாது. புகைப் பிடித்தலை விட்டால் நுரையீரல் தப்பிக்கும்.

எந்தப் பொருளையும் பழக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விலகினால் அதனால் நமக்குத் துன்பம் நேராது. கிருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு தாளை எடுத்து நம்முடையது என்று நினைப்பவைகளைப் பட்டியலிட்டால், அந்தப் பட்டியலின் நீளமே நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம்.

இதைத்தான் அநுபூதியும் சொல்கிறது. சற்றே வேறுவிதமாக. கடவளோடு ஒன்றாகி விட்டால் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒன்றுமில்லை. புரிகின்றதா "செறிவொன்று அறவந்து"?

இப்படிச் செறிவு அற்றுப் போவதால் உண்டாகும் நன்மை என்ன? "இருளே சிதைய" என்கிறார். ஆணவமாகிய இருள் சிதைந்து போகும். ஆணவம் ஆளை அழித்து விடும். ஆனால் ஆணவத்தை முருகனருள் அழித்து விடும். (இது வரைக்கும் மூன்றாவது வரிக்கு மட்டும்தான் விளக்கம் பார்த்திருக்கின்றோம். இன்னும் மூன்று வரிகள் உள்ளன.)

ஆணவம் அழிந்த நிலை என்ன? "வெறி வென்றவர்" என்ற நிலையை எய்துவது. பற்று என்பது எதன் மேலும் இருக்கும். அது அன்பின் முதல் நிலை. பாசம் என்றும் சொல்லலாம். அது தவறாகாது. அந்தப் பாசமே அளவிற்கு மீறினால் வெறியாகி விடும். வெறி நன்றன்று.

மத வெறி, மொழி வெறி, இன வெறி, சாதி வெறி என்று எந்த வெறியும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்றுதான் இருக்கலாம். அதிலும் வெறி இருக்கக் கூடாது. அதனால்தான் வள்ளுவரும் "பற்றுக பற்றற்றான் பற்றை" என்று சொல்கிறார். பெரிய அறிஞர்கள் ஒன்றைச் சொன்னால் அதில் ஒவ்வொரு சொல்லையும் மிகக் கவனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆழ்ந்து பொருள் கொண்டால் தெளிவாகப் புரியும்.

அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார். இறைவன் மேலும் பற்றுதான் இருக்க வேண்டும். வெறி இருக்கக் கூடாது.

அறிவு எத்தனை வகைப்படும்? பட்டறிவு, பகுத்தறிவு, கேள்வி ஞானம் மற்றும் படிப்பறிவு.

எதையும் படித்துத் தெரிந்து கொள்வது படிப்பறிவு. கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே இது கிட்டும். நல்ல அறிஞர்கள் சொல்லியதைக் கேட்டு உணர்ந்து கொள்வது கேள்வியறிவு. இது நல்ல அறிஞர் மொழி கேட்டால் மட்டுமே கிடைக்கும். எதையும் பட்டுத் தெரிந்து கொள்வது பட்டறிவு. இது அநுபவத்தில் வருவது. அனைத்தையும் அநுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்கள் பிரசவ வேதனையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. பகுத்தறிவு என்பது இருக்கின்ற அறிவை வைத்து மற்றொன்றைப் பகுத்துத் தெரிந்து கொள்வது. இதுவும் ஒரு எல்லைக்குள் உட்பட்டதே.

ஆகக் கூடி எந்த அறிவுமே முழுமையானது அல்ல. இந்த அறிவுகளெல்லாம் சீவ அறிவுகள். சீவனாக உலகில் வாழத் தேவையான அறிவுகள். சீவ அறிவை விட சிவ அறிவு சிறந்தது. சீவனாகப் பிறந்தவர்களுக்குத் தலையில் சுழியுண்டு. பிறப்பேயில்லாத சிவனுக்குக் கிடையாது. தலையிலுள்ள சுழி போனால் சீவன் சிவனாகி விடும்.

சீவன் சிவனாக வேண்டுமானால் சீவ அறிவு போக வேண்டும். சிவஞானம் பெருக வேண்டும். அதைத்தான் "அறிவொன்று அற நின்று" என்கிறார் முதலடியில். அறிவொன்று அற நின்று சிவனை அறிகின்றவர்கள் அறிவில் என்றைக்கும் பிரியாமல் இருப்பான் முருகன். முதலிரண்டு அடிகளையும் மீண்டும் படியுங்கள்.
"அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவொன்று அற நின்ற பிரான் அலையோ
"

பிரான் என்பது பிரியான் என்பதன் சுருக்கம். முருகப் பெருமான் நம்மையேல்லாம் பிரியாமல் காப்பவன்.

பக்தியுடன்,
கோ.இராகவன்