Monday, January 15, 2007

50.தனிமையிலே இனிமை காண முடியுமா?

கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்வதும் எளிதன்று. முறையான கேள்விகளைக் கேட்பதும் கடினம் . அவற்றிற்குத் தெளிவாக விடை பகர்வதும் கடினம். இரண்டிற்குமே அறிவு தேவை. தமிழ்க் கடவுள் முருகன் கேட்கிறார். அதற்குத் தமிழ் மூதாட்டி ஔவை விடை சொல்கிறார்.

கேள்வி: இனியது எது?
விடை: இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!நம்மிடம் இனியது கேட்டால், என்ன சொல்வோம்? இனிது இனிது மாம்பழம் இனிது. அதனினும் இனிது தேனிலூறிய மாங்கனி. அதனினும் இனிது அதோடு பாலைச் சேர்த்தல். அதனினும் இனிது அப்படிக் கலந்ததைத் திகட்டாமல் மூவேளையும் உண்பதுதானே!

ஆனால் ஔவை அறிவு நிறைந்த கிழவி. உண்மையிலேயே இனியவைகளை அடுக்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஏகாந்தம் இனிது என்கிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும் என்பதே ஆன்றோர் முடிவு.

தனிமை என்றால் யாருமில்லாத இடம் என்று மட்டும் பொருளல்ல. உடல் தனியாக இருப்பது தனிமையல்ல. மனம் தனியாக இருக்க வேண்டும். ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது. இன்பம், துன்பம், இருள், ஒளி, அமைதி, இரைச்சல்....எதுவுமே இல்லாதது. மனத்தை அந்த அளவிற்கு உயர்த்தினால் இன்பம் கிடைக்கும்.

அது எப்படி? எளிமையாகச் சொல்கிறேன். கவனியுங்கள். புகை வண்டியில் பகல் வேளைகளில் பயணம் போனவர்களுக்குத் தெரியும். எல்லாரும் விழித்துக் கொண்டிருப்பார்கள். சும்மாயிருக்க முடியாது. அதனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரே இரைச்சலாக இருக்கும். நடுநடுவே பழம் விற்கின்றவர்கள். பாட்டுப்பாடி யாசிப்பவர்கள். பலகாரங்கள், காப்பி , தேநீர் விற்பவர்கள். புத்தகங்களும் செய்தித்தாள்களும் விற்பவர்கள். எதற்கோ சண்டையிடுகின்றவர்கள். எத்தனை இரைச்சல். அத்தோடு இரயில் வண்டி வேறு. தடதடவென ஓடிக் கொண்டும் கூவெனக் கூவிக் கொண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு காது வலிக்கும்.

ஆனால் அத்தனை ஓசைகளிலும் ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவருடைய எண்ணம் முழுவதும் புத்தகத்திலேயே இருக்கும். எல்லாம் சுற்றி இருக்கிறது. ஆனால் அவர் தனிமையில் இருக்கிறார். இது தனிமைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

ஆக உலக இயக்கத்தில் இருக்கும் எல்லாத் துன்பங்களையும் தாண்டி மனதை அமைதியாக தனியாக வைத்துக் கொண்டிருக்க முடியுமானால் அது எவ்வளவு பெரிய இன்பம். அதைத்தான் ஔவை ஏகாந்தம் இனிது என்கிறார். முருகன் அருள் முழுதும் பெற்ற கிழவி.

திருவாசகத்தில் கூட ஈசனைப் பற்றிச் சொல்லும் பொழுது "ஏகன் அனேகன்" என்றே சொல்கிறார் மாணிக்கவாசகர். ஏகன் - தனியாக இருப்பவன். அனேகன் - அனைத்திலும் இருப்பவன். என்ன விளக்கம் பாருங்கள்.

தன்னந் தனி நின்றது தான் அறிய
இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் கிளையும் கிருபை சூழ் சுடரே


அருணகிரிக்கு ஒரு பிரச்சனை. ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கும் வழிமுறையை அவருக்கு முருகன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இவரும் அனுபவித்திருக்கிறார். தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் சொல்லித் தர வேண்டுமென்பது அவரது விருப்பம். ஆனால் அதைச் சொல்லில் அடக்க முடியவில்லை. புலம்புகிறார். "தன்னந்தனி நின்றது தானறிய இன்னுமொருவர்க்கு இசைவிப்பதுவோ!" சொல்ல முடியுமா?

முருகனை "மின்னும் கதிர்வேல் விகிர்தா" என்று அழைக்கிறார். விகிர்தம் என்றால் வேறுபடுதல். விகிர்தா என்றால் வெவ்வேறு விதமாக இருப்பவன். ஒன்றும் பலவுமாய் இருப்பவனல்லவா அவன். அந்த கதிர்வேல் விகிர்தனின் பண்பு என்ன தெரியுமா? அதை நான்காவது அடியில் சொல்கிறார். "நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே!"

நினைக்கின்றவர்களின் துன்பத்தைத் துடைப்பவன் கந்தன். கின்னம் என்றால் துன்பம். கிண்ணம் என்றால் பாத்திரம். நமது வாழ்க்கை கின்னம் நிறைந்த கிண்ணமாகி விடக்கூடாது. முருகனை அன்போடு நினைத்தால் போதும். குழம்பு வைக்கின்றவர்களுக்குத் தெரியும். புளியை ஊற வைத்துக் கரைக்க வேண்டும். ஆனால் உப்பைச் சேர்த்தால் போதும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

இராகவன்,

ஏகாந்ததிற்கு நீங்கள் சொன்ன விளக்கத்தையே ஆதி சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சொல்கிறார்.

யோக ரதோ வா போக ரதோ வா
சங்க ரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததி ஏவ

யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எந்த இடத்தில் இருந்தாலும் யார் மனம் இறையுணர்வில் ஆழ்ந்து தனித்து இருக்கிறதோ அவர்களே மகிழ்கிறார்கள், மகிழ்கிறார்கள், உண்மையில் அவர்களே மகிழ்கிறார்கள்.

said...

இந்த ஏகன் அனேகன், அணுவுக்குள் அணு, அப்பாலுக்குள் அப்பால் என்பது போன்ற எதிர்மறைகளைச் சொல்லியே இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள் ஆன்றோர்கள். கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் என்பாள் கோதை. அருணகிரியாரும் தன்னந் தனி நின்றது என்று சொல்லிவிட்டு விகிர்தா என்கிறார்.

கின்னம் என்றால் துன்பமா. புதிய சொல் அறிந்தேன்.

கரந்தெங்கும் பரந்துளன் என்பார் நம்மாழ்வார். அது நினைவிற்கு வருகிறது நீங்கள் புளியையும் உப்பையும் பற்றிச் சொன்னவுடன். :-)

said...

ராகவா!
இந்த மனதைத் தனிமையில் வைக்கும் கலை தான் தெரியவில்லையே!!!அது தறி கெட்டலைகிறது. அந்த ஏகாந்த நிலைக்கு அவனே அருள வேண்டும்.
நன்று சொன்னீர்!
யோகன் பாரிஸ்

said...

ராகவா!
இந்த மனதைத் தனிமையில் வைக்கும் கலை தான் தெரியவில்லையே!!!அது தறி கெட்டலைகிறது. அந்த ஏகாந்த நிலைக்கு அவனே அருள வேண்டும்.
நன்று சொன்னீர்!
யோகன் பாரிஸ்

said...

இராகவன்,
ஆகா!அருமை! அற்புதம்! பிரமாதம்!
உங்கள் தமிழுக்கு உருகாதவர் யாரும் இருக்க முடியாது.:))
அற்புதமான விளக்கம்.
நல்ல எடுத்துக்காட்டுகள்.

இராகவன், ஒரு சின்ன ஐயம். நீங்கள் தமிழ்ப் பட்டதாரியா?

said...

அன்பு இராகவா,
"இனிது இனிது ஏகாந்தம் இனிது"
ஆம். உண்மைதான்.

//ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது.//

ஏக அந்தம் என்றால் முடிவில் ஒன்றே ஒன்றல்லவா? அதுதான் மனமடங்கிய மவுனம்.
அதுவும் ஏக இறைதானே!

said...

// Collapse comments


குமரன் (Kumaran) said...
யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எந்த இடத்தில் இருந்தாலும் யார் மனம் இறையுணர்வில் ஆழ்ந்து தனித்து இருக்கிறதோ அவர்களே மகிழ்கிறார்கள், மகிழ்கிறார்கள், உண்மையில் அவர்களே மகிழ்கிறார்கள். //

உண்மை குமரன். இதைத்தான் சுருக்கமாக வேலையைப் பாத்துக்கிட்டுப் போகனும்னு சொல்வாங்க. எல்லாரும் வேலையப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டேயிருந்தாலே போதும்.

சங்கரரின் பஜகோவிந்தம் படித்ததில்லை. அதில் கடைசி வரியில் சொற்களை அடுக்கு மொழியாகப் பயன்படுத்தியிருக்கிறாரா என்ன?

said...

// குமரன் (Kumaran) said...

கின்னம் என்றால் துன்பமா. புதிய சொல் அறிந்தேன். //

ஆகா...குமரனுக்கே சொல் ஒரு சொல்லா!

// கரந்தெங்கும் பரந்துளன் என்பார் நம்மாழ்வார். அது நினைவிற்கு வருகிறது நீங்கள் புளியையும் உப்பையும் பற்றிச் சொன்னவுடன். :-) //

விளக்கமாகச் சொல்லுங்களேன் குமரன்.

said...

// Anonymous said...
ராகவா!
இந்த மனதைத் தனிமையில் வைக்கும் கலை தான் தெரியவில்லையே!!!அது தறி கெட்டலைகிறது. அந்த ஏகாந்த நிலைக்கு அவனே அருள வேண்டும்.
நன்று சொன்னீர்!
யோகன் பாரிஸ் //

உண்மைதான் யோகன் ஐயா. அதையும் அவனே அருள வேண்டும்.

said...

// வெற்றி said...
இராகவன்,
ஆகா!அருமை! அற்புதம்! பிரமாதம்!
உங்கள் தமிழுக்கு உருகாதவர் யாரும் இருக்க முடியாது.:))
அற்புதமான விளக்கம்.
நல்ல எடுத்துக்காட்டுகள். //

நன்றி வெற்றி. நீங்கள் படித்து மகிழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

// இராகவன், ஒரு சின்ன ஐயம். நீங்கள் தமிழ்ப் பட்டதாரியா? //

நானா? தமிழ்ப் பட்டதாரியா? முருகன் அருளால் என்மேலும் கொஞ்சம் தமிழ் பட்ட தாரி. அவ்வளவுதாங்க. வாங்குன பட்டமும் பொறியியல் துறையில்.

said...

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,
"இனிது இனிது ஏகாந்தம் இனிது"
ஆம். உண்மைதான்.

//ஏகாந்தம் என்றால் ஏக அந்தம். ஒன்றுமேயில்லாதது.//

ஏக அந்தம் என்றால் முடிவில் ஒன்றே ஒன்றல்லவா? அதுதான் மனமடங்கிய மவுனம்.
அதுவும் ஏக இறைதானே! //

உண்மைதான் ஐயா. ஒன்றுமேயில்லாத ஒன்று இருக்கத்தானே செய்கிறது.

said...

அருமை ஜீரா

இப்படியெழுத முருகன் ஆணையிட்டான் போலும்

தக‌ப்பன்சாமியல்லவா
தனியருள் தந்திருக்கிறான் உமக்கு

அந்த இனியநிலை அனுபவித்தவருக்கே தாத்பர்யம் புரியும்

தனிமடல் அனுப்புகிறேன்
கிடைத்தவிபரம் தெரிவியுங்கள்

said...

தகவலுக்கு
நன்றி...