Tuesday, July 25, 2006

26. நிற்பதும் நிலைப்பதும்

இந்த உலகத்தில் குற்றங்கள் எதனால் நடக்கின்றன? குற்றம் செய்கின்றவர்கள் எதனால் அதைச் செய்கின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். அது நிலையாமையை நினைக்காமை. நாம் நிலைப்போம். நமது வாழ்வு நிலைக்கும். நமது அதிகாரம் நிலைக்கம் என்று நினைப்பதுதான் குற்றங்களின் அடிப்படைக் காரணம். நிற்பது எது? நிலைப்பது எது? நிற்பவைகள் எல்லாம் நிலைப்பவைகள் அல்ல. வானுயர உயர்ந்த மாடமாளிகைகள் நாள்பட நிற்கும். நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஆனால் எப்பொழுதும் நின்று நிலைக்குமா? ஆக எப்பொழுதும் ஒன்று நிற்குமானால் அது நிலைப்பது.

பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.

நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.

மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே


நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"

அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.

மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 11, 2006

25. சண்டை போட்டு எதிர்ப்பவனைக் காப்பது

இந்த மண்ணில் பிறந்து விட்டாலே, உடலெடுத்து விட்டாலே, உடலிலுள்ள ஒவ்வொரு உணர்விற்கும் உணவிடுவது அவசியம். பசிக்கு உணவு. வருத்தத்தில் அழுகை. களைப்பில் ஓய்வு. மகிழ்ச்சியில் சிரிப்பு. சிலர் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பார்கள். அது மிகவும் தவறானது. எந்த உணர்வையும் அடக்குவது எதிர்மறையான விளைவையே தரும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அலுப்புத் தட்டிவிடும். பசிக்கு மீறி உண்டால், உடல் உபாதை உண்டாகி உண்டதெல்லாம் மறுபடியும் ஆகாதென்று மருத்துவரால் தடுக்கப்பட்டு விடும்.

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே


அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!

கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.

சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.

ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, July 04, 2006

24. அடியின்றி முடியவோ!

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.

முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"

முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.

வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.

குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்