Tuesday, July 11, 2006

25. சண்டை போட்டு எதிர்ப்பவனைக் காப்பது

இந்த மண்ணில் பிறந்து விட்டாலே, உடலெடுத்து விட்டாலே, உடலிலுள்ள ஒவ்வொரு உணர்விற்கும் உணவிடுவது அவசியம். பசிக்கு உணவு. வருத்தத்தில் அழுகை. களைப்பில் ஓய்வு. மகிழ்ச்சியில் சிரிப்பு. சிலர் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பார்கள். அது மிகவும் தவறானது. எந்த உணர்வையும் அடக்குவது எதிர்மறையான விளைவையே தரும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அலுப்புத் தட்டிவிடும். பசிக்கு மீறி உண்டால், உடல் உபாதை உண்டாகி உண்டதெல்லாம் மறுபடியும் ஆகாதென்று மருத்துவரால் தடுக்கப்பட்டு விடும்.

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே


அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!

கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.

சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.

ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

5 comments:

said...

//அருணகிரியால் தமிழ் பிழைத்தது. //

உயர்வு நவிற்சியோ? :-) அருணகிரியாரின் மேல் உள்ள அளவிடமுடியாத அன்பு பேசுகிறது. :-)

//சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். //

புதிய சேதி. இதுவரை கேள்விப்பட்டதில்லை. இன்றே அறிந்தேன்.

புரந்தரன் = புரந்தான்? சரியாக வரவில்லையே? புரந்தர பூபதி என்றால் என்ன?

said...

ராகவன்,

சில பல தடுமாற்றங்கள், நெறி பிறழ்ந்த வாழ்வு முறைகள் என்று திரிந்து அலைந்த பின் வரும் மெய்ஞானம்
பிற்பாடு அருமையான தத்துவப் படைப்புகளைப் படைக்க வைத்திடும் ஆற்றல் தரும்.

அருணகிரியாரின் படைப்புகள் சிறப்பானவை.

வலைக்குப் புதியவன். எமது வலைத்தளத்திற்கு வருகைதரவும் http://harimakesh.blogspot.com

said...

// குமரன் (Kumaran) said...
//அருணகிரியால் தமிழ் பிழைத்தது. //

உயர்வு நவிற்சியோ? :-) அருணகிரியாரின் மேல் உள்ள அளவிடமுடியாத அன்பு பேசுகிறது. :-) //

உறுதியாக இல்லை குமரன். வடமொழி ஆதிக்கம் திருக்கோயில்களில் மலிந்திருந்த பொழுது, சமயக் குரவர்களின் எழுத்துகளின் பயன்மையும் தேய்ந்திருந்த பொழுது ஞானசூரியனாக வந்து தமிழை மீண்டும் வழிபாட்டுக்குரிய மொழியாக்கிய பெருமை அருணகிரியைச் சாரும். ஐயமில்லை. இதுதான் வரலாறும் உரைப்பது. அதனால் எழும் அன்பில் அளவேது?

// //சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். //

புதிய சேதி. இதுவரை கேள்விப்பட்டதில்லை. இன்றே அறிந்தேன். //

கந்தபுராணம் சொல்வது அதுதான். கவிநயம் மிகுந்தது கந்த புராணம். படிக்கத் திகட்டாத தத்துவநயம் மிகுந்தது கந்த புராணம். அதில் இல்லாத கருத்தில்லை. வரலாறில்லை.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு....அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவில் மகன் முருகன் உட்கார்ந்திருக்கிறார். அப்பா அம்மா மகன் என்று பார்ப்பது நாம்தானே. ஆனாலும் எல்லாம் ஒன்றுதான். இரவு பகல் என்று இருந்தாலும் நாள் என்று அனைத்தும் ஆவது போல. அப்படி அம்மையப்பனோடு முருகன் இருப்பது இரவும் பகலும் இருக்க இரண்டையும் இணைக்கும் மாலை இருப்பது போல இருக்கிறதாம்.

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுரும் பான்மை
ஞாலமேவுரும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

இன்னும் நிறைய இருக்கிறது.

// புரந்தரன் = புரந்தான்? சரியாக வரவில்லையே? புரந்தர பூபதி என்றால் என்ன? //

ஏன் சரியாக வரவில்லை. பூபதிதானே புரக்க முடியும்? இல்லையென்றால் இரக்கத்தானே முடியும். இத்தனையும் புரப்பவன் பூபதியாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

said...

// Hariharan said...
ராகவன்,

சில பல தடுமாற்றங்கள், நெறி பிறழ்ந்த வாழ்வு முறைகள் என்று திரிந்து அலைந்த பின் வரும் மெய்ஞானம்
பிற்பாடு அருமையான தத்துவப் படைப்புகளைப் படைக்க வைத்திடும் ஆற்றல் தரும். //

உண்மைதான். எல்லாம் இறைவன் செயல்.

// அருணகிரியாரின் படைப்புகள் சிறப்பானவை. //

ஐயமேயில்லை. தமிழறிந்தவர்கள் ஒருமுறையேனும் படித்துப் பார்க்க வேண்டும்.

// வலைக்குப் புதியவன். எமது வலைத்தளத்திற்கு வருகைதரவும் http://harimakesh.blogspot.com //

வருகிறேன். வருகிறேன். இதோ வருகிறேன்.

said...

கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.
அருமையான உதாரணம் இராகவன். முருகன் அழித்தும் அருள்செய்வான் ஆதரித்தும் அருள் செய்வான். அவன் தண்டனையும் ஒரு அருள்தான்