Tuesday, July 25, 2006

26. நிற்பதும் நிலைப்பதும்

இந்த உலகத்தில் குற்றங்கள் எதனால் நடக்கின்றன? குற்றம் செய்கின்றவர்கள் எதனால் அதைச் செய்கின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். அது நிலையாமையை நினைக்காமை. நாம் நிலைப்போம். நமது வாழ்வு நிலைக்கும். நமது அதிகாரம் நிலைக்கம் என்று நினைப்பதுதான் குற்றங்களின் அடிப்படைக் காரணம். நிற்பது எது? நிலைப்பது எது? நிற்பவைகள் எல்லாம் நிலைப்பவைகள் அல்ல. வானுயர உயர்ந்த மாடமாளிகைகள் நாள்பட நிற்கும். நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஆனால் எப்பொழுதும் நின்று நிலைக்குமா? ஆக எப்பொழுதும் ஒன்று நிற்குமானால் அது நிலைப்பது.

பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.

நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.

மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே


நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"

அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.

மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

மிகச் சிறந்த விளக்கம் இராகவன். ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கமாக அழகாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் என்று சொல்லிப் பார்க்கவே மிக மிக சிறப்பாக இருக்கிறது. மயிலேறிய சேவகனே என்பதற்கு மரகதமும் மாணிக்கமும் சேர்ந்து இருப்பது போன்ற தோற்றம் என்று சொன்னதும் மிக அழகு. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனைப் பார்ப்பதும் மரகதத்தின் நடுவின் மாணிக்கம் இருப்பது போல் தோன்றும் அல்லவா என்று தோன்றியது.

said...

வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம்
நன்றாக அனுபவித்து எழுதிய வரிகள்.முருகன் பெருமையை எத்தனை தரம் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் நன்றாகத்தான் இருக்கும். இருக்கிறது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இன்னொரு இடத்தில் 'மயிலேறிய மாணிக்கமே' எனச் சொல்லுவதை அழகுற வார்த்தைகளில் வடித்து, இன்பப் பொருள் தந்திருக்கிறீர்கள், ஜி.ரா. !

'சிந்து வேலும்' என 'தண்டையணி வெண்டையம்' பாடலில் கூட வேலை செம்மையான அறிவைச் சிந்துகின்ற ஞானவேல் என்னும் பொருளிலேயே சொல்லியிருக்கிறார்.

said...

nice effort without much controvesies! keep it up!

said...

மிக மிக அருமை ராகவன்!!
நம்மக் குழுவிலேயும் இருப்பது நீங்கள்தானா!!

said...

// குமரன் (Kumaran) said...
மிகச் சிறந்த விளக்கம் இராகவன். ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கமாக அழகாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள்.//

மிக்க நன்றி குமரன்.

// கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் என்று சொல்லிப் பார்க்கவே மிக மிக சிறப்பாக இருக்கிறது. //

உண்மைதான். அதனால்தான் கண்ணதாசன் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.

// மயிலேறிய சேவகனே என்பதற்கு மரகதமும் மாணிக்கமும் சேர்ந்து இருப்பது போன்ற தோற்றம் என்று சொன்னதும் மிக அழகு. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனைப் பார்ப்பதும் மரகதத்தின் நடுவின் மாணிக்கம் இருப்பது போல் தோன்றும் அல்லவா என்று தோன்றியது. //

அப்படியும் சொல்லலாம். நீலத்தின் நடுப் பொதிந்த பவழம் என்றும் சொல்லலாமே! ஆனாலும் நீங்கள் சொல்ல வரும் ஒப்புமை எனக்குப் புரிகிறது.

said...

// நன்றாக அனுபவித்து எழுதிய வரிகள்.முருகன் பெருமையை எத்தனை தரம் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் நன்றாகத்தான் இருக்கும். இருக்கிறது. //

ஆமாம் தி.ரா.ச. தமிழ்க் கந்தன் மீதான தமிழ்ப் பாக்களை, அருள் நிறைந்த பூக்களை அனுபவித்து அந்த மயக்கத்தில் எழுதியவைதானே. அதுவும் அவன் குடுத்த சிற்றறிவினைக் கொண்டு.

said...

// SK said...
இன்னொரு இடத்தில் 'மயிலேறிய மாணிக்கமே' எனச் சொல்லுவதை அழகுற வார்த்தைகளில் வடித்து, இன்பப் பொருள் தந்திருக்கிறீர்கள், ஜி.ரா. ! //

நன்றி SK. சொல்லும் கொடுத்து அந்தச் சொல்லுக்குப் பொருளும் கொடுத்து அந்தப் பொருளுக்கு அருளும் கொடுத்த கந்தன் கருணையைச் சொல்வதில் அலுப்பேது? சலிப்பேது?

// 'சிந்து வேலும்' என 'தண்டையணி வெண்டையம்' பாடலில் கூட வேலை செம்மையான அறிவைச் சிந்துகின்ற ஞானவேல் என்னும் பொருளிலேயே சொல்லியிருக்கிறார். //

வேல் ஞானத்தின் வடிவம். கூரு இருக்கா என்று கேட்பதும் அப்படி வந்ததுதானே. எனக்குத் தெரிந்த வகையில் எல்லா இடங்களிலும் வேல் ஞானம் என்ற பொருளிலேயே வருகிறது. சரி பார்த்துச் சொல்லுங்களேன் SK.

said...

// chella said...
nice effort without much controvesies! keep it up! //

நன்றி செல்லா. உங்கள் பாராட்டு ஊக்கம் தருகிறது. முடிந்தவரையில் எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறென்ன நினைப்பது!

said...

// rnateshan. said...
மிக மிக அருமை ராகவன்!!
நம்மக் குழுவிலேயும் இருப்பது நீங்கள்தானா!! //

நன்றி நடேசன். இந்தக் குழுவெல்லாம் நம்மளாச் சேர்ரதில்லை. மத்தவங்களாப் பாத்துக் குடுக்குறதுதான. :-))))

said...

மிக்க நன்றி ராகவன்.
முருகனை நேரில் பார்ப்பதுபோல் விளக்கி இருக்கிறீர்கள்.

அவனே அழகன்.
அவனைப் பாடியவரோ அவனை உணர்ந்தவர்.
விளக்கம் சொன்ன நீங்களும்,சுட்டிக் கொடுத்த குமரனும்
காலை வேளையில் அலை பாயும் மனதைச் சமனப்படுத்தி மகிழ வைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

said...

ஓஓ ராகவன்,
நல்லதை நினைச்சாலே வம்பா முடியுது!!
நான் கேட்டது முத்தமிழ்,நம்பிக்கை குழுமங்களில் ராகவன் என்று ஒருவர் பரிசு பெற்றிருக்கிறார்!!அவர்தான் நீங்களா என்றுக் கேட்டேன்..
அம்மா சாமி நான் வரேன்,இருக்கும் அரசியலே போதும்!!

said...

// rnateshan. said...
ஓஓ ராகவன்,
நல்லதை நினைச்சாலே வம்பா முடியுது!!
நான் கேட்டது முத்தமிழ்,நம்பிக்கை குழுமங்களில் ராகவன் என்று ஒருவர் பரிசு பெற்றிருக்கிறார்!!அவர்தான் நீங்களா என்றுக் கேட்டேன்..
அம்மா சாமி நான் வரேன்,இருக்கும் அரசியலே போதும்!! //

ஐயோ நடேசன். நான் சும்மா ஜோக்கு அடிச்சேன். கோவிச்சுக்கிறாதீங்க.

முத்தமிழ் நம்பிக்கை குழுவுல ராகவனுக்குப் பரிசு கிடைச்சிருக்கா....அடடே! அது தெரியாமப் போச்சே..கொஞ்சம் விவரங்கள எடுத்து விடுங்களேன்.

said...

// manu said...
மிக்க நன்றி ராகவன்.
முருகனை நேரில் பார்ப்பதுபோல் விளக்கி இருக்கிறீர்கள்.

அவனே அழகன்.
அவனைப் பாடியவரோ அவனை உணர்ந்தவர்.
விளக்கம் சொன்ன நீங்களும்,சுட்டிக் கொடுத்த குமரனும்
காலை வேளையில் அலை பாயும் மனதைச் சமனப்படுத்தி மகிழ வைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி மனு. குமரன் சுட்டியைக் கொடுத்தாரா! ம்ம்ம்..செய்திருப்பார். அடிக்கடி வாருங்கள். ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு செய்யுள்.

said...

ரொம்ப அழகான விளக்கம் தந்திருகீங்க
இராகவன் அவர்களே!!!
நன்றி