Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது சற்று விவகாரமானது என்று இன்று பலர் சொல்வார்கள். காரணம் இது இறைவனை வணங்குதலை மறுத்து எழுந்த தத்துவம். கிட்டத்தட்ட நாத்திகம் என்றே சொல்லலாம்.

வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு வெளிப்படையாகவே பிரபலமாக இருந்திருக்கிறது. இது சரியா தவறா என்று தர்க்கிப்பதை விட இதனைத் தெரிந்து கொள்ளும் முகமாக ஆதிநாதன் வளமடல் என்ற நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.

ஆதிநாதன் வளமடல் என்று அழைக்கப்படும் இந்த நூல் காராணை விழுப்பரையன் மடல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிநாதன் என்ற பெயரைப் பாருங்கள். நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக இருக்கிறது. இதனால் கடவுள் வாழ்த்து நீங்கலாக அனைத்துப் பாடல்வரிகளையும் நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக வைத்து எழுதியிருக்கிறார் செயங்கொண்டார். எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள மூன்று அடிகளையும் பாருங்கள்.
பாதி உடம்பொருத்திக்கு ஈந்தும் படர்சடையின்
மீதும் ஒருத்திக்கு இடம் கொடுத்து அரனார்
காதல் உழந்திலரோ?
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது.



கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் - இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு


சரி. நாம் கடவுள் வாழ்த்துக்கு வருவோம். கடவுளை மறுக்க வேண்டும். ஆனால் காதலைப் பெரிதாக்கிச் சொல்ல வேண்டும். அதைத்தான் மேலே குறிப்பிட்ட செய்யுளில் நான் காண்கிறோம்.

கொன்றை முடித்தார்க்கும் - கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
கோபாலன் ஆனார்க்கும் - கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
அன்று படைத்தார்க்கும் - மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
ஆளல்லேம் - அடியவர்கள் அல்லர் நாங்கள்
இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு - காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது. தென்றல் தூதான கதைகளும் உண்டு. ஓடும் நீர் தூதானதும் உண்டே. அகநானூறு படித்தால் இயற்கை பலவிதங்களில் தூதானது விளங்கும். அந்தத் தூதும் காதலுக்குத் தோதாக வேண்டும். அதுதான் உலகாயதத் தத்துவம்.

அன்புடன்,
கோ.இராகவன்