Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது சற்று விவகாரமானது என்று இன்று பலர் சொல்வார்கள். காரணம் இது இறைவனை வணங்குதலை மறுத்து எழுந்த தத்துவம். கிட்டத்தட்ட நாத்திகம் என்றே சொல்லலாம்.

வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு வெளிப்படையாகவே பிரபலமாக இருந்திருக்கிறது. இது சரியா தவறா என்று தர்க்கிப்பதை விட இதனைத் தெரிந்து கொள்ளும் முகமாக ஆதிநாதன் வளமடல் என்ற நூலைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.

ஆதிநாதன் வளமடல் என்று அழைக்கப்படும் இந்த நூல் காராணை விழுப்பரையன் மடல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிநாதன் என்ற பெயரைப் பாருங்கள். நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக இருக்கிறது. இதனால் கடவுள் வாழ்த்து நீங்கலாக அனைத்துப் பாடல்வரிகளையும் நெடிலில் தொடங்கி இரண்டாம் எழுத்து தகரமாக வைத்து எழுதியிருக்கிறார் செயங்கொண்டார். எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள மூன்று அடிகளையும் பாருங்கள்.
பாதி உடம்பொருத்திக்கு ஈந்தும் படர்சடையின்
மீதும் ஒருத்திக்கு இடம் கொடுத்து அரனார்
காதல் உழந்திலரோ?
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது.கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் - இன்று
மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு


சரி. நாம் கடவுள் வாழ்த்துக்கு வருவோம். கடவுளை மறுக்க வேண்டும். ஆனால் காதலைப் பெரிதாக்கிச் சொல்ல வேண்டும். அதைத்தான் மேலே குறிப்பிட்ட செய்யுளில் நான் காண்கிறோம்.

கொன்றை முடித்தார்க்கும் - கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
கோபாலன் ஆனார்க்கும் - கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
அன்று படைத்தார்க்கும் - மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
ஆளல்லேம் - அடியவர்கள் அல்லர் நாங்கள்
இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு - காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது. தென்றல் தூதான கதைகளும் உண்டு. ஓடும் நீர் தூதானதும் உண்டே. அகநானூறு படித்தால் இயற்கை பலவிதங்களில் தூதானது விளங்கும். அந்தத் தூதும் காதலுக்குத் தோதாக வேண்டும். அதுதான் உலகாயதத் தத்துவம்.

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

அடடா. திடீரென்று எல்லோரும் தத்துவம் பேசத்தொடங்கிவிட்டோமே. இது நல்லதற்கா தெரியவில்லையே! :-)

உலகாயதத் தத்துவத்தைப் பற்றி முழுவதும் அறியேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததோடு சரி. பூதவாதிகள் என்று மணிமேகலையில் வரும் பகுதியைப் படித்திருக்கிறேன். லோகாயதம், சார்வாகம் என்று வடமொழி நூல்களிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சொன்னவற்றைப் படித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொன்னது சரியென்றோ தவறென்றோ உரைக்க முடியவில்லை. :-)

முத்தேவர்களையும் குறித்ததைப் பார்த்தால் சமயப்பிணக்குகள் கொஞ்சம் குறைந்த காலம் போல் தெரிகிறது; ஆனால் ஆசிரியர் மட்டும் அப்படிப்பட்டவராகவும் இருந்திருக்கலாம். :-)

மடப்பாவையார் என்று படிக்காமல் மடப்பாவை யார் என்று பிரித்துப் படித்ததற்கு ஏதேனும் காரணமுண்டோ?

said...

//மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார். தமயந்திக்கு அன்னம் தூதானது. சகுந்தலைக்கு மேகம் தூதானது//

காதல் வந்துட்டா சாதியாவது ஒண்ணாவதுன்னு அப்படி சொல்லிட்டார் போல இருக்கு.

said...

சுவையாக உள்ளது.
//வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். //

என்ன? உன்னத தத்துவம்.
கடைப்பிடிப்போம்.

said...

இராகவன்,
அருமையான பதிவு. மிக்க நன்றி.

said...

இதைச் செயங்கொண்டார் உலகாயத் தத்துவம் என்று வெளிப்படையாக நூலில் குறிக்காவிட்டால், ஈசனார்க்கு எளிதாக ஆக்கிடுவரே நம்ம மக்கள்!

//மடப் பாவையார் நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு//

பரவை நாச்சியார் மனம் கனிய தூது நடந்த ஈசனே தெய்வம் நமக்கு! :-))

said...

//இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்//

விழுப்புரம் பெயர்க்காரணம் அருமை ஜிரா!
ஒழுக்கம் விழுப்பம் தரலான்...குறள்!

விழுப்பு+அரையர்=பெருமைக்குத் தலைவன்=பெருந்தலைவன்.

மடப்பாவையரைப் போதும் என்று புறம் தள்ளும் அருணகிரியார் தான்,
மடப்பாவையர் நம் வசமாக ஏதோ ஜிரா மூலமாகச் சொல்கிறார் என்று காதலுடன் வந்து பார்த்தா...

ஜிரா அந்த டெக்னிக்கைச் சொல்லிக் குடுக்காம, தனக்கு மட்டும் மறைச்சி வச்சிக்கிட்டாரு! சரி நெதர்லாந்தில் எப்படிப் பயன்படுத்தறீங்கன்னு இக்கரையில் இருந்து பார்க்கிறோம்! :-)))

said...

// குமரன் (Kumaran) said...
அடடா. திடீரென்று எல்லோரும் தத்துவம் பேசத்தொடங்கிவிட்டோமே. இது நல்லதற்கா தெரியவில்லையே! :-) //

ஹா ஹா ஹா என்ன செய்றது குமரன். விதி வலியதாச்சே! :)

// உலகாயதத் தத்துவத்தைப் பற்றி முழுவதும் அறியேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததோடு சரி. பூதவாதிகள் என்று மணிமேகலையில் வரும் பகுதியைப் படித்திருக்கிறேன். லோகாயதம், சார்வாகம் என்று வடமொழி நூல்களிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சொன்னவற்றைப் படித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொன்னது சரியென்றோ தவறென்றோ உரைக்க முடியவில்லை. :-) //

நான் என்னங்க சொன்னேன். இது செயங்கொண்டார் சொன்னதுங்க. :)

// முத்தேவர்களையும் குறித்ததைப் பார்த்தால் சமயப்பிணக்குகள் கொஞ்சம் குறைந்த காலம் போல் தெரிகிறது; ஆனால் ஆசிரியர் மட்டும் அப்படிப்பட்டவராகவும் இருந்திருக்கலாம். :-) //

ஆசிரியர் மட்டும் அப்படியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

// மடப்பாவையார் என்று படிக்காமல் மடப்பாவை யார் என்று பிரித்துப் படித்ததற்கு ஏதேனும் காரணமுண்டோ? //

காரணமெல்லாம் ஒன்னுமில்லைங்க. அது புத்தகத்துல இருந்து எடுத்து எழுதுறப்போ என்னையறியாம தப்பு விட்டிருப்பேன்.

said...

// சின்ன அம்மிணி said...

காதல் வந்துட்டா சாதியாவது ஒண்ணாவதுன்னு அப்படி சொல்லிட்டார் போல இருக்கு. //

என்னங்க பண்றது. செயங்கொண்டருக்கும் காதல் தோல்வியோ என்னவோ! :))))))))

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சுவையாக உள்ளது.
//வாழும் வரையில் இன்புற்று வாழ வேண்டும். யாருக்கும் தொந்திரவாகவும் இராமல் வாழ்க்கையை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு இன்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதே உலகாயதத் தத்துவம். //

என்ன? உன்னத தத்துவம்.
கடைப்பிடிப்போம். //

ஆமாம் ஐயா. கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிப்போம்.

// வெற்றி said...
இராகவன்,
அருமையான பதிவு. மிக்க நன்றி. //

நன்றி வெற்றி. இந்தப் பதிவு அருமைன்னு சொல்றதப் பாத்தா.....நீங்க இருக்குற ஊரையும் பாத்தா...எதுவும் சரியாத் தெரியலையே ;)

said...

மிஸ்டர் ராகவன்,
என்னா மூணு மாசமா தூக்கம். சீக்கிரமா இன்னொரு பதிவை போடுங்க சார். "காதல் குளிர்"லாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும்.