Monday, January 22, 2007

51. அரவாடினாலும் அறவாடினாலும்

அநுபூதி என்றால் என்னவென்று சொல்லியாகி விட்டது. அநுபூதியின் அருமை பெருமைகளைச் சொல்லியாகி விட்டது. அநுபூதியின் தன்மைகளையும் திண்மைகளையும் முடிந்த வரை சொல்லியாகி விட்டது. அநுபூதியை அடையும் வழிமுறைகளையும் சொல்லியாகி விட்டது. கந்தரநுபூதி பற்றிய நூலை முடிக்க வேண்டும். முடிக்கும் பொழுது முருகனைப் பாடித்தான் முடிக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னால் ஒரு வேலை இருக்கிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பது பாடல்களைப் பாடி விட்டார் அருணகிரி. இந்தக் கந்தரநுபூதியைப் படித்தால் என்ன பயன் கிடைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டுமல்லவா. ஒரு பொருளை விற்கும் பொழுது என்ன பயன்கள் என்று சொல்லித்தானே விற்பார்கள். அதுதானே விற்பனை முறை.

ஆனால் அருணகிரி முருகனருளை விற்க விரும்பவில்லை. மக்கள் கற்க விரும்புகிறார். ஆகையால் நமக்காக வேண்டிக் கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதுதான் இந்தப் பாடல். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. தலைவர்கள் விடுதலை கேட்டார்கள். அவர்கள் கேட்டது அவர்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்தானே! அந்த பொதுவுள்ளம் வாய்ந்தவர் அருணகிரி. நமக்காகத் தன் மீதும் குற்றத்தை ஏற்றிக் கொண்டு பாடுகிறார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே


மதி கெட்டால் அறவாடும். அறவு என்றால் ஆற்றல். ஆற்றல் வாடுதலே அறவாடல். அரவு என்றால் பாம்பு. அரவு ஆடும். நம்முன்னே அரவாடினாலும் அறவாடினாலும் முடிவு துன்பந்தான். எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது. ஆற்றல் போனால் தூற்றல் வரும். ஆம். ஆற்றல் இழந்தவனை உலகம் தூற்றும்.

ஆற்றலோடு இருந்தவரையில் இராவணனை எல்லா உலகமும் தொழுதது. பதவியில் இருப்பவர் காலில் விழும் வழக்கம் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவன் ஆற்றல் இழந்து போர்க்களத்தில் வெறுங்கையோடு நின்ற பொழுது "இன்று போய் நாளை வா" என்று ராமன் சொன்னது கருணையென்றாலும் ஒரு வகையில் தூற்றலே. அதனால்தான் அப்படிச் சொன்னதற்கு ராமனுக்குப் பெருமை சூழ்ந்தாலும் இராவணனுக்கு அவமானம் சூழ்ந்தது. தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

அதனால்தான் அருணகிரி வேண்டுகிறார். மதிகெட்டு ஆற்றல் இழந்து மயங்கி அறக்கதி கெட்டு ஒழிவதோ! முருகா நீதான் காப்பாற்ற வேண்டும்.

அறம் என்பது மிகப் பெரிய சொல். "அறம் செய விரும்பு" என்கிறாள் ஔவை. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்கிறார் வள்ளுவர். அடுத்தர் சொல்லிக் காட்டும் நிலைக்கு ஆளாகக் கூடாது. நல்லது செய்கிறோம். அது அடுத்தவர் குற்றம் சாட்டும் நிலையில் இருக்கக் கூடாது. அறம் கெட்டால் எல்லாம் கெட்டு விடும். அதனால் தவறு செய்யக் கூடாது.

இதை இளங்கோவடிகள் கண்ணகி வாயால் சொல்கின்றார். தவறு செய்து விட்டோமெனத் தெரிந்ததும் பாண்டியன் உயிர் விட்டான். உடனே மாண்டாள் கோப்பெருந்தேவி. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாம்!" மற்றொரு இடத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்" என்கிறார் இளங்கோவடிகள். அறத்திலிருந்து தவறினால் அறமே கொன்று விடும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் மனதாற்கூடச் செய்யாதவன். ஒரு சின்ன தவறு செய்தான். விளைவு? மதுரையே அழிந்தது. அதை இன்றைக்கும் நாம் சொல்லுகிறோம். ஒரு சின்ன தவறு எத்தனை நூற்றாண்டுகளாக நிற்கிறது பாருங்கள். அவன் எத்தனையெத்தனையோ நல்லவைகளைச் செய்திருக்கிறான். அவற்றை யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவன் குற்றம் நின்கின்றது.

இந்த நிலைக்கெல்லாம் ஆளாக்காமல் காக்க வேண்டியது முருகனே! கங்கையின் மைந்தனே! ஞானத்தினால் உண்டாகும் சுகத்தின் அதிபனே! திதியின் வழியினரான அரக்கர்களின் செருக்கை அழிந்த சேவகனே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

7 comments:

said...

//எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது//
நல்ல கருத்துங்க ஜி.ரா

said...

அறவு+ வாடி= அறவாடி ஆகுமா ஜிரா?

அற வாடி= மிகவும் வாட்டமுற்று
என்றே வாரியாரும் சொல்லுகிறார்!

மதி இழந்து, மிகவும் வாட்டமுற்று, அதனால் மயக்கமுற்று என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?

முடிக்கையில் அருமையாகச் சொல்லி முடிக்கிறார் அருணையார்!

நீங்களும் தான்!
:)

said...

// ILA(a)இளா said...
//எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது//
நல்ல கருத்துங்க ஜி.ரா //

ஆமாம் இளா. உண்மைதான். துன்பம் வருகையில்தான் நமது திறமைகளை நாம் மெருகேற்றிக் கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

// SK said...
அறவு+ வாடி= அறவாடி ஆகுமா ஜிரா?

அற வாடி= மிகவும் வாட்டமுற்று
என்றே வாரியாரும் சொல்லுகிறார்!

மதி இழந்து, மிகவும் வாட்டமுற்று, அதனால் மயக்கமுற்று என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? //

கொள்ளலாம். அது சரியே என்று தோன்றுகிறது.

// முடிக்கையில் அருமையாகச் சொல்லி முடிக்கிறார் அருணையார்!

நீங்களும் தான்!
:) //

நமக்கென்று தனியாக ஏது? அருணகிரி சொன்னதை நான் திருப்பிச் சொல்கிறேன். கற்றோர் சொல் கேட்டுச் சொல்லும் கிளியறியுமோஒ இலக்கியச் செழுமை!

said...

இராகவன். நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். சில அடிகளுக்கு நீண்ட விளக்கமும் சில அடிகளுக்கு குறைந்த விளக்கமுமாகவே கொடுக்கிறீர்களே ஏன்? அடியேனாக இருந்திருந்திருந்தால் நீங்கள் கடைசியில் ஒரே வரியில் முடித்த விளக்கத்திற்கு பல வாக்கியங்களில் சொல்லியிருப்பேன்.:-)

அற வாடி என்பதற்கு எஸ்.கே சொன்ன அதே பொருளை எண்ணிக் கொண்டு வந்தேன். எஸ்.கே சொல்லிவிட்டார். :-)

அறவு என்றால் ஆற்றலா? இன்னொரு புதிய சொல் கற்றுக் கொண்டேன்.

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

இராகவன்,
அருமையான விளக்கம். பல தமிழ்ச் சொற்களும் அறிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் திருப்பணி.

நீங்கள் கடம்ப மரம் பற்றி இலக்கியங்கள், மற்றும் திருமுறைகளில் இருப்பவையை எடுத்து ஒரு பதிவு போட வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

said...

உங்களுடைய திருப்பாவை, திருப்புகழ், கந்தர்அலங்காரம் முதலிய இலக்கியங்களுக்கு அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். வாழ்த்துகள். திருமந்திரம் குறித்து எழுத நீங்கள் முயற்சி செய்யவும். ஒரு விளக்கம் தேவை: பல மேற்குறிப்பிட்ட பாடல்களில் காணப்படும் ஒரு சொல்.

"அங்கபறை"; இந்த சொல்லின் பொருள் என்ன? இது வேத இலக்கியங்களில் காணப்படும் "ஸ்ருதி" அல்லது "நாதம்" என்ற அடிப்படை தத்துவத்தையே குறிக்கிறது என நினைக்கிறேன்.

செந்தில்
skms1990@yahoo.com