Monday, January 29, 2007

52. கடைக்குட்டி

கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தான் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!

அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.

கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் துறவியாக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.

வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனாரோ முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு வந்த சமயக்குரவர்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னால் மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.

அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.

மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.

அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் திருப்புகழில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.

முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்

இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"

பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"

தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.

புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".

தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது. முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பக்தியுடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

//உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே//

ஜிரா,

இந்த பாடலை திருத்தனி கோவிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருந்ததை படிதேன். 'அருவாய்' என்ற சொல் ரொம்ப நாட்கள் மனதை குடைந்தது. ஏனென்றால் உருவமற்ற என்று சொல்வதை ஏற்க முன்பு மனம் ஒப்பவே இல்லை. அதுபற்றி அதிகம் சிந்தித்து பிறகு 'உருவமற்ற' கடவுளைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கி ... மதநல்லிணக்கத்துக்கும் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று ஏற்றுக் கொண்டேன்.

நல்ல பாடல் ... என்னை சிந்திக்க வைத்தப்பாடல் !
நன்றி !

said...

// ஜிரா,

இந்த பாடலை திருத்தனி கோவிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருந்ததை படிதேன். 'அருவாய்' என்ற சொல் ரொம்ப நாட்கள் மனதை குடைந்தது. ஏனென்றால் உருவமற்ற என்று சொல்வதை ஏற்க முன்பு மனம் ஒப்பவே இல்லை. அதுபற்றி அதிகம் சிந்தித்து பிறகு 'உருவமற்ற' கடவுளைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கி ... மதநல்லிணக்கத்துக்கும் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று ஏற்றுக் கொண்டேன்.

நல்ல பாடல் ... என்னை சிந்திக்க வைத்தப்பாடல் !
நன்றி ! //

வாருங்கள் கோவி. கந்தரநுபூதியில் ஒவ்வ்வொரு பாடலுமே சிந்திக்கத்தக்கது. சிந்தித்துச் சிந்தித்து அதன் படி நடக்கவும் தக்கது.

அருவம் - உருவமற்றவர் கடவுள் என்பது மட்டுமல்ல இங்கு சொல்லப்படும் கருத்து. உருவாய் அருவாய் - பாக்குறது பாக்காதது எல்லாம் நீதாம்ப்பாங்குறாரு அருணகிரி. வெறும் அருவம்னா பாக்காதது மட்டுமே கடவுள்னு ஆயிருதே. கடவுள் - அனைத்தையும் கடந்து உள்ளிருக்கும் கடவுள். அதுனாலதான் நோக்குமிடமெங்கும் நீங்கமற நின்ற இறைவன்னு சொல்றாங்க.

கடவுளர்னு சிலர் சொல்வாங்க. அது தப்பு. கடவுள் என்ற சொல்லுக்குப் பால் பாக்கக் கூடாது. ஒருமை பன்மை கிடையாது. கடவுளர்னு சொல்றது அல்லாக்கள் யேசுக்கள்னு சொல்ற மாதிரி.

said...

கோ.இராகவன்,
இப் பாடலுடன்தானே தன் ஒவ்வொரு பிரசங்கத்தையும் முடிப்பார் வாரியார் சுவாமிகள். அவரின் குரலில் இப் பாடலைப் கேட்கும் போது இனிமையாகவும், பக்திமயமாகவும் இருக்கும். நல்ல விளக்கம் இராகவன்.
உங்கள் பதிவுகளைப் படித்த பின் ஒருவேளை இப்படியுமிருக்குமோ என நான் சிலவேளைகளில் வியப்பதுண்டு.
ஒளவையார், அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகள் போன்றோர்க்கு முருகன் தமிழறிவைக் கொடுத்து அவர்களின் தமிழைச் சுவைத்தது போல் உங்களையும் தமிழ்மணத்தில் எழுத வைத்து எம்மையும் மகிழ வைத்து தானும் மகிழ்கிறானோ உங்கள் தமிழில்.

said...

// வெற்றி said...
கோ.இராகவன்,
இப் பாடலுடன்தானே தன் ஒவ்வொரு பிரசங்கத்தையும் முடிப்பார் வாரியார் சுவாமிகள். அவரின் குரலில் இப் பாடலைப் கேட்கும் போது இனிமையாகவும், பக்திமயமாகவும் இருக்கும். //

உண்மைதான் வெற்றி. கைத்தல நிறைகனி அப்பமோடவல்பொரி என்றுதான் தொடங்குவார். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று முடியும்.

// நல்ல விளக்கம் இராகவன்.
உங்கள் பதிவுகளைப் படித்த பின் ஒருவேளை இப்படியுமிருக்குமோ என நான் சிலவேளைகளில் வியப்பதுண்டு.
ஒளவையார், அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகள் போன்றோர்க்கு முருகன் தமிழறிவைக் கொடுத்து அவர்களின் தமிழைச் சுவைத்தது போல் உங்களையும் தமிழ்மணத்தில் எழுத வைத்து எம்மையும் மகிழ வைத்து தானும் மகிழ்கிறானோ உங்கள் தமிழில். //

நீங்கள் சொன்னவர்கள் எல்லாரும் பெரியவர்கள். அடியேள் சிறியேன். ஆனால் ஒன்று உண்மை. யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால் இந்தப் பணி எனக்குக் கிட்டியுள்ளது. அது உண்மை.

said...

கடைக்குட்டியும் அருமையாக இருந்தது, தீந்தமிழ் பருகிய ஆனந்தம் அவ்வளவு எளிதில் அகலாது,
நன்றி ஜிரா.

said...

// ஜீவா (Jeeva Venkataraman) said...
கடைக்குட்டியும் அருமையாக இருந்தது, தீந்தமிழ் பருகிய ஆனந்தம் அவ்வளவு எளிதில் அகலாது,
நன்றி ஜிரா. //

ஜிராவுக்கு நன்றி சொல்லும் ஜீவாவிற்கு நன்றி. :-)

இருப்பது தமிழ். அதைக் கொடுப்பது சுகம். மறுப்பது என்ன விதம்? அதனால்தான் அள்ளி விடுகிறேன். அருந்தச் சுவைத்தால் மெத்த மகிழ்ச்சி.

said...

மிக நல்ல தொகுப்புரை இராகவன். அருமையாக ஒவ்வொன்றாக எடுத்து இட்டிருக்கிறீர்கள்.

said...

சிலப்பதிகாரத்திற்குப் பின் அருணகிரிநாதர் தான் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார் என்றாற்போல எழுதியிருக்கிறீர்கள். அருணகிரிநாதர் பாடல்களில் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற சொற்கள் இருக்கின்றன என்பது மறுக்க இயலாதது. ஆனால் அதே நேரத்தில் சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பலரும் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற பாடல்களும் பாடியிருக்கிறார்கள். அந்த நீண்ட நெடிய பரம்பரையில் வந்தவர் அருணகிரிநாதர் என்று சொல்வது பொருத்தம்.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய் கருமாணிக்கமே! என் கள்வா!

- திருவாய்மொழியிலிருக்கும் பல சமய நல்லிணக்க கருத்துகளில் ஒரு எடுத்துக்காட்டு இது. (விளக்கம் தேவையில்லா பாடல் இது. )

தாழ்சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன் நாணும் தோன்றுமாம்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலையே எந்தைக்கு
இரண்டு உருவம் ஒன்றாய் இயைந்து.

- பேயாழ்வார்

எந்தப் பக்கமும் பாயும் அருவிகளால் சூழப்பட்ட திருமலையில் இருக்கும் என் தந்தைக்கு தாழ்கின்ற சடையும் (சிவபெருமான்) நீண்ட திருமுடியும் (பெருமாள்) அழகிய மழுவும் (சி) சக்கரமும் (பெ) சூழும் பாம்புகளும் (சி) பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களும் (பெ) என்று இரு பெருந்தெய்வங்களின் திருவுருவங்களும் அடையாளங்களும் இணைந்து காணப்படும்.

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டலாம் இராகவன்.

said...

//அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம்.//

இது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் அத்வைத சித்தாந்தம் சைவ வைணவ பேதத்தைக் கொஞ்சம் நீக்கிக் கொண்டிருந்தது என்றும் எண்ணுகிறேன்.

said...

இனியது கேட்க, இரு வார வேலைப்பளுவெல்லாம் முடிந்து ஒடோடி வந்தேன்!

வந்து பார்த்தால், "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

அநுபூதிக்கு முத்தாய்ப்பான பாடல்!
அழகுத் தமிழ் கொஞ்சும் பாடல்!
அழகனை, அழகாய்ப் பாடி முடித்த பாடல்!
வாரியார் முடிப்பாய் முடிக்கும் பாடல்!
கேட்கவே துடிப்பாய் துடிக்கும் பாடல்!

ஜிரா
அருணகிரியாரின் காலச் சூழல், மத நல்லிணக்கம், உருவ அருவக் கருத்துக்கள் எல்லாம் சரியே! அதை மட்டும் சொல்லி நிறைவு செய்யாது, இந்தப் பாடலில் கொஞ்சும் சொல்லும் பொருளும் சுவைபட விளக்கி, இன்னொரு பதிவு தாருங்கள்!

//உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்//

முரண் தொடையில் துவக்கம்!

//மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்க்//

அது எப்படிக் காரியமாகவும் , காரணமாகவும் ஒரே சமயத்தில் ஆகிறான் இறைவன்?
இதை அருணையார் சொல்லும் அழகே தனி! -
எத்தனையோ சந்தக் கவியிருக்க, ஏன் வாரியார் இந்தப் பாடலைச் சொல்லி முடிக்கிறார் என்று நிறைய நாள் யோசித்ததுண்டு!

பொருளும் அவனே,
பொருளின் பயனும் அவனே
என்பதையல்லவா ஒரே அடியில் சொல்லி விட்டார்!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Ragavaaa!

said...

Happy Birthday Ragavaaa!
Happy Birthday Ragavaaa!!

said...

இன்று வைகாசி விசாகம்!
Happy Birthday da Muruga!:)
-Wishes from Iniyathu Home!