Tuesday, May 29, 2007

02. இஇ - புகழேந்தி யாருடைய புகழை ஏந்தி

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர் பாண்டி நாட்டுப் புலவர். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அவளோடு அறிவுருத்தும் ஆசானாய்ச் சோழநாடு புகுந்தவர். நளவெண்பா என்னும் பெயரிலிருந்தே இந்நூல் முழுக்க முழுக்க வெண்பாக்களால் ஆனது என்று விளங்கும். மேலும் நளவெண்பா உவமை அழகும் மிகுந்த நூல். அந்த நூலை எழுதுகையில் சைவராகிய புகழேந்தி யாருடைய புகழினை ஏந்தித் தொடங்குகிறார்?

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட்கு இறை

மகாபாரதத்தின் கிளைக்கதையாக வரும் நளதமயந்திக் கதையை நூலில் வடிக்கும் பொழுது திருமாலைத் தொழுது துவக்குகிறார் புகழேந்தி. திருமாலைத் தொழுகின்றவர்கள் அவரே ஆதியென்று தொழுவார்கள். ஆகையினாலே நூலின் ஆதியிலேயே ஆதித் தனிக்கோலம் ஆனான் என்று திருமாலைப் புகழ்கிறார். தனிக் கோலம் என்பது தனியாக அமர்ந்திருப்பது அல்ல. தனக்கு இணையாக எவரும் இல்லாதிருப்பது. "தனியானை சகோதரனே" என்று கந்தரநுபூதியில் அருணகிரி சொல்வதும் இதே தனிமைதான்.

அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் என்று ஒரு கதையைச் சொல்கிறார் புகழேந்தி. இறைவன் அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளே இருப்பவன் என்பதை அறியாதவன் இரண்யன். அவனுக்குப் பாடம் சொன்னன் ஒருவன். அதுவும் அவன் பெற்ற மகன். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற தனது மகனின் கூற்றை ஏற்க முடியாமல் திணறினான். தூணிலும் இருப்பானவன் துரும்பிலும் இருப்பான் என்று மகன் கூறவும் ஆணவம் கொண்டு தூணைத் தகர்த்தான் இரண்யன். அந்தத் தூணிலிருந்து மனித ஏறாக வந்தார் இறைவன். அந்த நிகழ்ச்சியைத்தான் தூணில் தோன்றினான் என்று நினைவு கூறுகிறார்.

அனைத்து வேதத்திற்கும் முன்னின்ற அவனை ஒரு வேழம் அழைத்தது. இறையறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் செடிகொடிகளுக்கும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அப்படி இறையறிவுள்ள ஆனை ஒன்று தாமரை மலரைக் கொய்ய ஆற்றில் இறங்கியது. அங்கிருந்த முதலையானது பசி கொண்டு ஆனையின் காலைக் கவ்வியது. அப்பொழுது ஆதிமூலமே என்று ஆனை நம்பி அழைத்ததால் என்னென்று கேட்டு ஓடி வந்து காத்தார் திருமால்.

ஆதித்தனிக்கோலம் ஆனானவனும், அடியவன் சிறுவனுக்காகத் தூணில் மனித ஏறாகத் தோன்றியவனும், வேதத்திற்கெல்லாம் முன்னிற்பவனும், ஆதிமூலமே என்று அழைத்த மாத்திரத்தில் என்னவென்று கேட்டவனுமாகிய திருமாலே எங்களுக்கு இறைவன்.

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

நளவெண்பா இறைவணக்கத்தின் நளபாகம் அருமையாக இருக்கு ஜிரா!
"என்னென்றான் எங்கட்கு இறை"
என்று ஆரம்ப வெண்பாவே கலக்கலா இருக்கு!

புகழேந்தியை, ஒட்டக்கூத்தர் சிறை வைத்ததாகாவும்...பாண்டியன் மகள் தலையீட்டால், அவர் வெளி வந்து, மேலும் புகழ் அடைந்ததாகவும் ஒரு கதை உள்ளது, அல்லவா ஜிரா?

said...

ஆதித் தனிக் கோலம் என்பதற்கு தனி ஆனைச் சகோதரனே ஒப்பு நோக்கு அருமை, ஜிரா!

இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
கோலம்=வராகம்
ஆதி வராகனாய், தனியாக வந்தான்...அன்னையோடு வரவில்லை...அன்னையைக் கடலடியில் சிறை வைத்த காரணத்தால்!

இறைவன் வெளிப்பட்ட தூணைத் திருத்தூண் என்று சிறப்பாகச் சொல்கிறார் பாருங்கள்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் பேதமின்றி, ஒரு சேரக் காட்சி கொடுக்க ஏதுவாகியது அந்தத் தூண் அல்லவா?

வைணவ சித்தாந்தத்தில், நல்லார் பொல்லார் என்றெல்லாம் பாராது அனைவருக்கும் மனம் இரங்கி, அவர்கட்காக அப்பனிடம் வாதாடி அருள் பெற்றுத் தருபவள் அன்னை மகாலக்ஷ்மி (திரு)!
அவள் குணத்தை அப்படியே பெற்றதால் தான் போலும், அந்தத் தூணையும் திருவின் தூணாக்கி, திருத்தூண் என்று சிறப்பாக அழைக்கிறார் நம் புகழேந்தி!

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நளவெண்பா இறைவணக்கத்தின் நளபாகம் அருமையாக இருக்கு ஜிரா! //

நன்றி ரவி. உங்கள் ஊக்கம் இங்கு ஆக்கம். :)

// "என்னென்றான் எங்கட்கு இறை"
என்று ஆரம்ப வெண்பாவே கலக்கலா இருக்கு! //

நளவெண்பாவே கலக்கலான நூல். தமிழ் பிடிக்கிறவங்க அதைக் கண்டிப்பா படிக்கனும்.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணுமுரசா வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைகீழ் ஆளுமே பெண்மை அரசு....இப்பிடி எக்கச் சக்கமா இருக்கு

// புகழேந்தியை, ஒட்டக்கூத்தர் சிறை வைத்ததாகாவும்...பாண்டியன் மகள் தலையீட்டால், அவர் வெளி வந்து, மேலும் புகழ் அடைந்ததாகவும் ஒரு கதை உள்ளது, அல்லவா ஜிரா? //

இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. கூத்தரும் புகழேந்தியும் இயற்றிய சில போட்டிப் பாட்டுகள் உள்ளன. கூத்தர் சோழநாடே சிறப்பு என்று அம்மானை பாட.....அதை எதிரம்மானை பாடித் தோற்கடித்தார் புகழேந்தி. நீங்கள் குறிப்பிடும் கதை போல எதுவும் நடந்ததற்கு எதுவும் ஆதாரம் இருப்பது போலத் தெரியலை.

said...

என்ன இராகவன் நள வெண்பாவிற்குத் தாவிவிட்டீர்கள்? சங்க இலக்கியங்களையும் சங்கம் மருவிய கால இலக்கியங்களையும் முதலில் தொடுவீர்கள் என்று எண்ணினேன்.

;எங்கட்கு இறை' என்றும் 'முதலே என்றழைப்ப என்னென்றான்' என்பதும் படிக்கச் சுவையாக இருக்கிறது. மற்ற அடிகளும் சுவையே - ஆனால் அவை பழஞ்சுவை - ஏற்கனவே அது போல் படித்திருக்கிறேன்; இது புதுச்சுவை. :-)

said...

// குமரன் (Kumaran) said...
என்ன இராகவன் நள வெண்பாவிற்குத் தாவிவிட்டீர்கள்? சங்க இலக்கியங்களையும் சங்கம் மருவிய கால இலக்கியங்களையும் முதலில் தொடுவீர்கள் என்று எண்ணினேன். //

இல்லை குமரன். வரிசையா வர நேரமில்லைங்க. அதான் ஒரே தாவல். வீரவாகுத்தேவர் வீரமகேந்திரபுரத்துக்குள்ள குதிச்ச மாதிரி.

// ;எங்கட்கு இறை' என்றும் 'முதலே என்றழைப்ப என்னென்றான்' என்பதும் படிக்கச் சுவையாக இருக்கிறது. மற்ற அடிகளும் சுவையே - ஆனால் அவை பழஞ்சுவை - ஏற்கனவே அது போல் படித்திருக்கிறேன்; இது புதுச்சுவை. :-) //

பழஞ்சுவையானாலும் பழம் சுவைதானே. :) புதுச்சுவையானாலும் நமக்குப் பொதுச்சுவை தானே. :)

said...

இராகவன்,
அருமையான பதிவு. மிக்க நன்றி.