Tuesday, June 19, 2007

04. இஇ - திருவிளையாடல்

திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால் நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் வணங்கித் துவக்குகிறார். நாம் இப்பொழுது பார்ப்பது பராசக்தி துதி.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்


இறைவன் பண்பு நலன்களை எப்படிச் சொல்லிக் கொண்டு போனாலும் சொற்கள் பத்தாது. ஆகையால் ஒரு பண்பை மட்டும் இங்கே சொல்கிறார். அண்டங்கள் எல்லாம் அணுவாக பெரிதாயினான். அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விரிசடைக்கடவுள். அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏனிப்படிச் சொல்ல வேண்டும்? அந்த விடையை அடுத்த வரியில் சொல்கிறார் பரஞ்சோதிமுனிகள். அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினான். அதாவது அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார். அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும். இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்கிறார் அருணகிரி. உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!

அன்புடன்,
கோ.இராகவன்

7 comments:

said...

//உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!
//

இதுதான் கொஞ்சம் குழம்ப வைத்தது அண்ணா.இப்போ தெளிவாக இருக்கேன்.
ஆனா ஏன் அவங்களை கன்னி என்று சொல்லுறாங்க.இது உங்க தம்பி சிவிஆர் மற்றும் என்னுடைய சந்தேகம் :)
கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா.

said...

நல்ல பாடல், நல்ல விளக்கம் ஜிரா!
இதில் சுவை என்னவென்றால்
பரஞ்சோதி முனிவர் பாட வந்தது திருவிளையாடல் பற்றி!
நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி
அதை இதாக்கி, இதை அதாக்கி,
அண்டம் முழுதும் கலந்து பிரம்பால் அடி வாங்கி.....என்று பின்னால் வரப் போவதை எல்லாம், பாயிரச் செய்யுளில்...முன்னமே குறிப்பாகச் சொல்கிறார் போலும்!

அதான் அண்டத்தை அணுவாக்கியும்
அணுவை அண்டமாக்கியும்
அலகிலா விளையாட்டுடையவராக...பாயிரம் தொடங்குகிறது!

said...

ஜிரா
இன்னொன்று கவனித்தீர்களா?
பெரும்பாலும் புராணங்களும் காப்பியங்களும் "உலகம்" என்று முதற் சொல்லைக் கொண்டு தொடங்கும்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் - கம்பராமாயணம்
உலகு எலாம் உணர்ந்து - பெரிய புராணம்!
உலகம் உவப்ப - திருமுருகாற்றுப்படை
மூவா முதலா உலகம் - சீவக சிந்தாமணி

இங்கும் அதே கருத்தை அடியொற்றி "அண்டம்" என்று துவங்குகிறார் பரஞ்சோதி!

//இது உங்க தம்பி சிவிஆர் மற்றும் என்னுடைய சந்தேகம் :)
கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா.//

என்னுடைய சந்தேகமும் தான்.
எனக்கும் சொல்லுங்களேன் அண்ணா:-)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அதான் அண்டத்தை அணுவாக்கியும்
அணுவை அண்டமாக்கியும்
அலகிலா விளையாட்டுடையவராக...பாயிரம் தொடங்குகிறது! //

ஒரு சிறிய திருத்தம். அலகிலா விளையாட்டுடையவளாக...என்று சொல்லலாம்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
இன்னொன்று கவனித்தீர்களா?
பெரும்பாலும் புராணங்களும் காப்பியங்களும் "உலகம்" என்று முதற் சொல்லைக் கொண்டு தொடங்கும். //

:) கவனிக்கவில்லை ரவி. இந்தக் கருத்தை நான் சொல்லச் சொல்ல இனிக்குதடாவில் உமா என்ற பெயருக்குப் பொருள் சொல்லும் பொழுதும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இங்கு நீங்களும் சொல்கின்றீர்கள்.

////இது உங்க தம்பி சிவிஆர் மற்றும் என்னுடைய சந்தேகம் :)
கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா.//

என்னுடைய சந்தேகமும் தான்.
எனக்கும் சொல்லுங்களேன் அண்ணா:-) //

உங்களுக்கும் அண்ணனா? கொத்சும் அப்படித்தான் சொல்றாரு. விட்டா என்னை வலையுலக அண்ணாவாக்கீருவீங்க போலிருக்கே. இந்த அண்ணா பதவி வேண்டாம். தம்பி பதவிதான் வேணும். தயாரா? :)

said...

// துர்கா|†hµrgåh said...
//உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!
//

இதுதான் கொஞ்சம் குழம்ப வைத்தது அண்ணா.இப்போ தெளிவாக இருக்கேன்.
ஆனா ஏன் அவங்களை கன்னி என்று சொல்லுறாங்க.இது உங்க தம்பி சிவிஆர் மற்றும் என்னுடைய சந்தேகம் :)
கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா. //

:) விளக்கம் அம்புக்கு மட்டுமல்ல வில்லுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

இலக்கியங்களின் ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதை அப்படியே மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உட்பொருள் யோசிக்க வேண்டும்.

பொதுவாகவே இறைவனது பண்புகளைச் சொல்லும் போது...அவன் பெரியதுக்கெல்லாம் பெரியவன்..சிறியதுக்கெல்லாம் சிறியவன் என்று சொல்வார்கள். அதாவது அனைத்தையும் கடந்தவன் என்று பொருள்.

அப்படிச் சொல்லும் பொழுது....எல்லாத்தையும் பெத்தது இவங்கதான். ஆனாலும் அவங்க கன்னி. இதன் உட்பொருள்....நாம் ஆண் பெண் என்று பலவிதங்களில் பார்த்தாலும் அனைத்து அண்டங்களும் இறைவனிடத்தில் தோன்றியவை. ஆனாலும் இதெல்லாம் ஏதோ ஆண் பெண் கூடுதலால் உண்டாகிடவில்லை. இறைவனை அவ்வளவு எளிதாக அளவிட முடியாது என்று பொருள்.

ஒருவேளை ஏசுவை ஈன்ற மரியாளைக் கன்னி என்று சொல்வது கூட இந்த வகையான போற்றுதலாக இருக்கலாம். இது ஒரு கருத்துக்காகச் சொன்னது. கிருத்துவ அன்பர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

said...

இராகவன்,

/* திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். */

பதிவிற்கு மிக்க நன்றி. அருமையான விளக்கம். படித்துப் பயனடைந்தேன்.
திருவிளையாடற் புராணம் -- இன்றுதான் முதல்முறையாக அறிகிறேன். இது எக் காலப் பகுதியில் இயற்றப்பட்டது?

said...

‘சமய குரவர்’ என்பது வட சொல்; சமயம், குரவ: எனும் சொற்கள் இணைவதால் உருவாவது.
‘குரு:’ என்பதன் பன்மை வடிவம் ‘குரவ:’
இடையில் ஒற்று மிகாது. தமிழ் இலக்கண விதி அதற்குப் பொருந்தாது.