Tuesday, August 15, 2006

29. அலுப்புத் தட்டாத அமுதம்

அருணகிரி தமிழ்க் கடல். அதிலும் அவரை ஓசைமுனி என்பார் பாம்பன் சுவாமிகள். தமிழிலுள்ள ஓசைகளெல்லாம் அத்துப்படியானவர். அவர் சொல்லித் தத்துவம் கேட்பது நமக்கெல்லாம் இனிமை. இந்தப் பாடலும் ஒரு தத்துவப் பாடலே! இந்தப் பாடலில் இரண்டு உண்மைகளைக் கூறியுள்ளார் அருணகிரி. உணர வேண்டிய உண்மைகள்.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே


இந்த உலகாய பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு இரண்டு பண்புகள் உண்டு. நன்மை ஒன்று. தீமை மற்றொன்று. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லமும் எடுக்கலாம். சாராயமும் காய்ச்சலாம். அது பயன்படுத்துகின்றவர்களின் தன்மையைப் பொருத்தது. மிகவும் நல்லது என்ற பொருளிலும் கூட ஏதேனும் தீமை இருக்கும். மிகவும் இனிமையானதாக கருதப்படும் அமுதம் சாவாமருந்து. அதை அருந்துதல் இன்பம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இளமையாக சாகாமல் இருப்பது. கண்டிப்பாக அலுப்புத் தட்டிவிடும். அப்படியெல்லாம் எந்தத் தீமையையும் தராத ஒரு அமுதம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்படிப் பட்ட அமுதமும் உண்டு. அயில்வேல் அரசனே அந்த அமுதம். அயில் என்றால் கூர்மை. கூர்மையான வேலையுடைய முருகனே இன்பத்தை மட்டுமே தரக்கூடிய அமுதம். அதுவும் எப்படி? சற்று விளக்கமாகப் பார்ப்போம். கூரில்லாதவன் என்று யாரைச் சொல்வோம்? அறிவில் சற்று மந்தமாக இருப்பவர்களை கூரில்லாதவன் என்பது வழக்கம். கூர்மை என்பது அறிவின் பண்பு. வேல் ஞானத்தின் வடிவம் என்பது நாம் அறிந்ததே! ஞானம் கூர்மையாக இருக்க வேண்டும். அறிவு பெருகப் பெருக ஆராய்ந்து தெளியும் பண்பு பெருகும். நாம் அவசரப்பட்டு முடிவெடுப்பதெல்லாம் அறிவீனத்தினால்தானே! ஆக முற்றும் உணர்ந்தவர் தீயவராக இருக்க முடியாது. அப்படி அனைத்தையும் அறியும் அறிவு முருகனிடத்தில் அடங்கும். ஆகையால் ஞானாகரனே என்று அடுத்த சொல்லைப் போடுகிறார்.

இப்பொழுது படியுங்கள். "ஆனா அமுதே! அயில் வேல் அரசே! ஞானாகரனே!" புரிந்திருக்கும் என நினைக்கிறேன். "இறைவனே! நீ தீதில்லா அமுது. எப்படித் தெரியுமா? அனைவரையும் அடக்கும் ஞானம் உன்னிடத்தில் அடங்கும். அதனை உருவகமாக கையில் வேலாகத் தாங்கிய இறைவனே!"

இப்படியெல்லாம் அழைத்து விட்டு, நவிலத் தகுமோ என்கிறார். அதாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறார். எதைச் சொல்ல முடியுமா என்று அருணகிரி தயங்குகிறார்! இறைவனிடத்தில் நேரடி உபதேசம் பெற்ற அவருக்கே சொல்லி விட முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதா? என்ன அது? அடுத்த இரண்டு வரிகளைப் பாருங்கள். "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!" இதைத்தான் அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அறிவு அடக்கத்தைக் கொடுக்கும் என்று முன்பே அறிந்தோம். அந்த அடக்கம் இறைவனின் கருணையால் வருவது. அதன் விளைவு என்ன? அந்த விளைவைத்தான் அருணகிரியால் சொல்ல முடியவில்லை.

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். அதாவது இறைவனை உணர்ந்தவர்கள் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னதில்லையாம். அப்படிச் சொன்னவர்கள் உணர்ந்ததில்லையாம். அருணகிரி உணர்ந்தவர். ஆயினும் நமக்காக, நாம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இங்கே வந்து தடுக்கி விட்டார். இறைவன் கருணையின் விளைவு என்ன தெரியுமா? நான் என்ற அகந்தையை விழுங்கி விட்டு, அனைத்துப் பரிமாணங்களிலும் அன்பு என்ற அமைதி ஒழுக இருக்கும் தன்மை. அதை எப்படி விளக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. மேலே சொன்னது புரிந்தது போல இருக்கும். ஆனால் முழுவதும் புரியாது. ஏனென்றால் சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சொல்லொணா நிலையது. பரவசம் என்று சொல்லலாம். ஆனால் பரவசம் எப்படி இருக்குமென்று யாரேனும் சொல்ல முடியுமா? வெல்லம் இனிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். எப்படி இனிப்பாக இருக்குமென்று யாரால் சொல்ல முடியும்? சுவைத்துப் பார்த்து உணர்ந்தவர்களிடம் வெல்லம் இனிக்குமென்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். முருகப் பெருமானின் அருட்பெருங் கருணையின் விளைவு இனிக்கும் என்று இதுவரை சொல்லி வந்த அருணகிரிநாதர் எப்படி இனிக்குமென்று சொல்ல முடியாத நிலை இதுதான். ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.

பக்தியுடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் புரிந்துவிட்டால்

"யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் ஆகிவிடுவோம்

said...

அருமை ஜிரா.

//பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.
//
உண்மைதான்.

said...

எதையோ மிகவும் அனுபவித்து, அதைச் சொல்லக் கூட சொற்கள் இல்லை என, சொல்லுக்கே அதிபதியான ஒருவர் சொல்லும்போது, அது என்னவாய் இருக்கும் என நம் ஆர்வத்தைத் தூண்டி, அதை நோக்கிப் பயணிக்க வைப்பதே அருணையாரின் நோக்கமாய் இருந்திருக்க வேண்டும்.

'ஏற்றுக்கொள்ளவில்லை' எனின் நட்டம் நமக்குத்தான்.

'தடுக்கி விட்டார்' எனச் சொல்வது இசைவாகப் படவில்லை.

அதுவும், 'வெல்லத்தின் இனிப்பை வார்த்தைகள்ளல் சொல்லமுடியாது' எனச் சொன்னபின்னர்!

நல்ல் விளக்கம், ஜி.ரா. அவர்களே!

said...

இராகவன். இந்தப் பாடலைப் படித்தவுடன் நம்மாழ்வாரின்

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே

என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரம் நினைவிற்கு வந்தது.

ஆனா அமுதே என்பதற்கு தீதில்லா அமுது என்று சொன்ன பொருள் அருமை. நான் அதை ஆரா அமுது - தெவிட்டாத அமுது என்று நினைத்தேன்.

நவிலத் தகுமோ என்பதனை கடைசி இரண்டு அடிகளுடன் சேர்த்துப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். பொருத்தமே. முதல் இரு அடிகளுடனும் சேர்த்துப் பொருள் சொல்லலாம் போல் இருக்கிறது. 'ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே - இப்படி நான் உன்னைப் போற்றிக் கொண்டே போகலாம். ஆனால் அது நான் சொல்லி முடியுமா - நவிலத் தகுமோ?'