Tuesday, January 10, 2006

பாவை - இருபத்தாறு

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


மாலே! மணிவண்ணா! நீ கருணை கொண்டு எங்களுக்கு வேண்டிவன யாவையென்று கேட்பாயானால் அரிய பெரியர்களுக்குத் தக்க இந்த மார்கழித் திங்களின் பாவை நோன்பைச் சிறப்பாகச் செய்ய அருள்வாய் என்றே கேட்போம்!

(பிறவாமை வேண்டுமென்று கேட்டுவிட்டு மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டுமெனக் கேட்கும் சைவத்தைப் போலதான் இதுவும். இறைவன் வரம் தரப் போகின்றான் என்றால் காடு வேண்டும் மாடு வேண்டும் தங்க ஒரு கூடு வேண்டும் என்று கேளாமல் இறைவனை நினைத்துப் பாடும் நோன்பு சிறக்க வேண்டும் என்று ஆண்டாள் கேட்பது அன்பின் உச்சமே!)

அத்தோடு தூய வெண்ணிறத்துப் பாஞ்ச சன்னியம் இருக்கின்றதே! உரத்த ஒலியெழுப்பினால் உலகம் முழுவதும் அதிர்ந்து நடுங்கும் தன்மையுடைய அந்தப் பாஞ்ச சன்னியம் போன்ற அருமையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஊதிக் கொண்டு உன்னைப் பாட முடியும்.

(ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்ற வரியைப் பொருள் கொள்ளும் பொழுது சங்கொலி கேட்டு உலகம் நடுங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாதென்று தோன்றுகின்றது. ஒலியின் அதிர்வுகள் கூடினால் எந்தப் பொருளும் நடுங்குமல்லவா! உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)

அத்தோடு வட்ட வடிவமான பெரிய பறைகளைத் தட்டிக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பாடியும் மகிழ வேண்டும்!

(திருப்பாவை, சிலப்பதிகாரம், இன்னும் பிற நூல்களைப் படிக்கும் பொழுது திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். பறை என்பதை இன்றைய மிருதங்கம் என்று கொள்ளவும் முடியாது. காரணம் பறைகளின் வகைகளும் அமைப்பும் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. இந்த இசைக்கருவிகளை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால் கோதை மனம் குளிர்வார் என்பதில் ஐயமில்லை.)

கோல விளக்கே! உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே! நெடிய கோபுரமே! ஆலின் இலை மேலே துயில் கொண்ட சிறுவனே! எங்களுக்கும் அருள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

Raghavan,

Keep up this good work..!
Excellent.

It would be good to have the complete series in PDF form. (not in Thamizmanam PDF format - but general Word doc with contents section and converted into PDF)

thanks
- Alex

said...

மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கியமாக ஞாலங்கள் எல்லாம் நடுங்க முரல்வனவுக்குச் சொன்ன விளக்கம். நன்றி.

said...

// Keep up this good work..!
Excellent. //

பாராட்டிற்கு நன்றி அலெக்ஸ்.

// It would be good to have the complete series in PDF form. (not in Thamizmanam PDF format - but general Word doc with contents section and converted into PDF) //

நிச்சயமாக. இந்தத் தொடர் முடிந்ததும் அமர்ந்து சில திருந்தங்களைச் செய்து விட்டு, ஒரு நல்ல pdf fileலாக மாற்றி இங்கேயே தருகிறேன்.

said...

// மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கியமாக ஞாலங்கள் எல்லாம் நடுங்க முரல்வனவுக்குச் சொன்ன விளக்கம். நன்றி. //

நன்றி குமரன். நான் முன்பே சொன்னது போல வைணவத் தத்துவங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு மிகமிகக் குறைவு. ஆகையால் தமிழ்க் கண்களால் திருப்பாவையைப் படித்து விளக்கமிடுகின்றேன். இப்பொழுது நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது உங்களது தொடருக்காகத்தான்.

said...

கண்ணா. நான்முகனைப்படைத்தானே.

காரணா. கரியாய். அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை

ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம

வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்

அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே
உண்மைதான் ராகவன் ஆழ்வர்கள் வேண்டுவது மேலே சொன்னபடிதான் இகபர சுகங்களை அவர்கள்
வேண்டுவதே இல்லை. தி.ரா. ச

said...

"கண்ணா. நான்முகனைப்படைத்தானே.

காரணா. கரியாய். அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை "ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம

வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்

அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே"

உண்மைதான் ராகவன் ஆழ்வர்கள் வேண்டுவது மேலே சொன்னபடிதான் இகபர சுகங்களை அவர்கள்
வேண்டுவதே இல்லை. தி.ரா. ச

said...

ஆகா! தி.ர.ச, அற்புதம். அற்புதம். பேச்சிழந்திருக்கிறேன் நான்.

said...

திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும் பட்டினி இல்லை. உங்களது திருப்பாவை விளக்கத்தை படிப்பதால். தி. ரா. ச

said...

// திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும் பட்டினி இல்லை. உங்களது திருப்பாவை விளக்கத்தை படிப்பதால். தி. ரா. ச //

ஐயா! எல்லாப் பெருமையும் ஆண்டாளுக்கும் எனக்குத் தமிழைத் தந்த கந்தவேளுக்கும்தான். உங்கள் பாராட்டுகளையும் ஊக்குவித்தலையும் தலைபணிந்து ஏற்றுக் கொள்கிறேன்.