Tuesday, January 03, 2006

பாவை - பத்தொன்பது

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்


(நப்பின்னையிடமும் சொல்லியாகி விட்டது. அவளும் கண்ணனைக் கைப்பிடிக் கைதிலிருந்து விடுவிக்கும் வழியைக் காணோம். இனிக் கண்ணனையே கேட்க வெண்டியதுதான்.)

கண்ணனே! உலக உயிர்களுக்கெல்லாம் திண்ணனே! எங்கள் புலம்பலையும் கொஞ்சம் கேட்பாய். உனது பள்ளியறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பாக ஒளிர்கின்றன. காடுகளில் வாழும் பெரிய ஆண்யானைகளின் பெரிய மிளிரும் தந்தத்தைக் கால்களாகக் கட்டிச் செய்யப்பட்ட கட்டில் மேல் ஏறி மெத்தென்ற இலவம் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருக்கின்றாய்.

கொத்துக் கொத்தாக வாசநறுமலர்களைச் சூடிக் கொண்டுள்ள நீண்ட கருங்கூந்தலை உடையவள் நப்பின்னை. உனது மனையாளாகிய அவளது மார்பில் நீ தலையை வைத்துச் சாய்ந்து கொண்டு இளந்தூக்கத்தில் சுகிக்கின்றாய். மலர்களை ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கட்டி முனையில் முடிச்சிடாத தார்மாலை அணிந்து கொண்ட மலர் மார்பனே! கொஞ்சமாவது வாய் திறந்து எங்களுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாயா?

(கண்களுக்கு மை செய்வதில் பழந்தமிழகத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பசுநெய்யை விளக்கில் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு எரித்து அந்தப் புகையை மெல்லிய வட்டிலில் பிடித்துப் பயன்படுத்துவார்கள். இன்னொன்று அரிசியைக் கருக்கி அரைப்பது. அப்படிக் கிடைத்த கருமையை கண்களில் தீட்டிக் கொள்ளும் வழக்கம் அன்றே இருந்திருக்கின்றது. எகிப்தியர்களுக்கும் இந்தப் பழக்கம் உண்டென்று நாம் அறிவோம். )

கரிய அரிய மையைக் கண்களின் தடமாக இழுத்துக் கொண்ட அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய மணவாளனை எப்பொழுதும் துயிலெழ விடாமல் உன்னுடனே வைத்துக் கொள்ள நினைக்கின்றாய்.

(இன்னும் நப்பின்னை கண்ணனை வெளியே விடவில்லை. ஆகையால் சற்றுக் கடுமையாகவே சொற்களை அடுக்குகின்றார் ஆண்டாள். கடவுள் அனைவருக்கும் உரிமையானவர். நப்பின்னை ஒருத்தி மட்டும் அவரை அடைத்து வைக்க நினைக்கலாமா என்று பொருமுகின்றார்.)

இதோ பார் நப்பின்னை. நீ சற்றும் அவனைப் பிரிந்திருக்க விரும்பாமல் உனது கட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றாய். இந்த எண்ணம் எந்த வகையிலும் சிறந்தது அன்று என அறிவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

1 comments:

said...

அருமை இராகவன். நன்றாய் இருந்தது.