Sunday, January 08, 2006

பாவை - இருபத்து நான்கு

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


வாமனா! அன்று குள்ளனாக இருந்தும் இந்த உலகத்தை ஈரடியால் அளந்தாய்! ஈரடியிலேயே மூவுலகமும் அடங்கி விட மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு மாபலியிடம் நின்றாய்! அப்படி மாபலி தனது தலையில் தாங்கிக் கொண்டு பெருமை கொண்ட உனது திருவடி போற்றி!

(மூன்றாவது அடி தனது தலையில் தாங்கப்பெற்ற மாபலி பாதாள லோகம் சென்றான். அங்கிருந்து ஆட்சி புரிகின்றான். அவன் ஆண்டொரு நாள் வெளி வந்து நாடு செழித்திருக்கின்றதா என்று காண வரும் நாளாக கேரளத்தில் ஓணம் கொண்டாடப் படுகின்றது.)

தேவா! தென்னிலங்கைக்கே சென்று வென்று அதன் புகழைக் குறைத்த உனது திறமை போற்றி! பொற்சக்கரமாக வந்த சகடாசுரனை எட்டி உதைத்து உடைத்துப் புடைத்த உனது புகழ் போற்றி!

நீ நந்தகோபன் வீட்டில் வளர்கையில் கன்று வடிவில் வந்தான் ஒரு அசுரன். அவனை ஒரு கம்பை எத்துவது போல எத்தி மரமாக நின்ற மற்றொரு அசுரன் மீது மோதச் செய்த திருவடிகள் போற்றி!

(கன்று - பசுவின் கன்று. குணில் என்றால் மரக்கொம்பு. ஆ என்றால் ஆச்சாமரம். தன்னை எதிர்க்க வந்த கன்றை ஒரு குச்சியை எத்துவது போல மரத்தில் எறிந்து கொன்றான் கண்ணன்.

ஆண்டாளுக்குக் கண்டிப்பாகச் சிலப்பதிகாரப் பழக்கம் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதே வரிகளை இளங்கோவும் பயன்படுத்தியிருக்கின்றார்.
"கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்" என்று ஆய்ச்சியர் குறவையில் வருகின்றது.

குழந்தைகள் மரத்தில் இருந்து கனிகளை உதிர்க்க கொப்பை எறிந்து வீழ்த்துவார்கள். அப்படிக் கண்ணனும் கனியுதிர்த்தானாம். மரமாக நின்ற அசுரனின் மீது கன்றாக வந்த அசுரனை எத்திக் கனியுதிர்த்தானாம். என்ன அழகான சொல்நயம்!
)

பெருமழை பொழிந்தான் இந்திரன். பாவம்! மாயத் தந்திரன் உன்னை அறியாதவன். அப்பொழுது கோவர்த்தனகிரியைத் தூக்கி கோகுலத்தைக் காத்த உனது திருக்குணம் போற்றி!

எந்தப் பகையும் வென்றெடுக்கும் உனது கைவேல் போற்றி! எப்பொழுதும் உனது சேவகமே போற்றிக் கொண்டு இன்று உன்னை நாடி நாங்களெல்லாம் வந்துள்ளோம்! இரங்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

சிலப்பதிகாரம் திருப்பாவைக்கு முந்தியதாக இருந்தால் ஆண்டாளுக்குத் சிலப்பதிகார வரிகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த 'கன்று குணிலா எறிதல்' பல ஆழ்வார்களின் பாடல்களில் பயின்று வருகிறது. அதனால் இந்தக் கதை ஆண்டாளின் காலத்திலும் சிலப்பதிகார காலத்திலும் மற்ற ஆழ்வார்கள் காலத்திலும் மிகவும் பிரசித்திப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்.

புதுமையான விளக்கங்கள் ஆங்காங்கே தென்படுகிறது இராகவன். நன்றாய் உள்ளது.

said...

இந்தப்பாடலில் நரசிம்மா அவதாரத்திற்கு பிறகு வந்த வாமன அவாதாரத்தை குறிக்கிறது.
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி முருகனின் கையில்தான் வேல் இருக்கும்.மாலும் மருகனும் ஒருவர்தானோ? குமரன்மேல் அன்பு கொண்ட முருகன்டிமையான ராகவன் பதில் என்ன தி. ரா ச.

said...

// சிலப்பதிகாரம் திருப்பாவைக்கு முந்தியதாக இருந்தால் ஆண்டாளுக்குத் சிலப்பதிகார வரிகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. //

குமரனுக்குச் சிலப்பதிகாரத்தின் காலத்தைப் பற்றியே ஐயமுள்ளது போலும். அதுதான் திரும்பத் திரும்ப எது முந்தியது என்று குழப்பம் போல.

வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா, சிலம்புச் செல்வர் என்று பலரும் ஆய்ந்து சொல்லியிருக்கின்றார்களே. சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று. திருப்பாவை அதற்கும் முந்தையது அன்று என்று உங்களுக்கே தெரியுமல்லவா? பிறகும் என்ன குழப்பம் குமரன்?

said...

// வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி முருகனின் கையில்தான் வேல் இருக்கும்.மாலும் மருகனும் ஒருவர்தானோ? குமரன்மேல் அன்பு கொண்ட முருகன்டிமையான ராகவன் பதில் என்ன தி. ரா ச //

தி.ரா.ச, பேரும் ஊரும் வேறு வேறு ஆனால் என்ன...எல்லாம் ஒன்றுதான். நாம் நிற்கின்ற இடத்திலிருந்து கிழக்கிலேயே போய்க் கொண்டிருந்தால் நாம் நின்ற இடத்தின் மேற்கிலிருந்து வருவோம். அது போலத்தான் சமயங்களும் கடவுள்களும். அப்படிப் பார்க்கப் போனால் கந்தனும் கண்ணனும் வேறு வேறாவார்களா? எல்லாம் ஒன்றுதான்.