Wednesday, January 04, 2006

பாவை - இருபது

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்பொழுதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவன் அரங்கன். அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவன் அரங்கன். அரங்கா! அச்சுதா! துயில் எழுவாய்!

எங்கள் இறைவனே! உன்னை ஆண்மகன் என்ற வடிவில் நாங்கள் கண்டால், நீ ஆண்களில் செப்பம் உடையவன். அதாவது சிறந்தவன். ஆண்மைக்குறிய அத்தனை இலக்கணங்களும் சீரிய முறையில் அமையப் பெற்ற அருமையன்.

(இறைவனைப் பலரும் பலவிதமாகக் கண்டுணர்ந்து மகிழ்ந்துள்ளனர். அப்பருக்குத் தலைவன். சம்பந்தருக்குப் பெற்றோர். சுந்தரருக்குத் தோழன். மாணிக்கவாசகருக்கு ஆசான். பாரதியாரும் அப்படித்தான். கண்ணனை ஒவ்வொரு வடிவிலும் கண்டார். காதலனாகவும் காதலியாகவும் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் வேலைக்காரனாகவும் பலரிடமும் கண்டார். அந்த மாயன் ஒவ்வொரு பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கின்றவன். அதனால்தான் பாரதியால் அத்தனை பாடல்களைக் கண்ணன் மேல் பாட முடிந்தது. அப்படி ஆண் வடிவில் கண்ட ஆண்டாளுக்குக் கண்ணனே சிறந்த ஆண்மகனாகத் தெரிந்ததில் வியப்பென்ன! நல்ல நடிகர் ஒருவர் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திலேயே ஒன்றிச் சிறப்பிப்பது போலத்தான் இதுவும்.)

அனைத்துத் திறமைகளும் உடையவனே! துன்பம் தருகின்றவர்களைத் தீய்க்கும் வெப்பமே! விமலனே! துயில் எழுவாய்!

(அனைத்துத் திறமைகளும் உடையவன் என்ற சொற்றொடர் இங்கு மிகவும் சிறப்பானது. இறைவன் அனைத்தையும் நடத்த வல்லான். முத்தொழிலும் எத்தொழிலும் செய்தொழிலாகக் கொள்ளும் திறமை பெற்றவன். எதையும் செய்யத் தக்கானை வேறு எப்படிப் புகழ்வது. அப்படி அனைத்தையும் நடத்த வல்லான் எப்படி இருக்க வேண்டும்? தூய்மையான உளத்தவனாக இருக்க வேண்டுமல்லவா? திறமையுள்ளவன் தீயவனாக இருந்து விட்டால் தீமைகளே விளையும். ஆனால் இறைவன் தூயவன் என்பதைச் சொல்லவே திறமையைச் சொல்லிய உடனேயே விமலா என்று சொல்லித் தூய்மையைப் பெருமைப் படுத்துகிறார்.)

சிறப்பான வடிவான மென்முலைகளை உடையவள் நப்பின்னை. அவளது செப்பிதழ்கள் பவழம் போன்ற செவ்விதழ்கள். சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால்தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

said...

உக்கமும் தட்டொளியும் கண்ண்னுக்கு தரவேண்டுமா அல்லது ஆண்டாளுக்கு தரவேண்டுமா. காலையில் தி, ரா ச.

said...
This comment has been removed by a blog administrator.
said...

அருமையான வரிகள்
அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவன் அரங்கன். அரங்கா! அச்சுதா!

said...

உக்கமும் தட்டொளியும் நோன்புக்கு அங்கமாகக் கொடுக்கும்படி ஆண்டாள் கேட்பதாகத் தான் மரபின் வழி பொருள் கூறுவார்கள். ஆனால் இராகவன் சொன்ன பொருளும் பொருத்தமாகத் தான் இருக்கிறது.

said...

குமரன், நீங்கள் சொன்ன பொருளை என்னால் கொள்ள முடியவில்லை. நோன்பு நோற்பவர்களுக்கு உக்கம் தேவைதான். தட்டொளி எதற்கு? ஆகையால்தான் நான் இங்கே குறிப்பிட்டது போல பொருள் கொண்டேன்.

பாவை நோன்பிற்கான வழிமுறைகளில் தட்டொளி எங்கேனும் பயன்படுகிறதா? இதையும் விவரம் தெரிந்தவர் விளக்கினால் நன்றாக இருக்கும். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

தேசிகனைக் கேட்டால் விவரம் தெரியலாம் என்று நினைக்கின்றேன்.

said...

இராகவன், அது நான் சொல்லும் பொருள் அன்று. மரபின் வழி வரும் பொருள் என்று தானே சொன்னேன். அதே நேரத்தில் நீங்கள் சொன்ன பொருளையும் மறுக்கவில்லையே. மரபின் வழி வரும் விளக்கத்தை நான் இந்த பாசுரத்தை விளக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

said...

குமரன், கோவித்துக் கொள்ளாதீர்கள். என்னுடையது அறியா வினா. தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.

மரபின் வழி அப்படி வருகின்றது என்றால் அது எப்படி என்ற விளக்கத்தை வேண்டி மட்டுமே கேட்டுக் கொள்கின்றேன்.

said...

மரபின் வழி வரும் விளக்கத்தை நான் இந்த பாசுரத்தை விளக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.