Friday, January 13, 2006

பாவை - இருபத்தொன்பது

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பு மிகச் சிறப்பாக நடக்கின்றது. தோழியருடன் கூடிக் கிளம்பிக் கண்ணன் கோயிலுக்குச் சென்று அவனைத் துயிலெழுப்பியாகி விட்டது. கண்ணனும் தன்னோடும் நப்பின்னையோடும் பலதேவனோடும் பெற்றோருடனும் துயிலெழுந்து அருள் புரிகின்றான். ஆண்டாளும் கூட்டாளிகளும் கார்முகில் வண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். வேண்டுவன கேட்கின்றார்கள்.)

முகில்வண்ணா! விடியற்காலையில் வெள்ளியோடு எழுந்து குளிரக் குளிரக் குளித்து விட்டு கூட்டத்தாரோடு கூடி வந்து உன்னைச் சேவித்து உனது பொற்றாமரை அடிகளைப் போற்றிப் பாடுகின்றோமே! அப்படிப் போற்றி நாங்கள் கேட்பது என்னவென்று செவி மடுப்பாய்.

ஆடு மாடுகளாகிய கால்நடைகளை மேய்த்து அந்த வருவாயில் உண்டு சிறக்கும் ஆயர் குலத்தில் எங்களை உய்விப்பதற்காகவே பிறந்தவன் நீ! அப்படியிருக்க எங்கள் வேண்டுகோள்களைக் கவனியாமல் செல்லலாகாது.

கோவிந்தா! ஏதோ இன்றைக்கு ஒருநாள் மட்டும் உன்னைத் தேடி வந்து உன்னருளை விரும்புகிறோம் என்று கொள்ளாதே! இந்த மார்கழி மாதத்தில் நோன்பு நூற்பதால் மார்கழியோடு போவதா நம் உறவு? என்றும் தொடர வேண்டியதே! என்றுமென்றால் இப்பிறவி மட்டுமல்ல. ஏழு பிறப்புகளிலும் உன்னோடு ஒன்றி அமைதி பெறவே விரும்புகிறோம். உனக்கே நாங்கள் ஆளாவோம். அதை விட எங்களுக்கு என்ன வேண்டும். அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் எம்பாவாய்!

(இறையருள் என்றும் வேண்டும். இதே கருத்தைத்தான் காரைக்கால் அம்மையார் அதியற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். எல்லோரும் இறைவனையும் இறைவியையும் அப்பனே அம்மையே என்றால், இவரைத்தான் இறைவனே அம்மை என்றார். அப்படிப் பெருமை கொண்ட அம்மை வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கவனியுங்கள்.
பிறவாமை வேண்டும் - மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் (உம்மை என்று கூட இல்லை. உன்னை என்கிறார். அம்மா அல்லவா! அப்படி அழைக்க உரிமை உண்டுதானே.)இந்தக் கருத்துதான் நமது பாண்டி நாட்டாளது திருவுளத்திலிருந்தும் எழுகின்றது.
)

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

இறைவா. நீ எங்களை அடிமைகளாய்க் கொள்ளாமல் தீராது. இன்று மட்டும் அருள் புரிந்து விட்டு விடலாம் என்று எண்ணாதே. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம். உனக்கே நாங்கள் அடிமை செய்வோம். எங்களுக்கு மற்ற பொருள்களின் மேலும் ஆசை இருக்கலாம்/இருக்கிறது. அவற்றை எல்லாம் அருளியோ அழித்தோ மாற்றுவாய்.

இதுவும் மிகப் பிடித்தப் பாவைப் பாசுரம். கோயில்களில் வழிபாடு முடிந்தவுடன் இந்தப் பாவையைப் பாடுவார்கள்.

said...

//மற்ற பொருள்களின் மேலும் ஆசை இருக்கலாம்/இருக்கிறது. அவற்றை எல்லாம் அருளியோ அழித்தோ மாற்றுவாய்.//

குமரன். அருமையான விளக்கம். இது தொடர்பாக ஒரு அநுபூதிச் செய்யுளும் இருக்கிறது. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறியது. அதை இப்பொழுது சொல்ல மாட்டேன். அநுபூதி விளக்கத்தில் இடுகையில் படித்து, இன்று சொன்னதையும் நினைவில் வைத்து அன்று நீங்கள் நினைவு படுத்த வேண்டும். உங்களது நினைவு படுத்தலுக்குக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.

said...

இந்தப் பாடலை வைணவர்கள் இரண்டு முறை படுவார்கள். முதல் பாடலில் கதிரவன் போல் முகத்தான் என்று முகத்திலிருந்து ஆரம்பித்து இந்தபாடலில் பரமனின் பாதங்களைப் ப்ற்றி முடிக்கிறார். கேசாதி பாத வர்ணனை. சிற்றம் சிறு காலே என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம்
கார்முகில் கண்ணனே உனது கால் சின்னம்சிறியதாக இருக்கிறது. ஆனலும் நம்பமுடியவில்லை. ஏன் என்றால் இந்தச் சிறுகால்தானே இந்த மாபெரும் உலகத்தை ஓர் அடியால் அளந்தது? கடைசியில் பாதம் ஒன்றுதான் கதி என்று காட்டிவிட்டார்.பாதத்தைப் பற்றிய பாடலை எழுதியபோதுதனே தினமலர் அங்கிகாரம் கிடைத்தது. அன்பன் தி. ரா. ச.

said...

// சிற்றம் சிறு காலே என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம்
கார்முகில் கண்ணனே உனது கால் சின்னம்சிறியதாக இருக்கிறது. ஆனலும் நம்பமுடியவில்லை. ஏன் என்றால் இந்தச் சிறுகால்தானே இந்த மாபெரும் உலகத்தை ஓர் அடியால் அளந்தது? கடைசியில் பாதம் ஒன்றுதான் கதி என்று காட்டிவிட்டார். //

தி.ரா.ச, இந்த விளக்கம் புதுமையான விளக்கமாக இருக்கிறது. இலக்கணப்படி இப்படிப் பொருள் கொள்வதும் தவறல்ல என்றே எனக்கும் தோன்றுகின்றது.

// பாதத்தைப் பற்றிய பாடலை எழுதியபோதுதனே தினமலர் அங்கிகாரம் கிடைத்தது. அன்பன் தி. ரா. ச. //

ஆமாம் தி.ரா.ச. அந்தச் செய்தியும் உங்கள் வழியாகவே கிடைத்தது.