Monday, November 28, 2005

பார்த்ததும் பற்றிக் கொள்ளும்

இறைவனை நமக்குத் துன்பம் வருகையில் மட்டும் நினைப்பது என்பது ஒரு வழக்கம். அப்படியில்லாமல் மனம் அமைதியாக இருக்கையில் நினைத்து மகிழ இந்தப் பாடல் உதவும். பொருளுணர்ந்து ஓத அருள் கிடைக்கும்.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே


வெள்ளம் கரைபுரண்டு வரும் பொழுது பார்த்திருக்கின்றீர்களா? டமடமவென அடித்துக் கொண்டு வரும். பொங்கிப் பொங்கித் துள்ளிக் கொண்டு வரும். வழியில் கண்டதையெல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு தன் வழியில் தடுமாற்றமின்றி போய்க் கொண்டே இருக்கும்? எங்கே போகும்? கடலைச் சேர்வதற்காக. அதுதான் ஆற்றின் பரமானந்த சாகரம்.

நமக்கான பரமானந்த சாகரம் எது? புது வெள்ளமாக எது சுழித்துக் கொண்டு வந்து நம்மிடம் தேங்கியிருக்கும் அழுக்கையெல்லாம் எற்றித் தள்ளிக் கொண்டு போய் கழுவிடும் ஆறு எது? ஆறுமுகம் அன்றி வேறு எது?

பத்தித் திருமுகம் ஆறுடன் - அதென்ன பத்தித் திருமுகம்? பார்த்ததும் பற்றிக் கொள்ளும் முகங்கள் ஆறு. இன்றைக்கும் பாத்ததும் பத்திக்கிச்சு என்று சொல்வதுண்டல்லவா. முருகனின் ஆறு முகங்களின் அழகையும் பார்ப்பதில் அத்தனையின்பம். "முழுமதி அன்ன ஆறு முகங்களும்" என்கிறார் கச்சியப்பர். ஒரு மதியை பார்ப்பதே அழகு. இதில் ஆறு நிலவுகள் வரிசையாகக் காணக் கிட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்.

பன்னிரு தோள்களுமாய் - பன்னிரண்டு தோள்களோடு முருகன் ஏன் இருக்கிறார்? வில்லைத் தாங்கவா? இல்லை. மாறாக தமிழ்ச் சொல்லைத் தாங்க. முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் பாடும் தீந்தமிழ் பாமாலைகளைச் சூடிக் கொள்ள ஒரு தோள் போதாதென்று பன்னிரண்டு தோள்களோடு நிற்கிறான் போலும். "பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று கந்தரநுபூதியில் கூறுகிறார் அருணகிரி.

தித்தித்திருக்கும் அமுது கண்டேன் - தித்திக்கும் பொருள்களெல்லாம் திகட்டும். ஆனால் அமுதம் திகட்டாது. ஆகையால்தான் தித்தித்திருக்கும் அமுதம் என்று கூறுகிறார். முருகனை நினைக்கத் திகட்டாது. முருகன் புகழைச் சொல்லத் திகட்டாது. கந்தன் அழகை காணத் திகட்டாது.

செயன் மாண்டடங்கப் - செயல் மாண்டு அடங்க என்று பிரிக்க வேண்டும். முருகனின் திருவழகைக் கண்டதும் உண்டான வினைதான் இது. செயல் மாண்டு அடங்கி விடுமாம். செயலாவது மாள்வதாவது அடங்குவதாவது? என்ன சொல்ல வருகிறார் அருணகிரியார். இந்த உலகாயத்தில் வீணாக வருந்திச் செய்யும் செயல்கள் மாண்டு அடங்குமாம்.

விளக்கமாகச் சொல்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். ஒரு கால் குட்டையாக இருக்கிறது. நம்மால் நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியுமா? ஒரு பக்கமாக ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியில் நிம்மதியாக உட்கார முடியாது. அது போலத்தான் உலக வாழ்வில் ஒரு பிரச்சனைக்கு மேல் மறு பிரச்சனை வரும். அப்பொழுது முருகனைச் சரணடைய வேண்டும். அப்படிச் செய்தால் உலகாய துன்பங்கள் நமக்குத் தெரியாது.

எப்படி? நாற்காலியின் ஒரு கால் ஆடியதற்கே உட்கார முடியவில்லை. ஆனால் நாற்காலியே ஆடும் பொழுது நிம்மதியாக இருப்பதில்லையா? எங்கே இருக்கிறது அந்த நாற்காலி? ஓடும் ரயிலில் இருக்கை எப்பொழுதும் ஆடிக் கொண்டேயிருந்தாலும் நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறோம். உறங்குகிறோம். அது போல உலகாயத் துன்பங்கள் இருந்தாலும் முருகனைச் சரணடைவதால் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை.

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே - அப்படி முருகனைச் சரணடந்தை பொழுது நமது அறிவாகிய தாமரையில் அன்பு உருகிப் பெருகிப், அனைத்துத் துன்பங்களையும் எற்றித் தள்ளிக் கொண்டு (புவனம் எற்றித்) தத்திக் கரைபுரண்டு பரமானந்த சாகரத்தைச் சேரும்.

இப்பொழுது புரிந்திருக்குமே. இறைவனை அண்டியவர்களுக்கு என்றும் துன்பமில்லை. அன்பும் அருளும் அனைத்தும் வழங்கும் முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைய வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

இராகவன். இது கொஞ்சம் கடினமான பாட்டுதான். ஒருமுறைக்கு இருமுறை படிக்கிறேன். படித்து உங்கள் விளக்கத்தையும் மனதில் இருத்திக்கொள்கிறேன். வழக்கம் போல் (!) இந்தப் பதிவும் நன்றாய் வந்துள்ளது.

இந்த விளக்கங்கள் உங்கள் சொந்த விளக்கங்களா? இல்லை வாரியாருடையதா? இல்லை இருவருடையதுமா?

said...

நன்றி குமரன். விளக்கங்கள் பெரும்பாலும் எனக்குத் தோன்றுகின்றவைதான். எனக்கு ஏதேனும் ஐயம் தோன்றினால் வாரியாரைக் கேட்பது வழக்கம்.

said...

//ஏதேனும் ஐயம் தோன்றினால் வாரியாரைக் கேட்பது வழக்கம்.
//

:-)

said...

என்ன குமரன் சிரிக்கின்றீர்கள். வாலி சொல்வதைப் போல் வாரியாரைப் போல தமிழை வாரி யார் தந்தார்?

said...

அது என்னமோ உண்மை தான் ராகவன். கிருபானந்தவாரியார் தமிழ்வாரியார் (தமிழ்க்கடல்) தான். நீங்கள் வாரியாரைக் கேட்பேன் என்று சொன்னது ஒரு நல்ல Imageஐ என் மனக்கண்ணின் முன்னால் கொடுத்தது. அதற்காகத்தான் அந்த சிரிப்பு. :-)

said...

//ஓடும் ரயிலில் இருக்கை எப்பொழுதும் ஆடிக் கொண்டேயிருந்தாலும் நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறோம். உறங்குகிறோம். அது போல உலகாயத் துன்பங்கள் இருந்தாலும் முருகனைச் சரணடைவதால் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை.//

ஆஹா, அருமையான உவமை. எப்படிப்பா இப்படியெல்லாம்?!

//புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே//

கடைசி வரிகள் கட்டிப் போட்டு விட்டன :)