Monday, November 21, 2005

பட்டு பட்டு பட்டு பட்டு

கந்தரலங்காரத்திலுள்ள கவித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. அழிவது என்பதே துன்பமானாது. இதில் இன்பமான அழிவுகளைப் பட்டியலிடுகிறார் அருணகிரி.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே

திருச்செந்தூர் நீர்வளம் நிரம்பிய ஊர். அதிலும் மாதம் மும்மாரி பெய்த காலத்தில் மிகவும் செழிப்பாக இருந்திருக்கும்.

பகழிக்கூத்தர் பாடுகிறார் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ். அதில் "பாம்பால் உததி தனைக் கடைந்து" என்ற பாடலில் இப்படிப் புகழ்கிறார்.
"முகையுடைக்கும் பூம்பா சடைப் பங்கயத் தடத்தில்
புனிற்றுக் கவரி முலை நெறித்துப் பொழியும் அமுதந்தனை
பேட்டெகினம் புனலைப் பிரித்துத் தீம்பால் பருகும் திருச்செந்தூர்
"

சுருக்கமாகச் சொல்கிறேன். மொட்டவிழும் தாமரைப் பூவோடையில் கன்று ஈன்ற எருமை இறங்கி உழப்புகையில், அதன் மடியை விரால் மீன் இடிக்க, பாலெல்லாம் தண்ணீரில் சொரிந்தது. அப்பொழுது மலர்களின் மேல் அமர்ந்துள்ள அன்னப் பறவைகள் தண்ணீரில் இறங்கி அந்தப் பாலை மட்டும் பிரித்துக் குடித்ததாம். என்ன அழகான கற்பனை.

அதே போன்ற ஒரு காட்சியைத்தான் அருணகிரியும் காட்டுகிறார். ஏற்கனவே அழகான அழிவுகளை அருணகிரி இந்தப் பாட்டில் சொல்கிறார் என்று சொன்னேன். அதை விளக்குகிறேன்.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற் பொழில் - சேல் என்றால் மீன். திருச்செந்தூரில் வயல்கள் நிறைய உண்டு. அந்த வயல்களில் நீர்பாயும் வாய்க்கால்களில் மீன்கள் நிறைய உண்டு. இந்த மீன்கள் வாய்க்காலைத் தாண்டி வயலுக்குள்ளும் நுழைந்து துள்ளும். அப்படித் துள்ளும் பொழுது வயலிலிருந்த பயிர்கள் சிறிது அழிந்தனவாம்.

தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் - மால் என்றால் விருப்பம். ஆசை வேறு. விருப்பம் வேறு. விருப்பம் என்பது துன்பம் தராதது. ஆனால் இன்றைக்கு இரண்டும் ஒரே பொருளில் வழங்கப்படுகின்றன. "மாலாசை கோவம் ஓயாதே நாளும்" என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரி.

மால் என்றால் விருப்பம். யாருக்கு விருப்பம். பூங்கொடியாருக்கு விருப்பம். எதன் மேல்? தேங்கடம்பின் மேல். திருச்செந்தூர் நாயகன் கந்த வேலவன் சூடிக் கொண்டிருக்கும் கடம்ப மாலையின் மேல் பெண்களுக்கு விருப்பம் உண்டானதாம். அந்த விருப்பத்தால் நொந்ததாம் பெண்களின் மனம்.

மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் - வெற்பு என்றால் சிறிய குன்று. சூர் என்றால் துன்பம். வேலை என்றால் கடல். பழைய தமிழ்ச் சொற்கள் இவை. நினைவிற் கொள்க. கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் வேற்படையால். இதை "வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா" என்று பாடியிருக்கிறார் பாரதியார்.

சூர் என்றால் துன்பம். துன்பத்தைத் தீர்க்க வல்லது ஞானம். வேல் ஞானத்தின் வடிவம். ஆகையால் முருகனின் திருக்கைவேல் நமது துன்பங்களையெல்லாம் தீர்க்கும்.

வேலை என்றால் கடல். முருகனோடு பொருத முடியாமல் கடலுக்குள் ஒழிந்தான் சூரன். அப்பொழுது வேற்படையைச் செலுத்தி கடலை வற்றச் செய்தார் மயிலேறும் ஐயன்.

அவன் கால் பட்டு அழிந்தது இங்கென் தலை மேல் ஐயன் கையெழுத்தே - பிரமன் கையெழுத்துப் போட்டு அனுப்பிய நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் அலைக்களிக்கின்றன. "திமிர உததி அனைய ஜனனம்" என்கிறார் திருப்புகழில். குமுறும் கடலைப் போன்ற பிறப்பு என்பது அதன் பொருள்.

அந்தப் பிறவிப் பிணி பிரமன் கையெழுத்தால் வருவது. முருகனைச் சரணடைந்து அவன் திருவடிகளை வணங்க, பிரமனின் கையெழுத்து செல்லாமல் போய் விடும். ஒரு அதிகாரி தண்டிக்கிறார். மேலதிகாரியிடம் போய் முறையிட்டால் அவர் மன்னிக்க முடியுமல்லவா. அப்படித்தன் இதுவும். முருகனை அண்டியவர்களைத் துன்பம் அண்டுவதேயில்லை. துன்பத்திற்குத் துன்பம் கிடைப்பது முருகனடியவர்களிடத்தில்தான். ஆகையால் பன்னிருகை வேலவனை தமிழால் துதித்து வாழ்வு பெற வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

அருமையான விளக்கம் ராகவன்.. வழக்கம்போல..


//ஒரு அதிகாரி தண்டிக்கிறார். மேலதிகாரியிடம் போய் முறையிட்டால் அவர் மன்னிக்க முடியுமல்லவா. அப்படித்தன் இதுவும். //
இந்த மாதிரி யோசித்ததேயில்லை. விதி கர்மாப்படி என்றால் கடவுளை வணங்குவதில் என்ன பயன் என்று எனக்கிருந்த ஒரு சிறிய குழப்பம் உங்களால் தீர்ந்தது. அதற்காக மீண்டும் நன்றி.

said...

// அருமையான விளக்கம் ராகவன்.. வழக்கம்போல..//
நன்றி இராமநாதன்


// //ஒரு அதிகாரி தண்டிக்கிறார். மேலதிகாரியிடம் போய் முறையிட்டால் அவர் மன்னிக்க முடியுமல்லவா. அப்படித்தன் இதுவும். //
இந்த மாதிரி யோசித்ததேயில்லை. விதி கர்மாப்படி என்றால் கடவுளை வணங்குவதில் என்ன பயன் என்று எனக்கிருந்த ஒரு சிறிய குழப்பம் உங்களால் தீர்ந்தது. அதற்காக மீண்டும் நன்றி. //
அதனால்தான் அருணகிரி நாளையும் கோளையும் தள்ளி வைத்து விட்டு வேலை வணங்குவதே வேலையாக இருந்தார். நமக்குத் தெரிந்தது சிறிது. தெரியாதது பெரிது.

said...

அருமை.

நன்றி.

said...

raakavan,
innum suvarasiyamaakkunggaL.

said...

இராகவன். நீங்கள் வழக்கம் போல் அருமையான விளக்கம் தந்துவிட்டீர்கள். நானும் வழக்கம் போல் ஒரு நீளமான பின்னூட்டம் இடப்போகிறேன். :-)

//முகையுடைக்கும் பூம்பா சடைப் பங்கயத் தடத்தில்
புனிற்றுக் கவரி முலை நெறித்துப் பொழியும் அமுதந்தனை
பேட்டெகினம் புனலைப் பிரித்துத் தீம்பால் பருகும் திருச்செந்தூர்"

சுருக்கமாகச் சொல்கிறேன். மொட்டவிழும் தாமரைப் பூவோடையில் கன்று ஈன்ற எருமை இறங்கி உழப்புகையில், அதன் மடியை விரால் மீன் இடிக்க, பாலெல்லாம் தண்ணீரில் சொரிந்தது. அப்பொழுது மலர்களின் மேல் அமர்ந்துள்ள அன்னப் பறவைகள் தண்ணீரில் இறங்கி அந்தப் பாலை மட்டும் பிரித்துக் குடித்ததாம். என்ன அழகான கற்பனை.
//
அருமையான பொழிப்புரை. சற்றே கடுமையான இந்தப் பாடலை மிக்க எளிமையாக்கிக் கொடுத்துவிட்டீர்கள்.

//மால் என்றால் விருப்பம். ஆசை வேறு. விருப்பம் வேறு. விருப்பம் என்பது துன்பம் தராதது. // எங்கு ஐயா நீர் இந்த மாதிரி விஷயங்களைப் பிடிக்கிறீர்கள்? வாரியார் சொன்னதா இதுவும்? வாரியாரை இனி நிறையப் படிக்கவேண்டும் போல் இருக்கிறது. :-)

//துன்பத்திற்குத் துன்பம் கிடைப்பது முருகனடியவர்களிடத்தில்தான்//

:-)

said...

அருணகிரி நாதரின் பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த பொழிப்புரை அருமை, செந்தூரனை புகழ்ந்து பாடினால் உண்டு மோட்சமகரந்த சேர்க்கையின்னு அழகா சொல்லிட்டீங்க!

said...

பாராட்டிய hold at 9000க்கு நன்றி.

மணிகண்டன், நிச்சயமாக இன்னும் மேம்படுத்த முயல்கிறேன்.

// நானும் வழக்கம் போல் ஒரு நீளமான பின்னூட்டம் இடப்போகிறேன். :-) //
இடுங்கள் குமரன். மகிழ்ச்சி எனக்குதான்.

// அருமையான பொழிப்புரை. சற்றே கடுமையான இந்தப் பாடலை மிக்க எளிமையாக்கிக் கொடுத்துவிட்டீர்கள். //
நன்றி குமரன். சொல்லப் போனால் இந்தப் பாடலுக்கே பெரிய விளக்கம் கொடுக்கலாம். ஆனால் அது சொல்ல வந்த கருத்தை மறைத்து விடும் என்பதால் சுருக்கி விட்டேன்.

// அருணகிரி நாதரின் பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த பொழிப்புரை அருமை, செந்தூரனை புகழ்ந்து பாடினால் உண்டு மோட்சமகரந்த சேர்க்கையின்னு அழகா சொல்லிட்டீங்க! //
உண்மை உண்மை உண்மை. சரியாச் சொன்னீங்க வெளிகண்டநாதர்.

said...

நான் நாளும் பாடும் பாடலுக்கு உங்கள் விளக்கவுரை அருமையாக அமைந்துள்ளது. தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகனின் பெருமை தமிழ்மணத்தில் இல்லையே என்ற என் குறை தீர்த்தீர்கள். இப்பதிவை இத்தனை நாள் இழந்தேனே :(

said...

கரடுமுரடான பாடலுக்கு எளிமையான, பாமரனுக்கும் விளங்கும் விளக்கம். தெள்ளத் தெளிந்த படிகநீரோடை சல சலவென ஓடிவருவது போன்ற தமிழ் நடை.
வாழ்க!

said...

// //மால் என்றால் விருப்பம். ஆசை வேறு. விருப்பம் வேறு. விருப்பம் என்பது துன்பம் தராதது. // எங்கு ஐயா நீர் இந்த மாதிரி விஷயங்களைப் பிடிக்கிறீர்கள்? வாரியார் சொன்னதா இதுவும்? வாரியாரை இனி நிறையப் படிக்கவேண்டும் போல் இருக்கிறது. :-) //

குமரன், உண்மையைச் சொல்லி விடுகிறேன். இதை வாரியார் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் இருக்கலாம். தமிழ்ப் பெருங்கடல் அவர். அதைப் பராக்கு பார்க்கின்றவன் நான். அவர் தமிழ்க் கடலை உண்டவர். நான் வெறும் நிலக்கடலை உண்டவன். ஆனால் அன்னார் பால் பெரும் அன்பும் ஆர்வமும் கொண்டவன். தமிழ் படிப்பாளிகள் வாரியாரைப் படிக்காமல் முழுமை அடைய முடியாது என்பது என் கருத்து.

said...

// நான் நாளும் பாடும் பாடலுக்கு உங்கள் விளக்கவுரை அருமையாக அமைந்துள்ளது. தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகனின் பெருமை தமிழ்மணத்தில் இல்லையே என்ற என் குறை தீர்த்தீர்கள். இப்பதிவை இத்தனை நாள் இழந்தேனே :( //

மணியன், உங்கள் விருப்பம் எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஆடும் பரி வேல் அணி சேவல் எனப் பாடும் பணியைத் தந்த கந்தனைப் பாடாமல் போவோமா! நாடாமல் போவோமா! இந்தச் சங்கிலி இன்னும் தொடரும். நீங்களும் பங்கு பெற்று எனது மகிழ்ச்சியைப் பெருக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

said...

// கரடுமுரடான பாடலுக்கு எளிமையான, பாமரனுக்கும் விளங்கும் விளக்கம். தெள்ளத் தெளிந்த படிகநீரோடை சல சலவென ஓடிவருவது போன்ற தமிழ் நடை.
வாழ்க! //

ஞானவெட்டியான், வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் போலத்தான் இதுவும். தமிழ் அறிந்த பெரியவர் நீங்கள் சொல்லும் பொழுது உள்ளம் உவப்புறுகிறது என்பதை சொல்லத்தான் வேண்டும்.

said...

Tiruchendur Muruganuku arogara..