Monday, November 06, 2006

41. மானைத் தேடி

வள்ளி திருமணம் என்பது மிகவும் தத்துவார்த்தமான சுவையான நிகழ்ச்சி. அதைப் படிப்பதும் கேட்பதும் பாடுவதும் இன்பம். வள்ளி திருமணம் சொற்பொழிவு செய்யாத சைவைப் பிரசங்கிகளே கிடையாது. வாரியார் சுவாமிகளாகட்டும் புலவர் கீரனாகட்டும் வள்ளி திருமணத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே தோன்றிய காதல் கதை என்பதும் கூடுதல் இனிமை. அதே நேரத்தில் அதில் பொதிந்து கிடக்கும் தத்துவப் பொருளை அறிய அறிய ஆனந்தம் பெருகும்.

"மானைக் கண்டதுண்டா? எனக்குச் சொந்தமான மான் இங்கே வந்துவிட்டது. அதைக் கண்டதுண்டா?" வேடனின் கேள்வி வள்ளிக்கு.

அதுவோ காடு. மானைக் கண்டதுண்டா என்று கேட்டால்? மான்கள்தான் ஆங்காங்கே ஓடுகின்றனவே. "அடையாளம் சொன்னால் தேடிப் பார்க்கலாம்." சுருக்கமான விடை வள்ளியிடமிருந்து. வேடனின் அழகும் வீரமுள்ள உருவமும் அமுதூறும் இனிய பேச்சும் அவனிடமிருந்து வரும் நறுமணமும் அணிந்திருக்கும் அழகான ஆடைகளும் அவளின் கவனத்தைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. அவள் மனதில் வேறொருவன் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறானே.

வேடன் அடையாளம் சொல்கிறான். "புல்லை மேயாத மான். ஆனால் செந்தமிழ்ச் சொல்லை மேயும். உடலெங்கும் புள்ளி மேவாத மான். ஆனால் முருகனை மனதில் அள்ளி மேவிய மான்."

"இப்படியொரு புள்ளிமானை யாரும் இங்கே பார்த்ததில்லை. புள்ளி மேவாததென்றால் அதென்ன வெள்ளி மானா?" வள்ளி நாச்சியாரின் விடையில் தமிழ்க்குறும்பு தெறித்தது.

தமிழ்க்கடவுளுக்கா பேசச் சொல்லித்தர வேண்டும்? "வெள்ளி மானா? இல்லை. நான் தேடி வந்தது வள்ளி மான். தமிழ்க்குறத்தியாம் கள்ளி மான்." இப்படியெல்லாம் காட்டில் அலைந்து திரிந்து பேசியிருக்கிறார் முருகன்.

இன்றைக்குப் பார்க்கலாம். வயதில் பையனை பல பேர் பல இடங்களில் பார்த்திருப்பார்கள். ஒரு நாள் தட்டச்சுப் பயிலகத்தில். காரணம் அங்கே வேண்டியவர்களும் தட்டச்சு படிப்பதுதான். மற்றொரு நாள் கோலப்போட்டி நடக்கும் இடத்தில். கோலம் போட அல்ல. யாரோ கோலம் போடுவதால். இப்படி ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைப் போலவா முருகன் சுற்றினார்?

காதல் வயப்பட்டு சுற்றுகின்றது நாம். முருகனுமா அப்படி? இப்படி காடு, மலை, அருவிக்கரை என்று சுற்றக் காரணம்? உலக மக்களாகிய நம்மீது அன்பு காட்டுவதலாயே அப்படிச் சுற்றினார். இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். இச்சா சக்தி வள்ளியம்மை. உலக இன்பங்களை முருகன் வள்ளியம்மையின் வழியாக அருள்கிறார். அதற்காகத்தான் வள்ளியைச் சுற்றினார். வள்ளி நாச்சியார் வழியாக அருளினாலும் முருகப் பெருமானே இச்சா சக்திக்கு ஆதாரம்.

அதை நேரடியாகவே அருளலாமே. எதற்காக வள்ளி நாச்சியார் வழியாக அருள வேண்டும்? தாய்மைப் பண்பிற்கு உயர்வு கொடுக்க வேண்டியே முருகன் அப்படிச் செய்தார். பிள்ளை பிறப்பதற்கு வித்திடுவது தந்தைதான். ஆனால் அத்தோடு சரி. பத்து மாதம் சுமப்பதை விடுங்கள். மண்ணில் குழந்தை பிறந்ததுமே, பசிக்கு ஒரு வாய் அமுதூட்ட எதன் துணையுமின்றி தாயால் மட்டுமே முடியும். ஆக கருணையின் முதல் துளியே தாயிடமிருந்துதான் வருகிறது. அதை முருகக் கடவுள் உயர்விக்கவே, இகலோக சுகமனைத்தையும் வள்ளியம்மை வழியாக வழங்குகிறார்.

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே


இப்படி வள்ளியை உய்வித்து அதன் மூலம் உலகோருக்குக் கருணை காட்ட, காடு, மேடு, வயல், அருவி என்றெல்லாம் திரிந்த கந்தனே, இந்த உலகித்துள்ள எல்லா வினைகளையும் எங்களிடமிருந்து ஓட ஓட விரட்டும் கதிர்வேலை நாங்கள் மறவோம். அப்படி மறக்காததால் நாங்கள் இல்லற ஒழுக்கத்தை அரைகுறையாகக் கொண்டு தன்னலம் கூடிக் கெட மாட்டோம். அனைத்தும் முருகனருள்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

ஜிரா...!

முதலில் முருகன் மணந்தது வள்ளியையா ? தெய்வயானையையா ?

நான் படித்தவரையில் வள்ளி என்று ஞாபகம், நண்பர் ஒருவர் சொல்கிறார் இல்லை, முதலில் மணந்தது தெய்வயானை என்று என்று !

விளக்கம் ப்ளீஸ் !
:)

said...

நல்ல பதிவு.

/அனைத்தும் முருகனருள்./

மு.மு.

said...

மானைத் தேடி வந்த பெம்மானைப் பற்றி அழகாகச் சொல்லிவிட்டீர்கள் இராகவன். இதணோடு என்றால் என்ன பொருள்?

said...

// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!

முதலில் முருகன் மணந்தது வள்ளியையா ? தெய்வயானையையா ?

நான் படித்தவரையில் வள்ளி என்று ஞாபகம், நண்பர் ஒருவர் சொல்கிறார் இல்லை, முதலில் மணந்தது தெய்வயானை என்று என்று !

விளக்கம் ப்ளீஸ் !//

:-) நல்ல கேள்வி கோவி. என்னறிவுக்கு எட்டியவரை வள்ளி திருமணம்தான் முந்தியது. திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றந்தான் முதலில் வந்தாலும் அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு இல்லை. சிலப்பதிகாரத்திலும் ஏனைய பழைய நூல்களிலும் வள்ளி திருமணம் பற்றிக் குறிப்புகள் நிறையவே உள்ளன. அதில் வள்ளியை இரண்டாவது மனைவி என்றெல்லாம் சொல்லவில்லை. பிற்கால இலக்கியங்களிலேயே தெய்வயானை திருமணம் காணக்கிடைக்கிறது. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்ததா?

said...

// இலவசக்கொத்தனார் said...
நல்ல பதிவு.

/அனைத்தும் முருகனருள்./

மு.மு. //

என்ன சொல்றீங்க? முண்டக்கண்ணா முழிக்காதன்னா? :-))))))))

said...

// குமரன் (Kumaran) said...
மானைத் தேடி வந்த பெம்மானைப் பற்றி அழகாகச் சொல்லிவிட்டீர்கள் இராகவன். இதணோடு என்றால் என்ன பொருள்? //

அது இதம் என்பதன் மருவூ குமரன். அத்தனை இடங்களையும் வியர்க்க விறுவிறுக்கவா சுற்றினார். இல்லை....சுற்றியதும் இதமே.

said...

//அதில் வள்ளியை இரண்டாவது மனைவி என்றெல்லாம் சொல்லவில்லை. பிற்கால இலக்கியங்களிலேயே தெய்வயானை திருமணம் காணக்கிடைக்கிறது. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்ததா?
//

ஜிரா...!

ஆக கிடைத்துவிட்டது ! நல்லா புரிஞ்சிக்கிட்டேன் !

நன்றி !

said...

வள்ளி திருமணம் சூரபத்மனை வதைத்த பிறகா இல்லை அதற்கு முன்பா?

இதை வைத்து ஓரளவு கண்டுபிடிக்கலாமில்லையா?

said...

பிள்ளை பிறப்பதற்கு வித்திடுவது தந்தைதான். ஆனால் அத்தோடு சரி. பத்து மாதம் சுமப்பதை விடுங்கள். மண்ணில் குழந்தை பிறந்ததுமே, பசிக்கு ஒரு வாய் அமுதூட்ட எதன் துணையுமின்றி தாயால் மட்டுமே முடியும். ஆக கருணையின் முதல் துளியே தாயிடமிருந்துதான் வருகிறது.

சத்தியமான வார்த்தைகள் இப்படி ஒவ்வெருபதிவிலும் ஒரு மாணிக்கத்தை வைக்கிறீர்கள்.பலதடைவை பாராயணம் செய்து விட்டேன் இதனால்தானோ சொன்னார்கள்'பால் நினைந்து ஊட்டும் தாயினும்" என்று. பால் வேண்டும் என்று குழந்தை கேட்ப்பதில்லை ஆனால் தாயே அதுக்கு பசிக்கும் எண்று உணர்ந்து தானாகவே கருணையுடன் ஊட்டுவாள்.

மனையோடு தியங்கி மயங்கிடவோ
நல்ல மனைவி கிடைத்து விட்டாள் என்ற களிப்பில்,உலகத்து மண்,பொன் ஆசைகளில் மயங்கித் தனது நெறியை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே 'மனயோடு தியங்கி, மயங்கிடவோ' என்கிறார்

நல்ல விளக்கம் அளித்தீர்கள் நன்றீ ஜீ.ரா.உங்களுக்கு ஒரு பரிசு உள்ளது என் பதிவில்.

said...

ஜிரா

வள்ளித் திருமணத் தத்துவமும் சேர்த்தே பொருள் உரைத்து விட்டீர்கள்! மிக நன்று!
இச்சா சக்தியின் பின்னால் ஞான சக்தி ஏன் திரிய வேண்டும் என்பதையும் "இதணோடு" காட்டி உள்ளீர்கள்! :-)

said...

வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் குறியீடு. அப்படிப்பட்ட ஆன்மாவை ஆட்கொள்ள வேன்டி முருகன் அருவிக்கரையிலும், தினைப்புனத்திலும், தினப்புனத்தில் புட்களை விரட்டக் கட்டப்பட்ட பரணிலும் (இதண்)
அலைந்து திரிகிறான். சிறிது அலைக்கழித்து, ஆன்மாவின் பக்குவத்தை சோதித்தபின் ஆட்கொள்கிறான்.

இதண் என்றால் தினைப்புனத்தில் கட்டப்பட்டுள்ள பரண் என்றும் ஒரு பொருள் உண்டு.
"வேடர் செழுந்திணை காத்து இதண் மீதிலிருந்த பிராட்டி" -திருப்புகழ்

said...

ஜீரா,


// என்னறிவுக்கு எட்டியவரை வள்ளி திருமணம்தான் முந்தியது. திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றந்தான் முதலில் வந்தாலும் அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு இல்லை. சிலப்பதிகாரத்திலும் ஏனைய பழைய நூல்களிலும் வள்ளி திருமணம் பற்றிக் குறிப்புகள் நிறையவே உள்ளன. அதில் வள்ளியை இரண்டாவது மனைவி என்றெல்லாம் சொல்லவில்லை. பிற்கால இலக்கியங்களிலேயே தெய்வயானை திருமணம் காணக்கிடைக்கிறது. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்ததா? //மிக அருமையான விளக்கம்..

மிக்க நன்றி!