Friday, December 23, 2005

பாவை - பத்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


நோன்பு நோற்பதன் பலன் இன்பம். இன்ப நிலை எய்தினால், நாம் இருக்குமிடமே சொர்க்கம். அப்படி நோன்பு நோற்று சொர்க்கம் புகப் போகும் தோழியே! உனது வீட்டு வாயில் நின்று உன்னை அழைத்தும் கதவைத்தான் திறக்கவில்லை. மறுமொழியாவது தரக்கூடாதா? என்னோடு நமது தோழியர்களும் உனக்காகக் காத்திருக்கின்றார்களே!

(கோதையார் தோழிகளோடு சென்றழைத்த பொழுது சிலர் எழுந்தனர். சிலர் தங்கள் தாயார் எழுப்பவும் எழுந்தனர். சிலர் கதவையே திறக்கவில்லை. கதவைத் திறக்காமல் மறுமொழியும் கொடுக்காமல் உறங்கும் அவர்களை நோக்கி வியப்பில் பாடுகிறார் ஆண்டாள்.)

நறுமணம் கமழும் துளசியைச் சூடிக் கொண்டவனே நாராயணன். அவனுடைய புகழை நாம் பாடிடப் பாடிட மகிழ்வான். அந்த மகிழ்ச்சியில் நமக்குத் தக்கதெல்லாம் தருவான் அவன். அந்தப் புண்ணியனால் முன்னொரு காலத்தில் மடிந்து பட்ட கும்பகருணனை அனைவரும் அறிவார்கள். தூக்கத்தில் பெரியவன் அவன். அந்தக் கும்பகருணன் தன்னுடைய பெருந்தூக்கத்தை எல்லாம் உனக்கே தந்தானோ! இப்படிச் சோம்பல் உடையவளாய்ப் போனாயே!

(சொத்து ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கை மாறுவதுண்டே அப்படி முன்பு கும்பகருணன் அனுபவித்த சொத்து இன்று இவளுக்கு உரிமையானதோ என்று கிண்டலாகக் கேட்கிறார். ஏன்? அளவிற்கு மிஞ்சிய தூக்கம் நன்றன்று. அது வியாதிக்கு அடையாளம். ஆகையால்தான் அவர்களை எப்பாடுபட்டாவது எழுப்பிட முயல்கிறார் கோதை.)

துடைத்து வைத்த தங்கப் பாத்திரம் போல வனப்புடைய பாங்கியே! எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை. எழுந்து நிலையாக வந்து கதவினைத் திறந்திடுவாய் எம்பாவாய்!

(எழுந்ததும் முதலிலேயே முழுவுணர்ச்சி திரும்பாது. ஒவ்வொரு உணர்வாக விழித்துதான் கடைசியில் மொத்த விழிப்பு ஏற்படும். அப்படி மொத்த விழிப்பு ஏற்படும் முன்னால் நாம் எழுந்து நடக்க முற்பட்டால் தட்டுத் தடுமாற வேண்டியதுதான். தூக்கத்தில் யாரேனும் கதவைத் தட்டினால் பதறி எழுந்து விழுந்து எழுந்து இடித்துக் கொண்டு செல்வோம் அல்லவா. அப்படியெல்லாம் தட்டுத் தடுமாறி வராமல் முழு விழிப்புடன் வரவேண்டும் என்பதைத்தான் தமிழில் சுருக்கமாக தேற்றமாய் வந்து என்று சொல்லியிருக்கின்றார். அருமையான தமிழ்ச்சொல் தேற்றம் என்பது.)

அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

said...

அன்பு ராகவன் ஒன்று கவனித்தீர்களா. நாற்றம் என்ற சொல் ஒரு காலத்தில் வாசனையை குறித்தது.பின்னால் அது மருவி வேறு பொருளை கொண்டது. பொன்மலர் நாற்றமுடைத்து
என்ற்போது திரு. குமரன் எனக்கு தேர்வே வைத்து விட்டார்.இப்பொழுது புரிந்து இருக்கும்.
அன்பன் தி.ரா.ச

said...

இராகவன், //எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை.// இது விளங்கவில்லை.

//ஆற்ற அனந்தல் உடையாய்// இதை விளக்கவில்லை.

said...

// அன்பு ராகவன் ஒன்று கவனித்தீர்களா. நாற்றம் என்ற சொல் ஒரு காலத்தில் வாசனையை குறித்தது.பின்னால் அது மருவி வேறு பொருளை கொண்டது. பொன்மலர் நாற்றமுடைத்து
என்ற்போது திரு. குமரன் எனக்கு தேர்வே வைத்து விட்டார்.இப்பொழுது புரிந்து இருக்கும். //

உண்மைதான் தி.ரா.ச. பல சொற்களுக்குப் பொருள் மருவியே வந்திருக்கின்றது. இறைச்சி என்ற சொல் பறவையைக் குறித்துப் பின் பறவையின் கறியைக் குறித்து இப்பொழுது பொதுவாகவே கறியைக் குறிப்பதும் உண்டே. இன்னும் நிறைய சொல்லலாம்.

said...

// இராகவன், //எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை.// இது விளங்கவில்லை. //

குமரன், இது உங்களுக்குப் புரியவில்லையா! வியப்புதான் போங்கள். சரி. சற்று விளக்குகின்றேன்.

தோழி நீ எழுவாய் முதலில் (முன்னிலை). எழவில்லை என்றால் நோன்பு நோற்கும் பயனில்லை.

புரிந்ததா குமரன்?

said...

து