Tuesday, December 20, 2005

பாவை - ஐந்து

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


ஆயவன் அருளால் நாடெங்கும் நல்ல மழை பெய்து நீர் வளம் சிறக்க, நாம் மார்கழி காலையில் எழுந்து அவன் பேர்பாடி நீராடினோம். அப்படித் துவக்கிய மார்கழி மாதத்துப் பாவை நோன்பில் அடுத்து என்ன செய்வது! சொல்கிறேன் கேளுங்கள்.

(ஆயவன் என்று ஏன் சொல்கிறோம்? மாயைக்குத் தலைவன் மாயவன். ஆயர்களுக்குத் தலைவன் ஆயவன். இந்தச் சொல்லை எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் பயன்படுத்தியது இளங்கோவடிகளே. மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் பயன்படுத்தியிருக்கிறார். "மாயவன் என்றாள்.......ஆயவன் என்றாள்...." என்று செல்லும் அந்தப் பாடல்.)

மாயவனை வடமதுரை மைந்தனைத் தூய்மையான நீர் என்றும் பெருக்கெடுக்கும் யமுனை ஆற்றங்கரையின் துணைவனை ஆயர் குலத்தில் சிறந்துதித்த அணிவிளக்கைத் தேவகிக்கு தாய்மைப் பதவி தந்த தாமோதரனை விடிகாலையில் நீராடி நினைத்து தூய மலர்களைத் தூவித் தொழல் வேண்டும். அவனது பெருமைகளை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கொளல் வேண்டும்.

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு உண்டு. கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆண்டாள் பாண்டி நாட்டாள். மதுரையே பாண்டி நாட்டின் தலைநகரம். சிலர் தென்மதுரை என்பார்கள். அப்படிச் சொல்கையில் வடமதுரைதான் மதுரை என்றாகி விடுகிறது. அதாவது கோலிவுட், பாலிவுட் எனும்பொழுது ஹாலிவுட்டுதான் முதன்மை அல்லவா. அது போலத் தென்மதுரை என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது வடமதுரைதான் மதுரை என்ற முதன்மை பெறுகிறது. தனது நாட்டை விட்டுக்கொடுக்கவில்லை ஆண்டாள். வடமதுரை என்று சொல்லி பாண்டி நாட்டு மதுரைதான் முதன்மையான மதுரை என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் போற்றிப் புகழும் கண்ணன் பிறந்த ஊர். இருந்தாலும் அது வடமதுரைதான்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.
"தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்ற சொற்றொடரை கவனிக்க வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்றதும் தாயின் கடமை முடிந்து விடுகிறதா? இல்லையே. பெற்றெடுப்பது ஒரு கடினம் என்றால் வளர்ப்பதும் இன்னொரு கடினம். ஆனால் கண்ணனைப் பெற்றவள் தேவகிதான் என்றாலும் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் யசோதை. அதனால்தான் முதல் பாடலில் நந்தகோபனையும் யசோதையுமே தாய்தந்தையராகச் சொல்கிறார். ஆகையால் தேவகியைச் சொல்லும் பொழுது தாயைக் குடல் விளக்கம் செய்ததோடு நிறுத்தி விடுகிறார். பெரியவர்கள் ஒன்றைச் சொல்லும் பொழுது ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தே பொருள் கொள்ள வேண்டும். அவசரம் கூடாது.)

அப்படி அவனுடைய திருநாமங்களை வாயாலும் மனதாலும் சிந்திக்க வந்திக்க முன்பு செய்த பிழைகளும் நம்மையறியாமல் இனிமேல் செய்யப் போகும் பிழைகளும் நெருப்பில் வீழ்ந்த தூசு போலப் பட்டுப் போகும். ஆகையால் தூயவனை மாயவனை பல பேர் கொண்டு செப்பாய் எம்பாவாய்.

(இந்த இடத்தில் ஒரு இலக்கிய ஒப்பு நோக்கல் செய்ய விரும்புகிறேன். கச்சியப்பரைத்தான் துணைக்கு அழைக்கிறேன். கந்தபுராணத்தில் இப்படிச் சொல்கிறார். "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்". பொதுப்பண்பு என்ன? இறைவனைச் சரணடைந்தால் பாவங்கள் போகும் என்பதே. அப்படியானால் என்ன பாவம் செய்து விட்டும் இறைவனைச் சரணடையலாமா? உண்மையான உள்ளத்தோடு இறைவனைச் சரணடைகின்றவர்களை இறைவன் கண்டு கொள்வார். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்துதான் போவர்.)

அன்புடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

இராகவன்,

சூப்பர்.

தேசிகன்
http://www.desikan.com/blogcms/

said...

அருமையான விளக்கம் ராகவன்.

அந்தக் காலத்திலேயே தெற்கு வடக்கு சண்ட வேறையா? நடக்கட்டும் நடக்கட்டும். :))

said...

நன்றி தேசிகன். நன்றி இராமநாதன்.

இராமநாதன், முதல் பாடலுக்கான பின்னூட்டத்தில் நீங்கள் வசுதேவர்-தேவகி மைந்தன் என்று சொல்லமல் நந்தகோபன் - யசோதை மகன் என்று கொண்டாடியதைச் சொன்னீர்களே. அதற்கு இங்கே "தாயைக் குடல் விளக்கம்" செய்த்ததில் விளக்கம் சொல்லியிருக்கின்றேன். கவனித்தீர்களா?

said...

// அந்தக் காலத்திலேயே தெற்கு வடக்கு சண்ட வேறையா? நடக்கட்டும் நடக்கட்டும். :)) //

இராமநாதன். அது திருப்பாவைக்கு முந்தியே வந்த சிலப்பதிகாரத்துக்கும் முன்னாடியே இருந்திருக்கு. எக்கச்சக்கமா.

இதுல பாத்தீங்கன்னா...இன்னைக்கு khanna அப்படீன்னு சொல்றவங்கள பழைய தமிழ்ல கன்னர்களுன்னு கூப்பிடுவாங்க. அவங்க நம்மோட நட்பா இருந்திருக்காங்க. அப்போ தமிழ்நாட்டோட பிரச்சனை செஞ்சவங்கள்ள ஒரிசா, பெங்கால், பீகார், ஹிமாச்சல் பிரதேஷ் காரங்கதான் நெறையா. ஆனா கங்கைக் கரை கன்னர்கள் நட்பா இருந்ததைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

said...

///வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்///

இங்க தான் கோ.இராகவன்
இங்க நிக்கறாங்க ஆண்டாள் அம்மா

சும்மா பாடிட்டு போயிடக் கூடாது.மனசால கூடவே சிந்திக்கணும்.

அருமை கோ.இராகவன்.

நீங்களும் குமரனும் இவ்விஷயமா ரொம்ப நல்லா எழுதறீங்கம்மா.

என்ன ஒரு சிரமம்.
வயசானதால புத்தகத்தில் வாசிக்கிறது மாதிரி இணையத்தில வாசிக்க முடியல.

ரெண்டு பேருமா பெருசுங்களயும்
கவனத்தில வெச்சு புஸ்தகம் எதுனா போடுங்கம்மா .

said...

என்ன தேசிகன் சார். திருப்பாவை பற்றி நானும் தான் எழுதுறேன். அந்தப் பக்கமே வந்த மாதிரி தெரியலையே. இல்லை வந்து படிக்கிறீங்க ஆனா பின்னூட்டம் போடறதில்லையோ? அப்படின்னா சரி. படிச்சு தவறிருந்தா சொல்லுங்க.

said...

இராகவன், முதலில் தட்டச்சுப் பிழைகள். மற்றவை பின்னால். :-)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

said...

ஆயவன் எனக்குப் புதிய சொல். அறிமுகத்திற்கு நன்றி இராகவன்.

//ஆண்டாள் பாண்டி நாட்டாள். மதுரையே பாண்டி நாட்டின் தலைநகரம். சிலர் தென்மதுரை என்பார்கள். அப்படிச் சொல்கையில் வடமதுரைதான் மதுரை என்றாகி விடுகிறது. அதாவது கோலிவுட், பாலிவுட் எனும்பொழுது ஹாலிவுட்டுதான் முதன்மை அல்லவா. அது போலத் தென்மதுரை என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது வடமதுரைதான் மதுரை என்ற முதன்மை பெறுகிறது. தனது நாட்டை விட்டுக்கொடுக்கவில்லை ஆண்டாள். வடமதுரை என்று சொல்லி பாண்டி நாட்டு மதுரைதான் முதன்மையான மதுரை என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் போற்றிப் புகழும் கண்ணன் பிறந்த ஊர். இருந்தாலும் அது வடமதுரைதான்.
//

இந்தக் கருத்து மிக்கச் சுவையாக இருக்கிறது. ஆனால் ஆண்டாளின் மற்றப் பாடல்களைப் பார்க்கும் போது அப்படித் தோன்றவில்லை. இங்கு போக நாச்சியார் திருமொழியில் 'கருப்பூரம் நாறுமோ' பாசுரத்தில் ஒருமுறை வடமதுரை என்று பயன்படுத்தியிருக்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் 'மதுரை' தான். :-)

நான் தான் அந்தப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் போது மதுரை என்று வரும் இடங்களில் எல்லாம் 'வடமதுரை' என்று வலிந்து விளக்கம் கொடுத்துள்ளேன். நான் 'தென்மதுரை'யில் பிறந்ததனாலோ என்னவோ? :-)

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனுக்கு அருமையான விளக்கம். //பெரியவர்கள் ஒன்றைச் சொல்லும் பொழுது ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தே பொருள் கொள்ள வேண்டும்.அவசரம் கூடாது// நீங்களும் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. தாயைக் குடல் விளக்கம் என்று சொல்லும் போது தேவகியைச் சொன்னாலும் தாமோதரன் என்று சொல்லும் போது யசோதையைத் தான் குறிக்கிறார். இருவரையும் வெளிப்படையாக வேறு கூறவில்லை. என் பதிவில் இந்தப் பாடல் வரும்போது இன்னும் கொஞ்சம் இதனை அலசவேண்டும்.

said...

//திருப்பாவைக்கு முந்தியே வந்த சிலப்பதிகாரத்துக்கும் //

இராகவன், எது முந்தி என்று எப்படி அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்? எனக்கு இரண்டின் காலமும் தெரியாது. அதனால் கேட்கிறேன்.

கன்னர்களைப் பற்றி ஏற்கனவே படித்துள்ளேன். ஆனால் khanna தான் கன்னர்கள் என்று தோன்றவில்லை. தகவலுக்கு நன்றி.

said...

//ரெண்டு பேருமா பெருசுங்களயும்
கவனத்தில வெச்சு புஸ்தகம் எதுனா போடுங்கம்மா//

மதுமிதா அக்கா. முதலில் இணையத்தில் எழுதி முடிக்கிறோம். பின்னர் உங்களிடம் மேல் தகவல்கள் பெற்று புத்தகமாகவும் போட்டுவிடலாம். :-)

said...

// இராகவன், முதலில் தட்டச்சுப் பிழைகள். மற்றவை பின்னால். :-) //

நன்றி குமரன். இதை ஒவ்வொரு பாவுக்கும் செய்ய வேண்டும்.

// பெரியவர்கள் ஒன்றைச் சொல்லும் பொழுது ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தே பொருள் கொள்ள வேண்டும்.அவசரம் கூடாது// நீங்களும் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. தாயைக் குடல் விளக்கம் என்று சொல்லும் போது தேவகியைச் சொன்னாலும் தாமோதரன் என்று சொல்லும் போது யசோதையைத் தான் குறிக்கிறார். இருவரையும் வெளிப்படையாக வேறு கூறவில்லை. என் பதிவில் இந்தப் பாடல் வரும்போது இன்னும் கொஞ்சம் இதனை அலசவேண்டும். //

குமரன் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. இங்கு தேவகியை மட்டுமே குறிக்கின்றார் என்றுதான் தோன்றுகின்றது.

தேசிகன், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நீங்களும் திருப்பாவை ரசிகர்தானே. கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்.

said...

// இராகவன், எது முந்தி என்று எப்படி அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்? எனக்கு இரண்டின் காலமும் தெரியாது. அதனால் கேட்கிறேன். //

சிலப்பதிகாரம் காலத்தான் முந்தியது. கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். திருப்பாவை அதற்குப் பின்னேதான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

// கன்னர்களைப் பற்றி ஏற்கனவே படித்துள்ளேன். ஆனால் khanna தான் கன்னர்கள் என்று தோன்றவில்லை. தகவலுக்கு நன்றி. //
என்னிடமும் அதற்கான ஆதாரமில்லை. இருக்கலாம் என்று நினைத்துச் சொல்லியதுதான்.