Friday, December 23, 2005

பாவை - பதினொன்று

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


நிறைந்த மந்தையில் கன்றுகளை ஈன்ற பல இளமையான பசுக்களைக் கறந்தவர்கள் ஆயர்கள். அமைதியான பசுக்களோடு பழகும் ஆயர்களே, எதிர்த்து வருகின்றவர்களின் திறமையெல்லாம் அழியும் வகையில் போர் புரிந்திடும் குற்றமற்ற வீரர்கள். அந்தக் கோவலர்தம் பொற்கொடியே எங்கள் தோழி! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாய்!

(பசுக்களோடு பழகுகின்ற கோனார்கள் மிகவும் அமைதியானவர்கள். கோவலர் என்றால் கோ+வலர். பசுக்களைப் பெருக்குவதிலும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். அவர்கள் அமைதியாக வாழ்க்கையை அமைத்திருந்த பொழுதும், நாட்டிற்கு ஆபத்து என்று வருகையில் பால் சுமந்த கையில் வேல் சுமந்து எதிரிகள் தங்கள் ஆற்றலை முழுதும் இழக்கும் விதமாகப் போரிடும் திறம் கொண்டவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே!)

புற்றில் வாழ் அரவு அறிவாயா? நெளிநெளியென்று வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாம்பை ஒத்த இடையுடையவளே! விண்ணிலே மேகம் வந்த விடத்து மோகம் கொண்டுத் தோகை விரித்தாடும் மயிலின் வனப்பைக் கொண்ட அழகுடையவளே! தொடரும் உறக்கம் விட்டு எழுந்திருந்து வெளியே வா!

(பாம்புக்கு எதிரி மயில். விடத்துப் பாம்பைக் கண்ட விடத்துக் கொத்தித் தின்பது மயில். இந்த இரண்டிலும் உள்ள நல்ல பண்புகளை ஒன்றாகக் கொண்டவளே என்று தோழியைப் பாராட்டுகிறார். எதிரெதிர்த் துருவங்களாக இருந்தாலும் நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்க.)

நானும் நமது தோழிமார் எல்லாரும் வந்து உனது வீட்டின் முற்றத்தில் இப்பொழுது நிற்கின்றோம். வந்ததோடு இல்லாமல் கருமுகில்களின் அழகிய அடர்வண்ணனின் புகழ் பாடுகிறோம். அப்படி நாங்கள் அன்போடு பாடுவது உன் காதுகளில் விழவில்லையா? செல்வப் பெண்ணே! விடிந்த பிறகும் ஆடாமல் அசையாமல் பேசாமல் எதற்காக இந்த உறக்கம் கொள்வாய் எம்பாவாய்!

(வாசலில் இருந்து அழைத்தாயிற்று. வரவில்லை. கதவையும் தட்டியாகி விட்டது. தோழியின் தாயிரிடத்தில் சொல்லி அழைத்தாயிற்று. இருந்தும் ஒரு பயனில்லை. இப்பொழுது வீட்டிற்குள்ளேயே புகுந்தாயிற்று. இன்னமும் உறங்குகிறாள். கார்மேக வண்ணன் புகழை இவ்வளவு பாடியும் நாடியும் இருக்கும் பொழுது அசைவேயில்லாம் என்னத்திற்காக இப்படித் தூங்குகிறாள் தோழி என்று ஆண்டாள் வியந்து பாடுகிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

3 comments:

said...

அருமையான விளக்கம் இராகவன்.

said...

நன்று! மிக நன்று!!

said...

நன்றி குமரன். நன்றி ஞானவெட்டியான்.