Sunday, December 04, 2005

யார் யாருக்கு என்னென்ன மாலை

யார் யாருக்கு என்னென்ன மாலை என்று இந்தப் பாடலில் விளக்குகிறார் அருணகிரியார்.

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாந் மயிலேறும் ஐயன்
காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே


ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை - ஆலன் என்றால் விரிசடைக் கடவுள். ஏன் அந்தப் பெயர். தமிழர்கள் விரிசடைக் கடவுள் என்று வணங்கிய சிவபெருமானுக்கு இன்றைய பெயர் தட்சிணாமூர்த்தி. அதாவது தெற்கத்திக் கடவுள். அவர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து எல்லாருக்கும் நல்வழி போதிக்கின்றவர். ஆகையால் அவருக்கு ஆலன் என்றும் பெயர்.

இந்த விரிசடைக் கடவுளின் கழுத்தில் மாலையான அணிந்து கொள்வது எதை? வெண்டலையை. அதாவது மண்டையோட்டை. ஆணவம் ஆண்டவனிடம் செல்லாது. தன்னிடம் ஆணவம் காட்டிய பிரம்மனைத் தண்டிக்க ஐந்தாவது தலையைக் கிள்ளினார். அந்த மண்டையோட்டை அணிந்து கொண்டு ஆணவம் கொடிது என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார்.

அகிலமுண்ட மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் - அகிலம் என்றால் இங்கே மண். மண்ணை உண்டவர் யார்? கண்ணனாக மண்ணை உண்டு காட்டிய திருமாலுக்கு அணிகலன் எது? தண்ணந் துழாய். துழாய் என்றால் துளசி. அதென்ன தண்ணந் துழாய்? உண்மையிலேயே துளசி சூடானது. ஆனால் நீலமேக வண்ணன் குளிர்மையானவன். கடலில் படுத்திருக்கிறான் அல்லவா. அந்தக் குளிர்ச்சி பொருந்திய திருமாலின் திருமார்பில் பட்டுக் குளிர்ந்த துளசி என்கிறார் அருணகிரி.

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதியாகிய விரிசடைக் கடவுளுக்கு வில்வம். வில்வம் குளிர்ச்சி பொருந்தியது. குளுமையான திருமாலுக்கு வெப்பம் மிகுந்த துளசி. ஆகையால்தான் வயிற்றுப் பிரச்சனை வரும் பொழுது வில்வம் மருந்தாகிறது. வயிறு வெப்பமான பகுதி. அங்கு பிரச்சனை வருவதும் வெப்பம் கூடும் பொழுது. அதனால் குளுமை மிகுந்த வில்வம் மருந்தாகிறது. குளிர்ச்சியான நீர்க்கோர்வை போன்ற நோய்களுக்கு வெப்பமேற்றும் துளசி மருந்தாகிறது.

மயிலேறும் ஐயன் காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்பும் - மயிலேறும் ஐயன் முருகன். தமிழ் மொழியில் ஐ என்றால் கடவுள். அன் என்பது ஆண்பால் விகுதி. மயிலேறியான முருகனுடைய காலுக்கு அணிகலங்கள் எவை? வானவர்கள் விழுந்து வணங்குவதால் அவர்களுடைய முடிகளும் (கிரீடம்) கடம்ப மாலையும் முருகன் திருவடியை அடைகின்றன. ஆகையால் அவைகளே முருகனுடைய திருவடிக்கு அணிகலங்கள்.

கையில் வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே - இந்த வரியை மிகவும் ஆழப் புரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால் வேலுக்கு அணிகலங்கள் கடலும் சூரனும் கிரவுஞ்ச மலையும் என்று பொருள் படும். சூரன் கடலில் மறைந்த பொழுது கடலை வற்றச் செய்தது வேல். சூரனை ஈடுடலாக்கி சேவலும் மயிலுமாக்கியது வேல். கிரவுஞ்ச மலையைத் தூளாக்கியது வேல். ஆனால் இதற்கான விளக்கத்தில்தான் பெரும் பொருள் பொதிந்திருக்கிறது.

பிறவி என்பது கடல். "பிறவிப் பெருங்கடல்" என்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர். அந்தக் கடலைக் கடக்க வேண்டும். கடக்க விடாமல் தடையாக இருப்பவை ஆணவமும் மாயையும். இரண்டும் அகன்றால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம்.

முதலில் போக வேண்டியது மாயை. இந்த உலக மாயை போனால் நமக்கு ஆணவம் இருப்பது தெரியும். அறிவைக் கொண்டு ஆணவத்தை அறுத்தால் கருமம் தொலைந்து பிறவிப் பெருங்கடல் கடக்கும். இதற்கு வேண்டியதெல்லாம் ஞானம். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை விலகும். பிறகு ஆணவன் தொலையும். பிறகு கருமமாகிய பிறவி இன்பமாகும். இதைத்தான் வள்ளுவர் தெளிவாக "பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்கிறார். முருகனை என்று இல்லை. நீங்கள் எந்தத் தெய்வத்தை நம்புகின்றீர்களோ அந்தத் தெய்வத்தை வழிபடுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

Dear Raghavan
Alakala vizhathay undathlkooda Sivanay alan endrum kuralama. tulasi ,vilvam oppidu migavum arumai.ungalukku theriuma tirupathyel margazhi mathathil balajikku kalay vilvathal archanai seivargal. anban TRC

said...

இராகவன், இன்னுமொரு அழகான பாடலும் அதற்கேற்ற விளக்கமும். ஆலன் என்றவுடன் எனக்கும் ஆலமுண்டவன் என்ற பொருள் தான் தோன்றியது. ஆலின்கீழ் அமர்செல்வன் என்பதும் பொருத்தமே.

துளசி வெப்பமானது என்பது தெரியும் என்றாலும் இதுவரை உணர்வில் வெளிப்படையாய் நிற்கவில்லை. துளசி உண்ண வெப்பாமாய் இருந்தாலும் துளசி மாலை அணிந்தால் குளிர்ச்சியாக இருக்கும் - அதனைத் தான் இது நாள் வரை தண்ணந்துளாய் என்பதற்குப் பொருளாய் புரிந்துகொண்டிருந்தேன்.

துளசியையும் வில்வத்தையும் பொருத்தி விளக்கியது அருமை.

நாலாவது வரிக்குக் கொடுத்த விளக்கத்தை இன்னொரு முறை படிக்கவேண்டும். கொஞ்சம் ஆழமாய் இருக்கிறது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன். :-)

said...

// Dear Raghavan
Alakala vizhathay undathlkooda Sivanay alan endrum kuralama. //

TRC, அப்படிப் பொருள் கொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன். ஆலகாலன் என்றால் நீங்கள் சொன்ன பொருள் பொருந்தி வரலாம். ஆலன் என்ற சொல்லுக்கு ஆலமரத்தின் கீழமர்ந்தோன் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

// ungalukku theriuma tirupathyel margazhi mathathil balajikku kalay vilvathal archanai seivargal. //
இதுவும் எனக்குச் செய்திதான். திருப்பதியில்தான் பிரதோஷ பூஜை நடக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

திருப்பதி கோயிலைப் பற்றி பல சர்ச்சைகள் இருக்கின்றனவே. கந்தபுராணத்தில் கூட "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்று கச்சியப்பர் எழுதியிருக்கின்றார். எது எப்படியோ எல்லாம் ஒன்றுதான்.

said...

// நாலாவது வரிக்குக் கொடுத்த விளக்கத்தை இன்னொரு முறை படிக்கவேண்டும். கொஞ்சம் ஆழமாய் இருக்கிறது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன். :-) //

படிச்சிட்டு வாங்க. வந்து கருத்து சொல்லுங்க. காத்திருக்கிறேன் குமரன். புரியலைன்னா எதுன்னு குறிப்பிட்டுக் கேளுங்க.

said...

புரியலைன்னு சொல்லலை இராகவன். கொஞ்சம் ஆழமா அழகா இருக்கு; அதனை இன்னொரு முறை படிக்கவேண்டும் என்று தான் சொன்னேன். :-)

said...

கடைசி வரிக்கான விளக்கத்தை இன்னொரு முறை படித்தபின் புரிந்தது ராகவன். கடலுக்கும் சூரனுக்கும் மலைக்கும் மிக நல்ல விளக்கம்.

ஒரே ஒரு கேள்வி. வேல் தூளாக்கியது கிரௌஞ்ச மலையைத் தானே. இந்தப் பாடலில் மேரு என்று வருகிறதே?

said...

// ஒரே ஒரு கேள்வி. வேல் தூளாக்கியது கிரௌஞ்ச மலையைத் தானே. இந்தப் பாடலில் மேரு என்று வருகிறதே? //

மேரு என்பது மலையின் உருவகம். கிரவுஞ்ச மலையும் உயர்ந்த மலையே. ஆனால் மாயையில் நிறைந்திருந்தது. இங்கு மேரு என்பது மலை என்பதற்கு ஆகுபெயராக வந்துள்ளது.

said...

துளசி, வில்வம் பற்றிச் சொல்லியிருப்பது அருமை. என் கேள்வியைக் குமரன் கேட்டுட்டார் (மேரு பத்தி). பாட்டு ஒவ்வொண்ணும் விளக்கத்தோட படிக்கப் படிக்கப் பரவசம் :) நன்றி ராகவரே.