Thursday, December 15, 2005

திருப்பாவை நோன்பு

மார்கழி மாதம் நாளை தொடங்கப் போகின்றது. இந்த மார்கழியில் ஆண்டாள் எழுதிய திருப்பாவைக்கு விளக்கம் சொல்ல முடிவு செய்துள்ளேன். வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தேடித் தொடங்குகின்றேன்.

கடவுள் வாழ்த்து

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு


திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை. அத்துணை புகழ் பெற்ற நூல். தென்பாண்டி நாட்டில் தோன்றிய அமுதநூல். ஆண்டாள் என்று அன்போடு அழைக்கப்படும் கோதை நாச்சியார் அருளிய அருள் நூல். பெருமை மிகு நூல். மார்கழித் திங்கள் தோறும் பாவையர் பாடி வாழ்த்தும் நூல்.

கண்ணனையே தனது மன்னனாக எண்ணி இன்புற்று அந்த இன்பம் தமிழோடு கலந்து பொங்கிப் பெருகி வழிந்த திருப்பாக்களே திருப்பாவை என்று புகழப்படுகின்றன. ஒரு பெண்ணின் நிலையில் எழுந்த உயர்ந்த அகத்திணை பக்தி நூல்.

கோதையார் தென்பாண்டி நாட்டார். திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். ஆகையால் அவருடைய பாக்களில் தென்னாட்டுத் தமிழ்ச் சொற்கள் கலந்து மேலும் சுவைக்கும்.

மொத்தம் முப்பது பாக்கள். நாளுக்கு ஒரு பா என்று மார்கழியின் முப்பது நாட்களுக்கும் முப்பது பாக்கள். ஒவ்வொன்றும் கண்ணனைப் புகழ்ந்து சிறக்கும். காதலும் பக்தியும் கலந்த சிறந்த இந்த நூலிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆம். திருப்பாவையைத் தொகுத்த உய்யக்கொண்டான் வேங்கடவனோடு ஒன்றிய நிலை மாறாதிருக்கப் பாடுகிறார் ஒரு கடவுள் வாழ்த்து.

அன்னவயற் புதுவை ஆண்டாள் - நெல் விளையும் வயல்வெளிகளைக் கொண்ட புதுமை பல நிறைந்த திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள்
அரங்கற்குப் பன்னு திருப்பாவை - அரங்கனைப் புகழ்ந்து பாடும் இந்த திருப்பாவை
பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் - பதியம் என்றால் ஒன்றிருந்து ஒன்று உண்டாக்குவது. அப்படி ஒவ்வொரு செய்யுளாக உண்டாகப் பட்ட இந்தப் பல பாக்களைப் பாடிக் கொடுத்தாள்.

திருப்பாவையை ஆண்டாள் எப்படிக் கொடுத்தாராம்? ஏட்டில் எழுதியா? கல்லில் செதுக்கியா? இல்லை. சொல்லில் இழைத்துப் பாட்டாகக் கொடுத்தாராம். இறைவனை வழிபடச் சிறந்த வழிகளில் ஒன்று இறைவன் புகழைப் பாடுவது. ஆகையால்தான் ஆண்டாள் திருப்பாவையைப் பாட்டில் பாடினார்.

பூமாலைச் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு - அப்படி திருப்பாவையைப் படிக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் பூமாலையைக் கட்டிக் கட்டி தனது தோளிலிட்டு அழகு பார்த்து விட்டு பிறகு மாதவனுக்குச் சூடிய ஆண்டாளை நினைத்துக் கொள்ளுங்கள். இறைவன் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அதனோடு சேர்த்து ஆண்டாளையும் சொல்வதிலொரு இன்பம்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியே - கேசவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய் - அருமையாக பாட வல்லவளும் பலவித வளையல்களை கைகளில் அணிந்து கொண்டவளுமாகிய ஆண்டாளே
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு - பாடியும் நாடியும் வேங்கடவனோடு ஒன்று பட்ட விதியை என்றும் மாறாமல் இருக்கச் செய்வாய்.

பாடியும் நாடியும் வேங்கடவனை நாடியாயிற்று. உணர்வும் உயிரும் அவனோடு கலந்து ஒன்றாயிற்று. இந்த இன்ப நிலை மாறாமல் இருக்க வேண்டியது ஒன்றே இனி தன்னுடைய கடமை என்று நினைவுறுத்தித் துவக்குகிறார் திருப்பாவையை.

அன்புடன்,
கோ.இராகவன்
பி.கு : நாளை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாவைப் பார்க்கலாம். நீங்கள் உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள்.

20 comments:

said...

Dear Raghavan,
Karumbu thinpatharku
kooli kodukkum oore aal neegal than. Avaludan kath irukirom. TRC

said...

இந்த இன்ப நிலை மாறாமல் இருக்க வேண்டியது ஒன்றே இனி தன்னுடைய கடமை //

ராகவன் இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்களுடன் என்னால் பைபிள் கதைகளை சொல்ல முடியுமான்னு தெரியலை.

எந்த விஷயமானாலும் அனுபவிச்சி எழுதறீங்க ராகவன். வாழ்த்துக்கள்.

said...

நல்ல விடயம் ராகவன்.வாழ்த்துகள்.

தொடர்ச்சியா படிக்க ஆவலுடன் இருக்கேன். எனக்கும் இது மாதிரியான ஆன்மீக பாடல்களை புதுக்கவிதையாக வடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கருத்தைச் சிதைக்காமலலும், முன்னதன் புகழை கெடுக்காமலும் எழுத வேண்டும் என்பதாலே கொஞ்சம் தயக்கம் + தாமதம்...

said...

// Dear Raghavan,
Karumbu thinpatharku
kooli kodukkum oore aal neegal than. Avaludan kath irukirom. TRC //

நன்றி TRC. உங்களைப் போன்றவர்கள் படித்துச் சொல்லும் கருத்துகளும் ஊக்கங்களுந்தான் எனக்குக் கூலி. :-)

said...

// ராகவன் இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்களுடன் என்னால் பைபிள் கதைகளை சொல்ல முடியுமான்னு தெரியலை.

எந்த விஷயமானாலும் அனுபவிச்சி எழுதறீங்க ராகவன். வாழ்த்துக்கள். //

நன்றி ஜோசப் சார். வேற்று மதப் பாடலானாலும் அது தமிழ் என்று வந்து படித்து கருத்துச் சொல்லும் உங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழச் செய்கின்றது.

ஜாலங்களைச் சேர்க்க வேண்டுமென்று எதையும் சேர்ப்பதில்லை. வருவதை எழுதுவதுதானே. அவ்வளவுதான்.

நீங்கள் உங்கள் பாணியிலேயே எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துக் கொள்கின்றோம். உங்களுக்கு வராத தமிழா?

said...

// நல்ல விடயம் ராகவன்.வாழ்த்துகள். //
நன்றி முத்துக்குமரன்.

// தொடர்ச்சியா படிக்க ஆவலுடன் இருக்கேன். எனக்கும் இது மாதிரியான ஆன்மீக பாடல்களை புதுக்கவிதையாக வடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கருத்தைச் சிதைக்காமலலும், முன்னதன் புகழை கெடுக்காமலும் எழுத வேண்டும் என்பதாலே கொஞ்சம் தயக்கம் + தாமதம்... //
முத்துக்குமரன், தயக்கத்தை விடுங்கள். உங்களால் கண்டிப்பாக முடியும். தீந்தமிழ்ப் பாக்களில் இல்லாததா! விரைவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு முயற்சியைத் தொடங்கியே தீர வேண்டும். இது எனது அன்புக் கட்டளை.

said...

திருப்பாவை பற்றி படிக்கவேண்டுமென்பது ரொம்பநாள் ஆசை. தினமும் ஒன்று என்றால் விளக்கமாகவும் படிக்கலாம், நிதானமாக்வும் படிக்கலாம். நல்ல தேர்வு ராகவன்

said...

// திருப்பாவை பற்றி படிக்கவேண்டுமென்பது ரொம்பநாள் ஆசை. தினமும் ஒன்று என்றால் விளக்கமாகவும் படிக்கலாம், நிதானமாக்வும் படிக்கலாம். நல்ல தேர்வு ராகவன் //

நன்றி தாணு. ஆனால் இதில் ஒரு சிறு பிரச்சனை. வைணவ சம்பிரதாயத்தில் எனக்குத் தெரிந்தது சரணாகதி மட்டுமே. ஆகையால் என்னுடைய விளக்கங்கள் தமிழின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.

said...

வாழ்த்துகள் இராகவன். கோதை தமிழ் ஐயைந்தையும் உங்கள் இனிய தமிழ் விளக்கங்களில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடக்கமே மிக நன்றாக இருக்கிறது. தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

அப்படியே திருப்பாவையைப் பற்றிய என் வலைப்பதிவுகளுக்கும் ஒரு விளம்பரம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதியுடன் (எப்போது கேட்டேன் என்கிறீர்களா? எப்போதும் அது உண்டுதானே!)

இராகவனின் இனிய தமிழுரையுடன் திருப்பாவையை சுவைக்க விரும்பி இங்கு பின்னூட்டம் இட்டுள்ள அன்பர்களே! பின்னூட்டம் விடாவிட்டாலும் திருப்பாவையை சுவைக்கும் அன்பர்களே! இராகவன் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ அடியேனுக்குத் தெரிந்த அளவு கோதைத் தமிழை நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன். http://godhaitamil.blogspot.com/ வந்து படித்து தங்கள் மேலான கருத்துகளை கூறுங்கள்.

said...

//திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை// யாரைத் தாக்குகிறீர்கள் இராகவன்? திருப்பாவை அறிமுகம் என்ற தலைப்பில் பல பதிவுகள் எழுதும் என்னையா? :-) அப்படியென்றால் அடுத்த பதிவு முதல் அறிமுகம் என்று தலைப்பிடாமல் வேறு தலைப்பில் எழுதிவிடுகிறேன். உண்மையில் திருப்பாவைக்கு அறிமுகம் தேவையில்லை தான். தமிழில் ஓரளவாவது ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் எல்லாருக்கும் திருப்பாவை என்ற பெயராவது தெரிந்திருக்கும்.

//திருவில்லிபுத்தூர்// ச்ரிரங்கத்தைத் திருவரங்கம் என்னும் போது பொருள் சிதைவு ஏற்படுவதில்லை. ஆழ்வார்களும் திருவரங்கம் திருவேங்கடம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ச்ரிவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் என்று சொன்னதில்லை. வில்லிபுத்தூர் என்றே சொல்லியிருக்கிறார்கள். திருவில்லிபுத்தூர் என்றால் திருவில்லாத (செல்வம் இல்லாத, பெருமை இல்லாத...) புத்தூர் என்ற பொருளும் வருகிறது. அதனால் ச்ரிவில்லிபுத்தூர் என்று சொல்லுங்கள். வடமொழி கலக்காமல் எழுதவேண்டும் என்று எண்ணினால் வில்லிபுத்தூர் என்று மட்டும் சொல்லிவிடலாம். :-)

//திருப்பாவையைத் தொகுத்த உய்யக்கொண்டான் // திருப்பாவையுடன் கூடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் (ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்) அத்தனையும் தொகுத்தவர் உய்யக்கொண்டார் இல்லை. அவருடைய ஆசிரியரான நாதமுனிகள். உய்யக்கொண்டார் திருப்பாவைக்கான இந்தத் தனியன் எழுதியவர்.

புலவர்களில் இரண்டாம் வகையான குறை கண்டுபிடிக்கும் புலவனென என்னை எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :-) மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். அது தானே நீங்களும் விரும்புவது.

said...

முதல் பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

said...

ராகவன், முதல் பாவை எழுதி விட்டேன், உங்கள் பதவுரைக்கு நாளை பொறுத்திருக்கிறேன்.

said...

// அப்படியே திருப்பாவையைப் பற்றிய என் வலைப்பதிவுகளுக்கும் ஒரு விளம்பரம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதியுடன் (எப்போது கேட்டேன் என்கிறீர்களா? எப்போதும் அது உண்டுதானே!) //

குமரன் இதையெல்லாம் கேட்க வேண்டுமா? எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே!

// யாரைத் தாக்குகிறீர்கள் இராகவன்? திருப்பாவை அறிமுகம் என்ற தலைப்பில் பல பதிவுகள் எழுதும் என்னையா? :-) அப்படியென்றால் அடுத்த பதிவு முதல் அறிமுகம் என்று தலைப்பிடாமல் வேறு தலைப்பில் எழுதிவிடுகிறேன். //

அடடா! தாங்குகின்றவனைத் தாக்குகின்றவன் எனலாமா! யதார்த்தமாய் எழுதியதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.

said...

// திருவில்லிபுத்தூர் என்றால் திருவில்லாத (செல்வம் இல்லாத, பெருமை இல்லாத...) புத்தூர் என்ற பொருளும் வருகிறது. அதனால் ச்ரிவில்லிபுத்தூர் என்று சொல்லுங்கள். வடமொழி கலக்காமல் எழுதவேண்டும் என்று எண்ணினால் வில்லிபுத்தூர் என்று மட்டும் சொல்லிவிடலாம். :-) //

மன்னிக்கவும் குமரன். நீங்கள் எப்படி இப்படித் தவறாக நினைத்தீர்கள் என்று தெரியவில்லை. திருவில்லிபுத்தூர் என்பது திருவில்லாத புத்தூர் என்று பொருள் தரவே தராது. எனக்குத் தெரிந்த இலக்கணப் படி.

திருவிலி என்றிருந்தாலோ திருவில்லா என்றிருந்தாலோ மட்டுமே நீங்கள் குறிப்பிடும் அவப்பொருள் வரும். மற்றபடி திருவில்லிபுத்தூருக்கு எந்தக் குறையும் இல்லை. இதுதான் என் கருத்து.

said...

// புலவர்களில் இரண்டாம் வகையான குறை கண்டுபிடிக்கும் புலவனென என்னை எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :-) மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். அது தானே நீங்களும் விரும்புவது. //

கண்டிப்பாகக் குமரன். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவே வேண்டும்.

நான் முன்பே சொன்னது போல திருப்பாவையை வைணவ சம்பிரதாயத்தில் அனுகாமல் தமிழ் என்ற முறைமையில் அனுகுவதால் ஏதேனும் மாறுபாடு இருப்பின் கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும்.

said...

// ராகவன், முதல் பாவை எழுதி விட்டேன், உங்கள் பதவுரைக்கு நாளை பொறுத்திருக்கிறேன். //

வெளிகண்ட நாதரே. பாவை ஒன்றிற்கான பதவுரை போட்டாகி விட்டது. படித்துச் சொல்லுங்கள்.

said...

நல்ல வேலை ராகவன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மரத்தடி யாகூ குழுமத்தில் ஜெயச்ரீ திருப்பாவையை நாளுக்கொன்றாகத் தட்டச்சிட்டு இட்டார். அப்பாடல்கள் தொடர்பாக விவாதங்களும் நடந்தன. ஹரியண்ணா நிறையப் பாடல்களுக்கு விளக்கங்களும் கொடுத்தார். சுட்டி கைவசம் இல்லை. ஜெயச்ரீ- நீங்க படிச்சா கொஞ்சம் குடுங்க. ப்ளீஸ்.

இராகவன், நீங்கள் மரத்தடியில் உறுப்பினர் என்றால் நீங்களே கேளுங்கள்.

இப்போதைக்கு - http://maraththadi.com/article.asp?id=844

தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு ஒரு குறிப்பாகவே மேலேயிருக்கும் விதயத்தை எழுதினேன்.

-மதி

said...

குறிப்பிற்கு நன்றி மதி. மரத்தடிக்குச் சென்று பார்க்கிறேன். அங்கு நான் உறுப்பினர் இல்லை. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம்.

said...

http://thinnai.com/ar1216043.html
http://thinnai.com/ar1223044.html
http://thinnai.com/ar0106054.html
http://thinnai.com/ar0113053.html

ithayum padithu parungal...

said...

உயர்திரு இராகவன் அவர்களே

தங்களின் இறைத்தொண்டுக்குத் தலைவணங்குகிறேன்.....

எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு வளநலங்கள் பல வாரி வழங்கட்டும்..

தங்களின் பணி சிறக்க இந்தச் சிறியேனின் வாழ்த்துக்கள்...