Friday, December 23, 2005

பாவை - பன்னிரண்டு

கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


தோழி! உனது வீட்டைப் பற்றி நீ அறிவாயா? செல்வம் மிகுந்த உன் அண்ணனிடத்தில் மாடுகள் ஏராளமாக உண்டு. பசுக்கள் மட்டுமன்று எருமைகளுந்தான். அந்த எருமைகளின் பால்வளம் அறிவாயோ! தன்னுடைய கன்றிற்கு இரங்கி தானகவே மடியிலிருக்கும் பாலினைத் தரையினில் பொழிந்திடும் எருமைகள். அப்படிப் பொழிந்த பாலானது தரையை நனைத்துச் சேறாகக் குழம்பியிருக்கும் வீட்டினை உடைய நற்செல்வனின் தங்கையே எழுந்திராய்!

(எருமைகள் பால் நிறைந்து மடி கனந்து நிற்கும். தொழுவத்தில் எருமைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவற்றின் கன்றுகள் அவிழ்த்து விடப்பட்டு திரிந்து கொண்டிருக்கும். அப்படித் திரியும் கன்றுகள் பசியெடுக்கும் வேளைகளையில் "அம்மா" என்று கனைத்துக் குரலெழுப்பும். அந்தக் குரலைக் காதில் கேட்ட மாத்திரத்திலேயே பாசம் மிகுந்து மடியிலிருக்கும் பாலைப் பொழிந்திடும் அந்த எருமைகள்.

வழக்கமாக மாட்டுத் தொழுவங்களில் மூத்திரச் சேறாக இருக்கும். அப்படியில்லாமல் பால் பொழிந்த சேறாக இருக்கும் அளவிற்குச் செல்வச் சீமாட்டியாக இருந்திருக்கின்றனர்கள் அந்தக் காலத்து ஆயர்கள்
.)

தோழி! இது மார்கழி மாதம். விடியற் பொழுது. உனக்காக உனது வீட்டின் வாசற்கடையில் வந்து நிற்கும் எங்கள் தலைகளில் பனி விழுகிறது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாது உனது வீட்டு வாயிலில் நின்று தென்னிலங்கை மன்னனை அழித்த மாயவனாம் எங்கள் மனதிற்கு இனியவனைப் பாடுகின்றோமே! நீயும் எங்களோடு சேர்ந்து வாய் திறந்து பாடாயோ!

(மார்கழி என்பது பனிக்காலம். பனியில் நனைந்து கொண்டேனும் நோன்பு நோற்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சி ஆண்டாளுக்கு. இறைவனை வாயால் பாடக் கூடாது. மனத்தால் பாட வேண்டும். அப்படிப் பாடுவதற்கு அந்த இறைவன் மனதுக்கினியவன் என்று அறிய வேண்டும். மனதுக்கு இனியதைத்தான் உணர்ந்து பாட வேண்டும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் மனதிற்கு இனியனவாகவா இருக்கின்றன? அப்படி இல்லாதவைகளைப் பாடினால் அது இனிமையாக இருக்காது.

ஒரு தவறைக் காண்கிறோம். அது மனதிற்குத் துன்பமாக இருக்கிறது. அந்தத் தவறைப் பாடலில் பாடினால் சோகமாகவோ அல்லது ஆவேசமாகவோ அமையும். இறைவனை வணங்கும் பொழுது மனது அமைதியாகி இன்புறும். அதனால்தான் மனதுக்கினியான் என்று இறைவனுக்குப் பெயர் சூட்டுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி
.)

தோழி! இத்தனை அழைக்கின்றோமே! இனியாவது எழுந்திருப்பாயா? இதென்ன பேருறக்கம். இப்படி நீ தூங்கிக் கொண்டேயிருந்தால் மற்ற இல்லத்தாரும் உனது தூக்கத்தின் பெருமையை அறியக் கொள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

'மனத்துக்கு இனியானை'க்கும், 'அனைத்து இல்லத்தாரும் அறிந்து'வுக்கும் புதுமையான விளக்கம் இராகவன். நன்றாய் இருக்கிறது.

said...

மனத்திற்கு இனியன் விளக்கம் மிகவும் நன்று திரு.ராகவன் . புதுகோணத்தில் அனுகுமுறை. அன்பன் தி.ரா.ச

said...

அருமையான விளக்கம் இராகவன். மூணு பதிவா நண்பர்(பி)களையே கூப்பிடறாங்களே..
//தோழி! இத்தனை அழைக்கின்றோமே! இனியாவது எழுந்திருப்பாயா? இதென்ன பேருறக்கம். இப்படி நீ தூங்கிக் கொண்டேயிருந்தால் மற்ற இல்லத்தாரும் உனது தூக்கத்தின் பெருமையை அறியக் கொள்வாய் எம்பாவாய்!//
நான் ஆண்டாளின் தோழியாய் இருந்திருப்பேனோன்னு இப்ப சந்தேகம் வருது.

said...

இராமநாதன், ஆண்டாள் 10 பாடல்கள் தோழியர்களை எழுப்பப் பாடியிருக்கிறார். நீங்கள் மட்டுமல்ல நான் கூட ஆண்டாளின் தோழி தான். எத்தனை முறை எழுப்பினாலும் எழுந்திருப்பதில்லை.

said...

ஆமாம் குமரன்,

மாலியத்தில் பகவான் கிருட்டிணன்(பரமாத்மா) மட்டிலுமே ஆண்பால். மற்ற அனைத்து சீவராசிகளுமே(சீவாத்மாக்கள்) பெண்பால்தான்.

இங்கே "தென்னிலங்கை வேந்தன்" எனக் குறித்த மருமம் என்ன? என வினவும்போழ்து எனக்குக் கிட்டிய விளக்கம். ஒத்துக்கொள்வீர்களோ? மாட்டீர்களோ? என்னும் தயக்கத்தால்தான் காலம்கழிந்த விளக்கம்.

தென்னிலங்கை என்பது தென்+இல்+அம்+கை என விரியும்.

தென்=தெற்கேயுள்ள
இல்=இல்லம்
அம்=அழகிய
கை=முகுளம்

அதாவது நம் தலையில் தென் பகுதியை இல்லமாக்கிக் கொண்டிருக்கும் அழகிய முகுளம் எனப் பொருள்படும்.

இப்பொழுது பாடலில் பொருத்திப் பார்க்க,"தென்னிலங்கையாம் முகுளத்தின் அரசனாம் அரக்ககுணமுடைய மனத்தை வென்ற மனத்துக்கினியானை" எனக் கொள்ளலாமல்லவா?

said...

உண்மைதான் ஐயா. திருமால் இயத்தில் (வைணவத்தில்) மட்டுமல்ல. சைவத்திலும் அந்த கருத்து இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். திருவெம்பாவையில் எழுப்பப்படும் பெண்கள் எல்லாம் ஜீவராசிகள் தானே? இறைவன் மட்டுமே ஆண் (புருஷோத்தமன்). மற்றவர்களும் மற்றவைகளும் அவனைச் சார்ந்தே இருப்பதால் பெண்பாலர் என்பது பல சமயங்களில் (கிறித்துவத்துலும்?) இருக்கும் கருத்து.

பெண்ணியலார் இதனைத் தவறாய் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

இதே நேரத்தில் இறைவன் ஆணா பெண்ணா என்ற கேள்விக்கு நம்மாழ்வார் சொல்லும் பதில் நினைவுக்கு வருகிறது.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்

என்பார்.

இந்தப் பாசுரத்திற்கு ஒரு வைணவ ஆசாரியர் (இராமானுஜர்?) விளக்கம் கொடுக்கும் போது, ஒரு சிஷ்யன் எழுந்து 'சுவாமி. இறைவன் புருஷோத்தமன் என்றல்லவா வேதங்கள் சொல்கின்றன. ஆழ்வார் அவன் ஆணல்லன் என்கிறாரே?' என்று கேட்க, அதற்கு ஆசாரியர் 'ஆழ்வார் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்தும் இறைவன் புருஷோத்தமன் என்பதே. இல்லையென்றால் ஆணல்லன் பெண்ணல்லள் அல்லால் அலியுமல்லது என்றல்லவா கூறியிருப்பார். அன் என்ற ஆண்பால் விகுதியைக் கூறியிருப்பதால் அவன் புருஷோத்தமன் என்று தான் கூறுகிறார். அதே நேரத்தில் அவன் எல்லா விதமான பால்களாகவும் இருக்கிறான் என்பதையும் வலியுறுத்துகிறார்' என்று விடை சொன்னாராம்.

தென்னிலங்கை என்பதற்கு நீங்கள் தந்துள்ள விளக்கம் அருமை. நம் தலையில் தென் பகுதி என்பது வலப்புறத்தைக் குறிக்கிறதா? மனம் தலையின் வலப்புறத்தில் இருக்கிறது என்பது சமயாசாரியர்களின் கருத்தா? நான் இதுவரைப் படித்ததில்லை.

இராகவனும் நானும் இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து உள்ளோம். அதனால் சில நேரங்களில் நீங்கள் சொல்வதற்கு எதிராய் சந்தேகம் கேட்போம். அதனை எங்கள் மறுப்பாய் எண்ணவேண்டாம். சிறியவர்கள் கேட்கும் சந்தேகமாய்க் கொண்டு கருணை கூர்ந்து மறுமொழி கூறுங்கள். தயங்கவேண்டாம்.

said...

அன்பு குமரன்,

நன்றி. தலையை இரு பகுதிகளாக்கின், உயரத்தில் இருப்பது கைலாயமாம் வட பகுதி. தெற்கேயுள்ளது தென்பகுதி. முகுளம் இருப்பது தென் பகுதியில்.

மனம்:நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)
என்று கூறினார்கள். எப்படி மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ
ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.சூக்கும உறுப்பு.
கண்ணுக்குத் தெரியாது.

"மனம் தலையில் உள்ளது" என்பது சமயாச்சாரியர்களின் கருத்து அல்ல. ஞான(யோக) மார்க்கத்தில் அழுந்தி முத்தெடுக்கும்போது கிடைத்த அசரீரிகள். அநு+பவங்கள்.
சிந்தித்துத் தானே உணரவேண்டியவை.

said...

படித்துப் பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பல. இங்கே ஒரு பெரிய கருத்தாய்வே நடக்கிறது. நானும் புகுந்து பார்க்கின்றேன்.

said...

// அருமையான விளக்கம் இராகவன். மூணு பதிவா நண்பர்(பி)களையே கூப்பிடறாங்களே.. //

இராமநாதன், இன்னும் இருக்கு. நெறைய இருக்கு.

said...

// நான் ஆண்டாளின் தோழியாய் இருந்திருப்பேனோன்னு இப்ப சந்தேகம் வருது. //

நானுந்தான். தூங்கி எழுந்து மீண்டும் தூங்கி மீண்டும் எழுந்து. ஹி ஹி.

said...

// இப்பொழுது பாடலில் பொருத்திப் பார்க்க,"தென்னிலங்கையாம் முகுளத்தின் அரசனாம் அரக்ககுணமுடைய மனத்தை வென்ற மனத்துக்கினியானை" எனக் கொள்ளலாமல்லவா? //

கொள்ளலாம். கொள்ளலாம். இவ்வளவு விளக்கமாக நீங்கள் சொன்ன பிறகு கொள்ளாமல் எப்படி! அருமையான விளக்கம் ஞானவெட்டியான். நான் மிகவும் ரசித்தேன்.