Sunday, December 11, 2005

சூடாத நாடாத தொழாத பாடாத

இறைவனை பல பெயர்களில் பல விதங்களில் உலகெங்கும் மக்கள் வழிபடுகின்றார்கள். அப்படி இறைவனை வணங்கி மகிழவும் இறையருள் வேண்டும். அதைத்தான் இந்தப் பாடலில் விளையாட்டகக் கூறுகிறார் அருணகிரி.

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் குன்றெரிந்த
தாடாளனே தென்றணிகைக் குமர நின்றண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே!


இறைவனின் பண்புகளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது. அருட்பெருஞ்சோதியான அந்தத் தனிப்பெருங்கருணை அனைத்தையும் கடந்தும் அனைத்தின் உள்ளும் இருக்கிறது. நம்முடைய புலன்களால் முழுமையாக அறிய முடியாததுமான அந்தக் கருணா மூர்த்தியை நாம் எப்படி வணங்குவது?

உடலால் உணர்வால் வணங்க வேண்டும். உணர்வு என்பது மனதில் எழுவது. மனதுக்குள் இறைவனை நிறுத்தி வழிபட வேண்டும். பூசலார் எப்படி வழிபட்டார் தெரியுமா?
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே!

இறைவனை உள்ளக் கோயிலில் நிறுத்தி அவனை சுகமாக நினைத்து அன்பெனும் மஞ்சன நீர் தெளித்து வழிபடுகிறார். அப்படி வழிபட வேண்டும். வழிபாடுகளில் மிகவும் தேர்ந்த நிலை அது.

ஆனால் இதையெல்லாம் செய்யும் மனத்தின்மையில்லை என்றால் என்ன செய்வது? உடலால் வழிபடலாம். இது தாழ்ந்ததாகாது. இதுவும் இறைவனை வழிபடும் ஒரு முறை. எண்சாண் உடம்பால் இறைவனைப் பணிந்து வணங்க வேண்டும்.

தலையால் வணங்க வேண்டும். இறைவன் திருவடிகளில் பணிந்து வணங்க வேண்டும். அருவமும் உருவமும் இல்லாத இறைவனை காண்கின்ற காட்சிகளில் எல்லாம் கண்டு மகிழ்ந்து இன்புற வேண்டும். எங்கும் நிறைந்தவன் காட்சியில் இல்லாமலா போவான்!

அருணகிரிநாதர் முதலில் இறைவனடி பணியாதிருந்தார். பிறகு இறையருளால் இறைவனடி பணிந்தார். ஆகையால் முதலில் பணியாமைக்கு காரணம் தெரியாமல் புலம்புகிறார்.

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் - இந்தப் பிரமனுக்கு நான் என்ன தவறு செய்தேன்!
குன்றெரிந்த தாடாளனே - மாயையாகி நின்ற கிரவுஞ்ச மலையைக் வேலெறிந்து வென்றவனே!
தென்றணிகைக் குமரா நின்றண்டையந்தாள் - தணிகை மலை மீது குடிகொண்டுள்ள குமரனே! உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகள்
சூடாத சென்னியும் - சென்னி என்றால் உச்சி. இறைவனின் திருவடிகளைப் பணியும் பொழுது நாம் அந்தத் திருவடிகளைச் சூடிக் கொள்கிறோம் அல்லவா. அப்படிச் சூடாத தலையும்.........
நாடாத கண்ணும் - இறைவனைக் காண்பது எப்படி? அனைத்தையும் கடந்த இறைவனைப் புறக்கண்களால் காண முடியுமா? வெறும் கண்களுக்கு அகப்படும் வகையில் அத்தனை எளியவரா ஆண்டவர்? அப்படி அகப்பட்டால் அவருக்கும் மற்ற பொருட்களுக்கும் என்ன வேறுபாடு? இந்தக் கேள்விகள் யாருக்கும் எழாமல் இருக்காது. இதற்கும் உண்டு ஒரு எளிய விளக்கம். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் அல்லவா. அப்படி எங்கும் நிறைந்தவன் கல்லிலும் புல்லிலும் நம்முடைய சகமனிதனிலும் நிறைந்திருப்பான் அல்லவா. ஆக நோக்குமிடமெங்கும் இறைவனைக் காண வேண்டும். ஆனால் அனைவருக்கும் இந்த இறையன்பு எளிதில் கைவராது. அப்படிப் பட்ட நிலையில் நல்லவை என்று நாம் கருதுகின்றவற்றிலாவது இறைவனைக் கண்டு மகிழலாம். "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்று கவியரசர் எழுதியிருக்கின்றாரே. அப்படி இறைவனை நல்லவற்றில் கண்டு மகிழாத கண்களையும்.......
தொழாத கையும் - கண்ட பின்னும் அன்பு சொரிந்து தொழாத கைகளையும்.........
பாடாத நாவும் - தீந்தமிழில் சொற்களை அடுக்கி அன்போடு பாடாத நாவையும்.........இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும். ஏன்? இறைவனை எந்த மொழியிலும் வணங்கலாம். தமிழில் வணங்குவதால் என்ன பலம். தமிழ் நாம் பேசும் மொழி. தமிழை நமது மூளை விரைவாகப் புரிந்து கொள்ளும். ஆகையால் நாம் சொல்கின்றதனை உணர்ந்து சொல்வதற்கான வாய்ப்புகள் நிறைய. ஆகையால்தான் இறைவனை அவரவர் தாய்மொழிகளில் வணங்குவது சிறப்பு. அப்படி நமது தாய்மொழியான தமிழில் பாடாத நாவையும்.........
எனக்கே தெரிந்து படைத்தனனே - எனக்கென்று படைத்தானே!

முருகா! உன்னுடைய திருவடிகளைச் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் படைத்தானே பிரம்மன். அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? இருந்தும் உனது கருணையைத் தந்து என்னை ஆட்கொண்டாயே! அந்த அன்பிற்கு அன்பு செலுத்துவது ஒன்றே கைமாறு.

அன்புடன்,
கோ.இராகவன்

7 comments:

said...

நன்றி சிந்து. கண்டிப்பாக செய்ய வேண்டும். இது பொறுக்கு மணிகள்தான். கந்தரலங்காரம் முழுமைக்கும் பொருள் எழுதி புத்தகமாக இடலாம் என்று நினைக்கின்றேன்.

said...

இந்த பாடல் எனக்கு நிச்சயமாய் பொருந்துகிறது. எத்தனைப் படித்து என் செய? நிற்க அதற்குத் தக என்று தானே பொய்யாமொழிப்புலவர் சொல்லியிருக்கிறார். அப்படியின்றி, எப்போதும் அவனடி நினைக்காமல் எப்போதோ நினைக்கும் என்னைப்பற்றிப் பாடப்பட்டது தான் இந்த பாடல் என்று நினைக்கிறேன். :-(

அருணகிரியாருக்கு அருணைக்கந்தன் அருள் வந்தது. என்று எனக்கு அவன் கருணை வருமோ?

said...

//இறைவனை உள்ளக் கோயிலில் நிறுத்தி அவனை சுகமாக நினைத்து அன்பெனும் மஞ்சன நீர் தெளித்து வழிபடுகிறார். அப்படி வழிபட வேண்டும். வழிபாடுகளில் மிகவும் தேர்ந்த நிலை அது.// ஓ.. இதைத் தான் மஞ்சள் தண்ணி நீராடி வழிபடுதல் என்பதோ!

//ஆனால் இதையெல்லாம் செய்யும் மனத்தின்மையில்லை என்றால் என்ன செய்வது? உடலால் வழிபடலாம். இது தாழ்ந்ததாகாது. இதுவும் இறைவனை வழிபடும் ஒரு முறை. எண்சாண் உடம்பால் இறைவனைப் பணிந்து வணங்க வேண்டும்.// ஓ.. இதைத்தான் அங்க பிரதட்சனம் என்று சொல்வதோ!

//தலையால் வணங்க வேண்டும். இறைவன் திருவடிகளில் பணிந்து வணங்க வேண்டும். // ஓ.. இதைத் தான் சாஷ்டாங்கமா தரையில் விழுந்து கடவுள் பாதம் தொழ வேண்டும் என்பதோ!

//இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் அல்லவா. அப்படி எங்கும் நிறைந்தவன் கல்லிலும் புல்லிலும் நம்முடைய சகமனிதனிலும் நிறைந்திருப்பான் அல்லவா. ஆக நோக்குமிடமெங்கும் இறைவனைக் காண வேண்டும். ஆனால் அனைவருக்கும் இந்த இறையன்பு எளிதில் கைவராது. அப்படிப் பட்ட நிலையில் நல்லவை என்று நாம் கருதுகின்றவற்றிலாவது இறைவனைக் கண்டு மகிழலாம். "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்று கவியரசர் எழுதியிருக்கின்றாரே.// ஓ.. அதனால் தான் தீப ஆராதனை செய்து நம் கண்ணுக்கு இறைவனை புலப்பட செய்தனரோ!

//தொழாத கையும் - கண்ட பின்னும் அன்பு சொரிந்து தொழாத கைகளையும்.........//ஓ... அதனால் தான் இரு கைக் கூப்பி அவனை நிந்தை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனரோ!

//தீந்தமிழில் சொற்களை அடுக்கி அன்போடு பாடாத நாவையும்.........// ஓ... அதனால் தான் பக்தி பஜனையுடன் வழிபப்பாடு செய்வதென்பதோ!

சாமி கும்படறப்ப இதெல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் தெரியாம, ஏதோ கும்பலோட கும்பலா கோய்ந்தா போட்டு தான் பழக்கம். ஆனா ஓவ்வொன்னுக்கும் மூலக்காரணம் சொல்லி அர்த்தமுள்ள இந்து வழிப்பாட்டு முறையை விளக்கனதுக்கு, இல்ல இந்த பதிவை படிச்சு நான் தெரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கணும் ராகவா!

said...

// அருணகிரியாருக்கு அருணைக்கந்தன் அருள் வந்தது. என்று எனக்கு அவன் கருணை வருமோ? //

குமரன் இப்படிக் கலங்கலாமா? அவன் கருணை என்றைக்கு இல்லாமல் இருந்தது. அருணகிரிக்கே வேண்டும் என்று தேடும் பொழுதுதான் கிடைத்தது. கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும் என்றார். ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார் என்று ஒரு பாட்டே உண்டே.

said...

// சாமி கும்படறப்ப இதெல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் தெரியாம, ஏதோ கும்பலோட கும்பலா கோய்ந்தா போட்டு தான் பழக்கம். ஆனா ஓவ்வொன்னுக்கும் மூலக்காரணம் சொல்லி அர்த்தமுள்ள இந்து வழிப்பாட்டு முறையை விளக்கனதுக்கு, இல்ல இந்த பதிவை படிச்சு நான் தெரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கணும் ராகவா! //

நன்றி வெளிகண்ட நாதர். அத்தனையும் அருணகிரி அன்னைக்கே ஓலைல அச்சடிச்சி வெச்சுட்டுப் போனது. நான் காப்பிரைட் பத்தி யோசிக்காம எடுத்துப் போட்டுக்கிட்டு இருக்கேன். இதையெல்லாம் தமிழில் இருந்து எடுத்து எழுதுவது எனக்குக் கிடைத்த பெருமை.

said...

இராகவன்,

மிக அருமையாக விளக்கியிருக்கிறிர்கள். சிந்து சரவணன் சொன்னது போல ஒரு தொகுப்பாக வேணும் அளிக்க வேண்டும்; நீங்களுல் யோசித்து வருகிறிர்கள் என்பது பற்றி மகிழ்ச்சி. "சூடாத சென்னி" - திருநீறு பூசாத தலை என்று அர்த்தம் கொண்டிருந்தேன். அதற்கு இந்த மாதிரி அழகான விளக்கமும் வரும் என்று இன்றுதான் புரிந்து கொண்டேன்.

ரங்கா.

said...

//கந்தரலங்காரம் முழுமைக்கும் பொருள் எழுதி புத்தகமாக இடலாம் என்று நினைக்கின்றேன்.//

எப்போ? எப்போ?????