Tuesday, December 13, 2005

புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும்

திரும்பத் திரும்ப அருணகிரி சொல்லும் விஷயம் இறைவனைக் கண்டு தொழுதல். பார்க்கும் கண்கள் இரண்டு. ஒன்று புறக்கண். மற்றொன்று அகக்கண். அந்தப் புறக்கண்களும் இரண்டு. அகக்கண் ஒன்று. அந்த ஒரு அகக்கண்ணும் என்றும் திறந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அகமும் புறமும் திறந்து இறைவனின் திருந்து எழிலைக் காண வேண்டும்.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே


மாலோன் மருகன் என்று அருணகிரி தனது நூல்கள் அனைத்திலும் முருகனைப் புகழ்கிறார். ஏன்? அது சமய ஒற்றுமையை மேம்படுத்த. சைவ வைணவச் சண்டை நிறைந்திருந்த காலத்தில் தோன்றியவர் அருணகிரி. எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த கொள்கையை உடைய மகான் அவர். தன்னுடைய மதம் உயர்ந்தது என்று நம்பும் வேளையில் மற்ற மதம் தாழ்ந்தது என்று நினைக்காத நல்லவர் அவர். அனைவரையும் அனுசரித்து ஒற்றுமையுடன் செல்வதே சிறந்தது என்பதை உணர்ந்தவர் அவர். அதனால்தான் மாலோன் மருகன் என்று அடிக்கடி புகழ்கின்றார்.

மன்றாடி யார்? மன்றாடுவது என்று எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மன்று என்றால் அவை. அவையில் ஆடுவதே மன்றாடுவது. ஆனால் இன்றைக்கு மன்றாடுவது என்ற சொல்லின் பொருள் ஒருவரிடம் கெஞ்சிக் கேட்பது என்று திரிந்து விட்டது.

அவையில் அனைவருக்குமாக அம்பலத்தில் ஆடுகிறவர் சிவபெருமான். விரிசடைக் கடவுள் ஆடலில் உலகம் அடங்கும். அப்படி அம்பலத்தில் நின்று ஆடும் ஈசனின் மைந்தனே முருகப் பெருமான். அந்த முருகப் பெருமான் வானவர்கள் அனைவருக்கும் மேலான தேவன். தேவாதி தேவன் என்றால் சிவபெருமான். "தேவ தேவ தேவாதிப் பெருமானே" என்றால் முருகப் பெருமான். தந்தைக்கு மந்திரம் சொன்னவன் அல்லவா!

மெய்ஞானம் என்பதை முழுதுணர்த்தும் தெய்வம் முருகப் பெருமான். மெய்ஞானம் உணர்ந்தவர்க்கே வீடுபேறு கிட்டும். பிறப்பும் இறப்பும் கடந்த நிலை அது. "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார் அருணகிரி. பிறப்பும் இறப்பும் அற்ற முருகப் பெருமானே வீடுபேறு அளிக்க வல்லவர். ஆகையால்தான் மெய்ஞான தெய்வம் என்று புகழ்கிறோம்.

சேலார் வயற்பொழில் என்றால் மீன்கள் துள்ளி விளையாடும் வயல்வெளிகள் என்று பொருள். அத்தகைய வயல்வெளிகளை உடைய ஊர் திருச்செங்கோடு. "சீர்கெழு செந்திலும் செங்கோடும் ஏரகமும் நீங்கா இறைவன்" என்று இளங்கோவடிகள் முருகப் பெருமானை புகழ்கிறார். இதிலிருந்து திருச்செங்கோட்டின் பெருமை விளங்கும். திருச்செங்கோட்டிலும் பழநியிலும் நவபாஷாணச் சிலையாக நிற்கிறார் முருகர். பழநியில் கருத்த சிலையென்றால் திருச்செங்கோட்டில் வெளுத்த சிலை. அத்தகைய பெருமையுடைய திருச்செங்கோட்டில் இருக்கும் முருகனைக் காண நாலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகன்.

புறக்கண்ணால் கண்டு மகிழ மெள்ள மெள்ள அகக்கண் திறக்கும். அகக்கண்ணில் இறைவனைக் காணும் மெய்ஞான அறிவு வேண்டும். இரண்டு புறக்கண்களால் காண்பதை விட நாலாயிரம் கண்கள் இருந்தால் இந்த மெய்ஞான அறிவு விரைவில் உய்க்குமே என்று பிரம்மனைத் திட்டுவது போல விளையாட்டாக முருகப் பெருமானின் மீதுள்ள அன்பை வெளிக்காட்டுகிறார் அருணகிரி.

அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

ஆஹா :)

said...

மாலோன் மருகன் //


இதுக்கு literal meaningஎன்ன ராகவன்?

said...

மணியன், உங்கள் ஆஹா என்ற பாராட்டே, நீங்கள் இந்தப் பதிவை எந்த அளவிற்கு ரசித்திருக்கின்றீர்கள் என்று கூறுகின்றது. நன்றி.

said...

// மாலோன் மருகன் //

இதுக்கு literal meaningஎன்ன ராகவன்? //

ஜோசப் சார். மால் என்றால் திருமால். கடலும் கடல் சார்ந்த பகுதியான நெய்தல் நிலக் கடவுள். அவருடைய மருமகன் என்று பொருள்.

அச்சுத சகோதரி என்று உமையைக் கொண்டாடுவார்கள். உமை மகன் மாலோன் மருகன் தானே.

said...

ஆஹா ஆஹா

said...

பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
இம்மா உலகில் இராகவன் உரையில்
அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே.

said...

// ஆஹா ஆஹா //

மணியன் ஒரு ஆஹா...குமரன் இரு ஆஹா! ஆஹா!!!!!

// பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
இம்மா உலகில் இராகவன் உரையில்
அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே. //

பிரமாதம் பிரமாதம். அருமையா எழுதியிருக்கீங்க. அது சரி. இராகவன் எங்க சொல்றான்? எல்லாம் பழைய நூல்ல இருந்து உருவுறான். ஆனாலும் அதுல ஒரு பெருமைதான.

said...

நல்லதொரு விளக்கம்(பக்தி மார்க்கத்துக்கு)

எனது கருத்து:

>> அந்த ஒரு அகக்கண்ணும் என்றும் திறந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

உணர்வு விழிக்க அகக்கண் திறக்கும்.

>> மன்று என்றால் அவை.

மன்று என்றால் வெளி(வெட்டவெளியில் வரும் வெளி). அது நம் உடலில் சிரத்தினுள் உள்ள சிதாகாயம். அதனுள் ஆடும் சிவனாகிய சீவன். இதுவே சிவனின் ஆட்டம். ஆட்டம் ஓய்ந்தால் எல்லாம் காலி.

>>மெய்ஞானம் உணர்ந்தவர்க்கே வீடுபேறு கிட்டும். பிறப்பும் இறப்பும் கடந்த நிலை அது.

அதற்குத்தான் அண்டத்தோடு நின்றுவிடாதீர்கள். பிண்டமாகிய உடலின் உள்ளேயும் தேடுங்கள் என்கிறேன்.

said...

ஞானவெட்டியான் ஐயா. தங்களை ரொம்ப நாளாக் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருந்தோம்.

said...

ராகவன்,
அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது).

குமரன் சொன்ன பாட்டை வழிமொழிஞ்சுக்கிறேன். :)) அடிக்க வராதீங்க.

said...

இராமநாதன்,

இன்னொரு தடவை இராகவன் வலைப்பதிவுக்கு வந்து வழிய மொழிஞ்சீங்கன்னா அவ்வளவுதான். அவர் ரஷ்யாவுக்கே வந்து உங்களைப் போட்டுத் தள்ளிடுவார்ன்னு நினைக்கிறேன் :-)

குமரன்

said...

Dear Raghavan'

I am not able to understand the essence of Baghavath Geetha despite reading several books on geetha. But on hearing Kannadasan's song in Karnan where he depicts the geetha in 18 lines "dharmathy enney kalangidum Vijaya" i am able to know the full meaning of Geetha. Similarly your naration of kanthar Alankaram makes me to understand better. Varthygalin pughazhchikku adangatha varnanaykal.Vazhkaikku vendiya nerigal ungal kanthar alankara varigal. TRC

said...

அன்பு குமரன்,

சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை சென்று வந்தேன். காசியில் உருத்திர தீக்கை(தீட்சை) கிட்டியது. அம்புடுத்தான்.

said...

// சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை சென்று வந்தேன். காசியில் உருத்திர தீக்கை(தீட்சை) கிட்டியது. அம்புடுத்தான். //

ஆகா! அது பத்தியெல்லாம் சொல்லுங்களேன். கேட்கக் காத்திருக்கின்றோம்.

said...

// ராகவன்,
அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது). //
முருகான்னு எத்தனை தடவை சொன்னா அலுக்குது இராமநாதன்? ;-)

// குமரன் சொன்ன பாட்டை வழிமொழிஞ்சுக்கிறேன். :)) அடிக்க வராதீங்க. //
இதுக்கு நான் ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. குமரன் ஏற்கனவே சொல்லீட்டாரு. ஹா ஹா

said...

// முருகன் தனிவேல் முனிநன் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
//
??? சரியா?

ரஷ்யாவிற்கு வரும் ஐடியா இருக்குதா? :))

said...

// // முருகன் தனிவேல் முனிநன் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
//
??? சரியா? //

"முருகன் தனிவேல்முனி நம் குருவென்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்று பிரித்தால் இன்னும் எளிதாக விளங்கும்.

நல்ல சுவையான மறுமொழி இராமநாதன். மிகவும் ரசித்தேன்.

// ரஷ்யாவிற்கு வரும் ஐடியா இருக்குதா? :)) //
ரஷ்யாவுக்கா? எங்கங்க இராமநாதன். இந்தாருக்குற சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமே திட்டத்த தீட்டிக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருக்கேன். சிங்கப்பூரு மலேசியாவுல ஆளு இருக்காங்க. பிரச்சனையில்லை. யூரோப்புன்னா இங்கிலீஸ் வெச்சிச் சமாளிச்சிக்கிரலாம். ரஷ்யாவுல எனக்கு நாலே நாலு பேருதான் தெரியும்.
1. கோபர்சேவ்
2. போரிஸ் எல்த்சின்
3. விளாடிமிர் புடின்
4. இராமநாதன்
வந்தா இவங்கள நம்பித்தான் வரனும். :-))

said...

இராமநாதன். எனக்கும் இந்த நாலு பேரையும் தெரியும். ஆனால் அதில் ஒருத்தருக்குத் தான் என்னைத் தெரியும். :-) அவரை நம்பித் தான் நானும் ரஷ்யாவுக்கு வரவேண்டும், முடிந்தால். :-)

said...

இராகவன், குமரன்
ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டிருப்பேன். ஆனா, உங்க லிஸ்ட்ல priority சரியா இல்லியே? :P

said...

// இராகவன், குமரன்
ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டிருப்பேன். ஆனா, உங்க லிஸ்ட்ல priority சரியா இல்லியே? :P //

எனக்கு பிரியாவோட ரிட்டியப் பத்தியோ வட்டியப் பத்தியோ தெரியாது. பந்தீல எனக்குப் பிடிக்காதத மொதல்ல காலி பண்ணீட்டுப் பிடிச்சத கடைசி வரைக்கும் வச்சிருந்து சாப்பிடுவேன். அப்படித்தான் பேரப் போட்டேன். ஐயா.........கோவிச்சுக்கிராதீங்க.

said...

இராகவன்,

சிவனின் மூன்றாவது கண்ணே அகக் கண்ணைக் குறிக்கின்றது என்றும், விபூதி நாமும் ஒரு நாள் சாம்பலாகப் போகிறோம் என்பதை நினைவுறுத்துவதற்காகவும், குங்குமம் நாமும் நம்முடைய அகக் கண்ணைத் திறக்க முயலவேண்டும் என்பதற்காகவும் தான் என்று எப்போதோ படித்ததாக ஞாபகம். உங்கள் கருத்தென்ன?

ரங்கா.

said...

ஆஹா! பொருள் புரிஞ்சு படிக்கும்போது உணரும் சுவைக்கும் வளரும் பக்திக்கும் அடையும் ஆனந்தத்துக்கும் இணையே இல்லை. ராகவர் வாழ்க வாழ்க!

//பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
இம்மா உலகில் இராகவன் உரையில்
அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே.//

குமரனுக்கும் ஒரு 'ஓ' போட்டுக்கறேன்!