Tuesday, June 20, 2006

22. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

நுண்ணிய கருத்துகளை தண்மையாகச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அருணகிரியே! இந்தப் பாடலில் நான்கு வரிகள். முதல் வரி மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். மற்ற மூன்று வரிகளும் முருகனைப் புகழ்கின்றன. ஒரு பெரிய விஷயத்தை ஒரு அடியில் அடக்கிவிட்டு, முருகனைப் புகழ மூன்று அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் முருகனைப் புகழ்வதிலுள்ள ஆர்வம். எவ்வளவு புகழ்ந்தாலும் போதவில்லை. அதே நேரத்தில் அநுபூதி அடைவதற்கான கருத்தையும் சொல்ல வேண்டும். அதற்குக் கை கொடுகிறது தமிழ். சுருங்கச் சொல்ல பொருள் மிகுந்த சொற்களும், விரித்துச் சொல்ல அழகான சொற்களுமாய் தமிழ் விளையாட்டு நடத்தியிருக்கிறார் அருணகிரி.

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே


கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?

சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.

அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.

முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.

சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

இராகவன். கருதா மறவா என்பதற்கு வேறு பொருள் சொல்லலாம் என்று கிளம்புவதற்குள் நீங்களே அந்தப் பொருளைச் சொல்லியிருப்பதைப் பார்த்தேன். :-)

மயில் வாகனன் என்று சொல்லும் இடத்தில் தட்டச்சுப் பிழை நேர்ந்திருக்கிறது.

வனசம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

said...

அருமையான படைப்பு. ஒளியும் ஒலியும் அமைப்பு நன்றாக இருக்கிறது வனசம் என்றால் வாசம் எப்பொழுதும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று கொள்ளலாமா?அன்பன் தி ரா ச

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். கருதா மறவா என்பதற்கு வேறு பொருள் சொல்லலாம் என்று கிளம்புவதற்குள் நீங்களே அந்தப் பொருளைச் சொல்லியிருப்பதைப் பார்த்தேன். :-)
//

நன்றி குமரன். அப்படியானால் வழக்கமாகச் சொல்லும் பொருள் என்னவென்று நீங்கள் நினைப்பதையும் இங்கே சொல்லிவிடுங்களேன். :-)

// மயில் வாகனன் என்று சொல்லும் இடத்தில் தட்டச்சுப் பிழை நேர்ந்திருக்கிறது. //

ஆகா..இருங்கள். திருத்தப் பார்க்கிறேன்.

// வனசம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. //

வனசம் என்பது நாடு. அல்லது தங்குமிடம். அல்லது வாழுமிடம் என்னும் பொருள் கொள்ளலாம். இருதாள் வனசம் என்றால் திருவடியிலேயே கிடந்து மகிழ விரும்புவதைச் சொல்வது. தி.ரா.ச-வும் அதைச் சொல்லியிருக்கிறார்.

said...

// TRC said...
அருமையான படைப்பு. ஒளியும் ஒலியும் அமைப்பு நன்றாக இருக்கிறது வனசம் என்றால் வாசம் எப்பொழுதும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று கொள்ளலாமா?அன்பன் தி ரா ச //

மிகச் சரியாகச் சொன்னீர்கள் தி.ரா.ச. சரி? எப்பொழுது உங்கள் தொடரைத் தொடங்கப் போகிறீர்கள். உங்கள் எழுத்துகளில் முருகன் புகழைப் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

said...

romba arumai!!

said...

//வனசம் என்பது நாடு. அல்லது தங்குமிடம். அல்லது வாழுமிடம் என்னும் பொருள் கொள்ளலாம். //

இதுவரை வனசம் என்றால் தாமரை என்றே நினைத்திருந்தேன் இராகவன் & தி.ரா.ச. வனஜா என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் வனசம் என்று நினைத்திருந்தேன். அதற்கு நாடு, தங்குமிடம், வாழுமிடம் என்றெல்லாமும் பொருள் உண்டா? ம். தெரிந்து கொண்டேன். நன்றி.

வனச மாமியாராட நெடிய மாமனாராட மயிலுமாடி நீயாடி வரவேணும். இங்கு வனச மாமியார் என்று மலர்மகளான தாமரைச்செல்வி திருமகளைச் சொல்வதாக நினைத்திருந்தேன்.

said...

'கருதா மறவா நெறி'க்கு நீங்கள் சொன்ன விளக்கம் மிக அருமை, ஜி.ரா.

வனசம் என்பத்ற்கு தாமரை என ஒரு புத்தகத்தில் போட்டிருந்தது.

இரு தாள் வனசம் என்றால் இரு பாதத் தாமரைகள் என வரும்.

சரி பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

விரதாசுரசூர விபாடணனே! என முடிகிறது.அதற்குக் கூட,

அருவருப்பான அசுரனாகிய சூரனை வேலால் பிளந்தவனே!

என்று போட்டிருக்கிறது.

ரதம் என்றால் அழகு.

விரதம் என்றால் அழகற்ற, அருவருப்பான எனக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

இந்த விரதம் என்ற சொல்லை நாம் அனுஷ்டிக்கும் 'வ்ரதம்' என்னும் சொல்லோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

விரதம் என்பதில் இரண்டாவது வடமொழி 'த' வும், 'வ்ரதம்' என்பதில், முதலாவது 'த'வும் வரும்.

said...

வனசம் என்றால் வசிப்பது வனஜம் என்றால் தாமரை. வனச மாமியாராட என்றால் எப்பொழுதும் விஷ்ணுவின் மார்பிலேயே வாசம் செய்யும் லக்ஷ்மி என்றும் கொள்ளலாம்.அன்பன் தி ரா ச