Friday, October 21, 2005

சேற்றைக் கழுவியவன்

பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமெனும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ்சாடாவி மேல்
ஆற்றைப் பணியை யிதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புணைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே


வாழ்க்கையில் இறைவனைச் சரணடைவதன் தத்துவத்தை மிகவும் அழகாக விளக்கும் பாடல் இது. துன்பம் வரும் வேளையிலெல்லாம் இந்தப் பாடலை தொடர்ந்து முணுமுணுக்க துன்பம் மறைந்து இன்பம் தெரியும்.

இந்த உலகத்தில் நாம் பிறப்பே துன்பமயமானது. மூடிய அறையில் காற்றில்லாமல் ஒன்பது மாதங்கள் இருக்கிறோம். பிறக்கும் பொழுதும் நெருக்கிக் கொண்டு பிறக்கிறோம். முதற் கோணல் முற்றும் கோணலாகி விடக் கூடாதே!

பிறந்து விட்டோம். பிரச்சனைகள் பல. கீழே விழுந்தால் ஒட்டிக் கொள்ளும் சேறு போல துன்பங்கள் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. அருணகிரி சொல்கிறார்," முருகா! சேற்றைக் கழுவ நீர் வேண்டும். பிறவித் துன்பங்களைக் கழுவ நீர் வேண்டும்."

வங்கியில் பணம் வைத்திருந்தால்தான் வட்டி கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் வட்டி கிடைக்குமா? அது போல நல்ல தவம் செய்திருந்தால்தான் பிறவித் துன்பம் போகும்.

எதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். நல்ல தாய் வயிற்றில் பிறப்பதற்கும், நல்ல தந்தையின் அரவணைப்பிற்கும், நல்ல கல்விச் செல்வம் பெருவதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். ஔவையாரும் "அரிது அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது" என்கிறார்.

தவம் என்றால் என்ன? மூச்சடக்கி பேச்சடக்கி புலன்களையெல்லாம் அடக்கி மூலையில் உட்கார்ந்திருப்பதா? இல்லை. நல்ல எண்ணெங்களை வளர்த்தலும் நல்ல செயல்களைச் செய்தலும். போகிற வழியில் கிடக்கும் கல்லை விலக்கி வைப்பது கூட ஒரு வகையில் தவமே. அடுத்தவருக்கு நன்மை செய்யும் எந்தச் செயலும் தவமே.

அப்படி எந்தத் தவமும் செய்திராமல் பிறவித் துன்பத்தில் உழன்றவர் அருணகிரி. இருந்தும் அவருக்கு கருணை காட்டினான் கந்தன். அதைத்தான் முதலிரண்டு வரிகளில் சொல்கிறார். "பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் ப்ரபஞ்சமெனும் சேற்றைக் கழிய வழி விட்டவா!"

அடுத்த இரண்டு வரிகளில் கந்தனின் தந்தையின் பெருமையைச் சொல்லி அதன் மூலம் முருகனின் அருமையை ஊட்டுகிறார்.

ஆற்றைப் - கங்கை ஆற்றை
பணியை - அரவத்தை (பாம்பை)
இதழியை - கொன்றை மலரை
தும்பையை - வெண்ணிற தும்பை மலரை
அம்புலியின் கீற்றை - அழகான நிலவின் பிறையைப்
புனைந்த பெருமான் - திருமுடியின் சூடிக் கொண்டிருக்கின்ற பெருமான் குமாரன் கிருபாகரனே!

ஈசனின் திருமுடியில் நிறைந்திருக்கும் மங்கை கங்கை. கங்கை நமது பாவங்களைப் போக்கும் பண்புடையது. அந்த முடியிலேயே பாம்பையும் சூடிக் கொண்டிருக்கிறார் பெருங்கருணையோடு. அனைவரும் அழகிய பொருட்களைச் சூடிக் கொண்டிருக்க பாம்பைச் சூடியது ஏன்? தான் அனைவருக்கும் பொது என்று சொல்லத்தான்.

ஆகையால்தான் பாம்பைச் சூடிய முடியிலே செந்நிறக் கொன்றையையும் வெண்ணிறத் தும்பையையும் சூடிக் கொண்டிருக்கிறார். கொன்றை என்றால் இன்று பலருக்குத் தெரியாது. குல்மொஹர் என்றால் தெரியும். உள்ளம் தும்பையைப் போல வெண்மை. பண்போ கொன்றையைய் போல செம்மை.

அம்புலியின் கீற்றையும் முடியில் சுமந்து கொண்டிருக்கும் இறைவனாரின் திருக்குமரனாகிய கிருபாகரன் முருகன் நமது பிறவிப் பிணி தீர்த்து அருளுடன் வாழ வைப்பான்.

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

நான் பேசாமல் மூட்டை கட்டிடலாம் என்று நினைக்கிறேன். :-) மிக நன்றாய் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆழ்ந்து அனுபவித்துப் பொருள் கூறியுள்ளீர்கள்.

'செஞ்சாடவி மேல்' க்கு பொருள் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

என்ன ராகவன், இவ்வளவு பிரமாதமான பதிவ சைலண்டா ஆரம்பிச்சுருக்கீங்க. உங்க பதிவுலேர்ந்து லின்க்கெல்லாம் ஒண்ணுமே இல்லியே? பிடித்ததுன்னு இல்லாம வரிசையா பண்ண முடியுமா? என்ன மாதிரி ஆளுகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

தொடருங்க..

--
digression
கந்தர் அனுபூதி கொஞ்சம் பாட்டா வலைல அப்லோட் பண்ணேன். அது இங்கே இருக்கு. விஜய் சிவா பாடினது. கேட்டுப்பாருங்க. நன்றி.

said...

பதிவாகவே இட்டுவிட்டேன் ராகவன்.

இதோ

said...

என்னருமை ராகவன்,

கந்தனைப் பாட அருணகிரி மட்டுமில்லை, இதோ எந்தன் இளவல் ராகவனும் இருக்கிறார் என்று நான் தைரியமாகச் சொல்வேன்.

தன்னிலை மறந்து இன்றைக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் கந்தன் புகழை!

அருமை அருமை!

said...

// நான் பேசாமல் மூட்டை கட்டிடலாம் என்று நினைக்கிறேன். :-) மிக நன்றாய் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆழ்ந்து அனுபவித்துப் பொருள் கூறியுள்ளீர்கள். //

அடடா! அதெப்படி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பொருள் சொல்கின்றார்கள். அது போல நீங்கள் ஒரு வகை. நான் ஒரு வகை. உங்களது பணியும் எனது பணியும் சிறந்து நடக்கட்டும்.

// 'செஞ்சாடவி மேல்' க்கு பொருள் கூறாமல் விட்டுவிட்டீர்கள். //

ஆமாம் விட்டு விட்டேன். எப்படி என்று தெரியவில்லை.

செஞ்சடா அடாவி என்று பிரிக்க வேண்டும். அடாவி என்றால் காடு. செஞ்சடையை ஏன் காடென்று சொல்ல வேண்டும்? இரண்டு காரணங்கள். ஒன்று சிவனே காட்டு வாசி. இரண்டாவது காட்டில் பலதும் இருக்கும். மணம் மிகுந்த மலரும் இருக்கும். நஞ்சு கொண்ட அரவமும் இருக்கும். இருந்தாலும் அனைவருக்கும் பொதுவாக நின்று காடு அனைவரையும் காப்பாற்றி வருகிறது. அது போலத்தான் ஆற்றையும் பணியையும் இதழியையும் தும்பையையும் அம்புலியின் கீற்றையும் கொண்ட செஞ்சடையைக் காடு என்று கூறுகிறார் அருணகிரி.

said...

// என்ன ராகவன், இவ்வளவு பிரமாதமான பதிவ சைலண்டா ஆரம்பிச்சுருக்கீங்க. உங்க பதிவுலேர்ந்து லின்க்கெல்லாம் ஒண்ணுமே இல்லியே? பிடித்ததுன்னு இல்லாம வரிசையா பண்ண முடியுமா? என்ன மாதிரி ஆளுகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

தொடருங்க.. //

நன்றி ராமநாதன். லிங்கெல்லாம் இன்னும் குடுக்கலை. கொஞ்சம் நேர அவகாசந்தான் எல்லாத்துக்கும் பிரச்சனை.

அப்புறம் ஏற்கனவே பொறுக்குமணிகளைப் பொறுக்கி எழுதத் தொடங்கி விட்டேன். ஆகையால் அடுத்து கந்தர் அநுபூதிக்கு எல்லாப் பாக்களுக்கும் சொல்கிறேன்.

// --
digression
கந்தர் அனுபூதி கொஞ்சம் பாட்டா வலைல அப்லோட் பண்ணேன். அது இங்கே இருக்கு. விஜய் சிவா பாடினது. கேட்டுப்பாருங்க. நன்றி. //
நிச்சயம் பார்க்கிறேன். இப்பொழுதே பார்க்கிறேன்.

said...

// என்னருமை ராகவன்,

கந்தனைப் பாட அருணகிரி மட்டுமில்லை, இதோ எந்தன் இளவல் ராகவனும் இருக்கிறார் என்று நான் தைரியமாகச் சொல்வேன்.

தன்னிலை மறந்து இன்றைக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் கந்தன் புகழை!

அருமை அருமை! //

நன்றி மூர்த்தியண்ணா. உங்கள் பாராட்டு மழையில் திக்குமுக்காடுகிறேன். உங்கள் வாழ்த்தும் பாராட்டும்தான் பெங்களூரில் மழையாகக் கொட்டுகிறது போல.

said...

ராகவன், 'செஞ்சாடவி'க்கு பொருள் கூறும் போது கூட உங்கள் தனித்தன்மையைக் காட்டிவிட்டீர்கள். நானாக இருந்தால், 'செஞ்சாடவி' என்றால், 'செஞ்சடையாகிய காடு' என்பதோடு நிறுத்தியிருப்பேன். ஏன் அது காடு என்று நீங்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். :-)