Tuesday, October 18, 2005

தடபடெனப் படு குட்டுடன்

அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே


முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.

அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?

அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.

அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.

அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.

இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!

கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.

இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.

உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.

ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

ஆரம்பிச்சுட்டீங்க...தொடர்ந்து தவறாமல் வாராவாரம் எழுதிடுங்க...என் 'அபிராமி அந்தாதி', 'விஷ்ணு சித்தன்', 'கூடல்' வலைப்பதிவுகளில், உங்கள் 'இனியது கேட்கின்' வலைப்பதிவிற்கு சுட்டி கொடுத்துள்ளேன்.

said...

கண்டிப்பாக குமரன். நிச்சயம் எழுதுறேன்.

ஆகா....என்னுடைய வலைப்பக்கத்திற்கு சுட்டி குடுத்திருக்கீங்களா. நன்றி பல குமரன். இன்னும் இந்த வலைப்பக்கம் தமிழ் மணத்தில் சேர்க்கப் படவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை முயல வேண்டும்.

said...

அடலருணை என தொடங்கும் அருணகிரியின் பாடல் பற்றிய உங்கள் விளக்கம் முழுமையில்லை என நினைக்கிறேன். "வருவார் தலையில் தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே" இந்த வரிகள் தெய்வங்களை குறிப்பதோடு, யோக நிலையில் அடையக்கூடிய மெய்ஞான அனுபவத்தை இது குறிப்பதாக படுகிறது.

said...

Just a curiosity. WHere did you learn your tamil courses Mr. Ragavan? You sound very scholarly in Tamil.. Are you of Eelam Tamil Origin?

Senthil
skms1990@yahoo.com