Monday, February 20, 2006

5. வீழ வைப்பதும் வாழ வைப்பதும்

என்றைக்குமே நல்ல வழியில் செல்லும் பொழுதுதான் இடைஞ்சல் வரும். நல்ல சாலையில்தால் வேகத்தடை இருக்கும். மோசமான சாலையே வேகத்தடைதானே! தானம் செய்கிற இடத்தில்தான் அடிதடி நடக்கும். குழப்பமான இடத்திற்கு ஒருவரும் போகார். ஆகக்கூடி தெரிவதென்னவென்றால் நல்லது செய்கையில் இடர் வரும். அந்த இடரும் தொலைய முயன்றால் சுடர் வரும்.

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூட் உரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே


"தானோ பொருளாவது சண்முகனே" என்று சரணடைய எண்ணுகையில் எத்தனையோ இடர்கள் வரும். அந்த இடர்கள் எப்படிப் பட்டவை? அதைத்தான் இந்தப் பாடலில் அருணகிரி நாதர் விளக்குகிறார். விறகுக்குள் நெருப்பு ஒளிந்திருப்பது போல இந்தப் பாடலில் பெரும் பொருள் ஒளிந்திருக்கிறது. அழுத்தித் தேய்க்கப்படும் விறகில் நெருப்பு வருவது போல, மனதை அழுத்திப் படித்தால் பொருள் விளங்கும்.

முருகனின் திருவடிகளை அடையத் தடைக்கற்களாக எவையெவை இருக்கின்றன? வளைபட்ட கை மாது முதலில் வருகிறாள். மாது என்றால் பொதுவாக பெண். ஆனால் வளைபட்ட கை மாதென்றால்? வளையல் அணிந்த கையுள்ள பெண்ணா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அருணகிரியார் இங்கு குறிப்பிடுவது இல்லறத் துணைவியாம் மனைவியை. கணவனின் அன்புக் கைகளில் வளைபட்ட மாது மனைவிதானே!
பிறகு வருகின்ற தடை மக்களால். மனைவி வழி வந்த மக்கள். பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்பது எத்தனை உண்மையான பேச்சு! தளை பட்டழியத் தகுமோ! தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க. சில சொற்களை நேரடியாக பயன்படுத்தினால் தமிழர்களுக்கு விளக்கம் தெரியாது. ஆனால் அடைமொழியோடு பயன்படுத்த புரிந்து விடும். வளி என்றால் விழிப்பார்கள். சூறாவளி என்றால் தெரிந்து கொள்வார்கள். வளி என்றால் காற்று. அதுபோலத்தான் இங்கும். தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்றால் அடிமை விலங்கு.

மனைவி மக்கள் என்னும் அடிமை விலங்குகளால், முருகா, உன்னுடைய திருவடிகளை அடைய முடியாமல் நான் அழியத் தகுமோ என்று கதறுகிறார். அதுவும் தகுமோ தகுமோ என்று இரண்டு முறை இறைஞ்சுகிறார். அதிலிருந்தே அந்தத் தளைகளின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளலாம். மனைவி மக்கள் தடைகளா? இல்லையே. அப்படியானால் உலக இயக்கம் தொடர்வது எங்ஙனம்? இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஔவை வாக்கும். வள்ளூவரும் இல்லறத்தைச் சிறப்பிக்கின்றார். அப்படியிருக்க அருணகிரி இல்லறத்தைக் குறைத்துச் சொல்வாரா? மாட்டார். மனைவி மக்கள் மட்டுமே உயிர் என்று எண்ணும் எண்ணம்தான் தடை. அந்தத் தடைதான் அகல வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொள் மற்றையவர்கள் தவம்" என்கிறார்.

அடியவர்கள் பலரும் மனைவி மக்களோடு வாழ்ந்தவர்கள்தானே! இறைவனின் அருளைப் பெற்றவர்கள்தானே! அப்பூதியடிகள் மனைவி மக்களோடு நல்லறம் செய்தார். அதுதான் இல்லறம். தசரதனோ மனைவி மக்களோடு இல்லறம் செய்தானே தவிர நல்லறம் செய்யவில்லையாகையால் ஆண்டவனே மகனாகப் பிறந்ததாகக் கருதப்பட்டாலும் வீழ்ந்தான். ஆக மனைவி மக்கள் தளையல்ல. அந்த உறவுகளின் மேல் கொண்ட அன்பை மீறிய ஆசைதான் தளை. அன்பு தடையல்ல. ஆசைதான் தடை. அன்பிற்கு அடைக்கும் தாழில்லை. ஆசை என்பது விலங்கு. புத்தரும் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார். அன்பு வாழ வைக்கும். ஆசை வீழ வைக்கும். முருகன் அருள் எதிலிருந்தும் மீள வைக்கும்.

இத்தகைய அழிவிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். அதுவும் "தொடு வேலவனே" என்று அழைத்து. எதனால் தொட்டார் என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனாலும் கூறியிருக்கிறார். வேலவன் என்று அழைத்து அதைச் சொல்கிறார். சரி வேலால் எப்படித் தொட்டார்? துளை பட்டு உருவத் தொட்டார். துளை விழுந்து ஊடுருவிச் செல்லும் வகையில் வேலால் தொட்டார். பாருங்கள் இதை! வேலை வீசி எறியவில்லை. வேலைக் கொண்டு குத்தவில்லை. மாறாக தொட்டே அழித்தாராம். ஒளி வந்ததும் இருள் தானாக விலகுவது போல ஒரு இலகுவான அழிப்பு. அப்படி எதை அழித்தார்? கிளைப்படு எழுசூர் உரமும் கிரியும் அழிந்தது. சூர் என்று குறிப்பிடுவது துன்பத்தை. சூரன் துன்பஞ் செய்ததால் துன்பத்தையே சூரம் என்கிறார். அந்தத் துன்பமும் கிளைகள் விட்டு படர்ந்து எழுந் துன்பமாம். அப்படி துன்பம் தரத்தக்க வகையில் உரமுடன் எழுந்த கிரி(மலை) கிரவுஞ்ச மலை. அந்த மலையை வேலால் தொட்டுத் துளைத்தழித்த வேலவனே, உன்னை அடைய விடாது தடுக்கும் தளைகளிலிருந்து காப்பாற்றுவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

படித்தேன்! மகிழ்ந்தேன். வழக்கம் போல பொருள் நன்று. உங்கள் நடை நன்று. பதிவு போட்டவுடன் படித்து விட்டேன் இன்றே. மேலும் சில பொருள் உணர்ந்தேன். நன்றி ராகவன்.

said...

என்றைக்குமே நல்ல வழியில் செல்லும் பொழுதுதான் இடைஞ்சல் வரும். //

சத்தியமான வார்த்தை ராகவன்.

said...

// படித்தேன்! மகிழ்ந்தேன். வழக்கம் போல பொருள் நன்று. உங்கள் நடை நன்று. பதிவு போட்டவுடன் படித்து விட்டேன் இன்றே. மேலும் சில பொருள் உணர்ந்தேன். நன்றி ராகவன். //

நன்றி சிவா. நீங்களும் வழகம் போல வந்து படித்து மகிழ்ந்து கருத்துச் சொல்வது எனக்கும் மகிழ்சியாக உள்ளது. மீண்டும் மீண்டும் வருக.

said...

////என்றைக்குமே நல்ல வழியில் செல்லும் பொழுதுதான் இடைஞ்சல் வரும். //

சத்தியமான வார்த்தை ராகவன். //

உண்மை ஜோcஅப் சார். தீய வழியில் போகும் பொழுது, தடங்கல்கள் நிச்சயம் வருமுன்னு தெரியும். ஆனா நல்ல வழியில போகும் போதுதான் எந்த மாதிரி தடங்கல் வரலாம்னு நம்மால ஊகிக்க முடியாது. ஆனால் இறையருள் இருந்தால் எந்தத் தடையையும் வெல்லலாம்.

said...

அருணகிரிநாதரின் பாடல்கள் என்னைக் கவர்ந்தவை. நான் ஒரு தனிப்பதிவாக போட நினத்திருக்கும்போது உங்கள் பதிவைக் கண்டேன். மிகவும் நன்றாக உள்ளது.

நன்றி.

said...

நல்லா பொருள் சொல்லியிருக்கீங்க இராகவன்.

said...

இராகவன்,

இன்று பேருந்தில் வரும் போது இந்தப் பாடலுக்கு நான் விளக்கம் சொன்னால் என்ன சொல்வேன் என்று யோசித்து குறிப்புகள் எழுதிக் கொண்டு வந்தேன். வந்து பார்த்தால் நான் சொல்ல நினைத்தெல்லாம் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். அதனால் இந்தப் பாடலுக்குத் தனியாக என் விளக்கம் இல்லை. :-)

said...

ராகவன் நக்கீரன் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர் என ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் அதன் விளக்கம் அல்லது தொடுப்பு கொடுக்க முடியுமா?


//தமிழில் முதன்முதலில் எழுந்த சமய நூலே சைவ நூல்தான். நக்கீரர் பெருமான் அருளிய திருமுருகாற்றுப்படையைத்தான் சொல்கிறேன். தீந்தமிழ் நூல் அது. நக்கீரர் கள்ளர் (தேவர்) குலத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் ஆத்திரக்காரரும் கூட. குகையில் அடைபட்டுக் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இறைவனை எப்படிக் கூப்பிடுகிறறர் தெரியுமா?//

said...

// ராகவன் நக்கீரன் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர் என ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் அதன் விளக்கம் அல்லது தொடுப்பு கொடுக்க முடியுமா? //

என்னாரா இன்னாரிடம் கேட்பது? நீங்கள் அறியாத பாடலா?

பங்கப் படவரண்டு கால் பரப்பி என்று இறையனாரும் நக்கீரரும் சண்டையிட்ட பாடல்கள் போதாதா.....சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம் என்றல்லவா கேட்டார் நக்கீரர்.